தற்போதைய தமிழ் சினிமாவில் வசூலிலும் ரசிகர்களின் எண்ணிக்கையிலும் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் ஒருவரான விஜய் தனது ரசிகர்களை 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் களம் இறக்கியிருப்பது அனைத்து கட்சிகளையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.
ட்ரெய்லர் வரும் முன்னே; சினிமா வரும் பின்னே என்ற புதுமொழிபோல நேரடியாக அரசியலில் குதிப்பதற்கு முன்னோட்டமான நடவடிக்கையாக தனது செல்வாக்கை உள்ளாட்சி தேர்தலில் ஆழம் பார்க்கிறார் என்பதைத் தவிர இதற்கு வேறு காரணங்கள் சொல்ல முடியாது.
உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்துக்கு சுமார் 50,000 ரசிகர் மன்றங்கள் இருக்கும் நிலையில் இளம் நடிகர் ‘தளபதி’ விஜய்க்கு 78,000 மன்றங்களுக்கு மேல் இருப்பதாக அவரது ரசிகர் மன்றம் வெளியிடும் கணக்குகள் தெரிவிக்கின்றன. ஆனால், 58,000 ரசிகர் மன்றங்கள்தான் இருக்கின்றன என்று விஜய் ரசிகர்களுக்கு எதிராக களம் கட்டும் அஜித்குமார் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வரிந்து கட்டுகிறார்கள். ஆனால், 58,000 என்பது சிறிய எண்ணிக்கை அல்ல. விஜய் ரசிகர் மன்றம் தொடங்கினால் தலைமையால் அங்கிகாரம் பெறுவதற்கு குறைந்தது 25 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பது விதி. ஒவ்வொரு மன்றத்திலும் குறைந்தது 25 முதல் 75 உறுப்பினர்கள்வரை இருக்கிறார்கள் என்பதால் மன்றங்களில் பதிவு செய்துள்ள ரசிகர்கள் மட்டும் 20 லட்சத்தைத் தாண்டும் என்று கணக்கிடப்படுகிறது. ரசிகர் மன்றத்தின் முகநூலில் மட்டும் 7.8 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். திரைப்படங்களில் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை யாரும் சொல்லுவதில்லை என்றாலும் வசூலில் விஜய் படங்களே முதல் இடத்தில் இருக்கின்றன என்பது பேசப்படாத ரகசியமாக இருக்கிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2005-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் தனது ரசிகர்களைக் களம் இறக்கியபின் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எட்டு சதவீத வாக்குகளைப் பெற்றார். சட்டமன்றத்திலும் நுழைந்தார். அவரது வழியைப் பின்பற்றி விஜய் உள்ளாட்சித் தேர்தலில் தனது படத்துடனும் ரசிகர் மன்றக் கொடியுடனும் குதித்துள்ளார்.
முதலில் ரசிகர் மன்றங்கள் மூலமாக அரசியல் வெற்றிக்குப் பாதைபோடலாம் என்ற இலக்கணத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தியவர் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். 1970-ல் திமுகவில் தனது ரசிகர் மன்றங்கள் ஒதுக்கப்படுகிறது என்று மன்றத்தினர் 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ல் நடந்த சந்திப்பில் அவரிடம் குமுறியபின்னர்தான் ஒரே வாரத்தில் திமுகவினர் ஊழல் செய்வதாக வெளிப்படையாகக் குற்றம் சாட்டி திருக்கழுகுன்றம் பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர் பேசினார். திமுக தலைமையை எதிர்த்து எம்.ஜி.ஆர் போர்க்கொடி தூக்கி ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்று ரசிகர் மன்றப் படையை வைத்தே தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தார். அதுபோன்ற வெற்றியை வேறு எந்த நடிகரும் இதுவரை பெறவில்லை.
அரசியலுக்கு வருவார் என்று 25 ஆண்டுக் காலமாக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் கடைசிவரை வரவில்லை. நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் தொடங்கி இன்னும் ஓரத்தில்தான் ஒதுக்கப்பட்டு நிற்கிறார். எம்;ஜி.ஆருக்குப் பின் பல நடிகர்களும் அரசியலில் கால்பதித்தாலும் வெற்றிக்கொடி நாட்டவில்லை. ஆனாலும், சினிமாவில் உச்சத்துக்குச் சென்றுவிட்டால் அரசியலில் முயற்சிசெய்வது பார்ப்பது தொடர்கிறது. அதற்கு விஜய் விதிவிலக்கல்ல.
2009-ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது நடிகர் சங்கம் ஒன்று சேர்ந்து போராடியபோது அதில் விஜய் கலந்துகொண்டார். அதற்குப் பின் தனது ரசிகர் மன்றம் சார்பில் தனியாக உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினார். விஜய் தமிழர் என்பதும் அவரது மனைவி புலம்பெயர்ந்த ஈழத்தமிழச்சி என்பதும் அந்தப் போராட்டத்துக்கு அதிக கவனத்தை ஈர்த்தது. ஆனால், போருக்குப் பின்புலமாக இருந்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் முதல் குடும்பத்தினரில் ஒருவரான ராகுல் காந்தியை அவர் 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு சந்தித்தது கடும் எதிர்ப்பை சந்தித்தது.
ஆனால், விஜய் காங்கிரசில் சேரவில்லை.
அவரது ரசிகர் மன்றத்தினர் 2011-ஆம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்தனர், ஆனால், அதிமுக வென்று அதன் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா முதல்வரானபின் விஜய் நடித்த ;தலைவா’ படத்தில் சப் டைட்டிலாக ‘Time To Lead’ என்ற வாசகத்தை இடம்பெற செய்தார். இதனால், “தலைவா”திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
“தலைவா” படத்தை தொடந்து “கத்தி” படத்தில் 2ஜி அலைகற்றை தொடர்பாக வசனம் பேசி திமுகவை விமர்சனம் செய்தார். “மெர்சல்” படத்தில் ஜி.எஸ்.டி பற்றி அவர் பேசிய வசனத்தால் பாரதீய ஜனதா கட்சியினர் அவரைக் கடுமையாம எதிர்த்தனர். அவரது இயற்பெயரான ‘ஜோசப் விஜய்’ என்பதை பாஜகவினர் பொதுவெளியில் பயன்படுத்தி அவரது வசனத்துக்கு உள்நோக்கம் கற்பித்தனர். தன்னுடைய பெயருக்கு முன்னால் இளைய தளபதி என்று போட்டுவந்ததை ‘தளபதி’ என்று “மெர்சல்”மூலமாக மாற்றினார் விஜய்.
இதற்குமுன் விஜய் ரசிகர்கள் சிலர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டிருந்தாலும் அவர்களில் சிலர் வெற்றிபெற்றிருந்தாலும் அவர்கள் சுயேச்சையாகவே நின்றனர். ஆனால், இப்போதுதான் முதல்முறையாக மன்றக்கொடியோடும் விஜய் படத்துடனும் போட்டியில் குதிக்கின்றனர்.
விஜய்யின் முயற்சியை அரசியல் கட்சியினர் கவனத்துடன் பார்ப்பதற்கு பல காரணங்களை அடுக்கலாம். ரசிகர் மன்ற உறுப்பினர்களையும் தாண்டி அவருக்கு இளைஞர்களிடம் பெரும் ஆதரவு காணப்படுகிறது. அவர் 1990-களின் இறுதியில் அவர் நடித்த பல காதல் படங்களால் அவருக்கு இளம்பெண்களிடம் குறிப்பாக மாணவிகளிடம் பெரும் செல்வாக்கு இருந்தது. பின்னர் அவர் அதிரடி மாஸ் ஹீரோவாக தனது பிம்பத்தை உயர்த்தியதால் மாநிலம் முழுவதும் இளைஞர்களையும் தனது ரசிகர் வட்டத்துக்குள் கொண்டுவந்தார்.
சினிமாவில் நகரப் பகுதிகளில் ரசிகர்களை ஈர்க்கும் நாயகர்கள் சிலர் கிராமப்புறங்களில் ரசிகர்களை கவருவதில்லை. இவர்களில் கிராமங்களிலும் நகரங்களிலும் செல்வாக்கு கொண்டவர் விஜய் அவரது படங்கள் அனைத்து திரைப்பட மையங்களிலும் வெற்றிபெறுவதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. அவருக்கு பெண்கள் மத்தியிலும் இளைஞர்கள் நடுவிலும் காணப்படும் ஆதரவு அரசியலுக்கு அடித்தளம் அமைக்க உதவிசெய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மன்றத்தினரிடமும் அச்சம் அரசியல் கட்சிகளிடமும் இருக்கிறது.
இதைவிட முக்கியக் காரணமாக தற்போதைய அரசியல் சூழல் பார்க்கப்படுகிறது. எம்.ஜி.ஆர் அரசியலில் இறங்கியபோது தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. சினிமா தமிழ் சமூகத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தியது. ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் சினிவாவில் வெற்றிநாயகர்களாக வலம்வந்த காலத்தில் தமிழக அரசியலில் வலிமைமிக்க தலைவர்கள் வலுவான கட்சிகளை நடத்திவந்தனர், அரசியல் வெற்றியும் தோல்வியும் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கிடையில்தான் என்ற இருதுருவ அரசியல் சூழல் இருந்தது. தற்போது, திமுக ஆட்சியில் இருக்கிறது. அதிமுக வலிமையும் கவர்ச்சியும் உள்ள தலைவர்கள் இல்லாமல் தத்தளித்துவருகிறது. ஆளுங்கட்சியாக திமுக வலுவுடன் இருந்தாலும் எதிர்க்கட்சி இடத்துக்கு பெரும் வெற்றிடம் ஏற்பட்டுவரும் சூழல் இருப்பதால் அதிமுகவின் இடத்தைப் பிடிக்க பாஜக போன்ற தேசியக் கட்சிகளும் நாம் தமிழர், பாமக போன்ற கட்சிகளும் பெரும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த வெற்றிடத்தில் விஜய் ரசிகர் மன்றமும் குறிப்பிட்ட இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு இருப்பதால் அவரது முயற்சி உற்றுநோக்கப்படுகிறது. கிராமப்புற உள்ளாட்சியில் விஜய் ரசிகர் மன்றத்தினர் பெரும் வாக்குகள் வருங்காலத்தில் அவரது அரசியல் நுழைவுக்கு அடித்தளமாகவும் அமையலாம்.