Read in : English

தமிழ்நாடு அரசு கொள்முதலிலும் டெண்டர் வழங்குவதிலும் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் அல்லது ஊழல் எதிர்ப்பு என்.ஜி.ஓ.க்களுக்கும் இடையே எப்போதும் சமூக, பொருளாதார, பண்பாட்டு விஷயங்களில் மோதல் நடந்துகொண்டே இருக்கிறது. மாநில வளர்ச்சிக்கான கொள்கை என்ற கண்ணாடி வழியே ஆட்சி மதிப்பிடப்படுவதால், இது சுவாரசியமான விவாதங்களுக்கும் வழிவகுக்கிறது.

இந்த விவாதம் பெரும்பாலும் அறிவுபூர்வமான வாதங்களின் மீது நிகழ்த்தப்படுவதோ, தர்க்கபூர்வமான முடிவுகளுக்கு இட்டுச்செல்வதோ இல்லை. இதனால் முன்னுரிமைத் துறைகளில் பொதுக் கொள்கைகளில் சீர்திருத்தம் ஏற்படுவதும் இல்லை. இத்தகைய விவாதங்களால் பொதுமக்கள் பணம் செலவாகிறதே தவிர, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் அதிகாரம், பொறுப்புணர்வு ஆகியவை குறித்து யோசிப்பதற்கான அழுத்தம் குறைவாகவே உள்ளது. இருக்கிற நிலைமையை அப்படியே தக்கவைத்துக்கொள்வதற்காக செய்யப்படும் செலவு வெளியே தெரிவதில்லை. ஆனால், அது மிகப்பெரிய தொகை.

அரசாங்க அமைப்பு குறித்து அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் பார்வையில் இருந்து சீராய்வு செய்வது அவசியம். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மக்கள் நலனைப் பேணும் வகையில் ஜனநாயக அமைப்பில் செயல்படும் குடியரசாக ஆனது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில, யூனியன் பிரதேச அரசாங்கங்கள் அரசமைப்புச் சட்டம் கருதியபடி கவனமாக உருவாக்கப்பட்ட மக்கள் நல, வறுமை ஒழிப்புத் திட்டங்களை செயல்படுத்தவேண்டும்.

மாநில, யூனியன் பிரதேச ஆளுநர்களின் முதன்மைப் பணி என்பது நல்ல, திறமை மிக்க, நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்வது என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தையான அம்பேத்கரின் கருத்து. எல்லாத் தரப்பு மக்களுக்கும் நல்ல வசதிகளையும், சேவைகளையும் அரசமைப்புச் சட்டம் குறிப்பிடுகிற உண்மையான பொருளில் வழங்குவதுதான் சிறந்த ஆட்சி அமைப்பு.

“ஒப்பந்தம் முழுவதையுமோ, ஒரு பகுதியையோ ஒப்பந்ததாரர் நிறைவேற்றாவிட்டால், அவர் இழப்பீடு, அபராதம் செலுத்தவேண்டும் என்பதற்கான ஒரு பிரிவை டெண்டர் ஆவணங்களும், ஒப்பந்தங்களும் கொண்டிருக்கவேண்டும்,”என்று டெண்டர் வெளிப்படைத்தன்மை விதிகள்- 2000, பிரிவு 6 கூறுகிறது. ஆனால், மாநிலத்தின் துறைகள், அரசு நிறுவனங்கள் இவற்றை சரிவர பின்பற்றுவதில்லை

பண்டங்கள், பணிகள், திட்ட மேலாண்மை, வசதிகள் போன்றவற்றுக்காக அரசாங்கம் கொள்முதல் செய்வது என்பது முக்கியமான நடவடிக்கை. மக்கள் செலுத்துகிற வரிப்பணம் உள்ளிட்ட பல வளங்களை பெருமளவில் செலவிட்டே இந்த கொள்முதல் நடக்கிறது. குறிப்பிட்ட தரத்திலான பண்டங்கள், பணிகள் ஆகியவற்றை ஆனமட்டிலும் குறைவான விலையில், வெளிப்படையான, பக்கச்சார்பற்ற முறையில் கொள்முதல் செய்யவேண்டும் என்பதே இதன் அடிநாதமாக இருக்கிற கொள்கை.

அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 298 அளிக்கிற அதிகாரத்தின் கீழ்தான் ஒன்றிய, மாநில அரசுகள் பண்டங்கள், பணிகளை வாங்குவதற்கு ஒப்பந்தங்களை செய்துகொள்கின்றன. பணிகளை கொள்முதல் செய்வதற்கான சமீபத்திய விதிமுறைகளை 2022 ஜுன் மாதம் வெளியிட்டது இந்திய அரசின் செலவினங்கள் துறை. மாநில அரசுகள் தாங்கள் டெண்டர் விடும்போது இந்த விதிமுறைகளைப் பின்பற்றும்படி வலியுறுத்தப்பட்டுள்ளன. பொதுவான நிதியாதார விதிகளின் வழிகாட்டுதலின் படி கொள்முதல் தொடர்பாக தங்கள் கொள்கைகளை வகுத்துக்கொள்ள மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு.

மேலும் படிக்க: அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநர் ரவிக்கு இல்லை: அரிபரந்தாமன்

ஒன்றிய அரசின் பொருளாதார கணக்கெடுப்பு 2020-21இல் உள்ள “நடைமுறை சீர்திருத்தங்கள்: நிச்சயமற்ற சூழ்நிலையில் முடிவெடுப்பதை சாத்தியப்படுத்துதல்” என்ற பகுதி இப்படிச் சொல்கிறது:

● “பொதுக் கொள்முதல் விஷயத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தத்தில், வெளிப்படைத் தன்மையின் பலன்களைக் காணலாம். அரசாங்கம், பொதுத்துறை நிறுவனங்கள் பலதரப்பட்ட பண்டங்கள், பணிகளை விற்கவும், கொள்முதல் செய்யவும் Government e-Marketplace (GeM) என்ற மின்னணு சந்தையை 2016இல் உருவாக்கியது. இதற்கு முன்புவரை அரசாங்கத்தின் கொள்முதல் விலைகள் சமகாலத்தில் நிலவிய சந்தைவிலையைவிட மிக அதிகமாக இருந்ததாகவும், அடிக்கடி இவற்றின் தரம் குறித்த புகார்கள் வந்ததாகவும் குறிப்பான விவரங்களுடன்கூட ஆதாரங்கள் உள்ளன.

● இந்த மின்னணு சந்தையைப் பயன்படுத்துவதால், முன்பு நடைமுறையில் இருந்த டெண்டர், விலை ஒப்பந்தங்கள், நேரடி கொள்முதல் ஆகிய முறைகளைவிட, விலைகள் மிகவும் குறைவாகியுள்ளனஎன்கிறது GeM இணையதளம். இந்த GeM சந்தையில் உள்ள விலைகள் சராசரியாக முன்பிருந்த விலைகளைவிட 15-20 சதவீதம் குறைவாக உள்ளன. சில விஷயங்களில் இது 56 சதவீதம் வரையில்கூட குறைவாக உள்ளன.”

வெளிச்சந்தையில் இருந்து கொள்முதல் செய்யும் விஷயத்தில் இந்திய அரசு மேற்கொண்ட மிகப் பெரிய சீர்திருத்தங்களில் ஒன்று இந்த GeM இணையதளம். பண்டங்கள், பணிகளை கொள்முதல் செய்வதற்கு இந்த முறையை பல மாநில அரசுகளும் பின்பற்றுகின்றன. ஆனால், வெளிச்சந்தையில் இருந்து கொள்முதல் செய்வதற்கு இதுபோன்ற சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தவில்லை என்பது விந்தையானது.

பண்டங்கள் பணிகளை கொள்முதல் செய்வதற்கு GeM இணையதளத்தைப் பயன்படுத்துவதில் தமிழ்நாடு அரசு 10-வது இடத்தில் உள்ளது.ஆனால், தேசிய மின் ஆளுமை சேவைகள் அளிப்பு மதிப்பீடு (NeSDA) 2021ன் தரவரிசையில் தமிழ்நாடு இரண்டாமிடத்தில் இருப்பதும், 85 சதவீதத்துக்கு மேல் இணங்கி நடந்திருப்பதாக பதிவாகியிருப்பதும் முரண்பாடாக உள்ளது.

பொதுக் கொள்முதலுக்கும், பொதுக் கொள்முதலுக்கான டெண்டர் முறைக்கும் முதலில் சட்டமியற்றிய மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. மின்னணு டெண்டர் முறையில் தமிழ்நாட்டின் பொதுக் கொள்முதல்களை முறைப்படுத்துவதற்கு கீழ்க்கண்ட மூன்று சட்டங்கள், விதிகள் உள்ளன:

தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டம்(TTA Act)1998, தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை விதிகள் 2000, தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத் தன்மை (அரசு – தனியார் கூட்டாண்மை கொள்முதல்) விதிகள் 2012. எலக்ட்ரானிக் டெண்டர் முறையில் அமைப்பு சார்ந்த குறைபாடுகள் உள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு டெண்டர் நடைமுறையிலும், இ-டெண்டரை உள்நோக்கம் கொண்டவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

கட்டுமான வேலைகளிலும், கொள்முதலிலும் அரசும் அரசு நிறுவனங்களும் வெளிப்படைத்தன்மை, நியாயத்தை உறுதி செய்யவேண்டும் என்பதே டிடிஏ சட்டத்தின் நோக்கம். ஆனால், இந்த சட்டங்களை, விதிகளை இயற்றிய மாநில அரசே இதன் நோக்கங்களை தோற்கடிக்கும் வகையில் செயல்பட்டது. தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை விதிகள் 2000- விதி 15(2), விதி 16(2),(3) ஆகியவற்றை தமிழ்நாடு அரசு திருத்தவும் செய்தது. காலப்போக்கில் டிடிஏ சட்டமும், விதிகளும் கண்மூடித்தனமாக திருத்தப்பட்டன. இந்த மூன்று சட்டம், விதிகளைத் தழுவிய கடைசி திருத்தம் 2022 டிசம்பர் 5ம் தேதி மேற்கொள்ளப்பட்டது.

“ஒப்பந்தம் முழுவதையுமோ, ஒரு பகுதியையோ ஒப்பந்ததாரர் நிறைவேற்றாவிட்டால், அவர் இழப்பீடு, அபராதம் செலுத்தவேண்டும் என்பதற்கான ஒரு பிரிவை டெண்டர் ஆவணங்களும், ஒப்பந்தங்களும் கொண்டிருக்கவேண்டும்,”என்று டெண்டர் வெளிப்படைத்தன்மை விதிகள் 2000, பிரிவு 6 கூறுகிறது. ஆனால், மாநிலத்தின் துறைகள், அரசு நிறுவனங்கள் இவற்றை சரிவர பின்பற்றுவதில்லை.

ஆழமான தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும்,பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றும்போது, மிகக்குறைவான தொகைக்கு ஏலம் எடுத்திருப்பவரை, அதாவது L1 ஐ தேர்ந்தெடுப்பது சிறந்த முறை அல்ல என்று சமீபத்தில், மத்திய விஜிலன்ஸ் ஆணையம், இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG), நிதி ஆயோக் போன்ற அமைப்புகள் தெரிவித்திருந்தன. குறைவான ஏலம் கேட்டவரை தேர்ந்தெடுப்பது என்ற முறை தரத்தில் சமரசம் செய்துகொள்வது, தாமதம், இதனால், செலவு அதிகரிப்பது ஆகியவற்றுக்கு காரணமாகிறது.

தமிழ்நாடு, கர்நாடகத்தில் உள்ள டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டங்கள், மேல்முறையீட்டுக்கு வழி செய்கின்றன; ஆனால், மேல்முறையீட்டை விசாரிப்பதும் அரசாங்கம்தான் என்பதால், இது நம்பகத்தன்மை எதையும் கொண்டிருக்கவில்லை என்று 2003இல் நிகழ்த்தப்பட்ட உலக வங்கி ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. மேல்முறையீட்டை விசாரிப்பதற்கான அமைப்பு முற்றிலும் அரசு கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றாக இருக்கவேண்டும். இது தவிர, பெரும்பாலான ஒப்பந்தப் புள்ளிகள் அரசாங்கம் டெண்டரில் குறிப்பிட்டதைவிட 20 முதல் 30 சதவீதம் அதிகமாகவே உள்ளன என்று பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

தமிழ்நாடு போன்ற ஒப்பீட்டளவில் வளர்ந்த மாநிலங்களில் வெளிப்படைத் தன்மையோடு, முறைகேடுகளை முற்றிலும் தவிர்த்து திறந்தவெளிச் சந்தை நடைமுறைகளின்படி கொள்முதல், ஒப்பந்தம் ஆகியவற்றை செய்ய ஒரே வழி, மின்னணுச் சந்தையான GeMமாதிரியைப் பின்பற்றுவதுதான்

2001ஆம் ஆண்டு உலக வங்கி நடத்திய இன்னொரு ஆய்வு தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் டெண்டர் ஆவணங்களில் கீழே குறிப்பிட்ட பெரிய குறைபாடுகளை கண்டறிந்துள்ளது: ஒப்பந்தப் புள்ளியை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு எதார்த்த உலகில் சாத்தியமில்லாதது, ஒப்பந்ததாரர்களுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் அரிதாகவே சொல்லப்படுகின்றன, சொல்லப்பட்டால் அவை குறிப்பிட்ட வேலைக்கு பொருத்தமற்றவை அல்லது பாரபட்சமானவையாக உள்ளன, ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தேவையான கருவிகள் குறித்த விதிகள் திருகலானவை, ஒப்பந்தப் புள்ளிகளை மதிப்பீடு செய்வதற்கான, ஒப்பீடு செய்வதற்கான அளவுகோல்கள் அரிதாகவே வெளியிடப்படுகின்றன.

வெளியிடப்படும் சந்தர்ப்பங்களில் அவை பாரபட்சமாக இருக்கின்றன, ஒப்பந்தப் புள்ளி ஜாமீன், செயல்திறன் ஜாமீன் தொகைகள் கட்டாயமாக இருப்பதில்லை, அப்படி இருந்தாலும், பெரிய ஒப்பந்தங்களுக்கு மிகச் சிறிய அற்பமான தொகையாகவே இருக்கின்றன, இடர்ப்பாடுகளுக்கான மொத்த பொறுப்பும் சப்ளையர், ஒப்பந்ததாரர் தலையில் விடியும்படியாகவே நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன, சந்தையில் உள்ள நடைமுறைகளுக்கு உகந்தபடி பணப்பட்டுவாடாவுக்கான விதிகள் இருப்பதில்லை, பணப்பட்டுவாடா தாமதமானால், அதற்கு அபராதமோ, வட்டியோ தரப்படுவதில்லை.

மேலும் படிக்க: குறைந்து வருகிறதா சென்னை மாநகரப் போக்குவரத்து சேவை?

2018ஆம் ஆண்டின் இந்திய தலைமைக் கணக்காயர் தணிக்கை அறிக்கை தமிழ்நாட்டின் டெண்டர் நடைமுறைகளில் பல முறைகேடுகளைக் கண்டறிந்தது. முக்கியமாக “டெண்டர் நடைமுறைகளை பின்பற்றாததால் ஏற்பட்ட மிகுதியான செலவினங்கள்.

தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தில், முறைகேடான ஒப்பந்தங்கள் தருவதை தண்டிப்பதற்கு ஏதும் பிரிவுகள் இல்லை என்பதால், அரசு ஒப்பந்தங்களை அளிப்பதில் ஏராளமான குற்றச்சாட்டுகள், தான்தோன்றித்தனங்கள், வன்மங்கள், உள்நோக்கங்கள், பக்கச்சார்புகள் ஆகியவை பொதுவாக காணப்படுகின்றன. இத்தகைய தொடர்ச்சியான முறைகேடுகள் மாநிலத்தில், குறிப்பாக சேவை வழங்கலில், அரசு நிர்வாகத்தின் மோசமான நிலையைக் காட்டுகின்றன.

டெண்டர்களிலும், கொள்முதல்களிலும் நடக்கும் முறைகேடுகளை போட்டிகள் சட்டம் -2002, ஊழல் தடுப்புச் சட்டம்- 1988 ஆகியவற்றின் கீழ் விசாரிக்க முடியும். ஆனால், டெண்டர் சட்டத்தின் கீழ் நடக்கும் எல்லா முறைகேடுகளும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழோ, லஞ்ச ஒழிப்புத் துறையாலோ, மத்திய விஜிலன்ஸ் ஆணையத்தாலோ விசாரிக்கப்படுவதில்லை.

தமிழ்நாடு போன்ற ஒப்பீட்டளவில் வளர்ந்த மாநிலங்களில் வெளிப்படைத் தன்மையோடு, முறைகேடுகளை முற்றிலும் தவிர்த்து திறந்தவெளிச் சந்தை நடைமுறைகளின்படி கொள்முதல், ஒப்பந்தம் ஆகியவற்றை செய்ய ஒரே வழி, மின்னணுச் சந்தையான GeMமாதிரியைப் பின்பற்றுவதுதான். தவிர, செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி, மின் கொள்முதல் தளங்களில் செய்யப்படும் கொள்முதல் நடவடிக்கைகளை காட்சிப்படுத்துவதன் வாயிலாக இதனை உடனுக்குடன் கண்காணிக்க அரசாங்கம் வழி செய்யவேண்டும்.

பல மாநிலங்கள், பல துறைகள், பல கொள்முதல் செய்யும் முகமைகள் ஆகியவற்றுக்கு இடையே ஒப்பிட்டு மதிப்பாய்வு செய்து, மேலும் சிறப்பான கொள்முதல் முறையை உருவாக்கவும் தொடர்ந்த இந்த விஷயத்தில் புத்தாக்கம் செய்யவும் மேலே குறிப்பிட்ட முறை உதவும்.

மத்திய விஜிலன்ஸ் ஆணையகத்தில் செயல்படுத்துவதைப் போன்ற ‘பொதுநல அம்பலப்படுத்தல் மற்றும் தகவல் கொடுப்போரை காப்பாற்றுதல்’(PIDPI) விதிகளை செயல்படுத்தவும், மாநில அரசு ஊழியர்கள், மாநில அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்கள், கம்பெனிகள், சங்கங்கள், போன்றவற்றில் நடக்கும் முறைகேடுகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார்களைப் பெறவும், மாநில அளவிலான ஊழல் தடுப்பு முகமைகளான லஞ்ச ஒழிப்புத்துறை போன்றவற்றுக்கு மாநில அரசு அதிகாரம் அளிக்கவேண்டும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival