Read in : English
பொதுவாக, கடலில் வாழும் இளம்பருவ மீன் குஞ்சுகள் எதிர்கால மீன்வளத்தை உறுதிப்படுத்துபவை. நச்சுக்களோ அல்லது மரபியல் ரீதியாக மாற்றமோ இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் ஒரு சில உணவுப் பொருட்களில் கடல் மீன்களும் ஒன்று. ஆனால், அத்தகைய எதிர்கால மீன்வளத்திற்கு சவால் விடும் நோக்கில், இளம் மீன் குஞ்சுகளையே கோழித்தீவனங்களின் உற்பத்திக்காக பிடிக்கும் மோசமான போக்கு சமீப காலமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும், இத்தகைய இளம்பருவ மீன்களைப் பிடித்ததற்காக கேரள அரசு, மீனவர்களிடம் ரூ.2 கோடி ரூபாய் வரை அபராதமாக வசூலித்துள்ளது.
பொதுவாக, தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வரை ஒவ்வோர் ஆண்டும், 61நாள்கள் மீன் பிடித் தடைக்காலம் பின்பற்றப்படுகிறது. அது போன்றே, கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை 61 நாள்களும் மீன் பிடித்தடைக்காலம் பின்பற்றப்படுகிறது. இக்காலக்கட்டங்களில், மீன்கள் அதிக அளவில் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்து கொள்வதால், அவற்றை பிடிப்பதன் மூலம் மீன் வளம் குறைந்துவிடும் என்ற காரணத்தால் இத்தடைக்காலம் பின்பற்றப்படுகிறது. இருப்பினும்,அனைத்து வகை மீன்களும் இதே காலக்கட்டத்தில் மட்டுமே இனப்பெருக்கம் செய்து கொள்வதில்லை. எல்லா காலக் கட்டங்களிலும், வெவ்வேறு வகை மீன்கள் இனப்பெருக்கம் நடந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனால், கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களில் சிலர்,இழுவை மற்றும் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி, இத்தகைய மீன் குஞ்சுகளையும் கூட விட்டு வைப்பதில்லை. இந்த மீன் குஞ்சுகளை கோழித்தீவனம் உற்பத்தி செய்வதற்காக நிறுவனங்கள் கிலோ கணக்கில் விலை கொடுத்து வாங்குகின்றனர். இதனால் மீன் வளம் பெருமளவில் அழியும் நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து, தமிழக மீன் வளத்துறை அதிகாரிகளில் ஒருவரான நடராஜன் கூறுகையில், “ இளம் மீன் குஞ்சுகளையும் அள்ளி வரும் சுருக்கு மடி, இரட்டை மடி வலைகளை தடை செய்துள்ளோம். அதையும் மீறி அத்தகைய வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பவர்களின் படகுகளையே பறிமுதல் செய்கிறோம்” என்றார்.
கடலூர் மீனவரான ரமேஷ் கூறுகையில், “சில இடங்களில் மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி இத்தகைய மீன் குஞ்சுகளையும் விட்டு வைக்காமல் பிடிப்பது என்னவோ உண்மை தான். தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இதுபோன்ற செயல்கள் தொடர்கிறது. ஒவ்வொரு மீனவனுக்கும் மீன் வளத்தையும், கடல் வளத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமையுள்ளது. அதே நேரம், மீன் வளத்துறையும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.
இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக இல்லாமலிருந்த பிரச்சினை சில இடங்களில் இந்த ஆண்டு தலைதூக்கியதாக கூறுகிறார் மீன் வளத்துறையின் மற்றொரு அதிகாரியான அஜித் ஸ்டாலின். அவர் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரச்சினை தென் மாவட்டங்களில் இல்லாமல் இருந்தது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் சில படகுகளில் வாளை மீன் குஞ்சுகள் பிடிக்கப்பட்டதாக தகவல் கிடைத்து போய் பார்த்தோம். அவ்வாறு மீன் குஞ்சுகள் பிடித்த படகு ஒன்றை பறிமுதல் செய்து அதிலிருந்த மீன் குஞ்சுகளை அழித்தோம். அத்துடன், அப்படகிற்கு அபராதமும் விதித்திருந்தோம்” என்றார்.
இத்தகைய சூழலில், கேரள அரசு, கடந்த ஆண்டு மட்டும் இவ்வாறு மீன் குஞ்சுகளைப் பிடித்ததற்காக ரூ. 2 கோடி ரூபாய் வரை அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள மீன் வளத்துறை அமைச்சர் மேர்சி குட்டியம்மா “ இத்தகைய நடவடிக்கைகள் மூலம், கடலில் தற்போது ஏற்பட்டுள்ள மீன் இருப்பு குறைபாடு நீங்கி, மீன்கள் போதிய அளவு கிடைத்து, மீனவர்களின் நீடித்த வாழ்வாதாரம் நிலைக்கும் “ என்றார்.
இதனிடையே கேரள அரசின் இத்தகைய நடவடிக்கை பாரட்டுக்குரியது என தேசிய மீனவர் பேரவைத் தலைவரும், புதுவை மாநில முன்னாள் எம்.எல்.ஏவுமான மா. இளங்கோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ பொதுவாக, தமிழக, புதுவை மாநிலங்களில் மீனவர்கள் மீன் குஞ்சுகளை பிடிக்கின்றனரா என்பதை அதிகாரிகள் பெரிய அளவில் கண்காணிப்பதில்லை. கேரள அரசைப் போலவே, தமிழகம் புதுவை, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களின் அரசுகளும் சட்ட விரோதமாக இளம் மீன் குஞ்சுகளை பிடிக்கும் மீனவர்களுக்கு கடுமையான தொகை அபராதம் விதிக்க வேண்டும். அதுபோன்றே, இது போன்ற மீனவர்களிடமிருந்து மீன் குஞ்சுகளை வாங்கி கோழித்தீவனங்களும், மீன் தீவனங்களும் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். என்றால் தான் கடலில் மீன் வளம் அழியாமல் பாதுகாக்கப்படுவதுடன்,மீனவர்களின் வாழ்வாதாரமும் அழியாமல் பாதுகாக்கப்படும்.” என்றார் அவர்
Read in : English