Read in : English

Share the Article

பரிவாதினி எனும் நிறுவன அமைப்பைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. எப்பொழுதெல்லாம் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகில் இருக்கும் நாத இன்பம், ராகசுதா அரங்கில் கச்சேரிகள் நடக்கின்றதோ அப்போதெல்லாம் பரிவாதினி அங்கே ஆஜர். பாடும் இசைக் கலைஞரின் முழு அனுமதி பெற்று, நேரடியாக நம் எல்லோருக்கும் இருந்த இடத்திலேயே கச்சேரிகளை உட்கார்ந்து ரசிக்கும் வண்ணம் எத்தனையோ வருடங்களாக ஒரு ஏற்பாட்டைச் செய்து வந்திருக்கிறது.

இசை ஆர்வலர்கள் யாவரும் இதன் ஆக்க சக்தியான திருமதி.ஜெயா மற்றும் மேடையில் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கி “அனைத்தையும்” ஒரே ஆளாகச் சீர்படுத்திக் கொடுக்கும் திரு.சேகர் ஆகிய இருவருக்குமே என்றென்றும் கடமைப்பட்டவர்களாகிறோம்.

இதனைப் போலவே சற்று அருகாமையில் இருக்கும் ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் நடக்கும் கச்சேரிகள் அனைத்தையுமே நேரடியாக ஒளி/ஒலி பரப்பு செய்யும் பெரும் தொண்டில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் திரு.ராமகிருஷ்ணன் (ஆர்கே) அவர்களைப் பற்றியும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இவர்கள் இருவரின் அமைப்புகளுமே மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்திருக்கின்றன.

பரிவாதினி ஒவ்வொரு ஆண்டும் இசைக் கலைஞர்கள், இசை விற்பன்னர்கள் என்றில்லாமல் இசைக் கருவி உருவாக்கிகள், வடிவமைப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து பர்லாண்டு (Fernandes) விருது ஒன்றை வழங்கி வருகிறது. இந்த வருடம் இது ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்’களின் மத்தியில் வாசம் செய்யும் திரு. பொன்னுசாமியைப் போய்ச் சேர்கிறது. இந்த விருது வழங்கும் விழா வரும் நவம்பர் 20, 2022 ஞாயிற்றுக்கிழமையன்று ராகசுதா ஹாலில் வழங்கப்பட இருக்கிறது.

ஒரு மூங்கிலைப் போல இன்னொன்று இருக்காது. அது இயற்கையின் படைப்பல்லவா!

“கிராமத்தில் விளையாட்டாகவே குழல்கள் செய்து கொண்டிருந்த எனது தகப்பனார் திரு.சங்கரலிங்கம், திருமணத்திற்குப் பின் சென்னைக்குக் குடிபெயர்ந்து, இந்த குழல் வடிவமைக்கும் தொழிலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்” என்று ஆரம்பிக்கிறார் பொன்னுசாமி.

“ஆரம்பத்தில் புகழ்பெற்ற குழல் கலைஞர் திரு.பாலசாயி வீட்டில் இருந்தபடியே குழல் செய்து வந்துள்ளார். சில நாட்களுக்குப் பின் சங்கீத கலாநிதி திரு ரமணியின் அறிமுகம் வாய்க்கப் பெற்றிருக்கிறது. அவருக்கும் “ஒவல்” ஷேப்பில் ஒரு ஃப்லூட் (flute) செய்து கொடுத்ததாகவும், அது காணாமல் போய்விட்டதால் இருவருமே வருத்தப்பட்டுக் கொண்டதாகவும் எனது தகப்பனார் என்னிடம் கூறியிருக்கிறார். சில நாட்கள் கழித்து அதே போல ஒரு வாத்தியம் செய்து கொடுத்து பிரச்சினையை தீரச் செய்தார்” என்கிறார்.

பொன்னுசாமியின் தகப்பனார் அவரது 75 வது வயதில், 12 வருடங்களுக்கு முன்பு உயிர் நீத்திருக்கிறார். அவருக்குப் பிறகு இந்தத் தொழிலில் முழுவதுமாக முனைந்துள்ளேன் என்கிறார் பொன்னுசாமி சற்று உருக்கத்துடன். “பான்ஸுரிக்கென்றே பிறந்த ஹரிபிரசாத் சௌராசியாவிடம், அவர் விரும்பிய 3 கட்டை சுருதியில் 4 குழல்களைக் கொடுத்தார் தந்தையார். அவை நான்குமே சரியாக அமைந்து விட்டதாக சௌராசியா பாராட்டியிருக்கிறார்” என்கிறார் பொன்னுசாமி (பான்ஸுரி இதுவும் ஒரு வகையான புல்லாங்குழலே. இதன் ஆதார சுருதி மிகவும் குறைந்ததாக இருக்கும், பெரும்பாலும் ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர்கள் இதில்தான் கச்சேரி நிகழ்த்துவார்கள். இவற்றின் அளவும் நீளமானதாக இருக்கும்).

மேலும் படிக்க: இசை இணையர்: டி.சி. கருணாநிதி, டி.கே. மகேஷ்வரி

இன்று அனைவராலும் விரும்பிக் கேட்கப்படும் ஒருவராகத் திகழ்கிறார் JA ஜயந்த். இவரது தாத்தா சங்கரன் அந்தக் காலத்து பிரபல புல்லாங்குழல் வித்வான். இவர் ஒருமுறை பொன்னுசாமியை அழைத்து, ஒரு குறைந்த சுருதி குழலைக் கேட்டிருக்கிறார். இதில் விசேஷம் என்னவென்றால் இதன் நீளமோ நான்கு அடி. வழக்கமான குழல் ஒன்றரை அடியே இருக்கும். சுருதி என்று பார்த்தால் கீழ் சுருதியான 6 கட்டையில் இருக்கும். “எனக்குத் தெரிந்த வரையில் இந்த அளவிற்கு குறைந்த சுருதியில் வாசித்தவர்களே இல்லை. இதனை ஜயந்த் அனாயசமாக வாசிப்பது எனக்கும் பிரமிப்பை ஊட்டியது” என்று சொல்கிறார் பொன்னுசாமி.

மாலிக்காக 5 கட்டை குழல்களைச் செய்து கொடுத்திருக்கிறார் பொன்னுசாமியின் தகப்பனார். அவை வாசிப்பதற்கு உகந்ததாக இருந்ததாக மாலியும் தெரிவித்திருக்கிறார்.

“எது முக்கியம் என்று கருதுகிறீர்கள், மூங்கில் பொருத்தமாக அமைவதா? நீங்கள் இடும் துவாரங்களின் அமைப்பா?” என்றவுடன், “சந்தேகமே இல்லை, மூங்கில் பொருந்திப் போவதுவே” என்று பதிலளிக்கிறார். “கணுவுடன் சரியாக அமைந்து விடும் குழல் வகைகளிலிருந்து உண்டாகும் நாதமே தனிதான். ஹோல்ஸ்களை (holes) முன்னே பின்னே கூட அட்ஜஸ்ட் செய்து விடலாம். இங்கே ஒன்றை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். ஒரு மூங்கிலைப் போல இன்னொன்று இருக்காது. அது இயற்கையின் படைப்பல்லவா! மெல்லிசைக் கச்சேரி செய்பவர்கள் ஒரு பக்கம் கார்க் (cork) அடைத்துக் கேட்பார்கள்; அவர்களின் தேவைக்கேற்ப செய்து கொடுப்பதுவும் உண்டு” என்கிறார் பொன்னுசாமி.

“ப்ளாஸ்டிக் குழல்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்ற கேள்விக்கு, “ஏதோ ஒரு ஆர்வத்திற்கு வாசித்துப் பார்க்கலாம். ஆனால் மூங்கிலின் நாதம் எங்கே? இதில் வரும் சவுண்டு எங்கே? ஒப்பிட்டுப் பார்க்கவே இயலாது” என்று பதில் சொன்னது, அதைப் பற்றி இவருக்குப் பெரிதாக அபிப்பிராயம் இல்லை என்றே உணர்த்திற்று.

“இந்தக் குழலை உற்பத்தி செய்யும்போதே, ஹிந்துஸ்தானிக்கென்றோ, கர்நாடிக் கச்சேரிகளில் வாசிப்பதற்கென்றோ மற்ற இடங்களில் வாசிப்பதற்கென்றோ தனிப்பட்ட முறையில் செய்வதுண்டா?” என்ற கேள்வியை எழுப்பினேன்.

பான்ஸுரி இதுவும் ஒரு வகையான புல்லாங்குழலே; இதன் ஆதார சுருதி மிகவும் குறைந்ததாக இருக்கும்

“பொதுவாக ஹிந்துஸ்தானி என்றால் கொஞ்சம் குழல் சற்று சன்னமாக இருப்பது உகந்ததாக இருக்கும். அவர்கள் முழு அளவு அழுத்தமாகக் காற்று கொடுக்க மாட்டார்கள். ஒருவிதமான ஸாஃப்ட் ப்ளோயிங்க் (soft-blowing) எனலாம். உதட்டில் வைத்து வாசிக்கும் போது சற்று உள்ளே தள்ளிதான் வாசிப்பார்கள். ஹரிப்ரசாத் சவுராஸ்யா ஒரு முறை மிகச்சின்ன குழலில் ஒரு முறை வாசித்துள்ளார் என்பது உண்மை என்றாலும் அது ஒரு மாதிரிக்குத்தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் குழல்கள் எல்லாமே நீளமாக இருக்கும்.

அதே நேரத்தில் அவர்களின் குழல்களில் காற்று ஊதும் தொளை கணுவில் இருந்து அரை அடி தள்ளி தான் இருக்கும். அதே போல அடுத்து வரும் மத்யமம் ஒரு அரை அடி தள்ளித்தான் இருக்கும். எந்தக் குழலுமே நீளமாகத் தோற்றமளிப்பதற்கு இதுவே காரணம். (இவர் பலவற்றைத் துல்லியமாக, ஒரு மேலான இசைப் பார்வையுடன் அணுகித் தெரிந்து கொண்டிருக்கிறார்!)

கர்நாடிக் என்றாலே எட்டு ஹோல்ஸ் ஃப்லூட் (eight-holed flute) தான். மேலும் இதில் கனம் அதிகம். அழுத்தமாகக் காற்றுக் கொடுத்தாலும் சுருதி சற்றும் மாறாமல் இருக்கும். வெஸ்டர்ன் என்றால் அது பட்டன் முறை. அதனது அமைப்பே தனிப்பட்டதாக இருக்கும்” என்று வித்தியாசங்களைச் சொல்கிறார் பொன்னுசாமி.

மேலும் படிக்க: காருகுறிச்சி அருணாசலத்தின் இசையுடைய ஈர்ப்பின் இரகசியம்

“மெல்லிசைக் கச்சேரிகளில் புல்லாங்குழல் வாசிப்பவர், பெட்டி நிறைய வாத்தியங்களுடன் வருகிறார். ஒவ்வொரு பாட்டிற்கும் ஒன்று. இது எப்படி சாத்தியப்படுகிறது?” என்றவுடன், அதற்குக் காரணம் இல்லாமல்லை என்கிறார் பொன்னுசாமி.

“கர்நாடிக் என்று பார்த்தால் நாம் ஆதார சுருதியையே, ஸட்ஜ்மத்தையே குறிக்கோளாக வைத்து எல்லாவற்றையும் வாசிக்கிறோம். சில பாடல்களுக்கு துக்கடா அயிட்டங்களுக்கு மட்டும் மத்தியம சுருதிதான் ஆதாரம். லைட் ம்யூசிக்கில் அப்படி இல்லை. அவர்கள் “ரி” ஸ்வரத்தை ஆதார ஸட்ஜமமாக வைத்து, அடுத்து, “நி” ஸ்வரத்தை ஆதார ஸட்ஜமமாக வைத்து, இப்படிப் பலவாறாக வாசித்து அப்பியாசம் செய்திருப்பார்கள். இந்த வகைகள் நீண்டுகொண்டே செல்லும்.

பொதுவாக “க”, “ம” வாசிக்க வேண்டுமென்றால் கட் (cut) செய்துதான் குழலில் கொண்டு வர இயலும். இவர் கட் செய்யாமல் கொண்டு வரக்கூடிய காம்பினேஷனை யோசித்து வைத்திருப்பார்கள். செயல்படுத்தி வெற்றியும் காண்பார்கள்” என்று கூறி ஆச்சர்யப்படுத்துகிறார்.

“குழல் மிகச்சரியாக (perfect) உள்ளது என்பதை எப்படி கணிப்பீர்கள்?” என்று அவரிடம் கேட்டேன். “எனது தகப்பனார் காலத்தில் பிச் பைப் (pitch-pipe) இருந்தது. அதனை வைத்து சரிபார்த்தோம். இப்போது ட்யூனர் (tuner) வந்து விட்டது. அதன்படி ஒவ்வொரு ஸ்வரமும் அமைவது அவசியத் தேவையாகி விட்டது” என்று கூறும் பொன்னுசாமிக்கு திருமணமாகவில்லை. இந்த தொழிலில் இவருக்கென்று சிஷ்யர்களும் இல்லை.

ஒரு பழக்கப்படாத மூங்கிலைப் பார்த்தவுடனேயே, இது இன்ன சுருதிக்குத் தக்கது என்று உள்ளுக்குள்ளேயே ஒரு கணிப்பு ஏற்பட்டு விட வேண்டும்

“யாரும் ஆர்வத்துடன் முன்வரவில்லை. என்னமோ தெரியவில்லை. புல்லாங்குழலைப் பொறுத்தவரை ஒருவித அலாதி ஞானம் தேவை. ஒரு பழக்கப்படாத மூங்கிலைப் பார்த்தவுடனேயே, இது இன்ன சுருதிக்குத் தக்கது என்று உள்ளுக்குள்ளேயே ஒரு கணிப்பு ஏற்பட்டு விட வேண்டும். இதைத்தான் இவ்விடத்தில் ஞானம் என்கிறேன்.

முன்பு சொன்னது ஒரு மூங்கிலைப் போல அடுத்த மூங்கில் இருக்காது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு டையாமீட்டர் (diameter) உள்ளது.
இந்த விருது எனக்குக் கிடைப்பதைப் பற்றி சந்தோஷமே. எனது தகப்பனார் மற்றும் திரு.ரமணி இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

ரமணி அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்து, எனது தகப்பனாரைப் பல பேரிடம் கையெழுத்துப் பெற்று கலைமாமணி விருதிற்கான விண்ணப்பத்தைத் தன்னிடம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அது அப்படியே நின்றுவிட்டது. திரு.சங்கரலிங்கத்திற்குக் கிடைக்காமல் போனது ஒரு நெருடலே!” என்கிறார் பொன்னுசாமி.

பரிவாதினி பற்றிய குறிப்பு:
2013ல் துவங்கப்பட்டது பரிவாதினி. இந்த நிறுவனத்தின் அமைப்பாளர் லலித் ராம் பேசுகையில், “விருதுகள் பல இருக்கின்றன. ஆனால் வாத்தியத்தைச் செய்பவர், வடிவமைப்பவர்களுக்கென்று பிரத்யேகமாக ஒன்றும் இல்லை என்றார் மிருதங்க வித்வான் திருவனந்தபுரம் பாலாஜி. அவர் பேச்சு வாக்கில் சொன்னாலும் அடிப்படையில் அது மிகவும் உண்மையான விஷயமே. அதனைக் கேட்ட மாத்திரத்தில் எந்தவிதக் காலதாமதமும் செய்யாமல், உடனுக்குடன் அமலுக்கு வந்தது இந்த விருது.

இந்த விருதிற்கு என்ன பெயர் சூட்டுவது? பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்பிரமணியப் பிள்ளை ஆகியவர்களுக்கெல்லாம் மிருதங்கம் செய்து கொடுத்து, செவ்வனே பணியாற்றி நம் நினைவில் என்றும் நிற்பவர் திரு பர்லாந்து (Fernandes). அதனால், அவர் நினைவாகவே இது வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

விருது பெற்றோர்:
2014: திரு. வரதன் – மிருதங்க உருவாக்கி (திரு சிஎஸ் முருகபூபதி அவர்களின் நூற்றாண்டை ஒட்டி வழங்கப்பட்டது)
2015: திரு. ராஜு . பெங்களூரைச் சேர்ந்தவர். வீணை படைப்பாளி
2016: திரு. U V K ரமேஷ் – மானாமதுரையைச் சேர்ந்தவர், கட வாத்திய உற்பத்தி வல்லுனர்
2017: திரு. T G பரமசிவம், திருவையாற்றைச் சேர்ந்த இவர் தவில் உருவாக்குவதில் வல்லுனர்
2018: திரு. முருகானந்தம், இவர் மிருதங்கம் மற்றும் கஞ்சிரா செய்து கொடுப்பவர்
2019: திரு. N R செல்வராஜ், நாகஸ்வரத்தை செய்பவர்
2020: இந்த ஆண்டு இந்த விருது வழங்கப்படவில்லை
2021: திரு. முத்துராமன், சீவாளி வடிவமைப்பவர். திருவாவடுதுறையைச் சேர்ந்தவர்
2022: திரு. பொன்னுசாமி –புல்லாங்குழல் வடிவமைப்பவர்


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles