Read in : English
காங்கிரஸ் வீழ்ச்சியில் ராகுல் காந்திக்கு முக்கிய பங்குண்டு. சோனியாவின் உடல் நலம் கருதி தலைமை வாரிசுகளுக்கென்றான நிலையில், ப்ரியங்காவையே தேர்ந்தெடுத்திருக்கலாம். கலகலப்பாக பழகக்கூடியவர். அவருக்கும் அவரது பாட்டி இந்திராவிற்கும் கணிசமான உருவ ஒற்றுமை உண்டு. வாக்காளர்களை அவ்வொற்றுமை ஈர்க்கும். ஆனால், 1997ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவர் திருமணம் செய்துகொள்கிறார். அந்நேரம் வரை முழுநேர அரசியலுக்கு வருவது குறித்து சோனியா முடிவு செய்யவில்லை.
(இரண்டு பாகத் தொடரில் இது இரண்டாவது. முதல் பாகத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்)
தாய் தலைவராகி, பின் அவரது உடல் நிலை காரணமாக அடுத்து ஒருவர் கட்சிக்குச் செல்லவேண்டும் என்ற நிலமை ஏற்பட்டபோது, பிரியங்காவிற்குத் திருமணமாகியிருந்தது. இரு குழந்தைகளுக்குத் தாயாகவும் ஆகிவிட்டார். எனவே பொறுப்பு அண்ணன் ராகுலின் தோள்களிலே.
கல்லூரி நாட்களிலேயே ராகுலுக்கு dyslexia கோளாறு இருந்ததாகச் சிலர் கூறுகின்றனர். தந்தையின் கோர மரணத்தால் தங்கையைவிட ராகுல் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். அவருக்கு அரசியலில் நுழைய சற்றும் ஆர்வமில்லை என்றும், தந்தையைப் போல் கட்டாயத்தின் பேரிலேயே அவர் 2007இல் காங்கிரஸ் பொதுச் செயலாளரானார் என்றும் நம்பப்படுகிறது.
அவரிடம் ஒரு கட்டத்தில் மமதை ஓங்கியே இருந்தது, அது பின்னாளில் குறிப்பிடத்தக்க அளவு குறையத்தான் செய்தது. ஆனால், மனித வெடிகுண்டு வெடித்து தந்தையின் உடல் சிதறிய அந்த அதிர்ச்சியிலிருந்து ராகுல் இன்னமும் கூட முழுவதுமாக மீளவில்லை எனலாம். அவர் சற்று ஒதுங்கியே இருப்பதன் காரணமும் அதுதான்.
அவருக்கு லத்தீன் அமெரிக்கப் பெண் ஒருவருடன் நெருங்கிய நட்பிருந்தது என்றும் கூறப்பட்டது. ராகுலே தான் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகக்கூட செய்தியாளர்களிடம் ஒரு முறை தெரிவித்தார். ஆனால் என்ன காரணத்தாலோ அது நடக்கவே இல்லை. இன்றளவும் தனியாளாகத்தான் ராகுல் காந்தி இருக்கிறார். அது அரசியல் கட்டாயங்களின் விளைவாகத்தான், ஆனால் அதற்காக அவர் மீது எவரும் அனுதாபம் கொள்ளத் தயாராயில்லை.
ராகுல் கண்ணியமான இளைஞர். நான் இருமுறை அவரை நேரடியாக சந்தித்துப் பேசியிருக்கிறேன். அடுத்தவர் சொல்வதைக் காதுகொடுத்து பொறுமையாகக் கேட்பார். அப்புறம் தன் உதவியாளர்களை அழைத்து இவரது தொடர்பு விவரங்களை வாங்கிக்கொள்ளுங்கள், மீண்டும் பேசுவோம் என்று நகர்வார்.
ஆனால், அதன் பிறகு எவ்வித செய்தியும் இருக்காது. ராகுல் சந்தித்ததை மறந்திருக்கலாம். உதவியாளர்கள் நினைவூட்டாமல் இருந்திருக்கலாம். எப்படியும் தாயினால் அமர்த்தப்பட்ட உதவியாளர்களின் பிடியிலிருந்து வெளியேற அவர் முயன்றதாகவே தெரியவில்லை.
கட்சியை ஓரளவேனும் சீரமைக்கவேண்டும் என அவர் நினைத்தார். முதற்கட்டமாக இளைஞர் அணியிலாவது முறையாக தேர்தல்கள் நடைபெறவேண்டுமென விரும்பினார். வெள்ளோட்டம் தமிழகத்தில்தான். ஆனால் விடுவார்களா பழம் பெருச்சாளிகள்?. அதன் பிறகு எல்லோரும் கட்சித் தேர்தல் குறித்து மறந்தேவிட்டனர்.
தனிப்பட்ட முறையில் அவர் மற்றவர் நிலை குறித்து உண்மையிலேயே இரக்கம் கொண்டவரா என்பதும் கேள்விக்குறியே. முள்ளிவாய்க்கால் நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில் இந்தியா தலையிட்டு இலங்கைத் தமிழரைக் காக்க வேண்டும் என பலத்த கோரிக்கைகள் பல தரப்பிலிருந்தும் எழுந்தபோது, மன்மோகன் சிங் அரசு கண்டுகொள்ளவில்லை. ராகுலை சில தலைவர்கள் சந்தித்து வலியுறுத்தியிருக்கின்றனர். ஆனாலும் இந்தியா அசைந்து கொடுக்கவில்லை.
அவர் மட்டுமே அரசின் முடிவுகளுக்குக் காரணமா எனச் சொல்ல இயலாது. ஆனால் அவர் நினைத்திருந்தால் ஏதேனும் ஒரு வகையில் பேரழிவு தவிர்க்கப்பட்டிருக்கலாம். நிச்சயம் அந்த அளவு செல்வாக்கு இருக்கத்தான் செய்தது.
ஆனால் அவர்தான் தந்தையின் மரணத்திலிருந்து மீளவே இல்லையே. பிரியங்கா வேலூர் சிறைக்கு வந்து நளினியை சந்தித்தது பரபரப்பான செய்தியானபோது, ஏன் நீங்கள் செல்லவில்லை, என செய்தியாளர்கள் ராகுலிடம் கேட்கின்றனர். ”அது பிரியாங்காவின் பாணி. எனக்குக் கைவராது. ஆனால் சந்திப்பை நான் எதிர்த்தேன் என்றும் பொருளல்ல,” என்று மட்டுமே அவர் பதிலளிக்கிறார். இத்தகைய மனநிலையின் இன்னொரு பரிமாணமே முள்ளிவாய்க்கால் நேரத்தில் அவர் உறுதியான நிலைப்பாடு எதுவும் எடுக்காதது எனலாம்.
அன்னா ஹசாரே 2011இல் உண்ணா நோன்பிருந்தது அண்மை இந்திய வரலாற்றில் முக்கியமானதொரு திருப்பமாகக் கருதப்படுகிறது. அரசியலில் ஊழல் பெரும் பிரச்சினையாக மன்மோகன் அரசின் மீது நாள்தோறும் குற்றச்சாட்டுகள் எழ, காங்கிரசின் செல்வாக்கு கடுமையாக வீழ்ச்சியடையத் தொடங்கியது,
2002இல் நடந்தது தவறுதான், ஆனாலும் மோடி நேர்மையாகச் செயல்படுவார், லஞ்ச லாவண்யங்களில் ஈடுபடமாட்டார், திறமையான நிர்வாகி என நினைத்து ஊழலை எதிர்ப்போர் அவர் பக்கம் திரும்பினர்.
ஹசாரேயை நேரடியாக சந்தித்து உண்ணாநோன்பைக் கைவிடுமாறு கோரலாம் எனக் கூறப்பட்டபோது, ராகுல் உறுதியாக மறுத்துவிட்டாராம். அவருக்கு அன்னாவின் மீது அவ்வளவு வெறுப்பு. ஏன் நமக்குக்கூடத்தான் அவரது நாடகங்கள் எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால், அரசியலில் எல்லாம் சகஜமப்பா எனச் சொல்லிக்கொண்டு, சமரசம் செய்துகொள்ள முன்வருவதே புத்திசாலித்தனம். ஆனால் ராகுல் உடன்படவில்லை. அவர் எளிதில் விட்டுக்கொடுப்பதில்லை.
2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களின்போது கருணாநிதியிடம் பிடிவாதமாகப் பேரம் பேசினார். காங்கிரசிற்கிருந்த செல்வாக்கினை மீறி மிக அதிகமான தொகுதிகளைக் கோரினார். “அவங்களுக்கு அவ்ளோ பேர் இருக்காங்களாய்யா போட்டியிட,” என கலைஞர் நகைத்ததாகக்கூடக் கூறுவர். இறுதியில் 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன். வென்றதோ வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே.
ஏன் என்னவென்று பிறகு அவர் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. உ.பியை எடுத்துக்கொண்டால். 2009ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களின் போது தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கி, ராகுல் கட்சிக்குப் புத்துயிரூட்டியது உண்மை. அது அப்போது 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது ஒருவகையில் சாதனையே. அந்நேரம் பாஜக பத்து தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
ஆனால் அதன் பிறகு உ.பி விவகாரத்தில் ராகுல் அக்கறை காட்டவில்லை,. கட்சி இயந்திரத்தை வலுப்படுத்த முயற்சிகள் எதையும் எடுக்கவில்லை, விளைவு மூன்றாண்டுகளுக்குப் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் 28 இடங்களில் மட்டுமே வென்றது. அப்போது 47 தொகுதிகள் பாஜக வசமானது. அன்று தொடங்கிய காங்கிரசின் சரிவு இன்னமும் முடியவில்லை.
விவசாயிகள் போராட்டம் பெரும் வெற்றியில் முடிவடைந்தாலும் அண்மைய தேர்தல்களில் விவசாய வாக்காளர்கள் காங்கிரஸ் பக்கம் செல்லவில்லை. பல்வேறு காரணங்களால் காங்கிரஸ் மீண்டும் மீண்டும் தோல்வியையே தழுவுகிறது.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் அமேதியைத் தவிர வயநாட்டிலும் அவர் போட்டியிட முடிவெடுத்ததே, உ.பி நிலை சரியில்லை என்ற உணர்வில்தான். நீண்ட காலமாக சோனியா குடும்பத்தினர் வசமிருந்த தொகுதி இறுதியில் பறிபோனது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது, பொதுமக்களில் ஒருவர், “நாங்களும் தொடர்ந்து அவர்களுக்கு வாக்களித்து வருகிறோம். கண்ட பயன் என்ன? தம்பி ராகுல் வருது, ஓட்டு கேக்குது, போட்றோம், அப்புறம் காணாம போயிடுது. இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டணும்” எனக் கூறியதாக ஒளிபரப்பாகியது. அதே நேரம் தோல்விகளுக்குப் பின்னரும் ராகுல் தீவிரமாகவே பணியாற்றி வந்திருக்கிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களுக்காக காங்கிரஸ் உருவாக்கிய அறிக்கை பல நிபுணர்களைக் கலந்தாலோசித்துத் தயாரிக்கப்பட்டது. அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் உதவித்தொகை (Universal Basic Income) அடக்குமுறை சட்டங்கள் அகற்றப்படுதல் உள்ளிட்ட பல அம்சங்கள் பலத்த வரவேற்பைப் பெற்றன. அவற்றின் பின்னணியில் இருந்தது ராகுல்தான். ஆனால் கட்சி மீண்டும் தோல்வியையே தழுவியது. வட புல மக்களின் கவனமெல்லாம் அயோத்தியில், என்ன செய்ய?
ராகுல் பிரச்சாரத்தின் விளைவாக மோடி மாநிலமான குஜராத்தில் கூட பெரும்பான்மை கைக்கெட்டும் தூரம் வந்தது. ரஃபேல் விமான ஊழல் பிரச்சினையில் மிக ஆக்ரோஷமாகவே செயல்பட்டவர் ராகுல். விவசாயிகள் போராட்டத்திலும் அவர் முன் நின்றார். ஆனால் பின்னர் மாநிலங்களவை உறுப்பினரான உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கோகாய், ரஃபேல் வழக்கை ஆழப் புதைத்தார்.
விவசாயிகள் போராட்டம் பெரும் வெற்றியில் முடிவடைந்தாலும் அண்மைய தேர்தல்களில் விவசாய வாக்காளர்கள் காங்கிரஸ் பக்கம் செல்லவில்லை. பல்வேறு காரணங்களால் காங்கிரஸ் மீண்டும் மீண்டும் தோல்வியையே தழுவுகிறது.
ராகுல் காந்தி மனமுடைந்திருப்பார். இனியும் அவரை முன்னிறுத்தக்கூடாது. அவர் ஒதுங்கிக்கொள்ள காங்கிரசார் அனுமதிக்கவேண்டும். பிரியாங்கா தலைமைப் பொறுப்பேற்கலாம். அவரும் உ.பியில் படுதோல்வியடைந்திருக்கிறார் என்றாலும், கலங்காது போராடக்கூடியவர் அவர். எப்படியும் ராகுல் பட்டது போதும். இப்போது பிரியாங்காவின் முறை.
அவரும் அடக்கம் அவசியம் என்பதை உணரவேண்டும். கடந்த தேர்தல்களில். அமேதியில் ராகுலுக்கெதிராக போட்டியிட்ட ஸ்மிருதி பற்றி என்ன கருதுகிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டபோது, “யார் அவர் ஸ்மிருதி,” என இறுமாப்புடன் கேட்டவர்தான் பிரியங்கா. இதெல்லாம் அரசியலில் சரி வராது. நேரு குடும்ப மாயையே மறைந்துவிட்டதே.
மதச் சார்பின்மைக்கு, நல்லிணக்கமே நாம் உய்ய வழி, அத்தகைய சிந்தனைகளின் ஊற்று காங்கிரஸ் தான் என்பதை உறுதிபடச் சொல்லவேண்டும். ஓரளவேனும் நம்பக்கூடிய மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் வேண்டும்
சோனியா தன் ஆலோசகர்களை முதலில் மாற்றவேண்டும். மரண வியாபாரி என மோடியை முதலில் கடுமையாக விமர்சித்தவர், பாஜகவிலிருந்து ஆவேச எதிர்ப்பு வந்ததும், அச் சொற்றொடரையே தவிர்த்தார். என்ன லாபம்? பக்தர்கள் அவர் பக்கம் வந்துவிட்டார்களா என்ன? கடுமையாக மோடியைத் தாக்கும் மணி சங்கர அய்யரை ஓரங்கட்டுவது, பரிவார பாணியில் அரசியல் நடத்தும் கமல்நாத்தை அரவணைப்பது இத்தகைய போக்குக்கள் முடிவுக்கு வரவேண்டும்.
மதச் சார்பின்மைக்கு, நல்லிணக்கமே நாம் உய்ய வழி, அத்தகைய சிந்தனைகளின் ஊற்று காங்கிரஸ் தான் என்பதை உறுதிபடச் சொல்லவேண்டும்.
தவிரவும் ஓரளவேனும் நம்பக்கூடிய மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் வேண்டும். சுயநலத்திற்காக மதச்சார்பின்மை பேசுவர் என்றிருந்தாலும், வரக்கூடியவர்களுடன் இணைவது அத்தியாவசியம். சிவசேனா போன்ற ஒரு கட்சியே காங்கிரசுடன் கூட்டணி அமைத்துவிட்டதால் அடக்கி வாசிக்கிறது. மதவெறியைத் தூண்டுவதில்லை. இது இன்னமும் பரவலாகவேண்டும். இக்கருத்துகளை வரவிருக்கும் சிந்தனை முகாமில் காங்கிரஸ் விவாதிக்கட்டும். இந்தியா மீண்டும் ஒன்றுபடட்டும்.
(முடிந்தது)
Read in : English