Read in : English
பிரபாவதி பழனிவேல் தம்பதியினரை மையமாக வைத்துப் பெண்டிர் எவ்வாறு நாகசுவர வாசிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக வாசிக்கின்றனர் என்பதைப் பற்றி “இன்மதியில்” சில நாட்கள் முன்பு ஒரு கட்டுரை வந்திருந்தது.
அவர்களிடம் பேச்சு வாக்கில் எனது நேயர் விருப்பமாக மூன்று ராகங்களைக் குறிப்பிட்டு, அவற்றின் ஆலாபனைகளை எனக்காக வாசிக்க வேண்டும் என்றேன். அந்த மூன்று ராகங்கள் – ரஞ்சனி, ஸ்ரஸ்வதி மற்றும் பூர்விகல்யாணி.
சுருக்காமான ஆலாபனைகளை அவர்கள் வாசித்து அனுப்பினார்கள். இங்ஙனம், இந்த ராகங்களைப் பற்றி பேச ஒரு வாய்ப்பை அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.
முதலில் ரஞ்சனி ராகத்தைப் பொறுத்த வரை அது வாசிக்கும் விதத்தில், ஆலாபனையில், தவறே ஏற்பட வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம். (On its own this is raga that can be rendered even by the average musician free of grammatical errors)அதிலுள்ள பிரயோகங்கள் அப்படி, போக்கும் அப்படி.
பிரபாவதியும் பழனிவேலும் இந்த ராகத்தின் தேர்ந்த பிடிகளை உணர்ந்தனுபவித்து வாசித்துள்ளார்கள்.
இதில் வரும் அந்த ஸரிகஸா என்பதை இடைவிடாமல் (வருவதும் போவதும் தெரியாமல்) பிடித்து, ராகத்தை பெருமளவில் சோபிக்க வைத்துள்ளனர்.
நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், இந்த ராகத்தில் உள்ள மீசு கிருஷ்ண ஐயரின் “பரமபாவன” என்ற கிருதியை வெகு விமரிசையாக வாசித்திருப்பார். இவர்கள் இந்தப் பிடியைப் பிடித்தது அவரை நினைவூட்டியது. மற்றபடி இந்த ராகத்தில் பிராசீனமான க்ருதி அனைவராலும் பாடப்படும் “துன்மார்க்கசரா” எனும் தியாகராஜ கிருதி. One has heard enough versions of it ranging from Sri Ariyakudi to today’s Sri Venkata Nagarajan.
திரு சுவர்ண வெங்கடேச தீக்ஷிதரின் “தத்தாத்ரேய” பாடலை திரு கேவிஎன் (நாராயணசாமி) கச்சேரி விடாமல் பாடிப் பிரபல்யமடையச் செய்துள்ளார். தஞ்சாவூர் சங்கரய்யரின் ரஞ்சனமாலா மிகவும் பாப்புலரான ஒரு துக்காடா உருப்படி. “ரஞ்சனி” குரூப் (ரஞ்சனி என்று முடியும்) ராகங்களை, அவைகளின் ஸ்வரூபங்களை சுவை ததும்ப வெளிப்படுத்தி இருப்பார்.
சரஸ்வதி அவ்வளவு எளிதான ராகம் அல்ல. போக்கும் ஸ்வரூபப் பிடிகளும் மிகமிகக் குறைவு. தனது ராக லக்ஷணங்கள் புத்தகத்தில் ம்யூசிகாலஜிஸ்ட் திரு எஸ் ஆர் ஜானகிராமனே தியாகராஜரின் முக்கிய பாடலான “அனுராகமுலேனி” பாடலைத்தான் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
இந்த ராகத்தையும் ஆலாபனையில் தைவதத்தில் நன்றாகப் பல இடங்களில் நிறுத்தி நல்ல அனுபவத்தைக் கொடுத்துள்ளனர் பழனிவேலும் பிரபாவதியும். இது தவிர ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் “வாகீஸ்வரி வாணி ஸரஸ்வதி” என்பது ஸரஸ்வதி பூஜை தினத்தன்று எல்லோர் இல்லங்களிலும் ஒலிக்கும்.
திரு சிவனின் “ஸரஸ்வதி தயை நிதி” எனும் பாடலும் திரு ஜி என் பாலசுப்ரமணியத்தின் “ஸ்ரஸவதி நமோஸ்துதே” என்ற பாடலும் அதிகம் புழக்கத்தில் உள்ளவை. முந்தையதை திரு செதலபதி பால சுப்ரமணியன் மனமுருகிப் பாடியதைக் கேட்பது ஒரு பெரும் பாக்கியம்.
அடுத்து பூர்வி கல்யாணி். இதை ஒரு தோடி, பைரவி போல மெயின் ராகமாக எடுத்துக் கொண்டு, விஸ்தாரமாக ஆலாபனை செய்யலாம்.
இதைப் பற்றிப் பேசுகையில் இதே எஸ் ஆர் ஜானகிராமன் எப்படி பூர்வி என்று நமது காமவர்த்தினியோடு ஒப்பிடக்கூடிய ராகம், ஹிந்துஸ்தானி இசையிலும் உள்ளது, என்பார். அவரே மதுரை சோமு தனதாக்கிக் கொண்ட பத்ராசல ராமதாஸரின் “ஓ ராமனே நாமம்” என்ற கீர்த்னையை பூர்விகல்யாணியில் பாடுவது பிற்காலத்திய சம்பிரதாயம் என்றுரைக்கிறார்.
இந்த ராகத்தில் எண்ணற்ற கிருதிகள்.
ஆனால் முதலில் எல்லோரும் சொல்வது தியாகராஜரின் “ஞானமொஸகராதா”, அடுத்து தீக்ஷிதரின் “மீனாக்ஷிமேமுதம் தேஹி” அதற்கடுத்து சியாமா சாஸ்திரியின் “நீன்னுவினா”. இதில் இரண்டாவதில் வாக்கேயக்காரர், ராக முத்திரையான கமகக்ரியே என்பதை வைத்திருப்பது கவனிக்கத் தக்கது.
திரு அரியக்குடி இந்த ராகத்தில் மெட்டமைத்துக் கொடுத்த திருப்பாவை “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என்பதை கேட்கக் கேட்க உவகையின் எல்லைக்கே சென்று விடுவோம். இந்தப் பாடலில் சொற்கள் ஏதோ இந்த ராகத்திற்கென்றே அமைத்து வைத்தது போலிருக்கும்.
இந்த ராகத்தில் வரும் வர்ஜ்யப் பிரயோகங்கள் அழகுடன் மிளிரும். தம்பதியர், பிரபாவதியும் பழனிவேலும் பதிலுக்கு பதில் வாசிப்பு என்பதைப் போல ஒருவர் வாசிக்க அதற்கிணையான மற்றொன்றை அடுத்தவர் வாசிப்பது, என்ற இரட்டை நாயனத்தில் மிகவும் சுவாரசியமான ஒன்றினைப் பின்பற்றி, அதன் அளவறிந்து எடுத்தாண்டது எளிதில் யாரையும் கவரக்கூடிய ஒன்று.
Read in : English