Read in : English
தலைமை நீதிபதி எம்.வி.ரமணாவின் தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் முன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு பொதுநலன் வழக்கொன்றை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அஷ்வினி குமார் உபாத்யாய என்னும் பாஜக உறுப்பினர் ஒருவர், தேர்தல் அறிக்கைகளில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத இலவச வாக்குறுதிகளைத் தரும் கட்சிகளின் அதிகாரப்பூர்வமான அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு வேண்டுகோள் விடுத்த மனு அது. மனுதாரருக்காக வாதாடும் மூத்த வழக்குரைஞர் விகாஸ் சிங், இலவச வாக்குறுதிகளைத் தடுக்கும் விதத்தில் ஒரு ’மாடல் தேர்தல் அறிக்கையை’ பிரச்சினைக்குத் தீர்வாக முன்மொழிந்திருக்கிறார். இது இந்த மாதம் இரண்டுமுறை செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாக வந்திருக்கிறது.
2022 ஆகஸ்டு 2 அன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தைப் பற்றி 3-ஆம் தேதி செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டன. இலவசங்கள் விசயத்தில் கட்சிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் தனக்கில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்தது. இலவசங்கள் வாக்காளர்களின் முடிவைத் திரித்து விடுகின்றன என்றும் அவற்றை மட்டுப்படுத்தாவிட்டால், பொருளாதார அபாயத்தில் சென்றுமுடியும் என்றும் ஒன்றிய அரசின் வழக்குரைஞர் வாதாடியுள்ளார். கொள்கைரீதியாக ஒன்றிய அரசு மனுதாரரை ஆதரித்திருக்கிறது; இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடிக்க விரும்புகிறது. இதைப் போன்றதொரு வழக்கில் 2013-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் குறிப்பிட்ட நீதியரசர் ரமணா, தேர்தல் ஆணையமும், ஒன்றிய அரசும் இந்த விசயத்தில் தீர்க்கமாகவும், தீவிரமாகவும் செயற்படவில்லை என்று சொல்லி வருத்தப்பட்டார்.
இலவசங்களைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும் என்பதிலும், பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் உச்ச நீதிமன்றம் உறுதியாக இருக்கிறது. அப்போது நீதிமன்றத்தில் இருந்த மூத்த வழக்கறிஞார் கபில் சிபலிடம் இதுபற்றி நீதிமன்றம் கருத்துக் கேட்டபோது, இது பொருளாதார, அரசியல் பிரச்சினை; அதனால் சட்டமன்றமே இதைத் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் சொன்னார். இந்தப்/ பிரச்சினையை விவாதிக்க அரசுக்கும் ஆர்வமில்லை; அரசியல்வாதிகளுக்கும் ஆர்வமில்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவாகச் சொன்னது. ஒரு மாடல் தேர்தல் அறிக்கையை உருவாக்கலாம் என்ற கருத்து உச்ச நீதிமன்றத்தைப் பெரிதும் கவரவில்லை.
அது மற்றுமொரு வெற்றுச் சடங்காகிவிடும் என்று அது சொன்னது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் இந்தப் பிரச்சினையைத் தீவிரமாக விவாதித்து குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஓர் அறிக்கையைத் தரச் சொல்லலாம். அது பற்றி ஓர் அறிக்கையை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசையும் தேர்தல் ஆணையத்தையும் கேட்டுக்கொண்டது. நிதிக்குழுவை இந்தப் பிரச்சினையை ஆராயச் சொல்லலாமா என்று உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசிடம் கேட்டது. இலவசங்களுக்குச் செய்யப்படும் செலவைப் பொறுத்து ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அளிக்கும் நிதியைக் கட்டுப்படுத்தலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துச் சொன்னது.
இந்தப் பிரச்சினையை விவாதிக்க அரசுக்கும் ஆர்வமில்லை; அரசியல்வாதிகளுக்கும் ஆர்வமில்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவாகச் சொன்னது
ஆகஸ்டு 11 அன்று நடந்த ‘இலவசங்கள்’ மனு விசாரணையில் உச்ச நீதிமன்றம் சற்று வேறுபட்ட குரலில் பேசியது. சமூகநலன் திட்டங்கள் எல்லாவற்றையும் இலவசங்கள் என்று சொல்ல முடியாது என்றும், தேர்தல் வாக்குறுதிகளில் ஒரு நிதியொழுங்கு இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. இலவசங்கள் சம்பந்தமாக வாக்குறுதிகளை அள்ளித்தரும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரரின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள மறுத்தது உச்ச நீதிமன்றம். அதே சமயம், இதுசம்பந்தமாக பாராளுமன்றம் சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று தான் பரிந்துரை செய்யவில்லை என்பதை உச்ச நீதிமன்றம் மிகமிகத் தெளிவாகவே சொல்லிவிட்டது.
ஆனால் இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அனைவரும் இதைப் பற்றி விவாதிப்பதை நீதிமன்றம் விரும்பியது. இந்தியத் தேர்தல் ஆணையம், ஒன்றிய அரசு, மற்றும் இந்த வழக்கில் இருக்கும் மனுதாரர்கள் அனைவரும் ஆகஸ்டு 17-க்குள் எழுத்துப்பூர்வமான பதிலைச் சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மேலும் படிக்க:
இலவசங்கள் கருவூலத்தைக் காலிசெய்கின்றனவா?
ஆரோக்கியமான பொருளாதாரம் அரசியலுக்கு உதவாது: உணரும் பிடிஆர்
ஆகஸ்டு 2-ல் நடந்த முதல் விசாரணைக்கும், ஆகஸ்டு 11-ல் நடந்த இரண்டாவது விசாரணைக்கும் இடையில் உச்சநீதிமன்றம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. கட்டுப்பாடற்ற இலவசங்களை விமர்சிக்கும் உச்ச நீதிமன்றம் தேவைப்படும் இலவசங்கள் மீது தனது கடுமையைக் குறைத்துக் கொண்டது. சமூகநலன் செலவீனங்களுக்கும், இலவசங்களுக்கும் வேறுபாடு இருக்கிறது என்று சொன்னது.
இலவசங்களின் நிதிப்பிரச்சினைகளைப் பற்றியும், அந்தச் செலவுகளைத் தாங்கும் மாநிலங்களின் நிதித்திறனைப் பற்றியும் அறிந்துகொள்ள உச்ச நீதிமன்றம் தெரிந்துகொள்ள விரும்பியது. இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள், ஒன்றிய, மாநில அரசுகள், பொருளாதாரம், சட்டம், சமூகம் ஆகிய துறைகளில் இருக்கும் சுயாதீன சிந்தனையாளர்கள் மற்றும் பல நிறுவனங்கள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் அடங்கிய விரிவானதொரு குழு அமைக்கப்பட வேண்டும். எல்லா வேறுபாடுகளையும் களைந்து ஒருமித்தவொரு பரிந்துரையை அந்தக் குழு சொல்ல வேண்டும்.
இந்தப் பிரச்சினை பற்றிச் சிந்தனையாளர்களும், அரசியல் கட்சியினர்களும் ஏற்கனவே தங்கள் கருத்துக்களைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இலவசங்கள் பற்றி உச்ச நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டாம்; ஏனென்றால் அது கட்சிகளின் செயற்பாடுகளில் வீணாகத் தலையிடுவது போலாகும் என்றும், தேவைப்பட்டால் இலவசங்களுக்காகச் செய்யப்படும் செலவினங்களில் வரம்பு விதிப்பதைப் பற்றி நீதிமன்றம் யோசிக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டு ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறது. கல்வி, சுகாதாரம் போன்ற சமூகநலன் செலவீனங்களுக்கும், மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், டிவி செட் போன்ற பயனர்களின் சொத்துக்களாக மாறக்கூடிய ’சுத்தமான இலவசங்களுக்காக’ ஏற்படும் செலவீனங்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
சமூகநலன் திட்டங்கள் எல்லாவற்றையும் இலவசங்கள் என்று சொல்ல முடியாது என்றும், தேர்தல் வாக்குறுதிகளில் ஒரு நிதியொழுங்கு இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது
அதைப்போல, வேளாண்மைக்கு அல்லது இல்ல நுகர்வுக்கு அளிக்கப்படும் மானிய மின்சாரம் அல்லது இலவச மின்சாரம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஏனென்றால் பயனர்களின் வருமானத்திற்கு அது கூடுதல் பலன் சேர்க்கிறது; மேலும் அது நிலத்தடி நீரை அதிகமாகச் சுரண்டுவதற்கும், கூடுதல் மின்னுற்பத்திக்காக புதைபடிவ எரிபொருளை அதிகமான அளவு பயன்படுத்துவதற்கும் வழிவகுத்து சுற்றுப்புறச்சூழலை நாசமாக்குகிறது. இல்லங்களில் வழங்கப்படும் சமையல் வாயுவிற்காக மானியமாகக் கொடுக்கும் ரொக்கப் பரிமாற்றத்தை எவ்வளவு தூரம் சமூக நலன் செலவீனம் என்று எடுத்துக் கொள்ள முடியும்? முழு மானியம் என்பது இலவசம்; பாதி மானியம் என்பது சமூகநலன் செலவீனம் என்று அர்த்தமா? இலவசத்திற்கும், சமூகநலன் செலவீனத்திற்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான் வித்தியாசம். அந்த செலவீனங்களின் விளைவுகளைப் பொறுத்தவரையில் அந்தக் கோடு மங்கலாகத்தான் இருக்கிறது.
