Read in : English
அன்புள்ள விவசாயிகளே! வருமானம் கொடுக்காத, படிக்காத, வேட்டி கட்டிய, வயதானவர்களின் தொழில் என்று விவசாயத்தைப் பற்றி பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உங்களது எண்ணத்தை மாற்றிக் கொளள வேண்டிய நேரம் இது. படித்த, இளம் வயதினர் முழுநேரம் பார்க்கும் தொழிலாக விவசாயம் மாறி வருகிறது. கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நல்ல வேலையை உதறிவிட்டு இந்த இளைஞர்கள் விவசாயத்தில் முழு நேரமாக இறங்கியுள்ளனர்.
இதற்கு நிகழ்கால சாட்சி. பார்த்தா மற்றும் ரேகா தம்பதியினர். பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்பிஏ மார்க்கெட்டிங் அண்ட் ஃபைனான்ஸ் படித்த பிறகு, ஒரு மென்பொருள் சேவை நிறுவனத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்தார் பார்த்தா. விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், வேதி உரம் சார்ந்த விவசாயத்தை மேற்கொள்ள விரும்பினார். உணவு பதப்படுத்தும் தொழிலையும் வேறு மாற்று விவசாய முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தனது குடும்பத்தாரைக் கட்டாயப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில், அவருக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அதன்பிறகு தனது குடும்பத்தினரை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து, தனது விருப்பப்படி ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயத்தில் இறங்கினார். அதன் பிறகு அவர், தனது பழைய தொழிலைத் திரும்பிப் பார்க்கவில்லை.
அவருடைய மனைவி ரேகா பிகாம் படித்த பிறகு, எம்பிஏ படித்து விட்டு பன்னாட்டு நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். வயலில் விளையும் விளைபொருள்களை விற்பதிலும் பயிர் சுழற்சியைத் திட்டமிடுவதிலும் அவர் உதவியாக இருந்தார். சேத்துப்பட்டில் தங்களது கார் நிறுத்துமிடத்தில் `ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட்’ என்ற விற்பனையகத்தை அனந்துவுடன் சேர்ந்து ஆரம்பித்தார்.
அவர்களது விவசாய நிலத்தில் பாரம்பரிய அரிசி, தானியங்கள் மற்றும் காய்கறிகள் என பயிர் செய்து வந்தனர். ஆவடியிலிருந்தும் செங்குன்றத்திலிருந்தும் 12 கி.மீ தூரத்தில் உள்ளது அவர்களது கிராமமான பாண்டீஸ்வரம். சேத்துப்பட்டிலுள்ள அவர்களது விற்பனையகம் படிப்படியாக மொத்த விற்பனை அங்காடியாக மாறி வருகிறது.
விவசாயிகளை இதைத்தான் விற்பனைக்குக் கொடுக்க வேண்டும் என இந்த விற்பனையகம் கட்டாயப்படுத்துவதில்லை. ஒருவேளை இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் விவசாயிகள் வேதி உரம் போட்டு விவசாயம் செய்து பொருட்களை விளைவிக்கும்போது காய்கறிகள் கலப்படமாவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, விவசாயிகளிடம் எது கிடைக்கிறதோ அவற்றை இந்த விற்பனையகம் வாங்கிக்கொள்கிறது.
காய்கறிகளைப் பாக்கெட்டில் போட்டு விற்பனை செய்வதில்லை. நுகர்வோர் தங்களுக்குத் தேவைப்படும் அளவில் வாங்கிக் கொள்ளலாம். அதேபோல் பிளாஸ்டிக் பை பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் , வாடிக்கையாளர்களையே பைகள் கொண்டுவரச் சொல்கின்றனர். அதேபோல் எண்ணெய் வாங்குவதற்கும் பாத்திரங்களைக் கொண்டுவரச் சொல்கின்றனர்.
மாதத்தில் இரு விவசாயப் பண்ணைகளுக்கு நேரில் சென்று நாள் முழுவதும் அந்த விவசாயிகளுடன் கழிக்கின்றனர். இதன் மூலம், அங்கு விவசாயத்துக்கு எந்த வேதிப்பொருட்களும் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது. அத்துடன், விவசாயிகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவர்களது பணிகளைத் தெரிந்து கொள்ளவும் உதவுகிறது என்று ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் அமைப்பின் உறுப்பினர்கள் சொல்கிறார்கள்.
