Read in : English
விளிம்பு நிலையில் உள்ள ஏழை மக்களின் குழந்தைகளே பெரும்பாலும் படிக்கும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளும் கல்லூரிப் படிப்பை படிக்க ஊக்கம் அளிக்கும் வகையில் புதிய திட்டம் இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும், திருமண உதவிக்காவும் கருணாநிதி முதல்வராக இருந்த 1989ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், இதற்காக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கும் தமிழக அரசின் இந்தத் திட்டம், அரசுப் பள்ளி மாணவிகள் பிளஸ் டூ படிப்புடன் நின்றுவிடாமல், கல்லூரிப் படிப்பையும் படிக்கும் வாய்ப்பையும் அவர்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது. அத்துடன், அவர்கள் பட்டதாரிகளான் கண்ணியமான வேலைவாய்ப்பைப் பெறவும் வழிவகுத்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கும் தமிழக அரசின் இந்தத் திட்டம், அரசுப் பள்ளி மாணவிகள் பிளஸ் டூ படிப்புடன் நின்றுவிடாமல், கல்லூரிப் படிப்பையும் படிக்கும் வாய்ப்பையும் அவர்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 6 லட்சம் மாணவிகள் பயன் பெறுவார்கள். இத்திட்டத்துக்காக ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித் தொகையை பெற்று வந்தாலும், இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெற முடியும் என்று தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இது அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும்.
அகில இந்திய அளவில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளின் சராசரி விகிதம் 27.3 சதவீதம். தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை 51 சதவீதம். தமிழக அரசின் இந்த அறிவிப்பின் மூலம் பள்ளிப் படிப்பை இடையிலே விட்டுவிடும் மாணவிகளின் எண்ணிக்கை குறைவதுடன், கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வழி ஏற்படும். ஒரு பெண் குழந்தை படித்தால் அந்த குடும்பமே தலை நிமிரும் என்பார்கள். ஒரு விளக்கால் இன்னொரு விளக்கை ஏற்றி வைக்கும் முயற்சி இது.
ஏற்கெனவே பட்டதாரிகள் இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவ, தொழிற் படிப்புகளில் சேர்ந்தால் அவர்களுக்கு படிப்புக் கட்டணச் சலுகையை தமிழக அரசு வழங்கி வருகிறது. அத்துடன், அரசுப் பள்ளி மாணவர்•கள், மருத்துவ, தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேருவதற்காக 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் கல்லூரிகளில் அந்த மாணவர்களின் படிப்பதற்கான செலவையும் அரசே ஏற்கும் என்றும் இதற்காக தற்போது ரூ.204 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத ஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. ஏனெனில், பள்ளி நிலையில் தமிழ் வழியில் பெரும்பாலான மாணவர்கள் படிப்பது அரசுப் பள்ளிகளில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஐஐடிக்கள், ஐஐஎஸ்சி, எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேருவதை ஊக்குவிக்கும் வகையில், 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அந்தப் படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும் என்றும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்கள், புகழ் பெற்ற கல்வி நிறுவங்களில் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் போன்ற பாடப்பிரிவுகளில் சேர்ந்து கல்வி பெற உதவும் நோக்கத்தோடு, அவர்களுக்குத் தரமான கல்வி வழங்கி தயார்படுத்துவதற்காக, கல்வியில் பின்தங்கிய 10 மாவட்டங்களில் முன்மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.
வரும் நிதி ஆண்டில் மேலும் 15 மாவட்டங்களில் இத்தகைய முன்மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படும். இத்திட்டத்துக்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த மாதிரி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்க இந்தத் திட்டம் உதவும் என்பதை கடந்த கால மாதிரிப் பள்ளிகளின் செயல்பாடுகள் நமக்குக் காட்டுகின்றன.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளையும் (ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் உள்பட) நவீனமயமாக்குவதற்கான பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளையும் (ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் உள்பட) நவீனமயமாக்குவதற்கான பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ரூ.7 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் வரும் நிதியாண்டில் 1300 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படும்.
இதற்கிடையே, ஒவ்வொரு அரசுப் பள்ளியையும் தன்னிறைவு பெற்ற பள்ளியாக மாற்றும் வகையில் அந்தப் பள்ளியின் தேவைகளை அறிந்து திட்டமிடுவதுடன், சமுதாயப் பங்களிப்புடன் அவற்றை நிறைவேற்றி, பள்ளிக் குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் கல்விச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழுவுக்குப் பள்ளிக்கல்வித் துறை புத்துயிர் கொடுக்க தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் முதல் கட்டமாக, பெற்றோர்கள் மற்றும் பொது மக்களின் பங்கேற்பு குறித்து விழிப்புணர்ச்சியூட்டுவதற்கான 37,391 அரசுப் பள்ளிகளில் மார்ச் 20ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்வில் மொத்தம் 52 லட்சம் பெற்றோர்கள் கலந்து கொள்கிறார்கள். நமக்கு நாமே திட்டம் போல, அந்த ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளை அந்தந்த ஊர் மக்களே அக்கறையுடன் கவனித்து பள்ளிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இதன் மூலம் வழி ஏற்படும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப அரசுக் கல்லூரிகள், பல் தொழில்நுட்பக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சிறப்புத் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் கனவுத் திட்டமான, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவியர்களுக்கு சிறப்புத் திறன் பயிற்சிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவ, மாணவியரின் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இதற்காக, இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன் காரணமாக மாணவர்களிடையே கற்றல் இழப்பை ஈடு செய்யும் வகையில் இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டம் 38 மாவட்டங்களில் 1.8 லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
30 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வரும் இத்திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்த ரூ.200கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவையெல்லாம் தமிழகப் பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Read in : English