Read in : English
அன்புள்ள விவசாயிகளே! விவசாயிகளே சொந்தமாக இடுபொருட்கள் தயாரிப்பது குறித்து கடந்த வார பத்தியில் எழுதியதற்கு நிறைய இமெயில்களும் தொலைபேசி அழைப்புகளும் வந்திருந்தன. அதில் 70 சதவீதம் பேர் இயற்கை வேளாண்மையில் நுழைய இதுதான் சரியான நேரம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். நம்பிக்கை இல்லாத சிலர், இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்குமா என கேட்டிருந்தனர். அவர்கள் இயற்கை விவசாயத்த்தில் நம்பிக்கையில்லாதாதல், அது வெற்றிகரமன விவசாயம் தான் என்பதற்கு ஆதாரம் கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.
அவர்களுடைய வாதம் என்னவெனில், எழுதுவது எளிது. ஆனால் உதாரணங்களைக் காட்டுவது கடினம் என்பதுதான். அவ்வாறு கேள்வி கேட்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதில் எழுதுவதை விட, பத்தியில் பதில் சொல்லலாம் என்பதால் இங்கு பதில் எழுதுகிறேன்.
முதலாவதாக, நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், முதலில் நான் ஒரு விவசாயி பிறகுதான் ஒரு பத்திரிகையாளன். இந்த பத்தியின் வழியாக உங்களிடம் பேசுவதன் மூலம், பல ஆண்டுகளாக விவசாய பெருமக்களிடம் நான் கற்றறிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
இன்றும் நான் அதே விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். பத்திரிகையாளராக நான் மேற்கொண்ட நீண்ட பயணத்தில் இந்தியாவின் பெரும்பான்மை கிராமங்களுக்குச் சென்றிருக்கிறேன். என்னுடைய பயணத்தில் என்னால் சில விஷயங்களை மறக்கவே இயலாது. அதேபோல் என் மனதில் சில அனுபவங்கள் ஆழ பதிந்துள்ளன.
அப்படியான அனுபவங்களில் ஒன்று, திருநெல்வேலியில் உள்ள சாண்ட்ஸ் என்னும் தொண்டு நிறுவனத்தைப் பார்வையிட்டது. இந்த தொண்டு நிறுவனத்தின் தலைவர், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியருமான டாக்டர். ஜெ.எச்.எஸ். பொன்னையா, இவர் தன் சொந்த வாழ்க்கையில் மட்டுமல்லாது விவசாயிகளுடன் உரையாடுவதிலும் நேர்மையானவர். சாண்ட்ஸ் தொண்டு நிறுவனம், இயற்கை விவசாயத்தை, மானாவாரி விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தது, குறிப்பாக, வறட்சி நில விவசாயிகளிடம் பஞ்சகாவ்யாவின் பயன்களை கொண்டு சேர்த்தது.
பஞ்சகாவ்யா என்பது உள்ளூர் இடுபொருள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்தது. ஆனால் காலப்போக்கில் இதன் பயன்பாடும் நடைமுறையும் காணாமல் போனதை உணர்ந்த ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த டாக்டர். கே.நடராஜன் இதனை மீட்டுருவாக்கம் செய்தார். அவர் தன் நோயாளிகளின் உடல் நலத்துக்கு பஞ்சகாவ்யாவை (அமிர்த சஞ்சீவினி) அருந்தச் சொல்லி பரிந்துரை செய்தார். அது பயிர்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் ஆரோக்கியத்தை வழங்கும் என அவர் உறுதியாக நம்பினார்.
பஞ்சகாவ்யா குறித்து கூகுளில் தேடினால் அதனை எப்படி தயாரிப்பது என்பது குறித்து நிறைய தகவல்கள் கிடைக்கும். அதனால் அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது பற்றி விளக்கவில்லை. பஞ்சகாவ்யாவை பயன்படுத்தும் திட்டம் குறித்து விவசாயிகளிடம் டாக்டர் பொன்னையா எடுத்துக்கூறி, நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு பயிற்சி அளித்ததோடு நிற்கவில்லை. அவர் பயிற்சியளித்த 120 கிராமங்களுக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறை நேரடியாகச் சென்று அத்திட்டம் செயல்படுத்தப்படும் விதம் குறித்து பார்வையிட்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் டாக்டர். பொன்னையாவை சந்தித்தபோது அவருக்கு வயது 83. அந்த வயதிலும் தளராமல் கிராமங்களுக்குப் பயணம் செய்தார் என்பது வியக்க வைக்கும் விஷயம். அந்த கிராமங்கள் அனைத்தும் வறட்சியால் பாதிக்கப்படட்வை. அங்கு ஆண்டுக்குப் பெய்யும் மொத்த மழை, சாகுபடிக்குப் போதுமானதாக இல்லை. அங்கு முறையான பாசன வசதி இல்லை. கிணறுகளும் வறண்டு விட்டன.