இந்த உறுப்பினர்கள் விவசாயிகளுடன் நேரடி தொடர்பில் உள்ளதால் கலப்படத்துக்கான வாய்ப்புகள் குறைகின்றன. மேலும் வேதிப் பொருட்கள் பயன்பாடும் மிகவும் குறைந்து விடுகிறது. என்ன விலைக்கு உற்பத்திப் பொருட்களை விற்க விரும்புகிறார்கள் என்று விவசாயிகளிடமே கேட்கிறார்கள். விவசாயிகள் குறிப்பிடும் விலையில் வாங்கிக் கொள்கிறார்கள். சில நேரங்களில் அந்தப் பொருட்கள் எங்கிருந்து வருகிறது என்பதைப் பொருத்து அந்த விலை மாறுபடும். விவசாயிகளிடமிருந்து பொருட்களை வாங்கியவுடன் அவர்களுக்கு, எந்த தாமதமும் இன்றி உடனே பணமும் பட்டுவாடா செய்யப்படுகிறது. அத்துடன் சிறு விவசாயிகளின் வாழ்க்கை பெரிதளவு மேம்பட உதவும் என்பதால் அவர்களிடமே தொடர்பு வைத்துக் கொள்ள முன்னுரிமை கொடுக்கிறார்கள். இயற்கைக் காய்கறிகளை வாங்கி கொள்வதற்கு அவர்கள் உறுதியளிக்கிறார்கள். அதற்காக எந்தப் பயிரை சாகுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகளைக் கட்டாயப்படுத்துவதில்லை. கலப்பின அரிசியை அவர்கள் விற்பதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். ஒவ்வொரு சீசனுக்கும் வாடிக்கையாளர்கள் விதவிதமான பாரம்பரிய அரிசிகளை வாங்கிப் பார்க்கிறார்கள். நமது பாரம்பரிய அரிசி வகைகளில் கூடுதல் ஊட்டச்சத்துகள் உள்ளன. பாரம்பரிய அரிசிக்கு ஒரு சந்தையை ஏற்படுத்துவதன் மூலம் பாரம்பரிய ரகங்களை பாதுகாப்பதே அவர்களது நோக்கம்.
விளம்பரத்துக்காகவும் பாக்கெட்டில் அடைத்து விற்பதற்காகவும், சந்தையில் தங்களது தனித்துவமான முத்திரையை பதிப்பதற்காகவும் பெரிய கார்ப்பரேட் இயற்கை விவசாய நிறுவனங்கள் ஏராளமான பணத்தை முதலீடு செய்கின்றன. ஆனால் ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட், இம்மாதிரியான விஷயங்களுக்கு பணத்தைச் செலவு செய்வதில்லை. அதேசமயம், ஆரோக்கியமான இயற்கை உற்பத்திப் பொருட்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் வெற்றியடைந்து வருகிறது.
என்னுடைய நிலத்தில் விளையும் பல்வேறு வகை பாரம்பரிய நெல்லை விற்பனை செய்யும் முக்கிய இடமாக ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் உள்ளது. கொள்முதல் செய்த பொருட்களுக்கு இழுத்தடிக்காமல் உடனடியாக பணத்தைக் கொடுப்பது அவர்களின் தனிச்சிறப்பு.
இது அமைதியாக நடைபெற்று வரும் புரட்சி என்றுதான் கூற வேண்டும். காரணம் படித்த இளைஞர்கள் பலர் இந்தத் தொடர் வலைப்பின்னலில் தங்களை இணைத்துக் கொண்டு அதன் மூலம் தாங்களே சொந்தமாக விற்பனையகங்களை நடத்தி வருகின்றனர். ஊரக வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் பார்த்தாவும் ரேகாவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் இருந்து 12 கி.மீ தூரத்திலுள்ள பார்த்தாவின் சொந்த கிராமமான பாண்டீஸ்வரத்தில் பெண்களுக்கான சுய உதவிக்குழுக்களை நடத்த உதவி வருகினறனர். அப்பெண்கள் இயற்கை வேளாண் பொருட்களைக் கொண்டு மதிப்புக் கூட்டப்பட்ட சத்துமிக்க பண்டங்களைச் செய்கின்றனர். அதனை ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டின் அனைத்து கிளைகளுக்கும் அனுப்புகின்றனர். கோதுமை மாவு, சிறுதானிய மாவு, நவதானிய மாவு, வேர்க்கடலை மிட்டாய் , மிளகு வடை மற்றும் பல்வேறு பாரம்பரிய பதார்த்தங்களைச் செய்து அனுப்புகின்றனர்.
இந்தச் செயல்பாடுகளுடன், பார்த்தாவும் ரேகாவும் தங்கள் கிராமத்தில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்மூலம் அந்த கிராமத்தை வெற்றிகரமான முன்மாதிரி கிராமமாக்க முயல்கிறார்கள். நீர் நிலைகளை மீட்டுருவாக்கம் செய்வது, குழந்தைகளுக்குப் படிப்பு ஆலோசனை வழங்குவது, மென்திறன் பயிற்சி போன்றவை அவர்களின் முக்கிய முயற்சிகள். இயற்கை விவசாயப் பொருள் விற்பனையகங்களை அமைப்பது என்பது படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு. அதன் மூலம் இயற்கை விவசாயிகளையும் வாழ வைக்க முடியும்.
தொடர்புக்கு: restoreananthoo@gmail.com
பார்த்தா, ரேகா: vm.parthasarathy@gmail.com,
மொபைல் எண்: 09789094118
Read in : English