இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட மூன்று நாட்களுக்கு முன்னதாக ஆரம்பித்தது. பருவமழை உரிய நேரத்தில் பெய்வது விவசாயத்துக்கு மட்டும் நல்ல செய்தியில்லை. பொருளாதாரத்தின் ஒவ்வொரு பக்கங்களிலும் இது மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை இயல்பாக இருக்க வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று. காரணம் விவசாயம் நன்றாக இருந்தால், அது பலமான பொருளாதாரத்துக்கு அடித்தளமாக இருக்கும். ஆனால் அனைத்தும் பருவமழையைப் பொருத்தே அமைகிறது. ’பருவமழைதான் உண்மையான விவசாய அமைச்சர்’ என்று முன்னாள் வேளாண் அமைச்சர் சதுரணன் மிஸ்ரா கூறுவார்.
கடந்த 2014, 15 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வறட்சி நிலவியதால் நாட்டின் பல இடங்களில் மழை கருணை காட்டி இருக்க வேண்டும். நமது நாட்டில் 60 சதவீத நிலங்கள் மழையை சார்ந்தே உள்ளன. இதனால், பாசனப் பகுதிகளில் பெய்யும் வழக்கமான மழை, டீசல் மற்றும் மின்சார உபயோகத்தைக் குறைக்கிறது. அதன்மூலம் விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி விலையைக் குறைக்கிறது. அதேவேளையில் இயல்பாகப் பெய்யும் பருவமழை வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள வறண்ட நிலங்களுக்கு உதவியாக உள்ளது. காரணம் இங்கு குடிநீரே பெரும் பிரச்சனையாக உள்ளது. 91 பெரிய அணைகளில் தண்ணீரைத் தேக்கிவைப்பதால் பாசனத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீரைத் தொடர்ந்து விநியோகிக்க முடிகிறது.
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், இயல்பான பருவம்ழை என்பது நீண்ட கால சராசரி அளவில் 97 சதவீதம் என வரையறுத்துள்ளது. இந்த ஆண்டு 44 சதவீதம் அளவுக்குப் பற்றாக்குறை அல்லது சராசரி அளவுக்கும் குறைவாகவே பருவமழை இருக்கும். (இது கடந்த மே மாதம் கணிக்கப்பட்டது. அதுபோலவே பருவமழை இந்த ஆண்டு சராசரியை விட குறைவாகவே பெய்துள்ளது) பொதுவாக இயல்பான பருவமழை நிச்சயமாக பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். கடந்த ஆண்டும் சாராசரி அளவு மழை இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் 40 சதவீத மாவட்டங்கள் குறைந்த அளவு மழையைப் பெற்றன. உதாரணமாக, மகாராஷ்ட்ராவில் விதர்பாவில் 32 சதவீதமும் மரத்வாடா பகுதியில் 28 சதவீதமும் குறைவான மழை பெய்தது. அதுபோல், குஜராத்தில் சௌராஷ்ட்ரா, மற்றும் கட்ச் பகுதிகளிலும் பீகார், ஜார்க்கண்ட், ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்திலும் குறைந்த அளவே மழை பெய்துள்ளது.
கடந்த ஆண்டு பருவமழை இயல்பான அளவு பெய்ததுள்ளதாக டவுன் டூ எர்த் இதழ் கூறியுள்ளது. சில மணிநேரங்களுக்குத் தொடர்ந்து கனமழை பெய்வதும், பல வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு மழையே இல்லாமல் இருப்பதும் நிகழ்கிறது. கடந்த 2016இல் கூட பருவமழை 15 நாட்கள் தாமதமாகி, விவசாயப் பணிகளில் கடும் அழுத்தத்தை உண்டாக்கியது. பருவமழை தாமதமானால் விதைப்பும் தாமதமாகி அதனால் பயிர் விளைச்சலும் எதிர்மறையாக அமைகிறது. இதையெல்லாம் விட, தென் இந்தியாவில் 12 சதவீதம் அதிக மழை பெய்தபோது, வட மற்றும் மத்திய இந்தியாவில் 12 முதல் 46 சதவீதம் வரை குறைவாக மழை பெய்துள்ளது. எல்லா இடங்களிலும் மழை பரவலாகப் பெய்ய வேண்டியது அவசியம். அதன் மூலம், `இயல்பான மழை’ யின் தாக்கத்தைக் கணிக்க முடியும்.
சில பகுதிகளில் பருவமழை குறைவாக பெய்திருந்தாலும் 2017-18-இல் உணவுதானிய உற்பத்தி 279.5 மில்லியன் டன் இருக்க வேண்டும் என நாடு எதிர்பார்க்கிறது. இதுவரை எட்டிய உற்பத்தியைவிட அதிக உற்பத்தி அது. இதற்கு பருவமழையும் முக்கியக் காரணம். இதனால் அரிசி உற்பத்தியில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. காரணம், அது முழுக்க முழுக்க பருவமழையைச் சார்ந்தே உள்ளது. நெல் உற்பத்தி 111.5 மில்லியன் டன் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016-17ஆம் ஆண்டில் நெல் உற்பத்தி 109.7 மில்லியன் டன்னாக இருந்தது. பருப்பு வகைகளின் உற்பத்தி 24.5 மில்லியன் டன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே விலையில் வீழ்ச்சியை ஏற்படுத்தி விவ்சாயிகளைப் பாதிக்கச் செய்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் அறுவடை அதிகரித்து, அது உணவு பாதுகாப்பை உறுதி செய்கிறது. மேலும் அது உணவு வீக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இதில் துயரம் என்னவென்றால் பருவமழை நன்கு பெய்தாலும் வறட்சி ஏற்பட்டாலும் விவசாயிகளின் வாழ்க்கை துயரத்திலே உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் பெரும்பாலான ஆண்டுகளில் பருவமழை நன்கு பெய்துள்ளது. ஆனால் விவசாயிகளின் வருமானம் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. பருவமழை நன்கு பெய்தாலும் பொய்த்தாலும் விவ்சாயிகளின் இருண்ட வாழ்க்கையில் எந்த ஒளியும் ஏற்படுவதில்லை என்பதுதான் நிதர்சனம். நிதி ஆயோக் அறிக்கையின்படி, விவசாயிகளின் சராசரி வருமானம் ஆண்டுக்கு அரை சதவீதம் அளவுக்குத்தான் அதிகரித்து வருகிறது. மிகச் சரியாக கூறவேண்டுமானால் வெறும் 0.44 சதவீதம் தான் வளர்ச்சி. இயல்பான பருவமழை இருந்தாலும், விவசாயத்தில் மட்டும் ஏன் கடுமையான துன்பத்தை உண்டாக்குகிறது?
கடந்த இரண்டாண்டுகளாக அதாவது 2016-17 மற்றும் 2017-18 களில் நல்ல பருவமழை பெய்து அதன் மூலம் உணவுதானிய உற்பத்தியில் சாதனை புரிந்திருந்தாலும் விவசாயிகளின் நிலை மோசமாகத்தான் உள்ளது. இந்த காலகட்டத்தில், போதிய விலை கிடைக்காமல் தக்காளி, உருளை, வெங்காயம் மற்றும் பூண்டு போன்றவற்றை நாட்டின் பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் வீதிகளில் வீசி எறிந்தனர். அதேபோல் பருப்பு வகைகள் அதிக உற்பத்தியை எட்டியிருந்தாலும் சந்தைகளில் அதற்கான விலை கிடைக்காமல் கடும் விலை வீழ்ச்சியை சந்தித்தது. பருப்பு வகைகள் 20லிருந்து 45 சதவீதம் அளவுக்கு விலை வீழ்ச்சியைக் கண்டது என பல ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நமது உணவு மேலாண்மை மோசமான நிலையில் இருப்பதை இது உரத்துச் சொல்கிறது.
நல்ல பருவமழை பொருளாதார வளர்ச்சிக்கு பக்கபலமாக உள்ளது. வறட்சி காலத்தில் ஒரு விவசாயக் குடும்பம் சந்தித்த வறுமையை குறைப்பதாக பருவமழைக் காலம் இருக்க வேண்டும் . ஆனால் தொழில் நிறுவனத்துறைகளில் காணும் வளர்ச்சி விவசாயத்தில் இல்லை என்பதுதான் துயரம். இந்தியாவில் 17 மாநிலங்களில் அதாவது பாதி இந்தியாவில் விவசாயிகளின் ஆண்டு வருமானம் 20 ஆயிரம் ரூபாய் இதற்கான காரணத்தைத்தான் என்னால் கண்டுணர முடியவில்லை. இது கொள்கை அளவில் வறட்சி நிலவுவதைக் காட்டுகிறது. நல்ல பருவமழை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவில்லை என்றால், அதற்காக விவசாயிகளைக் குற்றம்சாட்ட முடியாது. அவர்கள் தங்களால் முடிந்தவரையில் அதிக உற்பத்தியை ஈட்டுகிறார்கள். ஆனால், கொள்கைகளை உருவாக்குபவர்கள், விவசாயிகளின் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டவர முடியாமல் தோற்றுப்போகிறார்கள்.