கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் நிலையையும், அதில் இருக்கும் சாதியப் பாகுபாடுகளையும், துப்புரவுத் தொழிலாளர்கள் மீது அரசு காட்டும் அலட்சியத்தையும், ஸ்வச் பாரத் திட்டத்தையும் கறாராக விமர்சித்தது ‘கக்கூஸ்’. ஆய்வு செய்யப்பட்டு வெளிவந்த கடினமான உண்மைகள், அதிகாரிகளை வெட்கமடையச் செய்திருக்க வேண்டும். மாறாக அது திவ்யபாரதிக்கு காவல்துறை மூலமாக பிரச்சனைகளைக் கொண்டு வந்தது.
இன்று, ஒக்கி புயலையும், அதற்கு அரசின் நடவடிக்கைகளையும் குறித்த அவரது ஆவணப்படம் “ஒருத்தரும் வரேல” யூ ட்யூபில் வெளியாக இருக்கிறது. அதற்கான முன்னோட்டம் ஏற்கனவே வந்துவிட்டது.
கக்கூஸ் திரைப்படம் கற்றுக்கொடுத்திருந்த பாடத்தால், முன்கூட்டியே திரையிடலை அறிவிக்கும் திட்டத்தைக் கைவிட்டு, காவல்துறைப் பிரச்சனைகளை சமாளிக்க நினைத்திருக்கிறார் திவ்யபாரதி. பொது அறிவிப்பு எதுவும் இல்லாமல், ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தில் ‘ஒருத்தரும் வரேல’ ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறார் திவ்யபாரதி. “ஆயிரக்கணக்கான மீனவ கிராம மக்கள் அதைப் பார்த்தார்கள்” என்றார் திவ்யபாரதி. யூ ட்யூபில் வெளிவருவது பொதுத் திரையிடலைப் போன்றதுதான். அதனால் போலீஸ் கெடுபிடிகள் ஏற்பட்டால், அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்றார் அவர்.
2017 மார்ச்சில், கக்கூஸ் திரையிடலுக்கு கொஞ்சம் முன்பாக, திரையிடலைத் தடுத்து நிறுத்துவதற்கான எல்லா வேலைகளிலும் ஈடுபட்டது காவல்துறை. தனது சமூகத்தைச் சேர்ந்த மக்களைக் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி விமர்சித்தார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி. வன்முறைப் பேச்சும், அருவருக்கத்தக்க பேச்சும் நிறைந்த தொலைபேசி அழைப்புகளால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டார் திவ்யபாரதி.
அந்த நேரத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இணையத் தீவிரவாதத்துடன் தொடர்புடைய ஐடி சட்டம் செக்ஷன் 66F மற்றும் பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்கு பதியப்பட்டது. இந்த ஆண்டு ஜூன் 28ம் தேதி, ‘ஒருத்தரும் வரேல’ ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியானபோதும், காவல்துறையினர் திவ்யபாரதியின் வீட்டுக்குச் சென்று விசாரித்திருக்கிறார்கள். அவர் சட்டம் பயிலும் மதுரை உயர்நீதிமன்றத்திலும் அவருக்கு கெடுபிடி கொடுத்திருக்கிறார்கள். ஊட்டி கூடலூரில் அவர் மீது வழக்கு பதியப்பட்டு, அவர் அங்கு தங்கி கையெழுத்திடும் நிலை உருவாகியிருக்கிறது.
சிபிஐ(எம்.எல்) லிபரெசன்-இல் முன்னாள் செயற்பாட்டாளர், உறுப்பினர் திவ்யபாரதி விருதுநகர் மாவட்டத்தில், கிராமத்து பஞ்சாலையில் பணிபுரிந்த பெற்றோரின் மகள். செயற்பாட்டாளராக இருந்த சமயத்தில் அவர் மீது சரமாக வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவருக்கு எதிரான வழக்குகள் சில நிலுவையில் இருந்தாலும், அவற்றை எதிர்த்து வழக்கறிஞராக தன் பெயரைப் பதிவு செய்துகொண்டிருக்கிறார் அவர். தற்போது தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள், எழுத்தாளர்கள் சங்கத்தின் துடிப்பான உறுப்பினராக இருக்கிறார் திவ்யபாரதி.
பேச்சின் நடுவே, போராட்டம் என்னும் வார்த்தையை அடிக்கடிப் பயன்படுத்துகிறார் திவ்யபாரதி. அடுத்து வரவிருக்கும் நாட்கள் அவருக்கு போராட்டமானதாக இருக்குமா? தமிழ்நாட்டுக் காவல்துறைக்குத்தான் இந்த கேள்விக்கான பதில் தெரியும்.