குஜராத் மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள சங்கம்னார் கிராமத்தைச் சேர்ந்த ஷ்ரெயாஸ் என்கிற 21 வயதான இளம் விவசாயி 53.14 குவிண்டால் வெங்காயத்தை விற்றதற்கு பெற்ற பணம் 6 ரூபாய். அதைப் பார்த்தது மனம் வெதும்பிப் போன அவர் அப்பணத்தை அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு அனுப்பி வைத்தார். சில நாட்களுக்கு பிறகு, மகாராஷ்ட்ர மாநிலத்தைச் சேர்ந்த அண்டார்சுல் என்கிற கிராமத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் என்கிற மற்றொரு விவசாயி ஒரு கிலோ வெங்காயத்தை 51 பைசாவுக்குத்தான் விற்க முடிந்தது. அதன் மூலம் கிடைத்த 216 ரூபாயை அம்மாநில முதல்வருக்கு அனுப்பி வைத்தார். இப்பணம் போக்குவரத்து செலவு உள்ளிட்ட செலவுக்கும் போக மீதி என்பது துயரம்.
பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு மகராஷ்டிரத்தைச் சேர்ந்த சஞ்சய் சாத்தே என்ற விவசாயி 1,066 ரூபாயை மணியார்டரில் அனுப்பிய செய்தியினால் அவர்கள் இருவரும் ஈர்க்கப்பட்டு இவ்வாறு செய்துள்ளனர். 750 கிலோ வெங்காயத்தை விற்றதற்காக இதர செலவு போக சாத்தே பெற்ற தொகை தான் இது. அவர் மணியார்டரில் பணத்தை அனுப்பியதால் பெற்றுக்கொள்ள முடியாது என கூறி பிரதமர் அலுவலகம் அப்பணத்தைத் திருப்பி அனுப்பியது, அவர் அனுப்பிய செய்தியை விட மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வெங்கய விலை சரிவைச் சந்தித்து வருவதால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். நாட்டிலேயே வெங்காயத்துக்கு பெரிய சந்தையான லாசல்கான் சந்தையில் ஒரு குவின்டல் வெங்காயம் 100 ரூபாயிலிருந்து 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சராசரியாக, உற்பத்திக்கு செலவிடப்பட்ட தொகையில் வெறும் 15 சதவீத பணத்தை மட்டுமே விவசாயிகள் பெறுகிறார்கள். இந்த அதிர்ச்சியை த்தாங்க முடியாமல் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இருவர் தற்கொலை செய்துகொண்டனர்.
மத்திய பிரதேசத்தில் நீமுச் சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 50 பைசாவுக்கு விற்கப்பட்டது. பல இடங்களில் விவசாயிகள் வெங்காயத்தைத் தெருவில் கொட்டினார்கள். சிலர் சாலையோரங்களில் குவித்து வைத்து தெருவில் வருவோர் போவோருக்கு இலவசமாகக் கொடுத்தார்கள். பூண்டு விஷயத்திலும் இதேமாதிரி நடந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் பண்டி, பரான், ஜாலாவர், கோட்டா ஆகிய நான்கு மாவட்டங்களில் பூண்டு மார்ச் மாதம் அறுவடை செய்யப்பட்டபோது ஒரு கிலோ பூண்டு ஒரு ரூபாய் என்று சந்தையில் விற்கப்பட்டது. அதை அனுப்பும் செலவுக்குக்கூட அது கட்டாது. இந்த வேதனை தாங்காமல் 5 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளிவந்தன. இதைத்தொடர்ந்து, சிலர் அறுவடை செய்யப்பட்ட பூண்டை கிணறுகளிலும் குளங்களிலும் கொட்டினர்.
வெங்காயம் அல்லது பூண்டு பயிரிடும் விவசாயிகளின் அவலநிலை விதிவிலக்கல்ல. சிலமாதங்களுக்கு முன்பு, தக்காளி விலையில் 65 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டதால் நாசிக் சந்தையில் விவசாயிகள் தக்காளியை சாலைகளில் கொட்டினார்கள். விலை வீழ்ச்சி புதிய விஷயம் அல்ல. கடந்த மூன்று ஆண்டுகளாக தங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் வெங்காயம், தக்காளி, உருளை போன்றவற்றை மட்டுமில்லாது பட்டாணி, காலிபிளவர், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளையும் சாலைகளில் கொட்டுகின்றனர். செய்த செலவுக்குக்கூட விலை கிடைக்காத கோபத்தில் ஒரு விவசாயி, மாதுளம்பழத்தை சாலையில் தரையில் வீசி உடைத்தது குறித்த வீடியோ வைரலானது. அபரிமிதமான அறுவடைக்குப் பிறகும் இந்த விலை வீழ்ச்சி, நூற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையை அழித்து வருகிறது.
குறைந்தபட்ச ஆதார விலையை விட சந்தை விலை குறைவாக இருக்கும்போது விவசாயிகள் என்ன செய்வார்கள்? கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் விவசாய விளைபொருட்கள் விலை 15 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் வரை குறைந்துள்ளது. நெல் விஷயத்திலும், உபரி நெல்லை குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு கொள்முதல் செய்வதாக அரசு கூறிய பிறகு 20 சதவீதம் விலை குறைந்தது. 23 உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயித்தபோதிலும் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் 21 பயிர்களின் உற்பத்தி மிக அதிகமாக இருப்பதால் விலை பயங்கரமாக வீழ்ச்சி அடைந்துள்ளது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
சாதகமான பருவநிலையும் உற்பத்திப் பொருள்களுக்கு நல்ல விலையும் கிடைக்கும் என்பதால் ஈர்க்கப்பட்டு, நல்ல உற்பத்தியைப் பெறுவதற்கு விவசாயிகள் பாடுபடுகிறார்கள். ஆனால், அவர்களது ஆர்வம் குறுகிய காலத்திலேயே மடிந்து போய் விடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, விலை வீழ்ச்சி விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்தி வருகிறது. அரசின் தற்காலிகமான ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கைகளே இதற்குக் காரணம் என்று சாடினாலும், சந்தை இடையீடு திட்ட உறுதிமொழி, விலை வீழ்ச்சியால் பாதிப்புக்கு ஆளாகியுள்ள விவசாயிகளை மீட்கத் தவறிவிட்டது.
வெண்மைப் புரட்சி மாதிரி, தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றுக்கான விலை இறங்கும்போது, விவசாயிகளைக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்து அவர்களை காப்பதற்கான திட்டம் காகிதத்திலேயே உள்ளது. பால் போன்ற கெட்டுப் போகக்கூடிய பொருட்களுககு ஆக்கப்பூர்வமான கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கியது போல, மற்ற அழுகும் பொருட்களும் செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணம் புரியவில்லை.
அமெரிக்காவில் தனியார் சந்தைகள் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளை காக்கத் தவறும்பட்சத்தில் அமெரிக்க வேளாண்துறை அவர்களை காக்க முற்படும். 2016இல் 11 மில்லியன் டன் பாலாடைக் கட்டி உற்பத்தி செய்யப்பட்டபோது, 20 மில்லியன் டாலருக்கு அதனை அமெரிக்க வேளாண் துறை வாங்கிக்கொண்டது. இதனை தேவையுள்ள மக்களுக்கு கொடுப்போம் என அமெரிக்க வேளாண் செயலர் டாம் வில்சேக் கூறினார். இதேபோல் முன்பு ஸ்ட்ராபெர்ரியை கொள்முதல் செய்து பள்ளிகளில் விநியோகித்தது. நமது இந்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை ஏன் உபரி தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்குகளை வாங்கி விற்பனை செய்வதில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஓர் இரவில் 200 மில்லியன் மக்கள் பட்டினியாக உறங்கப்போகும் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை சாலையில் எறிவதற்கு என்ன விளக்கம் கொடுத்து விட முடியும்?
அமெரிக்காவில் விவசாய உற்பத்திப் பொருட்களின் விலை வீழ்ச்சி அடையும்போது, 2002ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க விவசாய மசோதாவின்படி, விவசாயிகளின் வருமானத்துக்கு ஆதரவு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. 2014இல் அங்கு நிலக்கடலை விலை சரிந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது, அந்த விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உதவித் திட்டத்தைச் செயல்படுத்தியது. அமெரிக்காவை போல் இந்தியாவிலும் ஏன் செய்யக் கூடாது?