Read in : English

Share the Article

சென்னை புழல் மத்திய சிறை – I இல் கடந்த 2009 இல்   திமுக ஆட்சிக்காலத்தில் பிரபல ரவுடி வெல்டிங்குமார்  படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அன்றைய சிறைத்துறைத்  தலைவராக இருந்த தற்போதைய மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் உடனடியாக தீயணைப்பு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். வெல்டிங்குமார் திமுகவின்  மூத்த வழக்கறிஞர் திரு. சண்முகசுந்தரம் அவர்களை கொல்ல முயற்சித்தார் என்றும், வெல்டிங்குமாரின் எதிரிகள் பொறுமையாக காத்திருந்து திமுக ஆட்சிக்காலத்தில்  சிறைக்குள் வைத்தே வெல்டிங்குமாரை தீர்த்துக்கட்டினர் என்றும் பரவலாக பேசப்பட்டது.

இன்று காலை சுமார் எட்டு மணியளவில்  அதே புழல் மத்திய சிறை-Iஇல் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி இருந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாக்சர் முரளி கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆண் சிறைவாசிகளுக்கான மத்திய சிறைகள் சென்னை புழல், வேலூர், சேலம், கடலூர், கோவை,திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை போன்ற இடங்களில்  அமைந்துள்ளன. மாநிலத்தின் சிறைத்துறை தலைவராக கூடுதல் காவல்துறை இயக்குனர் (ADGP) ஒருவரும் அவருக்கு கீழ் பல்வேறு மண்டலங்களில் சிறைத்துறை துணைத் தலைவர்களும் (D.I.G ) ஒவ்வொறு    மத்திய சிறைக்கும் ஒரு கண்காணிப்பாளரும் (Superintendent) கூடுதல் கண்காணிப்பாளரும் (Additional Superintendent) சிறை அலுவலரும் (Jailor) பணியாற்றி வருகின்றனர். கடந்த 2007 இல்  திமுகவின் திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வம்  கொலைசெய்யப்பட்டபொழுது  அந்த கொலைத் திட்டம் சிறைச்சாலைக்குள் தீட்டப்பட்டது எனக் கூறி காவல் துறையை சேர்ந்த உளவு மற்றும் விழிப்புப் பணி (Vigilance)        அதிகாரிகள் ஒவ்வொரு சிறைச் சாலையிலும் சிறைவாசிகள் மற்றும் சிறை அதிகாரிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டு இன்றளவும் செயல்பட்டு வருகின்றனர்.

 

சென்னை பழைய மத்திய சிறை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் செயல்பட்டபொழுது கடந்த 1999 இல் பாக்சர் வடிவேலு என்ற வட சென்னை தாதா சிறைக்குள் மர்மமான முறையில் இறந்ததைத் தொடர்ந்து பெரும் கலவரம் வெடித்து  அப்பொழுது  பொறுப்பிலிருந்த துணை சிறை அலுவலர் ஜெயக்குமார் என்பவர் சிறைவாசிகளால் அடித்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார். அப்பொழுது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில்  பத்துக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் இறந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதன் பின்னர் கடந்த 2006 இல் முழுவீச்சில்  செயல்பட தொடங்கிய நவீன கட்டமைப்பு கொண்ட புழல் மத்திய சிறை வளாகத்தில் விசாரணை சிறைவாசிகள், தண்டனை சிறைவாசிகள், பெண்கள் , வளர்இளம் சிறைவாசிகள் என ஒவ்வொரு  பிரிவினருக்கும் தனித்தனி சிறைச்சாலைகள் அமைக்க பட்டன.

