Read in : English
ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆள் நடமாட்டம் மிகுந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற இளம்பெண் கொடுரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட போது தமிழ்நாடு தீப்பிடித்து எரிவதுபோல் பரபரப்பு பற்றிக்கொண்டது. அதே கொடூரம் மீண்டும் அதேபோல் ஒரு ரயில் நிலயம் அருகே நடந்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையம் அருகே நேற்று ஸ்வேதா என்ற இளம்பெண் ஓர் இளைஞனால் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். குற்றம் ஒன்றுதான். கொடூரம் ஒன்றுதான். கொலை செய்யப்பட்டதும் இளம்பெண்தான். கொன்றது ஓர் இளைஞன்தான். மக்கள் நடமாட்டம் மிகுந்த இடந்தான். ஆனால், இந்தக் கொலை ஏன் பேசுபொருளாகவில்லை
ஆனால், ஸ்வாதியின் படுகொலை கவனம் ஈர்த்ததுபோல் இந்தக்கொலை கவனிக்கப்படவில்லை. இது இன்னொரு சாதாரண குற்ற சம்பவம்போல் சமூகம் சாதாரணமாகக் கடந்துசெல்கிறது. ஸ்வாதி கொலை உடனடியாக பரபரப்பான பேசுபொருளானது. மக்கள் கொதித்தனர். கோபம், சோகம், கவலை, சமூக அக்கறை என பல்வேறு கோணங்களில் மக்கள் அந்த நிகழ்வை விவாதித்தனர். ஸ்வேதாவின் கொலை ஏன் ஓர் அன்றாட நிகழ்வுபோல் பார்க்கப்படுவது ஏன்?
ஸ்வாதியின் கொலையில் குற்றவாளி தப்பிச்சென்றுவிட்டார். அவன் யார்? என்ன பின்னணி? மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு இடத்தில் ஒரு கொலையைச் செய்துவிட்டு குற்றவாளி எப்படி தப்பினான் இப்படி பல கேள்விகள் எழுந்தன. அந்தக் கொலையில் இருந்த மர்மம் இந்தக் கொலையில் இல்லை. குற்றவாளி தப்பி ஓடவில்லை. உடனடியாக மாட்டிக்கொண்டான். தொடர்மர்மத்துக்கு இடமில்லை. பரபரப்பு இல்லை. குற்றவாளி எங்கே? பிடிபட்டானா? இல்லையா? என்று ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட வேண்டிய தேவையில்லை. தப்பிப்போன குற்றவாளி நமக்குள் உலாவிக்கொண்டிருக்கிறான் என்ற பீதி மக்களிடம் இல்லை. அடுத்து என்னாகும் என்ற அச்சமில்லை.
விரும்பாத ஒரு பெண்ணை ஓர் இளைஞன் பின் தொடரலாம். அவளுக்குத் தொடர்ந்து தொல்லை தரலாம். மிரட்டலாம். அவளுக்குப் பிடிக்காவிட்டாலும் அவளிடம் தவறாகப் பேசலாம் என்று தமிழ் சினிமாக்கள் தொடர்ந்து கற்றுத்தருவது கொலைகளுக்கு ஒரு முக்கியக் காரணம். உதாரணத்துக்கு ‘பருத்திவீரன்’ படத்தில் நாயகன் நாயகியின் வீட்டுக்குள் தடாலடியாக நுழைவான். தன்னைக் காதலிக்காவிட்டால் வெட்டிவிடுவதாக சைகைசெய்வான். வெட்டிவிடுவதாக மிரட்டுமளவுக்கு ‘ஆண்மை’ மிகுந்த நாயகன்மீது காதலிக்கு கன்னாபின்னாவென்று காதல் பிறந்துவிடும். இதுபோன்ற ‘வெட்டிவீரர்கள்’ நாயகனாகக் காட்டப்பட்டால் அதைப்பார்க்கும் இளைஞர்கள் ஏன் ‘வெட்டிவீரர்களாக’ மாறமாட்டார்கள்.
ஸ்வாதி கொலையில் ராம்குமாரை ஒருவாரமாகத் தேடியதால் ஒருவாரமாகவே அது ஊடகங்களில் பரபரப்பானது. அரசியல் கட்சிகள் பொங்கி எழுந்தன. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்திசிரிப்பதாகப் பேசினார்.
ஸ்வாதியின் வீட்டுக்கும் சென்று பெற்றோரை சந்தித்தார். தமிழ்நாட்டில் ஒரு பெண் ஆட்சியில் இருக்கும்போது பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று கூக்குரல்கள் எழுந்தன. ஆனால், அதுபோன்று எதுவும் இந்தக் கொலையில் நடக்க வாய்ப்பில்லை..
ஸ்வாதியின் கொலை அதுபோல் நடைபெறுவது அப்போது முதல்முறை. முதல்முறை ஒரு நிகழ்வு நடைபெறும்போது இருக்கும் பரபரப்பு அடுத்தமுறை இருப்பதில்லை. ஸ்வாதி கொலை சென்னையின் மையப்பகுதியில் நடந்தது. ஸ்வேதா கொலை சென்னைப் புறநகர்ப் பகுதியில் கிராமங்கள் தொடங்கும் இடத்தில் நடந்தது.
கொலை செய்யப்பட்டவரின் சமூகப் பின்னணி, கொலை செய்யப்பட்டவரின் சமூகப் பின்னணி ஸ்வாதியின் கொலைக்கு அதிக முக்கியத்துவம் தருவதற்குக் காரணமானது. ஸ்வாதி பிராமணப் பெண்ணாகவும் ராம்குமார் தலித் ஆகவும் இருந்தது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்துக்குக் காரணமானது. ஸ்வாதி இன்போஸிஸ் போன்ற புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலைபார்த்ததும் ராம்குமார் கிராமத்து இளைஞனாகவும் இருந்தது தமிழ்சினிமாக் கதை போல் சுவாரஸ்யம் சேர்த்தது. ஸ்வேதா சாதாரண பஸ் நடத்துனரின் மகள். தற்போது கொலை செய்துள்ள ராமச்சந்திரன் திருக்குவளையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி.
அன்றும் இன்றும் கால சூழ்நிலையும் மாறிவிட்டது. கொரானாவாலும் அந்த நோயைவிடவும் பெரிய கொடுமையான ஊரடங்கும் கடுமையான பொருளாதர இழப்புகளும் வாழ்க்கைக் போராட்டங்களும் கரைசேர முடியாத கவலைகளும் சொல்லமுடியாத சோகங்களும் இதுபோன்ற கொலையை மக்கள் மனங்களில் இருந்து மனிதநேயத்தையும் சமூக அக்கறையையும் மழுங்கடித்துவிட்டதும் இன்னொரு முக்கிய காரணமாக இருக்கலாம். இப்போது அவரவர்களுக்கு அவரவர் கவலையே பெரிதாகிப்போய்விட்டது.
நமது சமூகத்தில் ஆண்மை பற்றிய தவறான புரிதலும் தவறான படங்களும் பாடங்களும் தமிழ் இளைஞர்களை தரம்கெட்டவர்களாக மாற்றியிருக்கிறது. தன்னை விரும்பாத பெண்ணை தான் விரட்டிவிரட்டிக் காதல்செய்வது தன்மானமற்ற செயல் என்று புரிந்துகொள்ளும் அளவு சூடுசுரணை இல்லாத மனநோயாளிகளாக அவர்கள் மாறியிருக்கிறார்கள். இதுபோன்ற கொலைகளின் பின்னணியில் இருக்கும் பிரச்சினைகள் அவசரமாக கவனிக்க வேண்டியவை.
Read in : English