Read in : English
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் விவசாயிகள் பல மாதங்களாகத் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால், மத்திய அரசு அவர்களுக்குப் பணிந்து வராமல் பிடிவாதமாக தனது நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறது.
ஆனால், தமிழகத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு முன் விவசாயிகளின் கோரிக்கை முன் வைத்து போராட்டம் நடத்திய விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமியை நேரில் சந்தித்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்த, அன்றைய முதல்வர் எம்ஜிஆருடன் பிரதமர் இந்திராகாந்தியும் நேரில் வந்தார்.
ஆனால், விவசாயிகள் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்கால் அவர் தொடங்கிய தமிழ்நாடு உழவர் உழைப்பாளர் கட்சியால் தமிழக அரசியல் எந்த சலனத்தையும் ஏற்படுத்த முடியாவிட்டாலும், அவரது தலைமையிலான விவசாயிகள் சங்கம் கோவையில் நடத்திய மாட்டு வண்டிப் போராட்டம் இன்றைக்கும் அந்தக் கால பிரமுகர்களால் நினைவு கூரப்படுகிறது.
விவசாயிகளுக்குள் ஒற்றுமை கிடையாது. பல பல குழுக்களாகப் பிரிந்து கிடப்பவர்கள் தான் உழவர்கள். இவர்களுக்குள் எப்படி ஒற்றுமை இல்லையோ, அதேபோல தான் தமிழக அரசியல் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை. காவிரி பிரச்சினையா? முல்லைப் பெரியாறு விவகாரமா? பாலாறு சர்ச்சையா? எதுவானாலும் தமிழகத்தின் வேண்டுகோள் ஒரே மாதிரிதான் இருக்கிறது. எனினும் அந்த வேண்டுகோள் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் தலைவர்களை கொண்ட பொது மேடையில் உச்சரிக்கப்படுவதில்லை. இதே போன்று அனைத்து விவசாய குழுக்களின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இந்த கூக்குரல் ஒருமித்து ஒலிப்பதில்லை. நோக்கும் போக்கும் ஒன்றுதான்.
ஆனால் வாக்கு ஏன் ஒருங்கிணைந்து வருவதில்லை? இதற்கு முக்கிய காரணம் அரசியல் தான். விவசாயிகளின் ஒற்றுமை குறைந்து தனித்தனி அமைப்புகள் உருவாகி போனதற்குக் காரணமும் அரசியல் தான்.
உலகத்தில் அரசியலை விதைப்பதும் அங்கு ஆடி உழுவதுமாக அரசியல்வாதிகள் ஆரம்ப காலத்தில் இருந்ததில்லை. திடீரென்று ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தான் அதிரடி அரசியல் விவசாயிகளின் கூட்டத்தையே அடங்கியது. அது என்ன காலகட்டம்?
எம்ஜிஆர் ஆட்சிக் காலகட்டத்தில் விவசாயிகள் சங்கம் பலமாக இருந்தது. பெரும்பாலான விவசாயிகள் ஒருங்கிணைந்து இருந்ததால் தமிழக விவசாயிகள் சங்கம் மிரட்டல் விடுக்கும் அளவிற்கு மிளிர்ந்தது. அந்த அபார கட்டுக்கோப்பை உருவாக்கியவர் நாராயணசாமி என்ற விவசாயி.
இவரின் தலைமையிலான விவசாயிகள் சங்கத்தின் மீது எம்ஜிஆர் அரசுக்கு கூட மிரட்சி இருந்தது. அவர்கள் நடத்திய மாட்டு வண்டி போராட்டம் தமிழக வேளாண்மை களத்தில் பொற்காலம்.
திமுகவும் அதிமுகவும் அவ்வப்போது பேரணிகள் மாநாடுகள் என்று நடத்தி தமிழக மக்களை பிரமிப்பில் ஆழ்த்துவது வழக்கம். அந்த வகையில் எம்ஜிஆருக்கும் கலைஞருக்கும் இடையே போட்டியே நடக்கும். யார் நடத்திய பேரணியில் அதிகமானோர் திரண்டனர்? யாருடைய மாநாட்டில் மனிதத் தலைகள் அதிகம்? என பட்டிமன்றமே கூட நடக்கும். முதல் முறையாக நாராயணசாமி நாயுடு சென்னையில் ஒரு பேரணியையும் மாநாட்டையும் நடத்திக்காட்டினார்.
அதை கவனித்த உளவுத்துறை அதிகாரிகள் திகைத்துப் போயினர். திராவிட கட்சி தலைவர்கள் முதன்முறையாக நாராயணசாமி நாயுடுவை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினர்.
சென்னை- ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகம் அருகே அஜந்தா என்ற பெயரில் ஒரு ஹோட்டல் இருந்தது. இப்போது அந்த இடத்தில் டெக்கான் பிளாசா என்ற பெயரில் ஹோட்டல் வந்து விட்டது. அருகில் இந்திய அலுவலர் சங்கத்தின் வணிக வளாகமும் உருவெடுத்து விட்டது. எனவே அந்தப் பகுதியின் பழைய வடிவமைப்பு உருமாறிவிட்டது.
எனினும் அங்கு பேருந்து நிறுத்தத்திற்கு இன்றுகூட அஜந்தா என்றுதான் பெயர். அந்த ஹோட்டலில் நாராயணசாமி நாயுடுவுக்கு என நிரந்தரமாக ஒரு அறை உண்டு. அங்கு இருந்தபடிதான் நாயுடு தன் வேளாண் அரசியலை பயிர் செய்து வந்தார்.
அவர் நடத்திய பேரணியாலும் மாநாடாலும் செய்தியாளர்கள் மத்தியில் அவர் மிகவும் பிரபலமாகி விட்டார். எனவே செய்தியாளர்களை அவர் அழைத்துப் பேசுவது என்ற நிலை மாறியது. நிருபர்கள் தாமாகவே நாயுடுவை நாடிச்சென்று பேசத் தொடங்கினர்.
திமுக மற்றும் அதிமுக முகாம்களில் நடக்கும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அவர் என்னிடம் துருவிதுருவிக் கேட்பதுண்டு. நானும் பட்டும்படாமலும் சொல்வதும் உண்டு. இந்த நிலையில்தான் ஒருநாள் நாயுடுவுக்கு என் மீது கடும் ஆத்திரம் வந்துவிட்டது. ஏன் தெரியுமா? திமுக மற்றும் அதிமுக குறித்து இவ்வளவு அக்கறையுடன் அலசி அலசி கேட்கிறீர்களே, உங்கள் மனதில் அப்படி என்னதான் இருக்கிறது? என்று கேட்டேன்.
என்னிடம் பேசும்போது வார்த்தைகளை வடிகட்டாமல் பேசும் வழக்கம் நாயுடுவுக்கு இருந்தது. எனவே அவர் தனது உள்ளக்கிடக்கையை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
நான் நடத்திய பேரணியையும் மாநாட்டையும் பார்த்தீர்களே, இவை திமுக, அதிமுக கட்சிகள் நடத்தும் கூட்டங்களை போன்று பிரம்மாண்டமாக இருந்தன என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? என்று நாயுடு என்னிடம் கேட்டார்.
நான் மட்டுமல்ல தமிழகமே இதை ஒப்புக்கொண்டு உள்ளதே என்று நான் பதிலளித்தேன். அப்படியானால் எங்கள் விவசாயிகள் சங்கமும் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வலுவாக தானே வளர்ந்து இருக்கிறது என்றார் நாயுடு.
நாயுடய்யா தமிழகத்தை ஆள வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வந்துவிட்டதா? என்றேன். நான் ஏன் முதலமைச்சராகக் கூடாதா? என்று அவர் கேட்டபோது நான் திடுக்கிட்டுப் போனேன். முதலமைச்சராக வேண்டும் என்று இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் ஆசைப்படலாம்.
அவரவர் மனதிற்கு அவர்தானே மன்னர். எனினும் உங்கள் ஆசையால் உங்கள் சங்கத்திற்கு பங்கம் வந்துவிடுமோ? என்பது தான் என் அச்சம் என்றேன். அரசியல் கட்சிகள் மீதான உங்கள் விசுவாசம் தான் இப்படி பேச வைக்கிறது என்று என்மீது கோபக் கனலை வீசினார் நாயுடு. விஷப் பரிட்சையில் இறங்கி தமிழக விவசாயிகளை கூறுபோட்டு விடாதீர்கள் என்று நான் எச்சரித்தேன்.
அன்றிலிருந்து அவருடனான நெருக்கமான உறவுப் பாதையில் நெருஞ்சி முட்கள் தூவப்பட்டன. அதன் பின்பும் நான் அவரை தொடர்ந்து சந்தித்து கொண்டுதான் இருந்தேன். முன்பெல்லாம் நான் நண்பனாக சென்றேன் பின்பு நிருபராக செல்லலானேன்.
எவ்வளவோ முனைப்புக் காட்டியும் நாயுடுவால் முன்னணி அரசியலுக்கு வர முடியவில்லை. ஒவ்வொரு களமும் களர் நிலமாக மாற்றப்பட்டு விட்டது. இதனை இரு திராவிட கட்சிகளும் வெற்றிகரமாக செய்தன. இதில் கவனிக்கத் தக்கது என்னவெனில் இக்கட்சிகளின் ரகசிய அணுகுமுறைகள் பல காலம் வரை நாயுடுவுக்கு தெரியவில்லை.
தமிழக அரசின் உளவுத் துறையும் இந்த பணியைக் கச்சிதமாக செய்தது. இதனால் மனம் குலைந்து போன நாயுடு நோய்வாய்ப்பட்டார். அவரின் எண்ணம் அவருக்கு உள்ளேயே புதைந்தபடி மரணித்து விட்டது.
போராட்டத்தில் குதிப்போரை அரசாங்கம்தான் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும். அதுவும் முதலமைச்சரை சந்திப்பது என்றால் அது உச்சபட்ச நிலைப்பாடுதான். ஆனால் நாராயணசாமி நாயுடுவின் போராட்டக்களத்தில் நடந்ததே வேறு.
தமிழக முதல்வர் எம்ஜிஆர் மட்டுமல்ல அவருடன் இந்திரா காந்தியும் கிளம்பிச் சென்று கோவை மாநகர் அருகே வையம்பாளையத்தில் உள்ள நாயுடுவின் வீட்டிற்கே சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அந்த சூழலில் தான் தமிழக உழவர்கள் அனைவரும் நாயுடுவை அண்ணாந்து பார்த்து வியந்தனர்.
தமிழக விவசாயிகளின் நம்பிக்கை நட்சத்திரமாகவே நாயுடு ஜொலிக்க தொடங்கினார்.
விவசாயிகளுக்கு 16 மணி நேர மின் சப்ளை என்பது நான்கு மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. இதனால் கொந்தளித்த விவசாயிகளை திரட்டி நாராயணசாமி நாயுடு கோவையில் பெரும் போராட்டம் நடத்தினார். இதன் விளைவாக விவசாயத்திற்கான மின்விநியோகம் 16 மணிநேரம் தான் என்ற அந்த வசதி மீட்டு தரப்பட்டது. நாயுடுவின் முதல் களப்போரே வெற்றி வாகை சூட வைத்துவிட்டது.
இது நடந்தது 1957ஆம் ஆண்டு. விவசாயிகளுக்கான மின்கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 8 பைசா என்பது பத்து பைசா என உயர்த்தப்பட்டது. உடனே நாயுடு தலைமையில் விவசாயிகள் மீண்டும் நடத்திய போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. தொடர் போராட்டமாக நடத்தி கோவையையே கொதிக்க வைத்தார். அதன்பின் மாட்டு வண்டி பேரணி என புது புயல் புறப்பட்டது. பின் பந்த் நடத்தப்பட்டது.
போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று விவசாயிகள் பலியாயினர். தமிழகமே தகிக்கத் தொடங்கியது. அதன் பின்னர் மின் கட்டண உயர்வில் ஒரு பைசா குறைத்து அறிவிக்கப்பட்டது. அந்த வகையிலும் நாயுடுவின் களத்தில் வெற்றி கொடியே பறந்தது. இது நடந்தது 1970ஆம் ஆண்டு ஜூன் மாதம்.
தமிழக அரசு, விவசாயிகளின் மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 9 பைசாவில் இருந்து 12 பைசா என உயர்த்தியது. 1972ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த அறிவிப்பு வந்தது. உடனே நாயுடு கிளர்ந்தெழுந்தார். அடுத்த இரு மாதங்களிலேயே 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் போராட்ட களத்தில் குதித்தார் நாயுடு. மே மாதத்தில் மறியல் அளவுக்கு போராட்ட வியூகம் உக்கிரம் பெற்றது. பால், காய்கறிகள் கிராம பகுதிகளில் இருந்து நகரங்களுக்குச் செல்வதை தடை விதித்து புதிய போர் முறையை நாயுடு அப்போது அறிமுகப்படுத்தினார். மூன்று நாட்கள் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தன.
ஒரு வகையில் பார்க்கப் போனால் நாயுடுவின் செல்வாக்கை செல்லாக்காசாக்கும் வியூகத்தை செயல்படுத்துவதில் எம்ஜிஆரும் கலைஞரும் கரம் கோர்த்துக் களம் கண்டனர் என்றுகூட சொல்லலாம். இதனால் நாயுடுவின் விவசாயிகள் சங்கத்தின் இரண்டாம் மூன்றாம் கட்ட தலைவர்கள் திசை திருப்பி விடப்பட்டனர். சங்கத்தை உடைப்பதற்கு பதிலாக சிறுகச்சிறுக கரைப்பதில் இரு திராவிட கட்சிகளும் முனைப்பு காட்டின.
மாட்டு வண்டி போராட்டத்தை கோவை சந்தித்தது. மாநகரே ஸ்தம்பித்தது உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு போராட்டம் உச்சத்தை தொட்டது.
அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் கூட விவசாயிகளின் வேடன் என்று மாட்டு வண்டி போராட்டத்தை கவனித்து எழுதியது.
இதன் வீரியத்திற்கு வித்திட்டு நடத்தியவர்கள் நாராயணசாமி நாயுடுவும் டாக்டர் சிவசாமியும் தான். அதன் பின்னர் அரசு பணிந்தது. பேச்சுவார்த்தை நடத்தியது. மின் கட்டணத்தில் ஒரு பைசா குறைக்கப்பட்டது. போராட்டத்தில் குதித்து கைதானோர் விடுவிக்கப்பட்டனர். எந்த நடவடிக்கையும் ஓரளவுக்கேனும் வெற்றியை தந்ததால் எம்ஜிஆர், கலைஞர் என்ற அளவுக்கு நாயுடுவின் ஆளுமை வீரியம் பெற்றது.
இதன் பின்னர் தான் நாயுடு, தமிழக முதலமைச்சர் என்ற கலர் கனவுகளில் மிதக்கத் தொடங்கினார். இதன் பின்னணியில்தான் தமிழ்நாடு உழவர் உழைப்பாளர் கட்சி உதித்தது. அவரே கட்சியின் தனிப்பெரும் தலைவராக விஸ்வரூபம் எடுத்தார். 1982ஆம் ஆண்டு இந்த ஏற்பாடு நடந்தது. அவசர கோலம் அள்ளித் தெளித்தது போல அக்கட்சி அடுத்தடுத்த இடைத் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் குதித்து தோல்வி அடைந்தது.
மூக்குடைபட்டதன் உபயம் எம்ஜிஆர், கலைஞர் ரகசிய கூட்டு வியூகம் தான். இருவருக்கும் மேல் இன்னொரு தலைமை தமிழகத்தில் உருவாகி விடக்கூடாது என்பதில் இந்த இருபெரும் தலைவர்களும் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டனர்.
பொதுத் தேர்தல் 1984இல் நடக்க கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அழகிரிசாமி போட்டியிட்டார். அவரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து விட்டு திரும்பி கொண்டு இருந்தார் நாயுடு. ஆனால் அறைக்குச் சென்று சேர்ந்தது அவரின் உயிரற்ற உடல் தான்.
Read in : English