 

புழல் மத்திய சிறை-IIஇல் விசாரணைச் சிறைவாசிகளும் தடுப்பு காவல் சிறைவாசிகளும் அடைக்கப்பட்ட நிலையில், குண்டர் தடுப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் ,போன்றவற்றில் கைது செய்யப்பட்ட தடுப்பு காவல் சிறைவாசிகளை தண்டணை சிறைவாசிகளுக்கான    புழல் மத்திய சிறை-Iக்கு அண்மையில் சிறை நிர்வாகத்தினர் மாற்றி உள்ளனர். இசுலாமிய தீவிரவாதிகள் என குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ் பக்ருதின், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் போன்ற விசாரணை சிறைவாசிகளையும் இதே சிறையில் தொடர்பு இல்லாமல் சிறை வைத்துள்ளனர். உயர் பாதுகாப்பு தொகுதி, சோதனை தொகுதி, நோயாளிகள் தொகுதி, குற்றகாவலர் தொகுதி, அயல்நாட்டவர் தொகுதி, மன நலம் குன்றியவர் தொகுதி, முதல் வகுப்பு தொகுதி என இருபதுக்கும் மேற்பட்ட தொகுதிகள் புழல் மத்திய சிறையில் உள்ளது. கண்காணிப்பாளர் மற்றும் சிறை அலுவலரின் நேரடி கட்டுப்பாட்டில் துணை சிறை அலுவலர்கள்,(Deputy Jailors) உதவி சிறை அலுவலர்கள்,(Assistant Jailors) முதன்மை  தலைமை காவலர்கள்(Chief Head Warders) ,முதல் நிலை காவலர்கள்,(First Grade Warders) காவலர்கள்,( Warders) என நூற்றுக்கும் மேற்பட்டோர் இருபத்து நான்கு மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர்.

 

சிறைத்துறை தலைவரின் ஆட்களாகிய  உளவு மற்றும் விழிப்புப் பணி அதிகாரிகளும் சிறைக்குள் சுற்றி வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தபட்டுள்ளன. மேலும் சிறைவாசிகளை பண்படுத்தி வழிகாட்டுவதற்கு சிறைநல அலுவலர்,(WelfareOfficer) உளவியலாளர்,(Psychologist) சமூக பணியாளர்,( Social Worker) ஆகியோரும் மத்திய சிறையில் பணியாற்றுகின்றனர். இத்தகைய உள்கட்டுமானம் உள்ள சென்னை புழல் மத்திய சிறை-I தான் மேற்கண்டவாறு பாக்சர் முரளி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

 

பாக்சர் முரளி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு அவர் அரசால் குண்டர்  தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் அடைக்க பட்டவர். அவரை கொலை செய்வதற்கு அரிவாள்  போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்றும், அவருடைய ஆண் உறுப்பு அறுக்கப்பட்டது என்றும், மிகக் கொடிய முறையில் கொலை நிகழ்த்தப்பட்டது என்றும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதத்தின் துவக்கத்தில் கடந்த 06.06.2018 அன்று கோவை மத்திய சிறையில் விஜய் என்ற விசாரணை சிறைவாசி தனது சக சிறைவாசியாகிய ரமேஷ் என்பவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்த நிகழ்வின் ஈரம் காய்வதற்குள் இன்று (20.06.2018)பாக்சர் முரளியின்  கொலை  அரங்கேறி உள்ளது.

சென்னையின் பிரபல தாதாவாகிய ஆயுள் தண்டனை சிறைவாசி நாகேந்திரன் ஏற்பாட்டில் கொலை நடந்ததாக சொல்லபடுகிறது. “கஞ்சா,செல்போன் ,மட்டும் அல்ல இனிமேல் ஆயுதங்கள் சிறைச்சாலைக்குள் இறங்குவதையும் தடுக்க முடியாது “என்கின்றனர் பெயர் சொல்ல விரும்பாத சிறை காவலர்களும், சிறை வாசிகளும் .

 

கடந்த 2009 இல் நிகழ்ந்த வெல்டிங்குமார் படுகொலை, 2016இல் சுவாதி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்த ராம்குமாரின் மரணம், இன்றைய பாக்சர் முரளியின் படுகொலை  போன்றவை சட்டத்தின் பெயரால் நான்கு சுவர்களுக்குள் அடைக்கப் பட்டு இருக்கும் மனிதர்களின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கியுள்ளது .

(கட்டுரை எழுதியவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கறிஞர் ஆவார்)

 


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles