Read in : English
சுயநலமற்ற சேவையால் மனிதகுலம் உயர தங்கள் வாழ்வை அர்ப்பணிப்போர் அரிதாகவே இவ்வுலகில் உண்டு. அப்படியான சிலர் தங்கள் பிறப்புக்கு ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதாக உணர்ந்து, இந்த உலகை மேம்படச் செய்து, தங்கள் சேவையால் இப்பூமி ஏதேனும் ஒருவகையில் உன்னதமடைந்திருக்கிறதா என்பதை உணர்ந்த கணம் தங்கள் பூவுலக வாழ்விலிருந்து விடைபெற்று செல்வர். அப்படி இந்த பூவுலகை தன் சேவையால் பசுமையாக்கிவிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 16ஆம் தேதி மறைந்துவிட்டார், ’மரம்’ தங்கசாமி. அடுத்த தலைமுறையினர் வாழ்வதற்கேற்ற வகையில் இப்பூமியை உருவாக்கிய பிறகே மறைந்திருக்கிறார் அவர். திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு செல்லும் வழியில் சாலையின் இருமருங்கிலும் அழகாகவும் கம்பீரமாகவும் நின்றிருக்கும் பல நூறு மரங்களை எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நட்டு வளர்த்தவர் ‘மரம்’ தங்கசாமி.
மரம் தங்கசாமிக்கு நகைச்சுவையுணர்வுஅதிகம். சரியான நேரத்தில் அவர் சொல்லும் ஜோக்குகளுக்காகவே அவரைச் சுற்றி நண்பர் கூட்டம் இருக்கும். தன்னைச் சந்திக்க வரும் நண்பர்களையும் பார்வையாளர்களையும் சிறு சிறு ஜோக்குகள் மூலம் பெரும் மகிழ்ச்சியை உருவாக்கி அனைவரையும் மனம் விட்டு சிரிக்க வைப்பதில் கைதேர்ந்தவர். அவருடன் உரையாடுவது அனவருக்குமே இன்பத்தைக் கொடுக்கக்கூடியது. அரியவகை மரங்கள் குறித்தான அவருடைய அறிவு, அனுபவம் மிக்க ஐஎப்எஸ் அதிகாரிகளையும் திணறடிக்கும். வனத்துறை அதிகாரிகளுடன் ஜீப்பில் பயணிக்கும்போது, ஒரு மரத்தின் சிறு கிளையை வைத்தே அம்மரத்தின் அனைத்து விஷயங்களையும் எந்தவித ஆவணங்களும் இன்றி மிகத் துல்லியமாகச் சொல்லக் கூடிய திறமை வாய்ந்தவர் அவர்.
அவரது தோட்டத்தில் இருக்கும் மரங்களை பார்வையாளர்களுக்கு மிகவும் பெருமையுடனும் சந்தோஷத்துடனும் சுற்றிக் காட்டுவார். அவருடைய தோட்டத்தில் இருக்கும் பலநூறு மரங்கள் அங்கு வருகை புரிந்த பார்வையாளர்களால் நட்டுவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மரங்கள் மட்டுமே புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் சக்தி கொண்டது என்பதை உறுதியாக நம்பி, அதனை தன் வாழ்நாள் முழுக்க செயல்படுத்தினார்.
மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் ‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தில் மரம் தங்கசாமியைப் போல் ஒரு கதாபாத்திரத்தை வைத்திருப்பார்.
அண்மைகாலமாக, முதுமையால் உடல்நலம் குன்றி இருந்தார். அவரைப் பற்றிய ஒரு கட்டுரையை கடந்த ஜூலை மாதத்தில் இன்மதி-யில் வெளியிட்டிருந்தோம். அக்கட்டுரை வெளிவந்ததும் அவர் தொலைபேசியில் அழைத்து மிகவும் சன்னமான குரலில் பேசி எம்மைப் பற்றி விசாரித்து நன்றி கூறினார். அவருடைய இறுதிப் பேட்டி இன்மதி-க்கு அளித்ததுதான். தன்னுடைய அளப்பரிய சேவையால் இச்சமூகத்துக்கு பெரும் பங்களிப்பைச் செய்த மரம் தங்கசாமியை பெருமையுடன் நினைவுகூர்வோம்.
Read in : English