Read in : English
ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தப்படம் நிறைய பேருக்குப் பிடித்திருக்கிறது எனபதற்கு கொட்டிக்குவிக்கும் அதன் வசூலே சாட்சி. இது ஒரு ‘பீரியட்’ படம் என்றாலும், ராமனையும், அனுமனையும் இந்து புராணத்தின் கோணத்தில் காட்டியவிதம் ஒரு விவாதத்தை கிளப்பியிருக்கிறது. நுட்பமாக அவதானிக்கப்பட்ட தரவுகளை வைத்துக்கொண்டு படத்தில் இந்துத்வா செய்தி இருக்கிறதா என்பதைப்பற்றி பலர் பலவிதமான கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
’ஆர்ஆர்ஆர்’ படத்தில் ராஜமௌலி அல்லூரி சீதாராமராஜு, கொமரம் பீம் ஆகியோரின் பயணத்தைப் பற்றிய ஒரு கற்பனைக் கதைக்கு தன்னுடைய விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். பீம் என்பவர் பீம் (வெகுளித்தனத்தோடு கூடிய காட்டுப்பலம்), அனுமான் (விசுவாசம்) ஆகியோரின் கலவையாகக் காண்பிக்கப்படுகிறார். வானரசேனை (பிரிட்டின் ஆட்சியாளர்கள்) முழுவதும் தடுத்தாலும், அல்லூரி சீதா ‘ராம’ ராஜுவையும், சீதாவையும் பீம் ஒன்றுசேர்க்கிறார்.
ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ராமனையும், அனுமனையும் இந்து புராணத்தின் கோணத்தில் காட்டியவிதம் ஒரு விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
இதுவே வேற்றுமொழித் திரைப்படமாக இருந்தால், நாம் வாழ்கின்ற காலகட்டத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு, இந்தக் கதையோட்டம் இந்துத்வா கோணத்திலே பார்க்கப்பட்டிருக்கும். ஆனால் டோலிவுட்டில் இந்து தொன்மமும், குறியீட்டியலும் சமீபத்து நிகழ்வு அல்ல. இந்த அம்சங்கள் நீண்டகாலமாகவே எப்படி சராசரி தெலுங்குத் திரைப்பட உலகில் ஒரு பாகமாக இருந்திருக்கிறது என்பதைப் பற்றி நாம் விரிவாகப் பார்ப்போம்.
மற்ற மொழிகளில் எடுக்கப்பட்டது போலவே தெலுங்கிலும் புராணக்கதைகள் ஜனரஞ்சகமான படங்களாக எடுக்கப்பட்டிருக்கின்றன. என்.டி. ராமராவின் புகழுக்கும், பாதிக்கடவுள் அந்தஸ்துக்கும் காரணமே அவர் திரைப்படங்களில் நடித்த கடவுள் பாத்திரங்களே.
முதல் தெலுங்குப் படமான பக்த பிரகலாதா (1932) பாகவதத்தை அடிப்படையாகக் கொண்டது. பாபு -ராமண்ணா இயக்கிய முத்யால முக்கு (1975) வால்மீகி ராமாயணத்தின் பின்சேர்க்கை காண்டமான உத்தர ராமாயணத்தை எடுத்து அந்தக் கதையை நவீன காலத்திற்கேற்ப மீளுருவாக்கம் செய்தது. ரஜினி காந்தின் புகழ்பெற்ற படங்களில் ஒன்றான தளபதி (1991), கர்ணனுக்கும் (வாழ்க்கைமுழுவதும் நண்பனுக்குக் கடமைப்பட்டவன்), துரியோதனனுக்கும் (சிறந்த போர்வீரனின் திறன்களைத் தனக்காகப் பயன்படுத்தியவன்) இடையே இருந்த நட்பின் விரக்தியான வியாக்கியானம்.
வெங்கடேஷின் கலியுக பாண்டவுலு (1986) ஒரு மகாபாரதக் கதையைச் சுற்றி நிகழ்வது. அரக்கு மாளிகையில் கௌரவர்கள் தங்களை அழிக்கப் போட்ட திட்டத்தைப் பாண்டவர்கள் எப்படி முறியடித்தார்கள் என்பதைச் சொல்வது அந்தக் கதை. பாலகிருஷ்ணாவின் அதடே சிரிமன்நாராயணா (2019) இந்தியப் புராணங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு புதையல் வேட்டை. கலியுகத்தில் லட்சுமியை இழந்த நாராயணன் தன் இதயத்தையும், பாக்கெட்டையும் நிரப்ப லட்சுமியைத் தேடியலையும் கதை அது.
பவன் கல்யாணியின் அஞ்ஞாதவாசி ஒரு மனிதன் தங்கள் உயிரைக் காப்பாற்ற தன் மகனை மறைத்து வைக்கும் கதையைக் கொண்டது. தேவகிக்குப் பிறந்த கிருஷ்ணா யசோதையிடம் வளர்ந்த கதையின் மறுவடிவம் அது. அகதியாக இருந்த மனிதன் பாண்டவர்களைக் கௌரவர்களிடமிருந்து காப்பாற்ற திரும்பி வருவதைப் பற்றிய திரைப்படம் அது.
இயக்குநர் கே. விஸ்வநாத்தின் திரைப்படங்கள் இந்துக் குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டவை. என்றாலும் தெலுங்குப் படங்கள் நிஜத்தில் இந்துத்வாவைத் தூக்கிப் பிடிப்பதில்லை.
விஜய தேவரகொண்டாவின் கீதகோவிந்தம் ராதா-கிருஷ்ணா கதை. அந்தப் பாத்திரங்கள் ஆரம்பத்தில் மோதி பின்பு ஒருவரை ஒருவர் மெல்ல புரிந்துகொள்கின்றன. மகேஷ்பாபுவின் பாரத் அனே நேனு பாரத வம்சத்தின் ஆகப்பெரும் ஆட்சியாளர்களில் ஒருவரான பாரத் என்னும் தொன்மப் பாத்திரத்தை மையமாகக் கொண்ட படம்.
Ñமகேஷ்பாபுவின் ஸ்பைடர், சிவபெருமான் எப்படி ருத்ரனாக மாறி ரத்தவெறி பிடித்த பைரவுடுவிடமிருந்து மக்களைக் காப்பாற்றுகிறார் என்ற கதையைக் கொண்டது.
இந்து தொன்மங்களும் குறியீட்டியலும் பயன்படுத்தப்படுவது 1990களிலும், 2000களிலும் குறைந்துபோனாலும், அவை எப்போதும் இருப்பதுதான்.
இந்திராவில் கடவுள்களும் கோயில்களும் கொண்டாடப்பட்டன. உதாரணமாக வாரணாசியைப் பற்றிய பாட்டைச் சொல்லலாம். ஜெய் சிரஞ்சீவா படத்தில் ஜெய் ஜெய் கணேசா பாடல் இந்துக் குறியீட்டியியலின் நேரடி வெளிப்பாடு. இயக்குநர் கே. விஸ்வநாத்தின் திரைப்படங்கள் இந்துக் குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டவை. என்றாலும் தெலுங்குப் படங்கள் நிஜத்தில் இந்துத்வாவைத் தூக்கிப் பிடிப்பதில்லை. அரசியல் இந்துத்துவம் அல்லது இந்துத்வா என்பது, குறிப்பாக திரைப்படங்களில், இந்து தேசியவாதத்தை முன்னிறுத்துகிறது; சாதீய அடுக்குக்கட்டுமானத்தை ஆதரிக்கிறது; பிராமணர்களைப் புகழ்கிறது; அல்லது சிறுபான்மையினரை எதிர்மறையாகச் சித்தரிக்கிறது. இவையெல்லாம் தெலுங்குப் படங்களில் மிகவும் அபூர்வம்; விதிவிலக்குகள் இருந்தபோதிலும்.
ஜெய் சிம்ஹா படத்தில் பாலகிருஷ்ணாவின் பாத்திரம் பிராமண சாமியார்களைப் புகழ்கிறது. அகண்டாவில், அவரது பாத்திரம் கோயில்களை, அவற்றின் செழுமையான பாரம்பரியத்தைப் பாராட்டுகிறது; முனிவர்கள் தங்களின் அமானுஷ்யமான சக்தியால் எப்படி உலகத்தை ஆசீர்வதிக்கிறார்கள் என்பதையும் அந்தப் பாத்திரம் புகழ்ந்து பேசுகிறது. அகண்டாவில் பாலகிருஷ்ணா, பிராமணர்கள் எப்படி மரியாதைக்குரியவர்கள், நல்லவர்கள் என்பதைப் பேசுகிறார். ஆனால் இது வழமையான போக்கு அல்ல.
உண்மையில் தெலுங்குப் படங்களில் பிராமணர்கள் அபூர்வமாகவே புகழப்படுகிறார்கள். அதற்காக அவர்களின் கலாச்சாரமும், நம்பிக்கைகளும் விமர்சிக்கப்படுவதும் இல்லை, தமிழ் படங்களில் விமர்சிக்கப்படுவது போல. விதிவிலக்குகள் இருந்தாலும், பொதுவாக தெலுங்குப் படங்களில் இந்துத்வா உரையாடலின் மற்ற அம்சங்கள் இருப்பதில்லை. கிருஷ்ண வம்சியின் கட்கம் ஹைதராபாத் இஸ்லாமியர்களைப் பாகிஸ்தான் நேசர்களாகக் காட்டியது; அதற்காக அந்தப் படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
தெலுங்குப் படங்களில் இந்துத் தொன்மங்களும், குறியீட்டியலும் நீண்டகாலமாகவே புழக்கத்தில் இருப்பவைதான். ஆர்ஆர்ஆர் இந்திய அளவிலான ஒரு திரைப்படமாக அமைந்துவிட்டபடியால், அதன் உச்சக்கட்டக் காட்சியைக் கண்டு பல புருவங்கள் உயர்ந்தன.
Read in : English