பயிர்களின் ஆரோக்கியத்தை பஞ்சகாவ்யா ஊக்கப்படுத்தும். ஆனால் வறண்ட நிலத்தில் பயிர்கள் வளருவதற்கு இடுபொருளாகவும் உதவி செய்யும் என்பதுதான் டாக்டர் பொன்னையாவின் கோட்பாடு. இதனை பயன்படுத்துவதால் விவசாயிகள் வேதி இடுபொருட்களையும் பூச்சிக் கொல்லிகளையும் வாங்காமல், 70 சதவீதப் பணத்தைச் சேமிக்க முடியும்.
வறண்ட நிலத்தில் பயிர்கள் வளருவதற்கு இடுபொருளாகவும் உதவி செய்யும் என்பதுதான் டாக்டர் பொன்னையாவின் கோட்பாடு.
பஞ்சகாவ்யாவின் பயனை உணர்ந்தவர்கள் இதனை ஒத்துக்கொள்வார்கள். இயற்கை விவசாயத்தைக் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கான பால பாடம் இதுதான். ஒரு விவசாயியாக இதனைப் பயன்படுத்தியுள்ளேன். அது பயிர்களின் வளர்ச்சிக்கு உதவியதையும் அதன் பயன்பாட்டையும் வார்த்தைகளில் சொல்லவிட முடியாது. ஒரு பத்திரிகையாளராக இதன் அற்புதத்தை எழுதினேன்; எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
இதனை பற்றி சுவாரசியமான இரு விஷயங்களை பகிர்ந்துகொள்கிறேன். தென்னையில் மொட்டு உதிர்வதை பஞ்சகாவ்யா தடுக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். மல்லிகை பூப்பதற்குகு அது உதவும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? மொட்டை மாடியில் தோட்டம் அமைத்துள்ளவர்கள் இதனைப் பயன்படுத்திய பிறகு செடிகள் பூத்துக் குலுங்குவதை பாருங்கள். இதன் பயன் குறித்து எங்களுக்கு மெயில் மூலம் தகவல் தெரிவிக்க மறக்காதீர்கள்.
டாக்டர் நடராஜன் மற்றும் டாக்டர். பொன்னையா ஆகிய இருவருமே தங்களுக்காக மட்டுமே இதனைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் விவசாயிகள் மீது கொண்ட அக்கறையால், அவர்கள் கடனிலிருந்து கடனிலிருந்து மீள வேண்டும் என்பதற்காக இதில் அக்கறை காட்டினார்கள். அதற்காக மாற்றுவழிமுறையை கற்பித்தார்கள். அதேவேளையில் அம்மாற்று அதிக பயனளிக்கக் கூடியதாவும் நம்ப்பிக்கைக்குரியதாகவும் இருக்க வேண்டும். ஒருவர் பஞ்சகாவ்யாவை மறுபடியும் கண்டுபிடித்தார். மற்றொருவர் அதன் மூலம் வறண்ட நிலத்திலும் நல்ல மகசூலை பெற முடியும் என்பதை நிரூபித்தார். இதில் வேடிக்கை என்றால் இத்தனை அற்புதங்களை அடக்கிய பஞ்சகாவ்யா வட இந்தியாவில் இன்னும் பிரபலமாகவில்லை. இங்குள்ள விவசாயிகள் வேறு இயற்கை இடுபொருட்களை தயாரித்து வந்தாலும் வட இந்தியாவிலும் வட கிழக்கு இந்தியாவிலும் பஞ்சகாவ்யா இன்னும் போய்ச்சேரவில்லை.
பஞ்சகாவ்யா மற்றும் அதன் பயன்கள் குறித்து கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பஞ்சகாவ்யா விற்பனைக்கென்று தனி விற்பனை அரங்கை வைத்துள்ளது.
நம்மிடம் இந்த அற்புதமான பரிசு உள்ளது. இந்த அமுதத்தை பயன்படுத்துகிறோமா அல்லது நிராகரிக்கப் போகிறோமா என்பது நம் கையில் தான் உள்ளது நண்பர்களே! எதைச் செய்தாலும் அதன் பயனை நாம் தான் அனுபவிக்கப் போகிறோம். அடுத்த வாரம் சந்திக்கும் வரை நன்றி !
தொடர்புக்கு: சாண்ட்ஸ் தொண்டு நிறுவனம், தொலைபேசி – 04637 278173.
டாக்டர்.நடராஜன். மொபைல்: 9443358379, போன்: 04204-222469
Read in : English