இலவசங்கள் சமூகத்திற்கு ஒட்டுமொத்தப் பலனேதும் தருவதில்லை என்பதால் அவற்றின் மீதான செலவீனங்கள் வீண்செலவுதான். அப்படியென்றால் சமூகநலனுக்காகச் சாதுர்யமில்லாமால் செய்யப்படும் செலவீனங்களையும் வீண்செலவு என்றுதான் வர்ணிக்கமுடியும், அதிகமான மானியத்தில் மாநில அரசுகள் வீடுகளுக்கு உணவு தானியங்களை அளிக்கின்றன. இந்தப் பொதுவினியோகத் திட்டத்தில் வீணாகப் போகும் பொருட்கள் கணிசமானவை. சமூகத்தில் கல்வி, சமூக அந்தஸ்து, பொருளாதாரம் ஆகியவற்றில் பின்தங்கிய பிரிவினர்களின் நலனுக்கான திட்டங்களில் பலனற்ற முறையில் செலவு செய்யப்படுகிறது என்பதற்கு நிறைய அனுபவம் சார்ந்த உதாரணங்கள் உண்டு.
மானிய விலைகளில் வீடுகளுக்கு உணவு தானியங்கள் வழங்கப்படும் என்ற கட்சிகளின் வாக்குறுதியை இலவசம் என்று வகைப்படுத்த முடியுமா? இருக்கும் கொஞ்சநஞ்ச வளங்களையும் வீண்செலவுகளால் காலியாக்கும் போக்கைக் காரணம் காட்டி சமூகநலன் துறை செலவீனங்களை அதிகப்படுத்துவதாக வாக்குறுதி கொடுக்கும் அரசியல் கட்சிக்குக் கண்டனம் தெரிவிக்கத்தான் வேண்டும். தனிப்பட்ட பொருட்களை இனாமாக அள்ளிக் கொடுக்கும் திறன்மிக்க இலவசத்திற்கும், கொஞ்சமாக இருக்கும் பொதுநிதியை வீணடிக்கும் முறையில் சமூக நலனுக்காகச் செய்யப்படும் திறனற்ற செலவீனத்திற்கும் இடையே இருக்கும் வேறுபாட்டைப் பற்றி ஒழுங்காக வரிகள் கட்டும் ஒரு குடிமகன் அலட்சியமாகவே இருப்பான்.
அரசுகளால் திறனற்ற முறையில் செய்யப்படும் சமூகநலன் செலவீனங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்த நினைத்த நல்விளைவுகள் ஏதும் ஏற்படாதபோது, அந்தச் செலவீனங்களைப் பிரயோஜனமற்ற இலவசங்கள் என்று சொல்லலாமா? முடியாது. திறனற்ற முறையில் செய்யப்படும் சமூகநலன் செலவீனங்களுக்குக் காரணம் மோசமான ஆட்சிதானே ஒழிய சமூகநலன் திட்டங்கள் அல்ல. பொருளுக்குப் பதில் ரொக்கமாகக் கொடுத்தால் அது பயனர்களின் வருமானத்தைக் கூட்டுமே தவிர, அவர்களின் சமூக நலனைச் சாதிக்காது. அப்படியிருக்கும் பட்சத்தில், சமூகநலன் செலவீனங்களை அவை எவ்வளவு தூரம் சமூக நலனைச் சாதிக்கின்றன என்ற கோணத்திலிருந்துதான் பார்க்க வேண்டும்.
சமூகத்தின் மீது அல்லது இலக்குப் பிரிவினர்கள் மீது நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் சமூகநலச் செலவீனங்களைப் பலப்படுத்த வேண்டும். அரசியல் விவாதம் இப்படித்தான் நிகழ வேண்டும். அதைப்போல, இலவசங்கள் மீதான செலவீனங்களை பயனர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்துத்தான் முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவுகளை சட்ட வடிவமைப்பாளர்களும், பொதுவெளி அறிவுஜீவிகளும் எடுக்க வேண்டும். இலவசங்களின் தாக்கத்தை அவர்கள் விவாதித்து பொதுக்கொள்கையை உருவாக்க அவர்கள்தான் வழிகாட்ட வேண்டும். வேறு தலையீடுகள் எதையும் சாதிக்காது.
இலவசங்களுக்கும், சமூகநலன் செலவீனங்களுக்கும் இடையே வித்தியாசம் இல்லாத நிலையில், இலவசங்களின் வாக்குறுதிகளுக்கும் வாக்காளர்களின் தீர்மானத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாத பட்சத்தில், கட்சிகள் இலவசங்களை அள்ளி வழங்குவதை வேறு வழிகள் மூலம் தடுப்பதை விட இந்தப் பிரச்சினையைச் சட்டமியற்றும் அவையின் விவேகத்திற்கே விட்டுவிட வேண்டும்
தேர்தலுக்கு முன்பு வாக்குகளைப் பணம் வினியோகித்து வாங்குவது பற்றிப் பேசுவது வாடிக்கையாகி விட்டது. அல்லது உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்படுவது போல, பொதுமக்களின் பணத்தில் வாங்கிய தனிப்பட்ட பொருட்களை எந்தக் கட்சி அள்ளித் தருவதாக வாக்களிக்கிறதோ அந்தக் கட்சிக்கு மக்கள் வாக்களிக்கக் கடப்பாடு உடையவர்களாகிறார்கள். காசுகொடுத்து வாக்குகளைக் கட்சிகள் வாங்குவதை அல்லது இலவசங்கள் பற்றிய வாக்குறுதிகள் தேர்தல் முடிவுகளைப் பாதிக்கின்றன என்பதை இதுவரை அரசியல் விஞ்ஞானிகளால் பலமாக நிரூபிக்க முடியவில்லை.
உதாரணமாக, உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி 2012-17 காலகட்ட ஆட்சியில் ஏராளமான பொருட்களையும் மானியங்களையும் மக்களுக்கு அள்ளி வழங்கினாலும், அந்தக் கட்சி 2017-ஆம் ஆண்டுத் தேர்தலில் தோற்றுப் போனது. 2006-ல் இலவசங்கள் தருவதாக வாக்குறுதிகள் கொடுத்து திமுக தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தது என்று அந்தக் கட்சியின்மீது குற்றஞ்சாட்டப்பட்ட போதும், பெரும்பாலான வாக்குறுதிகளை அந்தக் கட்சி நிறைவேற்றியது. என்றாலும், அடுத்து 2011-ஆம் ஆண்டுத் தேர்தலில் அதைப் போல நிறைய வாக்குறுதிகளை திமுக தந்தது. ஆனால் அது தோற்றுப்போனது. அந்தக் கட்சியைப் போலவே இலவச வாக்குறுதிகள் தந்த அஇதிமுக ஆட்சியைப் பிடித்தது. இலவசங்களோ அல்லது வாக்குறுதிகளை நிறைவேற்றி பெற்ற நல்ல பெயரோ சமாஜ்வாதி கட்சிக்கும், திமுகவுக்கும் ஆட்சியை மீண்டும் பிடிக்க உதவவில்லை.
இலவசங்களுக்கும், சமூகநலன் செலவீனங்களுக்கும் இடையே வித்தியாசம் இல்லாத நிலையில், இலவசங்களின் வாக்குறுதிகளுக்கும் வாக்காளர்களின் தீர்மானத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாத பட்சத்தில், பொதுமக்களின் பணத்தில் வாங்கிய பொருட்களை கட்சிகள் இலவசங்களாக அள்ளி வழங்குவதை வேறு வழிகள் மூலம் தடுப்பதை விட இந்தப் பிரச்சினையைச் சட்டமியற்றும் அவையின் விவேகத்திற்கே விட்டுவிட வேண்டும்.
மறுபடியும் சில விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் உருவாகலாம். அந்தச் சட்டங்கள் வழக்கம்போல் அனுசரிக்கப்படுவதை விட மீறப்படுவதே விதியாக இருக்கும்.
(ஆர். ஸ்ரீனிவாசன், முழுநேர உறுப்பினர், மாநில திட்டக்குழு, தமிழ்நாடு. எஸ். ராஜா சேது துரை, பொருளாதாரப் பேராசிரியர், ஹைதராபாத் பல்கலைக்கழகம்)
Read in : English