Read in : English
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வைப்பதற்கு புதிதாக கருணாநிதி சிலை தயாராகி வரும் சூழ்நிலையில், சென்னை அண்ணா சாலை ஜெனரல் பீட்டர்ஸ் ரோடு சந்திப்பில் ஏற்கெனவே இருந்த கருணாநிதி சிலை மீண்டும் எப்போது வைக்கப்படும் என்பது இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை.
பெரியார் விருப்பத்தின் பேரில் திராவிடர் கழகத்தின் சார்பில் அண்ணா சாலையில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி சிலை, எம்ஜிஆர் மறைவையொட்டி நடந்த கலவரத்தில் விஷமிகள் சேதப்படுத்தினர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் (24.12.1987). வெளியான அந்தப் படத்தை முரசொலியில் வெளியிட்டு,
“உடன் பிறப்பே,
செயல்பட விட்டோர்
சிரித்து மகிழ்ந்து நின்றாலும்
அந்த சின்னத்தம்பி
என் முதுகிலே குத்தவில்லை”
நெஞ்சிலே தான் குத்துகிறான்;
அதனால் நிம்மதி எனக்கு!
வாழ்க! வாழ்க!”
என்று கவிதை வரிகளையும் எழுதினார் கருணாநிதி.
அதன்பின் அதே இடத்தில் கருணாநிதிக்குப் புதிய சிலை அமைப்பதற்கான முயற்சியில் திராவிடர் கழகம் ஈடுபட்டபோது, கருணாநிதியின் குடும்பத்தினரில் சிலரும், தி.மு.க.வில் உள்ள சிலரும் தயக்கமும், மறுப்பும் தெரிவித்ததாகவும் இதை மீறி வைக்கவேண்டாம் என்று கருணாநிதி கூறியதாகவும் அதை ஏற்று இதுவரை அமைதியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தயாராக இருக்கும் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விரைவில் உரிய காலத்தில் நடந்தே தீரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அப்படி வந்தால், வீரமணி கூறுவது போல, “அண்ணா சாலையில் பெரியார் சிலை, அண்ணா சிலை, கருணாநிதி சிலை, எம்.ஜி.ஆர். சிலை என்ற வரிசையில் பொருத்தமாக அமையும்”. ஆனால். கருணாநிதி சிலையை அதே இடத்தில் மீண்டும் வைப்பதற்கு சம்மதம் தெரிவித்து திமுக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.
இதற்கிடையே, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலையை வடிவமைத்த சிற்பி தீனதயாளன், அண்ணா அறிவாலயத்தில் அமைப்பதற்காக கருணாநிதியின் புதிய சிலையை வடிவமைத்து வருகிறார். மீஞ்சூரை அடுத்த புதுப்பேடு கிராமத்தில் கருணாநிதியின் சிலை உருவாக்கப்படுவதை அண்மையில் நேரில் சென்று பார்வையிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிலையில் செய்ய வேண்டிய திருத்தங்கள் பற்றி கூறியுள்ளார்.
மதுரையில் ஆவின் பால் பண்ணை அருகே கருணாநிதியின் சிலை வைப்பதற்கு மு.க. அழகிரி அனுமதி கோரியுள்ள நிலையில், அவரை முந்திக் கொண்டு அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை விரைவில் திறக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை நகரில் சிலைகள் வைப்பது பெரிய அரசியல்தான். சென்னையில் காமராஜர் சாலையில் திமுக ஆட்சிக் காலத்தில் 1968இல் அன்றைய முதல்வர் அண்ணாவினால் திறந்து வைக்கப்பட்ட கண்ணகி சிலை, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2001இல் அகற்றப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் 2006இல் கண்ணகி சிலை மீண்டும் கண்ணகி சிலை அதே இடத்தில் வைக்கப்பட்டது.
கடற்கரை சாலையில் காந்தி சிலை எதிரே 2006ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்ட சிவாஜி கணேசன் சிலை, 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி அந்தச் சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டு சிவாஜி கணேசன் மணிமண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதிமுக ஆட்சியில் அங்கு மீண்டும் சிலை திறக்கப்பட்டபோது, ஏற்கெனவே அந்தச் சிலையை திறந்த கருணாநிதியின் கல்வெட்டு வைக்கப்படவில்லை.
இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் அருகே இருந்த கர்னல் ஜேம்ஸ் நீலின் சிலையை அகற்றக் கோரி 1927இல் போராட்டம் நடைபெற்று பலர் சிறை சென்றனர்.
இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் அருகே இருந்த கர்னல் ஜேம்ஸ் நீலின் சிலையை அகற்றக் கோரி 1927இல் போராட்டம் நடைபெற்று பலர் சிறை சென்றனர். பின்னர் அந்தச் சிலை ரிப்பன் கட்டட வளாகத்தில் வைக்கப்பட்டது. 1937இல் ராஜாஜி சென்னை மாகாண முதல்வர் ஆனதும், அந்தச் சிலையை அருங்காட்சியகத்தில் வைக்க உத்தரவிட்டார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வைக்கப்பட்ட சில சிலைகள் அகற்றப்பட்டாலும்கூட, மன்றோ சிலை போன்று சில சிலைகள் அதே இடத்தில் இருந்து கொண்டிருக்கின்றன.
மேம்பாலம் அமைப்பதற்காக கத்திராபாரா அருகே உள்ள ஜவஹர்லால் நேரு சிலையும் மெட்ரோ ரயிலுக்காக சின்னமலைக்கு அருகே உள்ள ராஜீவ் சிலையும் முதலில் வைத்த இடத்தை விட்டு அருகில் உள்ள இடங்களுக்கு மாற்றப்பட்டன.
1991இல் அண்ணா சாலையில் காயிதே மில்லத் மகளிர் கல்லூரி சந்திப்பில் இந்திராகாந்தி சிலையை அமைப்பதற்காக காங்கிரஸ் பிரமுகர் ஒருவரால் அனுமதி வாங்கப்பட்டது. ஆனால், என்ன காரணத்தினாலோ அந்த இடத்தில் பீடம் மட்டுமே இருக்கிறது. இன்னமும் அந்தச் சிலை திறக்கப்படவில்லை.
தமிழகக் கோவில்களில் உள்ள பழமை வாய்ந்த சிலைகள் கடத்தல் விவகாரம் குறித்த வழக்கு விசாரணை தற்போது சூடுபிடித்து வருவது தனிக்கதை.
Read in : English