Read in : English
தமிழக அரசு நிறைவேற்றிய பல சட்டங்களுக்கு அனுமதி தராத ஆளுநர் ரவி, ஆளுநர் பதவிக்கு என வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறி செயல்படுவதும் மாநில அரசுக்கு எதிராகத் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருவதும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படதை அடுத்து, அவரது இலாகாவை மாறுதல் செய்வது குறித்து தமிழக முதல்வரிடம் ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதும் மீண்டும் சர்ச்சைக் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், மாநில நிர்வாகத்தில் ஆளுநரின் அதிகார வரம்பு குறித்து இன்மதிக்கு அளித்த நேர்காணலில் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன்.
கேள்வி: அமைச்சர்களின் துறைகளை மாற்றுவது குறித்து ஆளுநருக்கு தமிழக முதல்வர் எழுதிய கடிதம் தொடர்பாக எழுந்துள்ள விவகாரம் குறித்து என்ன கருதுகிறீர்கள்?
முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன்: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு இலாகாக்களை மாற்றித்தர முதலில் மறுப்பு தெரிவித்த ஆளுநர் பின்னர் ஒப்புதல் அளித்தது வரவேற்கத்தக்கது. அதேநேரம், குற்றவழக்கு இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க கூடாது என ஆளுநர் சொல்வது மகிழ்ச்சி தான். ஆனால், இதே நிலையை
இந்தியா முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி செய்தால் செந்தில் பாலாஜி போல, மத்திய அரசில் உள்ள பல எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிறைக்கு செல்ல நேரிடும். ஆளும் அமைச்சர், எம்.பி மற்றும் எம்.எல்.ஏ யாராவது தவறு செய்தால், மாநிலங்களை பொருத்தவரை முதலமைச்சரும், மத்திய அரசைப் பொருத்தவரை பிரதமரும் நடவடிக்கை எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்டப்படி பார்க்க போனால், குற்றம்சாட்டப்பட்டவர் தண்டனை பெற்றால் மட்டுமே அவர் அமைச்சராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ இருந்தால், பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விடுவார். உதாரணமாக அண்மையில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டதால் அவரால் எம்பியாக இருக்க முடியாது என சட்டம் கூறுகிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை அடுத்து அவர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் போது அவர் உயிரோடு இருந்திருந்தால், அவரால் பதவியில் இருந்திருக்க முடியாது. இதை தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறுகிறது.
முதலமைச்சர் சொல்வதை ஆளுநர் ஏற்று கொள்ள வேண்டும் என்று தான் சட்டம் கூறுகிறது. இது ஆளுநருக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும் அரசியல் காரணங்களுக்காகவே அவரது செயல்பாடு இருக்கிறது
இப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றம் தண்டனை வழங்கினால் மட்டுமே பதவியில் நீடிக்க முடியாது என சட்டம் கூறினாலும், மக்கள் சேவைக்கான பொறுப்பில் இருப்பவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தால், அவர் பதவிக்கான தகுதியை இழக்கிறார் என்பதே பொதுவான மக்களின் கருத்தாக உள்ளது. பாஜக பிரதிநிதிகளில் 40 சதவீத்தினர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
ஆனால், இடத்துக்கு ஏற்றார்போல பாஜகவின் நடவடிக்கைகள் இருப்பது தான் இங்கு ஏற்று கொள்ள முடியாதது. உதாரணமாக, 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது, லோயா கொலை வழக்கில் அமித்ஷா மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இரண்டு என்கவுண்டர் வழக்குகளில் சிறைக்கும் சென்றிருந்தார். இருந்தாலும், குஜராத் உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவியில் இருந்தார்.
மேலும் படிக்க: ஆளுநர் ரவி விடும் அம்புகள் திராவிடத் தேன்கூட்டைக் கலைக்க முடியுமா?
இப்படி ஆளும் அரசியல் வாதிகளுக்கு ஏற்ப சட்டத்தின் நிலை இருப்பது வருத்தமான ஒன்று. இதற்கெல்லாம் ஒரே தீர்வு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் அல்லது அமைச்சர்கள் தவறு இழைத்தால் முதலமைச்சர் மற்றும் பிரதமர் நடவடிக்கை எடுக்கலாம் என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மாற்றி வழங்க வேண்டும்.
முதலமைச்சர் சொல்வதை ஆளுநர் ஏற்று கொள்ள வேண்டும் என்று தான் சட்டம் கூறுகிறது. இது ஆளுநருக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும் அரசியல் காரணங்களுக்காகவே அவரது செயல்பாடு இருக்கிறது.
கேள்வி: செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க கூடாது என்று ஆளுநர் கூறுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை அமைச்சராக இருக்க கூடாது என்று கூறுவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா?
அரிபரந்தாமன்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை பதவியில் நீடிக்க கூடாது என்று கூற ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என அரசியலமைப்பு சட்டத்தின் 164வது பிரிவு கூறுகிறது. அதன்படி, அமைச்சர்கள் மீது முதலமைச்சர் மட்டுமே அதிகாரத்தை பயன்படுத்த முடியும். மக்கள் பிரநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே அமைச்சர்கள் மீது ஆளுநர் அதிகாரம் செய்யலாம். ஆனால், இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பாஜகவாக இருக்கட்டும், காங்கிரஸாக இருக்கட்டும் எந்த அரசியல் கட்சிகளும் தயாராக இல்லை. அப்படி திருத்தம் கொண்டு வந்தால், அவர்களுக்கு எதிராக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் திரும்பிடும்.
மாநிலங்களில் யார் நிர்வகிக்க வேண்டும், யார் அமைச்சராக இருக்க வேண்டும் என்பதை முதலமைச்சர் தீர்மானிக்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசில் பிரதமர் முடிவெடுக்கலாம் என்றும் அமைச்சர்கள் நியமன சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் இரண்டுமே மிக தெளிவாகக் கூறுகிறது. அமைச்சர்களின் பதவி விவகாரத்தில் தலையிட, ஆளுநர் மற்றும் குடியரசு தலைவருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.
கேள்வி: அமைச்சரின் இலாகா மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என ஆளுநர் கூறுவது, அவர் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவதை காட்டுகிறதா…?
அரிபரந்தாமன்: ஆளுநர் ஆர். என். ரவி தொடர்ந்து சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதே இதற்கு உதாரணம். அதே ஆளுநர், ரம்மி தடைக்கான அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். பின்னர், சட்டமன்றம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்புத் தெரிவித்து காலதாமதம் செய்தார்.
இப்படி, தொடர்ந்து அரசுக்கும், சட்டத்துக்கும் எதிராக செயல்படுவது ஆளுநர் ஆர். என். ரவியின் செயலாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஆளுநர் மீதான சர்ச்சைகள் இருந்தன. ஆனால், 1950ஆம் ஆண்டுகளில் இருந்து இதுவரை எந்த ஒரு ஆளுநர் மீதும் இந்த அளவுக்கு அதிகளவில் சர்ச்சைகள் இருந்தது இல்லை.
கேள்வி: தொடர்ந்து சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு, அரசுக்கு முட்டுக்கட்டை போடும் ஆளுநரின் நடவடிக்கைக்கு எப்படி தீர்வு காண்பது? யாரிடம் முறையிடுவது?
அரிபரந்தாமன்: இதற்காகத்தான் தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத்தில் கொண்டு வரப்படும் மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டால், அவரின் ஒப்புதலுக்கான காலவரையரையை அரசியலமைப்பு சட்டத்தில் நிர்ணயிக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு மற்ற மாநிலங்களில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டன. இந்தத் தீர்மானத்தின்படி அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தால் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநரால் காலம் தாழ்த்த முடியாது.
ஏனெனில் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் காலம் தாழ்த்துவது ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்பு சட்டத்தும், மக்களின் கூட்டாட்சி தத்துவதுக்கும் எதிரானது. இதை எதிர்த்து மக்கள் தான் கேள்வி கேட்க வேண்டும். மக்களின் கேள்வி தான் மாற்றங்களுக்கு வழி வகுக்கும்.
அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கு என்று எந்த அதிகாரமும் இல்லை. பதவி பிரமாணமும், கோப்புகளில் கைழுத்திடுவதுமே ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் வேலை. குடியரசு தலைவர் பிரச்சினை செய்தால் நாடாளுமன்றதால் அவரை நீக்க முடியும். ஆனால், மாநில அரசால் ஆளுநரை நீக்க முடியாது என்பதால் தான் ஆளுநர் ஆர்.என். ரவி தனது இஷ்டம் போல செயல்படுகிறார்
கேள்வி: ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியுமா?
அரிபரந்தாமன்: நமது அரசியலமைப்பு சட்டம் பிரிட்டஷ் சட்டத்தை அடிப்படையாக கொண்டது. 100 ஆண்டுகள் நாம் பின் தங்கி உள்ளோம். ஐரோப்பிய நாடுகளை போல் நமது அரசு செயல்படுவது இல்லை. பிரிட்டஷ் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் மீது குற்றவியல் நடவடிக்கையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல், இங்கு பிரதமர் மோடி மீதோ அல்லது முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதோ வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியுமா? இதற்கு மத்திய, மாநிலங்களை ஆளும் அரசியல் கட்சிகள் ஒத்துழைக்காது. அரசியல் செல்வாக்கு இருப்பவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையே இப்போது உள்ளது.
இதே செந்தில் பாலாஜி மீது 2015ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது. அதிமுக ஆட்சியிலும், அடுத்து வந்த திமுக ஆட்சியிலும் 2021ஆம் ஆண்டு வரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது பாஜகவின் அழுத்ததால் நடவடிக்கை எடுக்கப்படுகிறதே ஏன்?
ஆனால், அரசியல் கட்சிகள் காழ்ப்புணர்ச்சியால் பி.எம்.எல்.ஏ. என்ற கருப்புச் சட்டத்தை மத்திய அரசு பயன்படுத்துகிறது. தீவிரவாதச் செயல் தடுப்புக்காக பாஜக, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தடா, பொடா சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தச் சட்டங்கள் தவறாக பயன்படுத்தியதால் தடா, பொடா நீக்கப்பட்டது. தற்போது இதற்கு பதிலாக, உபா என்ற சட்டத்தையும், சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புகான பி.எம்.எல்.ஏ. என்ற கருப்புச் சட்டத்தையும் அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றன.
மேலும் படிக்க: தமிழகமா? தமிழ்நாடா?: தமிழ்நாடு ஆளுநர் சொல்வது எடுபடுமா?
இந்தச் சட்டத்தில் கைதானால் ஜாமீன் இல்லை என்பதால், மத்தியில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பி.எம்.எல்.ஏ. என்ற கருப்புச் சட்டத்தின் மூலம் அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது. ஊழல் புகாரில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சிகாக பி.எம்.எல்.ஏ. என்ற கருப்புச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என்று தான் வலியுறுத்தப்படுகிறது.
இந்த சட்டங்கள் மூலம் அமலாக்கத்துறையை பயன்படுத்தி செந்தில் பாலாஜி மட்டுமில்லை, ப. சிதம்பரம், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரையும் மத்திய பாஜக அரசு மிரட்டி பார்க்கிறது. அவசரநிலை பிரகடன காலத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி மிசா சட்டத்தைக் கையில் எடுத்தார். அதேபோன்று தான் தற்போது, பாஜக, உபா சட்டத்தை காட்டி எதிர்க்கட்சியினரை மிரட்டுகிறது.
கேள்வி: அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக பயன்படுத்தும் அளவுக்கு அரசியலமைப்பு சட்டம் பலகீனமாக இருக்கிறதா?
அரிபரந்தாமன்: பி.எம்.எல்.ஏ. என்ற கருப்புச் சட்டத்தை இந்திய அரசு கொண்டு வர சொன்ன சில காரணங்களை சொன்னது. 2002ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது நடைபெற்ற ஐ.நா. பொது கூட்டம் நடத்தப்பட்டது. அதில் சர்வதேச அளவில் போதை பொருட்கள் கடத்துவதை தடுக்க, பி.எம்.எல்.ஏ. என்ற கருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இப்படி, போதை பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக கொண்டு வந்த சட்டத்தை மணீஷ் சிசோடியா, செந்தில் பாலாஜி போன்ற அரசியல் தலைவர்கள் மீது திணிப்பது எந்தவிதமான அரசியல் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்படி, அரசியலுக்காக பயன்படுத்தும் பி.எம்.எல்.ஏ. என்ற கருப்புச் சட்டத்தையும், உபா சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும் அல்லது அதை சரியான முறையில் பயன்படுத்தலாம்.
கேள்வி: ஆளுநருக்கு இருக்கும் பிரத்யேகமான அதிகார வரம்பு என்ன?
அரிபரந்தாமன்: ஆளுநருக்கு என்று எந்த ஒரு பிரத்யேகமான அதிகாரமும் இல்லை. ஆளுநர் என்பது அதிகாரமன்ற ஒரு அலங்கார பதவி என்றே அம்பேத்கர் கூறி உள்ளார். அதேபோல், பல்கலைக்கழக தலைமைத்துவமும் ஆளுநருக்கு தான் என்று சட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கு என்று எந்த அதிகாரமும் இல்லை. பதவி பிரமாணமும், கோப்புகளில் கைழுத்திடுவதுமே ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் வேலை. குடியரசு தலைவர் பிரச்சினை செய்தால் நாடாளுமன்றதால் அவரை நீக்க முடியும்.
ஆனால், மாநில அரசால் ஆளுநரை நீக்க முடியாது என்பதால் தான் ஆளுநர் ஆர்.என். ரவி தனது இஷ்டம் போல செயல்படுகிறார். இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் தினமும் யுத்தம் நடைபெற்று வருகிறது. இதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் தான் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்றார் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்.
Read in : English