Read in : English
தமிழ்த் திரையுலகில் மின்னிய நட்சத்திரங்களின் வரிசையில் முதன்மையான இடம் ரஜினி காந்துக்கு உண்டு. சற்றேறக்குறைய நாற்பது ஆண்டுகளாகத் திரைப்படங்களில் நாயகனாகவே நடித்தும், நடிகைகளுடன் டூயட் பாடியும் முத்திரை வசனங்களை முழங்கியும் வரும் ரஜினி காந்தின் படங்கள் இன்றுவரை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைச் சம்பாதித்துக்கொடுத்துள்ளன என்றே சொல்லப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் அவரது படங்கள் படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ளன என்பதும் மறுக்கவியலா உண்மை. உதாரணங்களாக மாவீரன், ஸ்ரீராகவேந்திரர், பாண்டியன், உழைப்பாளி, அருணாசலம், பாபா, லிங்கா போன்ற படங்களைக் குறிப்பிட முடியும்.
ரஜினி காந்த் தனது படங்களை வெற்றிபெற வைக்கக் கையாண்ட உத்திகளில் ஒன்று அரசியல். ரஜினியின் நிஜ அரசியல் அவரது காலைவாரிவிட்டுவிட்டபோதும், அவரது சினிமா அரசியல் அவருக்குப் பெரிய அளவில் கைகொடுத்துள்ளது. அது இந்தத் தீபாவளி நாளில் வெளியாகவுள்ள அண்ணாத்த படத்தைக் கரைசேர்க்குமா? ஏன் இப்படி ஒரு கேள்வி என்றால், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அதாவது, 1996இல் வெளியான முத்து திரைப்படம் தொடங்கி இதுவரை ரஜினி காந்த் தான் அரசியலில் ஈடுபடப்போவதாக இலைமறைகாயாகப் படங்களில் உணர்த்தியோ திரைப்படங்கள் வெளியாகும் சமயத்தில் மேடைகளில் பேசியோ அவற்றை வெற்றிக்கோட்டை நோக்கி நகர்த்திவந்தார். முதன்முறையாக இப்போது அவர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று உறுதியாக அறிவித்த நிலையில் அவரது படம் ஒன்று வெளியாகப் போகிறது. இந்தச் சூழலில் அரசியலுக்கும் அவருக்கும் முகிழ்த்த உறவிழை குறித்த நினைவை ஓட விடுவோம்.
கே. பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் (1975) திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த் இரண்டு மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் முன்னணி நடிகர் என்னும் இடத்தைக் கடந்து தமிழ்நாட்டின் முதன்மை நட்சத்திரமானார். திரைப்படங்களில் கிடைத்த தொடர் வெற்றி காரணமாகத் தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்ட பெயரானது ரஜினி காந்த். எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்த காலத்தில் திரைத்துறையில் புகழ்க் கொடியைப் பறக்கவிட்ட ரஜினி காந்த் மீது அரசியல் காற்றுவீசத் தொடங்கியது எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர்தான்.
1987இல் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ஊர்க்காவலன் திரைப்பட வெற்றிவிழாவின் போது, ‘வரவிருக்கும் தேர்தலில் ஜானகி எம்.ஜி.ஆர். அவர்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என்னும் பொருள் தொனிக்கும் வகையில் அவர் பேசியது நாளேடுகளில் செய்தியானது. இப்படி மேடையில் அரசியல் பேசினாலும், அதற்கு அடுத்த ஆண்டில் 1988இல் வெளியான ராஜாதி ராஜா திரைப்படத்தில், “எனக்குக் கட்சியும் வேணாம் ஒரு கொடியும் வேணாம்” எனப் பாடி நடித்திருந்தார் அவர். ஜானகி எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்த ரஜினியின் பேச்சு அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் ஜானகி எம்.ஜி.ஆருக்கு எதிர்நிலையிலிருந்த ஜெயலலிதாவுக்கு உவப்பாக இருந்திருக்கவில்லை. மேலும், 1989 சட்டமன்றத் தேர்தலில் ஜானகி எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. இதனால் ரஜினியின் வாழ்த்து ஜெயலலிதாவின் பார்வையில் கேலிக்கு ஆளானது. இதுதான் ஜெயலலிதா, ரஜினி இருவருக்குமிடையேயான மோதலுக்குத் தொடக்கப்புள்ளியாக இருக்கக்கூடும்.
அதைத் தொடர்ந்து 1989 தீபாவளி நாளில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தில் ரஜினிகாந்த் பணத் திமிர் படைத்த மாமியாரின் கொட்டத்தை அடக்கும் மாப்பிள்ளையாக நடித்திருந்தார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இந்தப் படத்தின் பெரிய அளவிலான வெற்றியே ரஜினியின் ‘சினிமா வெற்றிக்கு அரசியல் முலாம்’ என்னும் உத்திக்கு உந்து சக்தியைக் கொடுத்திருக்க வேண்டும். திரைக்கு வந்து சுமார் பதினைந்து ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் அவர் வேறொரு திசைக்கு நகர வேண்டிய தேவையும் எழுந்தது. அதற்கு உதவியது அரசியல்.
தனிப்பட்ட முறையில் அரசியல் தனது சுபாவத்துக்கு ஒத்துவராதது என்பதை ரஜினி அறிந்திருந்தபோதும், அரசியல் முலாம் பூசிய வசனங்கள் படங்களை வெற்றிபெற வைக்க உதவும் என்னும் நம்பிக்கையில், அவற்றை ஓர் உத்தியாகத் தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கினார் அவர்.
1990இல் வெளியான அதிசயப் பிறவி என்னும் திரைப்படத்தில் ரஜினியைக் காட்டி, நடிகர் சோ, “பூவுலகில் இந்த முகத்துக்கு ஏகப்பட்ட மதிப்பு இவரைப் போன்றவர்கள் போட்டிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று அரசியல்வாதிகளே அஞ்சி நடுங்குகிறார்கள்” என வசனம் பேசுவார். அரசியலில் ஈடுபடுவதில் ஆர்வமே இல்லாத ரஜினி காந்த் இப்படியான வசனங்களை ஏன் அனுமதித்தார்? ரசிகர்களை உசுப்பேற்றி அவர்களைத் தன் பிடியிலேயே வைத்திருக்க இத்தகைய வசனங்களும் காட்சிகளும் அவருக்கு உதவின. எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் எல்லாம் ஆண்டவன் செயல் எனப் பூடகமாகச் சொல்வதன் மூலம் அவரால் தன் ரசிகர்களை எப்போதும் பரவச நிலையிலேயே வைத்திருக்க முடிந்தது.
1991 ஆம் ஆண்டில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் பகுதியிலேயே ரஜினிகாந்தும் குடியிருந்துவந்தது இந்த அரசியல் விளையாட்டுக்கு மிகத் தோதாகிப்போனது. முதலமைச்சர் வீட்டுக்கு வரும்போதும் போகும்போதும், போக்குவரத்து நிறுத்திவைக்கப்படுவது வாடிக்கையாக இருந்தது. ரஜினி என்னும் திரை நட்சத்திரம் இந்த விவகாரத்தை வெறுமனே கடக்க இயலாமல் தடுமாறினார். ஒருமுறை அவர் காரிலிருந்து இறங்கிச் செல்ல ஊடக வெளிச்சத்தில் அது சட்டென்று தமிழ்நாட்டுக்கான செய்தியானது. இது முதலமைச்சர் ஜெயலலிதாவின் பார்வைக்கும் சென்றிருக்கும். இப்படியான சம்பவங்களால் ரஜினி அரசியல் துறையில் குறுக்கீடு நிகழ்த்தியது காலத்தின் கட்டாயமானது. அந்தக் காலத்தில் வெளியான மன்னன், பாண்டியன், அண்ணாமலை போன்ற படங்களில் ரஜினிகாந்த் பேசிய முத்திரை வசனங்களுக்கு அரசியல் சாயம் பூசி மகிழ்ந்தனர் ரஜினி ரசிகர்கள். முத்தாய்ப்பாக 1993 இல் வெளியான உழைப்பாளி படத்தில், “நேத்து என்னைக் கூலியா வச்சிருந்தான்; இன்னக்கி நடிகனாக்கியிருக்கான்; நாளக்கி…” என்று வசனம் பேசிச் சிரிப்பார் ரஜினி. ரசிகர்கள், தலைவா நாளக்கி நீ முதல்வர் என்று சொல்லி பூரிப்படைந்தார்கள். இவையெல்லாம் ரஜினிகாந்த் செவிகளையும் சென்றடைந்திருக்க வேண்டும்.
தனிப்பட்ட முறையில் அரசியல் தனது சுபாவத்துக்கு ஒத்துவராதது என்பதை ரஜினி அறிந்திருந்தபோதும், அரசியல் முலாம் பூசிய வசனங்கள் படங்களை வெற்றிபெற வைக்க உதவும் என்னும் நம்பிக்கையில், அவற்றை ஓர் உத்தியாகத் தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கினார் அவர். 1995ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று நடைபெற்ற பாட்ஷா பட விழாவில் வெடி குண்டு கலாச்சாரம் குறித்துப் பேசியபோது, சட்டென்று அனைவரது பார்வையும் அவர்மீது விழுந்தது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கும் அவருக்குமான உரசல் அதிகரித்தது. அதன் பின்னர் 1996ஆம் ஆண்டுக்கான தேர்தலின்போது, ரஜினிக்கான அரசியல் பிரவேச வாய்ப்புகள் பிரகாசமாக இருந்ததாக ரஜினி அரசியல் ஆலோசகர் என்ற நிலையிலிருந்த சோ ராமசாமி முதலான அரசியல் பார்வையாளர்கள் கருதினர். ஆனால், ரஜினியோ அந்த வாய்ப்பில் பிரமாதமாகச் சொதப்பினார். அரசியலில் இறங்காமல், குரல் கொடுத்ததுடன் ஒதுங்கி நின்றுவிட்டார். அதன் பின்னர் ரஜினி காந்த் நடித்த படங்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துவிட்டது. ஆண்டுக்கு இரண்டு மூன்று படங்கள் வெளிவந்த காலம் போய் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் வெளியாகத் தொடங்கியது.
ஐம்பது வயதைத் தொட்ட நிலையில், அதுவரை திரைப்படங்களில் வசனம் பேசிய ரஜினி காந்த் மேடைகளில் வசனம் பேசத் தொடங்கினார். பாமக எதிர்ப்பு, காவிரி நீர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை, தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் வரை அரசியல் நிகழ்வுகள் பற்றிக் கருத்துகள் தெரிவிப்பார். அதைத் தொடர்ந்து அவரது படங்களும் வெளியாகும். ஆகவே, ஊடகங்கள் ரஜினி காந்தின் அரசியல் பிரவேசம் குறித்த ஊகங்களைக் கட்டுரைகளாக எழுதித் தள்ளின. எப்படியும் ரஜினி காந்த் அரசியலுக்கு வந்துவிடுவார் என நம்பிய அவரது ரசிகர்கள் அவரது படத்தைத் தொடர்ந்து பார்த்துவந்தனர்.
ரஜினியின் இந்த உத்தி எல்லா நேரத்திலும் அவரைக் காப்பாற்றியது என்று சொல்ல முடியாது. ஆனாலும், எல்லா நேரத்திலும் ரஜினி இந்த உத்தியை பயன்படுத்துவதை வாடிக்கையாக்கினார். ஏனெனில், தான் நேரடி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பதை அறிவிக்காமல், உள்ளங்கையைப் பொத்தியபடியே பூடகமாக வைத்திருந்தார் ரஜினிகாந்த். இப்போது முதன் முறையாக அரசியல் தொடர்பாகக் கையைவிரித்துள்ள நிலையில் அவரது படமான அண்ணாத்த திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னரான ஒரு சூழல் இது. அரசியல் என்னும் சுழலில் மாட்டிக்கொள்ளும் முன்னர் ரஜினி என்ற நடிகருக்கு இருந்த அதே வரவேற்பு இப்போதும் உள்ளதா என்பதை அண்ணாத்த வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. இப்போதுகூட முற்றுப்புள்ளி வைத்த அரசியல் அரசியல் நாடகத்துக்கு ஒரு காற்புள்ளிவைத்து, சிறு கல்லெறிந்து பார்க்கிறார். வழக்கம்போல் ரஜினியிடம் ரசிகர்கள் ஏமாறுவார்களா, ரஜினி ரசிகர்களிடம் ஏமாறுவாரா? அண்ணாத்த ஒரு பாட்ஷாவாகுமா பாபாவாகுமா என்பதைப் பொறுத்தது அது.
Read in : English