Read in : English

கால்நடைகளுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்து, அதன் மூலம் கால்நடைகளுக்கு வரும் 40 வகையான நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதை நிருபித்துள்ளார் பேராசிரியர் டாக்டர் ந.புண்ணியமூர்த்தி (வயது 65). தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (Tamil Nadu Veterinary and Animal Sciences University – TANUVAS) கீழ் தஞ்சாவூரில் இயங்கி வரும் மரபுசார் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (Ethno Veterinary Medicine Training and Reasearch Centre) முன்னாள் தலைவர் பேராசிரியர் அவர்.

தஞ்சை மாவட்டம் வல்லத்தில் பிறந்த அவரது தந்தை நடேசனும் தாய் அம்சவல்லியும் பள்ளிப்படிப்பைத் தாண்டாதவர்கள். ஆனாலும், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், பள்ளிப் படிப்பை முடித்து சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பிவிஎஸ்சி, எம்விஎஸ்சி பட்டம் பெற்றார்.

பின்னர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகதில் பிஎச்டி ஆய்வுப் பட்டப் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்ற அவர், அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி. தன்னிடம் சமூக அக்கறையை விதைத்தவர்கள் தாத்தா ரத்தினசாமியும் பாட்டி சந்திரகாசம்மாளும் என்பதை புண்ணியமூர்த்தி இப்போதும் நினைவுகூர்கிறார்.

கால்நடைகளுக்கு வரும் நோய்களைக் குணப்படுத்த சித்த மருத்துவ முறை அறிவியல் ரீதியாக வெற்றிகரமாகச் செயல்படுவதை அறிந்து, நாட்டின் 12 மாநிலங்கள் சித்த மருத்துவமுறையைப் பின்பற்றி வருகின்றன

நவீன கால்நடை மருத்துவத்தில் பட்டம் பெற்றிருந்தாலும்கூட, கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவரது முயற்சியால் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கறவை மாடுகளின் 40 வகையான நோய்களுக்கு மூலிகை மருத்துவத்தின் மூலம் 80லிருந்து 82 சதவீதம் வரை குணப்படுத்த முடியும் என்பது அறிவியல் ரீதியாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் தனித்த மருத்துவமாக மூலிகை மருத்துவம் இருக்க முடியும் என்றும் பாரம்பரிய சித்த மருத்துவத்தின் மூலம் கால்நடைகளுக்கு வரும் நோய்களை முழுமையாக குணப்படுத்த முடியும் என்பதையும் செயல் ரீதியாக நிருபித்துக் காட்டியுள்ளார்.

மேலும் படிக்க: மரபு மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைப்பது சரிதானா?

“நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் (Pharmacology) துறையின் தலைவராக இருந்த நான், 2001இல் தஞ்சாவூரில் உள்ள பல்கலைக்கழக விரிவாக்க மையத்திற்கு இடமாறுதல் பெற்றேன். அங்கிருந்துதான் கால்நடைகளுக்கான நோய்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை முறையைப் பயன்படுத்துவது குறித்த எனது ஆராய்ச்சி தொடங்கியது. விவசாயிகளிடம் பாரம்பரியமாக இருக்கும் மருத்துவ முறைகளைக் கேட்டறிந்தேன். அதுகுறித்த ஆவணங்களைப் பார்வையிட்டேன்.

பாரம்பரியமாக பழக்கத்தில் இருக்கின்ற சித்த மருத்துவக் கோட்பாடுகளின் அடிப்படையில் நவீன மருத்துவ ஆராய்ச்சி வழிமுறைகள் மூலம் மூலிகை மருத்துவ முறைகளை சோதனை செய்து நெறிப்படுத்துவதற்கு தமிழக அரசும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலும் நிதியுதவி அளித்தன. தஞ்சாவூரில் மரபுசார் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை (Ethno Veterinary Medicine Training and Reasearch Centre)தொடங்குவதற்காக 2007இல் தமிழக அரசு ரூ.18 லட்சம் வழங்கியது.

2016இல் ஒரத்தநாட்டில் மரபுசார் மூலிகை மருத்துவ ஆய்வு மையம் (Ethnoveterinary Herbal Product Research and Development Centre) அமைப்பதற்காக தமிழக அரசு 13.72 கோடி நிதியுதவி அளித்தது. என்பதை நினைவுகூர்கிறார் டாக்டர் புண்ணியமூர்த்தி.

“கால்நடைகளுக்கு வரும் நோய்களைக் குணப்படுத்த சித்த மருத்துவ முறை அறிவியல் ரீதியாக வெற்றிகரமாகச் செயல்படுவதை அறிந்து, நாட்டின் 12 மாநிலங்கள் சித்த மருத்துவமுறையைப் பின்பற்றி வருகின்றன. கால்நடைகளுக்கு வரும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சித்த மருத்துவக் குறிப்புகளை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, குஜராத்தி, மராத்தி, அசாமி, பெங்காலி, பஞ்சாபி, ஒரியா, ஆங்கிலம் ஆகிய 12 மொழிகளில் குஜராத் ஆனந்த்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமாகிய தேசிய பால் வள நிறுவனம் (National Dairy Development Board) சிறிய வெளியீடாக வழங்கி வருகிறது.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் தமிழ்நாடு விஞ்ஞானி விருது பெற்ற பேராசிரியர் புண்ணியமூர்த்தி

கால்நடை மருத்துவர்களுக்கும் கால்நடை வளர்ப்பவர்களும் இலவசமாகப் பார்த்து பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் வீடியோ வடிவிலும் இவை அதன் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன், மாடுகளை வளர்ப்பவர்களுக்கும் கால்நடை மருத்துவர்களுக்கும் அவர் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறார்.

இதுவரை நாடு முழுவதும் 1500 கால்நடை மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார். அவர்கள் மூலமாக கால்நடை வளர்க்கும் சில லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என்கிறார் அவர்.

இவரது பணிகளைப் பாராட்டி 2014இல் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இவருக்கு அறிவியல் அறிஞர் விருது வழங்கி கௌரவித்தது

“2013 இல் தமிழ்நாட்டில் கோமாரி நோய் வந்து கோவை, ஈரோடு உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஏராளமான கால்நடைகள் இறந்து போன சூழ்நிலையில், மூலிகை மருத்துவம் மூலம் அந்த நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. அதனால் அந்த நோய்க்கு ஆளான ஏராளமான கால்நடைகளைக் காப்பாற்ற முடிந்தது. கோமாரி (Foot-and-mouth disease), மடி நோய் (Mastitis) போன்ற நோய்களை மூலிகை மருத்துவம் மூலம் குணப்படுத்த முடியும் என்பது அறிவியல் ரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கு அண்மைக் காலங்களில் பெரியம்மை நோய் வரத் தொடங்கியுள்ளது. இந்த நோயையும் மூலிகை மருத்துவம் குணப்படுத்துகிறது. கால்நடைகளுக்கு வரும் பெரியம்மை நோய்க்கு (Lumpy skin disease) நமது சித்த மருத்துவத்தில் உருவாக்கப்பட்ட மருந்துகளை கொடுக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அந்த வழிமுறைகளை கால்நடை மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம்” என்கிறார் புண்ணியமூர்த்தி. அதன் தொடர்ச்சியாக, இவரது பணிகளைப் பாராட்டி தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் (Tamilnadu State Council for Science and Technology) இவருக்கு 2013 ஆம் ஆண்டுக்கான அறிவியல் அறிஞர் விருது (Tamilnadu Scientist Award) வழங்கி கௌரவித்தது.

மேலும் படிக்க: கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர், இன்று ஜப்பான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்!

“தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமும் (Tamil Nadu Veterinary and Animal Sciences University) பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான மறுமலர்ச்சி பவுண்டேஷன் (Foundation for Revitalisation of Local Health Traditions) ஆகியவை இணைந்து பிவிஎஸ்சி பட்டம் பெற்ற கால்நடை மருத்துவர்களுக்கு மூலிகை மருத்துவத்தில் ஓராண்டு முதுநிலை டிப்ளமா படிப்பு (PG Diploma in Ethno Veterinary Practices) 2012ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது.

கால்நடை மருத்துவப் பட்டப் படிப்பில் மூலிகை மருத்துவத்தை ஒரு பாடமாகச் சேர்ப்பதற்கு மத்திய அரசின் கால்நடைத்துறை (Department of Animal Husbandry )மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன “என்று கூறும் புண்ணியமூர்த்தி, நெதர்லாந்து, உகாண்டா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் உள்ள கால்நடைகளுக்கு லைப் ஸ்டாக் பார்மிங் என்ற அமைப்பின் மூலம் கால்நடைகளுக்கு மூலிகை மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சியை அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகப் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும்கூட, அவரது ஆய்வுப் பணிக்கும் பயிற்சிப் பணிக்கும் ஓய்வு இல்லை. கருத்தரங்குகளில் பங்கேற்கிறார். நாட்டின் பல்வேறு இடங்களுக்குப் போய், பயிற்சி அளித்து வருகிறார்.

கால்நடைகளுக்கு வரும் நோய்களுக்கு மூலிகை மூலம் மருத்துவச் சிகிச்சை அளிப்பது குறித்து தற்போதும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு தொலைபேசி (தொடர்பு எண்: 98424 55833) மூலம் இலவச ஆலோசனை வழங்கி வருகிறார் கால்நடை நோய்களைச் சித்த மருத்துவத்தின் மூலம் குணப்படுத்துவதில் இந்தியாவுக்கே வழிகாட்டி வரும் பேராசிரியர் டாக்டர் புண்ணியமூர்த்தி.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival