Read in : English
இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களிலும் கம்யூனிசம் ஆட்சி செய்த மேற்கு வங்கத்திலும் தென் மாநிலமான கர்நாடகத்திலும் இந்துத்வா முழக்கத்தைக் கையில் எடுத்து வெற்றிகரமாகக் காலூன்றிய பாஜக தமிழ்நாட்டில் அதே அடையாளத்தை முன்னிறுத்தி வேல் யாத்திரை நடத்தியபோதும் வலுவாகக் காலூன்ற முடியாதது ஏன் என்ற கேள்விகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.
தமிழ்நாட்டின் பின்பற்றப்படும் இந்து மதமும் பாஜக வெற்றிபெற்ற மாநிலங்களில் பின்பற்றப்படும் இந்து மதமும் வேறுவேறா என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது. இந்து மத எதிர்ப்பிலோ நாத்திகத்திலோ ஈடுபடாமல் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியல்ல என்று அறிவித்து மென்மையாக போக்கைக் கடைபிடிப்பதால் இந்து ஓட்டுகள் பாஜகவுக்குப் போகவிடாமல் தடுக்கப்படுகிறது என்றொரு பார்வையும் முன்வைக்கப்படுகிறது.

கரிகாலன் போன்ற சோழ மன்னர்களும் சேர மன்னர்களும் யானை மீது ஏறி போருக்குச் சென்றதுபோலவே முருகனைப் பற்றியும் கூறப்படுகிறது
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழர்கள் தங்களில் முதல் அடையாளமாக மொழியை நினைக்கிறார்கள் மதத்தை அல்ல என்பதே வலுவான காரணமாக இருக்கிறது. தமிழர்களின் அரசியல் என்பது ‘தமிழன்’ என்ற அடையாளத்துடன் இணைந்தது. தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம் மொழி அடையாள அரசியலை மையமாகக் கொண்டது. அது நடந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்றும் அதை திமுக தூண்டிவிட்டது என்று கூறலாம்.. ஆனால் 2017-ஆம் ஆண்டு தமிழகமெங்கும் எந்த அரசியல் கட்சியும் முன்னெடுக்காமல் தன்னெழுச்சியாக தமிழ்நாட்டின் மூலைமுடுக்கிலும் நடந்த ஜல்லிக்கட்டு மீட்புப் போராட்டமும் ‘தமிழன்’ என்ற அடையாளத்துடன் தான் நடந்தது. இந்தப் போராட்டத்துக்கு உச்சநீதி மன்றமும் பணிந்தது.
இந்தப் போராட்டத்தில் பெரும்பாலும் மாணவர்களும் இளைஞர்களும் அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டார்கள். இவர்களில் பெரும்பாலோனோர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அறியாதவர்கள். ஆனால், தமிழன் என்ற அடையாளமே இவர்களை ஒன்று திரட்டியது. காலங்கள் மாறினாலும் தமிழர்கள் தங்கள் மொழி அடையாளத்தை முன்வைக்கும் அரசியல் போராட்டங்களில்தான் ஒன்று சேர்கிறார்கள். மத அடையாளத்தை வைத்து அவர்களைத் திரட்டுவது முடியாத செயலாகவே உள்ளது. 2009-ஆம் ஆண்டு இலங்கையில் போர்நிறுத்தம் கோரி தமிழன் என்ற அரசியல் அடையாளத்துடன் நடந்த போராட்டத்தில்தான் பல இளைஞர்கள் தீக்குளித்து இறந்தனர். வேறு எந்தப் பிரச்சினைக்கும் வேறு எந்த அடையாளம் தாங்கிய போராட்டத்திலும் இந்த எழுச்சியையும் உணர்ச்சியையும் பார்க்கமுடியாது.
மத அடையாள அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஏற்காத நிலை இருக்கிறது என்ற கருத்து வலுவாக வைக்கப்படுகிறது. அப்படியானால் தமிழர்களுக்கு மதமே இல்லையா? தங்களை இந்துக்கள் என்று தமிழர்கள் கருதவில்லையா? தமிழ்நாட்டில் இந்துமதத்துக்கே வேறு அடையாளம் இருக்கிறதா?
இதுபற்றிப் பேசிய சைவ சமய அறிஞர் மு.பெ. சத்தியவேல் முருகனார் ‘இந்து மதம் என்று ஒரு மதமே இல்லை. அது வெள்ளைக்காரன் உருவாக்கியது” என்று அடித்துச் சொல்கிறார். தமிழர்கள் சைவ சித்தாந்த நெறியைப் பின்பற்றினார்கள் என்றும் அது எல்லா மதங்களையும் கடந்த வாழ்க்கை முறை என்றும் சொல்கிறார்.
“இந்து மதம் உருவானது என்று சொல்வீர்களானால் அது எப்போது உருவானது-எப்படி உருவானது-அதை உருவாக்கிய குரு யார்? கடவுளே உருவாக்கினார் என்றால் 17 புராணங்களில் ஒரு இடத்திலாவது சிவனோ விஷ்ணுவோ வேறு எந்தக் கடவுளோ உருவாக்கினார் என்று இந்துமத புராணங்களில் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பும் அவர் இந்து மதமே ஆங்கிலேயர்கள் உருவாக்கியது என்கிறார்.
மறைந்த காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் எழுதிய ‘தெய்வத்தின் குரல்’ என்னும் நூலில் மேற்கோள் காட்டும் அவர் “இந்து மதம் என்று ஒன்று இல்லை. நல்ல காலம்-வெள்ளைக்காரன் நம்மை எல்லாம் ஒன்றாக சேர்த்து இந்து என்று சொன்னானோ நாம் பிழைத்தோம்” என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
மேலும், இது குறித்துப் பேசிய சத்தியவேல் முருகனார் “பல விஷயங்களில் ஆங்கிலேயரை எதிர்க்கிறோம். ஆனால், ஆங்கிலேயர்கள் நம்மை இந்து என்றால் அதை ஏற்கிறோம், இது நேரடியான முரண். ஏசுவை வணங்குபவர்கள் கிறிஸ்துவர்கள் என்றும் அல்லாவை வணங்குபவர்கள் முஸ்லிம்கள் என்றும் கூறிய ஆங்கிலேயர்கள் மற்றவர்கள் என்ன வணங்குகிறார்கள் என்று தெரியாததால் அவர்களை ஒன்றாக சேர்த்து இந்துக்கள் என்று பெயர் கொடுத்தனர். பல்வேறு மதங்கள் ‘இந்து’ என்ற பெயரில் அடங்குகிறது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப் படித்தாலே புரிந்துவிடும்”, என்கிறார்.
எதையும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அதன் தோற்றத்தையும் வளர்ச்சியையும் ஆராய்ந்து தெரிந்துகொள்ளவேண்டும் என்பது இயக்கவியலின் முக்கிய விதி. கி.மு. 600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களிடம் எழுத்து இருந்தது என்பதையும் நகரங்களை உருவாக்கினார்கள் என்பதையும் கீழடியில் கிடைத்த சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன. அதில் இதுவரை ‘இந்து மத அடையாளம்’ என்று பாஜக குறிப்பிடும் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. தொல்பொருள் ஆராய்ச்சி தவிர தமிழர்களின் வாழ்க்கை முறையைக் கூறும் சங்கக் இலக்கியங்களில் தேடிப்பார்த்தாலும் இன்றைய ‘இந்து மத அடையாளம்’ எதுவும் இல்லை.
சங்க இலக்கியங்களில் கூறப்படும் ஐவகை நிலங்களின் தெய்வங்களான சேயோன், மாயோன், வேந்தன், கொற்றவை ஆகியோர் பாஜகவின் வைதீக இந்து மதத்தில் பொருந்திவரவில்லை.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ‘பதிற்றுப்பத்து’ சேயோன் என்னும் முருகனை ஒரு மாவீரனாகவே காட்டுகிறது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனை முருகனைப் போன்ற மாவீரன் என்றே பாராட்டுகிறது.
“கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்குச்
செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப”
என்றுவரும் பாடல் வேல்தாங்கிய ஒரு போர்ப்படைத்தலைவனாக யானை மீது செல்வதாகவே முருகனைக் காட்டுகிறது. மயில் மீதல்ல.
“பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச்
சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தமர் உழக்கி” என்று தொடங்கும் பரிபாடல் முருகன் ஏறிச் செல்லும் யானையின் பெயர் ‘பிணிமுகம்’ என்றே கூறுகிறது. கரிகாலன் போன்ற சோழ மன்னர்களும் சேர மன்னர்களும் யானை மீது ஏறி போருக்குச் சென்றதுபோலவே முருகனைப் பற்றியும் கூறப்படுகிறது. பரிபாடல் என்பதே சங்க இலக்கியத்தில் மிகவும் பிந்தியது. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை எழுதப்பட்டது என்று கருதப்படுகிறது.
“களம் நன்கு இழைத்துக் கண்ணிசூட்டி
வளநகர் சிலம்பப் பாடி பலிகொடுத்து
உருவச் செந்திணை குருதியொடு தூஉய்
முருகுஆற்றுப் படுத்த உருகெழு நடுநாள்”
தமிழர்களின் உணர்விலும் உளவியலிலும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஓங்கிநிற்பது ‘தமிழன்’ என்ற உணர்வுதானே.
என்னும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அகநானூற்றுப் பாடல் முருகனுக்கு பலிகொடுத்து ரத்தத்தை தூவி வழிபடுவதைக் கூறுகிறது. இன்றைய முருகனுக்கு பலி கொடுப்பதில்லை. பஞ்சாமிர்தமே பிரசாதமாகத் தரப்படுகிறது. இன்றைய சுப்ரமணியன் அன்றைய தமிழ் கடவுள்தானா அல்லது மாற்றப்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுகிறது. தமிழர்களின் உணர்விலும் உளவியலிலும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஓங்கிநிற்பது ‘தமிழன்’ என்ற உணர்வுதானே. இதுபோன்றே சங்க இலக்கியத்தில் கூறப்படும் தமிழர் கடவுள்களுக்கும் இப்போதைய இந்துத்வா அமைப்புகள் காட்டும் கடவுளுக்கும் பெரும் வேறுபாடுகள் இருக்கின்றன. மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர் போன்ற தமிழ் அறிஞர்கள் தமிழர் மதம் என்பது முற்றிலும் வேறு என்ற கருத்தையே சொல்கின்றனர்.
குடியரசு இதழில் 30 அக்டோபர் 1943-ல் எழுதிய கட்டுரையில் திராவிடர் கழக நிறுவனர் ஈ.வெ.ரா. பெரியார் “திராவிடர்கள் இந்துக்கள் அல்ல என்பது எமது கருத்தாகும், இந்தக் கருத்தை ஆதாரமாக வைத்தே திருவாரூரில் கூடிய ஜஸ்டிஸ் கட்சி மாகாண மாநாட்டில் ‘திராவிடர் ஆகிய நாம் இந்துக்கள் அல்லர்’ என்றும் மக்கள் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் சென்சஸ் அறிக்கையில் நாம் ஒவ்வொருவரும் திராவிடர் என்று பெயர் கொடுக்க வேண்டுமே ஒழிய இந்துக்கள் என்று பெயர் கொடுக்கக்கூடாது. என்றும் தீர்மானம் நிறைவேற்றினோம்” என்று கூறுகிறார்.
அதற்குமுன் ‘திராவிட நாடு’ இதழில் திமுக நிறுவனரான சி.என்.அண்ணாதுரை 1942-ஆம் ஆண்டு தொடர்ச்சியாக ஏழு கட்டுரைகளில் இந்து மதம் தமிழ் மக்களுடைய மதம் இல்லையென்றும் பல்லாயிரம் ஆண்டுகளாக நாகரிக வாழ்க்கை வாழ்ந்த தமிழர்களிடம் இடைப்பட்ட காலத்தில் ஆரியர்களால் கொண்டுவந்து புகுத்தப்பட்டதே இந்துமதம் என்றும் கூறுகிறார்.
சட்டத்திலும் சான்றிதழிலும் தமிழனை ‘இந்து’ என்று குறித்துவிட்டால் தமிழ்நாட்டில் இந்துத்துவா அரசியல் நடத்திவிடலாமா? ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் இலக்கியம் தெரியாமல் தமிழர்களின் வாழ்க்கையோ வரலோறோ புரியாமல் தமிழ் மக்களின் சமூக உளவியலை எப்படி உள்வாங்க முடியும்? தமிழர்களின் உணர்விலும் உளவியலிலும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஓங்கிநிற்பது ‘தமிழன்’ என்ற உணர்வுதானே. திராவிட இயக்க அரசியலும் அடிப்படையில் தமிழ் தேசிய அரசியல்தானே. தமிழ்நாட்டில் வெற்றிபெற வேண்டுமானால் பாஜக தனது இந்துத்துவாக் கொள்கைகளையும் அடையாளத்தையும் இழக்க வேண்டும். இல்லையென்றால் தனது தமிழ்நாட்டுக் கனவை மறக்க வேண்டும். இதில் இரண்டாவது வாய்ப்பை பாஜக தேசியத் தலைவர்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்பது தமிழ்நாட்டில் கட்சி நடத்தும் முறையிலேயே தெரிகிறது.
Read in : English