கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் தனது எதிரே அமர்ந்திருந்த மகாராஷ்ட்ரத்தைச் சேர்ந்த விவசாயி சொன்னதைக் கேட்டதும், சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சானால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அந்த விவசாயி ஆனந்த் குமார் 4 ஏக்கரில் விவசாயம் செய்து வந்தார். அவரிடம், ஓராண்டுக்கு எவ்வளவு சம்பாதிப்பீர்கள் என அமிதாப் கேட்க, “ஆண்டுக்கு 50 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். அதில் பாதிப்பணம் விதைகளை வாங்கவே போய்விடும். குடும்பத்தினருக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உணவளிக்க முடிகிறது’’ என்று அவர் பதிலளித்தார்.
அந்தக் கேள்வியைத் மீண்டும் கேட்டார் அமிதாப். ஊருக்கெல்லாம் உணவளிக்கும் ‘அன்னலட்சுமி’களின் குரலைக் கேட்ட அமிதாப், ‘விவசாயிகளுக்கு உதவுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனந்த் குமார் விவசாயம் குறித்து சொன்னது முற்றிலும் உண்மை. இந்தியாவில் 58 சதவீதத்துக்கும் மேலான விவசாயிகள் இரவு உணவு இல்லாமல் பட்டினியாகத்தான் உறங்கச் செல்கிறார்கள் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. உலகுக்கு உணவளிக்கும் விவசாயி பசியுடன் உறங்கச் செல்வது எத்தகைய முரண்பாடு.
2016ஆம் ஆண்டின் மத்திய அரசின் பொருளாதார கணக்கெடுப்பின்படி (எக்கனாமிக் சர்வே)-இந்தியாவில் 17 மாநிலங்களில் அதாவது பாதி மாநிலங்களில் மக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.20 ஆயிரம்தான். கடந்த ஐந்தாண்டுகளில் அதாவது 2010லிருந்து-2015ஆம் ஆண்டு வரை, நாடு முழுதும் விவசாயிகளின் வருமானம் வெறும் அரை சதவீதம் தான், மிகச் சரியாக கூறினால் 0.44 சதவீதம்தான் அதிகரித்துள்ளது என்று நிதி ஆயோக் கூறியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக விவசாயிகளின் வருமானம் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியேதான் உள்ளது. விவசாயிகளின் துயரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இந்தக் காரணங்களால், விவசாயிகளின் கோபம் வீதிகளில் போராடாட்டங்களாக வெடித்து வருகிறது. நாட்டின் ஒரு வாரத்தில் ஏதாவது ஒரு பகுதியில் விவசாயிகள் போராட்டம் இல்லாமல் இருக்காது. தேசிய குற்ற ஆவண காப்பகத் தகவலின்படி, 2014ஆம் ஆண்டில் 687 போராட்டங்கள் நடந்துள்ளன. 2015இல் இந்த எண்ணிக்கை 2,683 ஆகவும் 2016இல் 4,837 ஆகவும் உயர்ந்துள்ளது. அதாவது, மூன்று ஆண்டுகளில் விவசாயிகளின் போராட்டங்கள் 7 மடங்கு அதிகரித்துள்ளன. விவசாயிகளின் கோபம் வளர்ந்து வருவதன் வெளிப்பாடே இது. நாசிக்கில் இருந்து மும்பை வரை நடைபெற்ற நெடும் பயண போராட்டத்துக்கு பிறகு அண்மையில் ஹரித்துவாரிலிருந்து புதுதில்லி வரை நடைபெற்ற நடை பயணப் போராட்டத்தில் ஆதிவாசிகளும் நிலமற்ற விவசாயிகளும் கலந்துகொண்டது விவசாயிகளின் கோபம் அதிகரித்து வருவதையே காட்டுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாய விளைபொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிதான். விவசாயிகளின் இந்தக் கோபத்துக்குக் காரணம்.
2019இல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்குள் 5 மாநில சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற வேண்டும். அதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கிராமப்புற மக்களின் வாக்குகள் மிக அதிகம். இந்த மாநிலங்களில் தான் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தும் அதிக அளவிலும் நடந்து வருகின்றன. மகாராஷ்ட்ரம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களிலுள்ள பெரு நகரங்களுக்கு காய்கறியும் பாலும் அனுப்புவதைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்தின் போது, 5 விவசாயிகளைப் போலீசார் சுட்டுத்தள்ளினார்கள். விவசாயிகளின் கோபம் கண்கூடாக தெரிந்த பிறகும், பொருளாதாரத்தில் விவசாய வளர்ச்சியை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொண்டுவரும் வகையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்க அது அழுத்தம் தருமா என்பது தெரியவில்லை. தேர்தல் வந்துவிட்டால் கொள்கை, சித்தாந்தம் ஆகியவைத்றைத் தாண்டி அனைத்து அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு அனைத்தும் செய்வதாக வாக்குறுதிகளைக் கொடுக்கின்றன. ஆனால் தேர்தல் நடந்து முடிந்ததும் அவர்களது பார்வையிலிருந்து விவசாயிகள் மறைந்து விடுகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளாக இதை நான் பார்த்து வருகிறேன். ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சிகள் விவசாயிகளின் வாக்குகளைப் பெறுவதற்காக, பண வசதிகளைக் காட்டி தூண்டில் போட்டு இழுக்க முயலுகின்றனர். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டு, கடைசி ஆண்டில் சில வாக்குறுதிகளை நிறைவேற்றுவது போல காட்டிக் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. விவசாயிகளின் கடன் நிலுவையை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். ஆனால், உண்மையில் அதிகபட்சமாக சிறுவிவசாயிகளுக்கு அதிகபட்சமாக 1 லட்ச ரூபாய் வரை மட்டுமே கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பஞ்சாபில் தனியார் மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக கேப்டன் அமரீந்தர் சிங் வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததும், இதுவரை வெறும் 900 கோடி ரூபாய் கடனை மட்டுமே தள்ளுபடி செய்துள்ளார். மகாராஷ்ட்ராவில் 34,000 கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதாகக் கூறிவிட்டு அதில் பாதி அளவே, அதாவது 16,000 கோடியை மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர்.
விவசாய இயக்கங்கள் மாற்றத்தைக் கொண்டுவருவதில் தோல்வி அடைந்துவிட்டன. அவ்வியக்கங்கள் பெரும் போராட்டங்களை மேற்கொண்டுள்ளன. ஆனால் இன்றும் இரண்டு கோரிக்கைகளுடன் அவர்களது போராட்டம் தொடர்கிறது. ஒன்று அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது. மற்றொன்று எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதாரவிலையைக் கொடுக்க வேண்டும் என்பது. இந்தக் கோரிக்கைகள் முக்கியம் தான். ஆனால் மற்ற துறைகளுக்கு அரசின் முதலீடு முதலீடு எவ்வளவு என்பதை ஒப்பிட்டு விவசாயித்துக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக பொதுக் கொள்கையைக் கொண்டு வருவது என்பது சாதாரணமான காரியம் இல்லை.
விவசாய வளர்ச்சிக்கு சாத்தியமற்ற நடைமுறைகளை கொண்டதாக நமது பொருளாதாரக் கொள்கைகள் வடிவமைக்கப்படுகின்றன. அந்த கட்டுக்குள்ளேயே அரசு செயல்படுகிறது. மத்திய பிரதேசத்தில் பவன்தார் பூதான் போன்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியதும், சில இடங்களில் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்கப்பட்டது. ஆனால், அவற்றை அந்த விலைக்கு கொள்முதல் செய்வதற்கான வழி முறைகள் செய்யப்படவில்லை. அதனால் அடிப்படையில் எந்த மாற்றங்களும் நிகழவில்லை. விவசாயத்துறையில் நமது கொள்கைகளை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டியதுள்ளது. ஆனால், இப்போது விவசாயத்தை கார்ப்பரேட் விவசாயமாக்கும் வகையில் தான் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அதற்காக நிலச் சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு உதவும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. பொருளாதார சீர்திருத்தங்களுக்கு உயிர் கொடுப்பதற்காக விவசாயம் பலி கொடுக்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மாற்றங்களைக் காண முடியுமா? நான் அதை நம்பவில்லை. விவசாயிகள் உணராதவரை மாற்றம் கொண்டு வர முடியாது. குறைப்பட்டுக் கொள்வதாக இருந்தால் விவசாயிகள் தங்களைத்தான் குறைபட்டுக் கொள்ள வேண்டும். கடந்த 70 ஆண்டுகளாக கட்சி பாகுபாடின்றி தாங்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதை விவசாயிகள் உணர வேண்டும். விவசாயிகள் தங்களது சாதி, மாநிலம், கட்சிக் கொள்கை போன்ற அனைத்தையும் மறந்து விட்டு, விவசாயியாக ஒன்றாக இணைந்து எழுச்சி பெற்றால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். விவசாயிகள் விவசாயிகளாகக நின்று வாக்களிதால் மட்டுமே பொருளாதாரக் கொள்கைகள் மாறும்.