Read in : English
போர்டு இந்தியா சென்னையின் புறநகர்ப்பகுதியில் இருந்த தனது ஆலையை மூடிவிட்டு இந்தியச் சந்தையை விட்டு வெளியேறிய பின்பு தமிழ்நாடு மின்வாகன (எலெக்ட்ரிக் வீஹிக்கிள் – ஈவி) உற்பத்தியில் நிறைய முதலீடுகளை கொண்டுவர முயன்றுக் கொண்டிருக்கிறது. வெவ்வேறு ஈவி உற்பத்தியாளர்கள் தமிழ்நாட்டில் வரிசையாக முதலீடு செய்கிறார்கள் என்று கடந்தவருடம் அக்டோபரில், தொழில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார்.
பிஸினஸ் ஸ்டாண்டர்டு பத்திரிகையில் வந்த ஒரு செய்தி தமிழ்நாட்டில் செய்யப்படும் ஈவி முதலீடுகள் பற்றி பின்வருமாறு சொல்லியிருக்கிறது (மதிப்பு கோடிரூபாய்களில்): ஓலா எலெக்ட்ரிக் (2,354), டிவிஎஸ் எலெக்ட்ரிக் (1,000), அதெர் எனர்ஜி (635), சிரிவரு மோட்டார்ஸ் (1,000), ஆம்பியர் வீகிகிள்ஸ் (700), சிம்பிள் எனர்ஜி (350). இவையெல்லாம் மின்சார இருசக்கர வாகன உற்பத்தித்துறை தரவுகள்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, டெஸ்லா சிஈஓ எலான் மஸ்க்கிடம் டிவிட்டரில் அவர் எப்போது இந்தியாவில் தன் தொழிலைத் தொடங்குவார் என்று கேட்கப்பட்டபோது, “அது சம்பந்தமாக பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது,” என்று அவர் பதில் சொன்னார். அந்த நேரத்தில் தெலங்கானா தொழில் அமைச்சர் கே டி ராமா ராவ் அந்த வாய்பைக் கண்டறிந்து உடனடியாக எலான் மஸ்க்கைத் தொடர்புகொண்டு தன் மாநிலத்தில் அவரைத் தொழில் தொடங்குமாறு வற்புறுத்தினார். .
ஆனால் அதற்கு முன்னாடி கடந்த வருடம் அக்டோபர் மாதம் தமிழகத் தொழில் அமைச்சர், டெஸ்லா போன்ற உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டின் “கதவுகள் திறந்தே இருக்கின்றன” என்று சொன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. மஸ்கைக் கவர்வதற்கு ராமா ராவ் முயன்றபின்பு, டெஸ்லா தமிழ்நாட்டில் உற்பத்தி மையத்தைத் தொடங்குவதற்கான வசதிவாய்ப்புகள் பற்றி தென்னரசும் பேசி, அந்த முனைப்பில் கச்சைக்கட்டி இறங்கினார்.
சென்னை ஏன் டெஸ்லாவுக்கு சிறந்த தேர்வு?
குறிப்பாக, தமிழ்நாடு மாநிலம் மின்மோட்டார் வண்டி (ஈவி) உற்பத்தியில் இந்தியாவின் தலைநகரம் என்றும், பொதுவாக ஆகப்பெரிய மோட்டார்வாகன உற்பத்தி ஸ்தலம் என்றும் தென்னரசு சுட்டிக் காட்டினார். சென்னைக்கருகே திருவள்ளூரில் ரூபாய் 300 கோடி முதலீட்டில் ஈவி பார்க் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். பெரும்பாலான கார் உற்பத்தி நிறுவனங்கள் சென்னைத் துறைமுகத்திலிருந்து 100-லிருந்து 150 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளதால் ஏற்றுமதிக்கும் மிக தோதாக இருக்கிறது என்பது சென்னையின் பலம்.
பெரும்பாலான கார் உற்பத்தி நிறுவனங்கள் சென்னைத் துறைமுகத்திலிருந்து 100-லிருந்து 150 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளதால் ஏற்றுமதிக்கும் மிக தோதாக இருக்கிறது என்பது சென்னையின் பலம்.
ஓலா எலெக்ட்ரிக், டிவிஎஸ் எலெக்ட்ரிக், அதெர் எனர்ஜி, சிரிவரு மோட்டார்ஸ், ஆம்பியர் வீஹிக்கிள்ஸ், சிம்பிள் எனர்ஜி ஆகிய ஈவி உற்பத்தி நிறுவனங்கள் தவிர, பிஎம்டபிள்யூ, நிசான், ரேனால்ட், மிட்சுபிஷி, மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா, ராயல் என்ஃபீல்டு, அசோக் லேலாண்ட் ஆகிய மோட்டார்வாகன உற்பத்தி நிறுவனங்களின் ஆலைகள் எல்லாம் சென்னை மாநகரத்தைச் சுற்றியே அமைந்திருக்கின்றன.
இந்தியாவில் 20 வருடத்திற்கும் மேலாக ஈவிக்கள் இருக்கின்றன
டெஸ்லா இந்தியாவில் தொழில் தொடங்க இன்னும் கொஞ்சகாலம் ஆகலாம். ஆனால் அதேசமயம் மின்மோட்டார்வண்டி இந்தியாவுக்கு ஒன்றும் புத்தம் புதிதல்ல.
’ரேவா’ ஞாபகம் இருக்கிறதா? ஆண்டு 2000 தொடங்கிய ஆரம்பக்கட்டத்தில், சென்னைப் போக்குவரத்தில் நிறையபேர் கண்களைக் கவர்ந்த ஈவி ஞாபகம் இருக்கிறதா? குறைந்தபட்சமாகக் கால்வைக்கும் இடத்தையும், லக்கேஜ் வைக்கும் இடத்தையும் கொண்டு அழகாய், சின்னதாய் இருந்த ஈவி-தான் பின்னால் தொடங்கவிருந்த எல்லா ஈவி-களுக்கும் ஆரம்பப்புள்ளி. பெங்களூரை மையமாகக் கொண்ட ரேவா எலெக்ட்ரிக் கார் கம்பெனி (ஆர்ஈசிசி) 2001-லிருந்து இந்தியாவில் ‘ரேவாஐ’ கார்களை விற்றது. இங்கிலாந்தில் அதை ‘ஜி-விஜ் ஐ’ என்றபெயரில் 2003-லிருந்து விற்றது.
‘ரேவாஐ’ பழைய தலைமுறையைச் சார்ந்த ஈயம் அமிலம் பேட்டரிகள் கொண்டது. ஏற்றுமதி மூலம் 26 நாடுகளின் சந்தைகளில் அது நுழைந்தது. 2009-ல் அந்த நிறுவனம் முன்னேறி நவீனமான லித்தியம் அயன் பேட்டரிகளை ‘ரேவா எல் அயன்’ என்ற பெயரில் தன்கார்களில் பொருத்திக் கொண்டது.
என்றாலும் ஆர்ஈசிசி சீக்கிரமே வீழ்ந்தது. மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா அதை கையகப்படுத்திக் கொண்டு ‘மஹிந்த்ரா எலெக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட்’ என்ற பிராண்டாக அதை மாற்றியது. நான்கு கதவுகள் கொண்ட மஹிந்த்ரா ஈ2ஓ என்பது ‘ரேவா எல்-அயன்’ என்பதின் மேம்படுத்தப்பட்ட வடிவம்தான். அதில் இஞ்சின் முறுக்குவிசை நன்றாக இருந்ததால் அந்த வாகனம் உயரமான சாலைகளிலும்கூட ஏறிப் பயணம் செய்தது. துரதிர்ஷ்டவசமாக, அந்தக் காரின் விற்பனை 2013-ல் தொடங்கி 2017 வரைதான் தாக்குப்பிடித்தது.
ஈ2ஓ பிளஸ் 2016-ல் வெளிவந்து 2019 வரை தயாரிக்கப்பட்டது. அந்த கார் ஈ2ஓ-வின் மேம்படுத்தப்பட்ட வடிவம். மஹிந்த்ரா நிறுவனம் பின்பு ஈ-வெரிட்டோ என்னும் மின்வாகனத்தை அறிமுகப்படுத்தியது. ஒருதடவை மின்னேற்றம் செய்தால் அந்தக் கார் 140 கிலோமீட்டர் தூரம் பயணித்தது. முழுமின்னேற்றம் ஒன்றைமணி நேரத்தில் நிகழக்கூடியது.
இந்த இரண்டு மின்சாரக்கார்களின் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக மஹிந்த்ரா அறிவித்திருந்தாலும், அதன் இணையதளத்தில் அந்த வண்டிகள் இன்னும் பட்டியலில் இருக்கின்றன. அவை இன்னும் விற்பனையில் இருக்கின்றனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஈவி-யின் சமீபத்து பெருக்கம்
சமீபகாலமாக, மற்றொரு உள்நாட்டு நிறுவனம் ஈவியில் பெரும் ஆர்வத்தைக் காட்டியிருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டைகர் ஈவி, நெக்ஸான் ஈவி வகையறாக்களை கொண்டுவந்திருக்கிறது. அதன் முக்கிய போட்டியாளர் ஹூண்டாய் கோனா மட்டுமே.
இந்த இரண்டு பிரதானமான டாடா ஈவி மாடல்களின் பேட்டரியும், மோட்டாரும் நீரில் நனையாது என்பதற்கு அவை ‘வாட்டர்புரூஃப் ஐபி67’ என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன, பெரும்பாலான கைபேசிகளைப் போலவே. அதனால் மழைக்காலங்களில்கூட அந்த வண்டிகள் பிரமாதமாக இயங்கக்கூடியவை.
இந்த ஈவி-க்களின் பேட்டரிகள் நீரால் குளிர்விக்கப்பட்டவை. அதனால் அவற்றிற்கு உயர்திறனும், நீடித்த ஆயுளும் உண்டு. இந்த ஈவி-க்களின் வீச்சு என்பது மணிக்கு 306 கிமீ. ஒருமணி நேரத்திற்குள்ளே 10-லிருந்து 80 சதவீதம் வரை மின்னேற்றம் பெறும் அளவுக்கு வேகமான ‘சார்ஜ்’ அம்சம் கொண்டவை.
நிறைய சார்ஜ் மையங்கள்
நாடுமுழுவதும் சார்ஜ் மையங்களின் கட்டமைப்பு பலமாக உள்ளபடியால், டாடா ஈவியில் நாடுமுழுக்கப் பயணம் செய்வது சாத்தியமே.
அதிகாரப்பூர்வமாக வடசென்னையிலும், தென்சென்னையிலும் சுமார் எட்டு டாடா மின்னேற்ற (சார்ஜிங்) மையங்கள் இருக்கின்றன. வடசென்னையில் இருக்கும் ஒரு டாடா இவி சொந்தக்காரர் தென்சென்னைக்குச் சென்று சார்ஜ் செய்வதற்கு எங்கேயும் நிற்காமலே திரும்பி வரமுடியும்.
ஆனால் பெங்களூரு செல்வதென்றால் அந்த வண்டி ரீசார்ஜ் செய்வதற்கு குறைந்தபட்சம் ஒருதடவையாவது இடையில் நிற்க வேண்டிவரும். சென்னையில் முழுவதுமாய் சார்ஜ் செய்த வண்டி வேலூரில் அல்லது கிருஷ்ணகிரியில் நின்று ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.
இனிவரும் நாட்களில், மின்மோட்டார் வண்டிக்கு நல்ல எதிர்காலம் இருப்பதால், மின்னேற்ற நிலையங்களின் கட்டமைப்பு இன்னும் பலமாக்கப்படும். அதேவேளை, டாடா புதிய ஈவிக்களை கொண்டுவரும் திட்டத்தைச் சூசகமாய்த் தெரிவித்திருக்கிறது. அதன் கிளாசிக் மாடலான ‘சியரா’ வண்டி மின்சாரப் புத்துயிர்ப்புப் பெற்று அந்த ஈவிக்களில் ஒன்றாகத் திகழக்கூடும்.
டெஸ்லாவை முந்த நினைக்கும் இந்தியாவின் முதல் கார் தயாரிப்பாளர்
ஈவிக்களின் எதிர்காலத்தைப் பற்றிய குறிப்பிடத்தக்க ஓர் அம்சம் என்னவென்றால், நீண்டநாள் காணாமல் போன கேரளா கார் உற்பத்தி நிறுவனம் மீண்டும் எழுந்துவர இருக்கிறது என்பதே. அரவிந்த் ஆட்டோமொபைல்ஸ் 1956-ல் திருவனந்தபுரத்தில் நிறுவப்பட்டது. இந்தியாவின் முதல்காரை வடிவமைத்து, உருவாக்கிக் கட்டமைத்துக் கொடுத்ததாக உரிமைகோரும் அந்த நிறுவனம் முழுமையாக மின்மயமாக்கப்பட்ட, எதிர்காலத்திற்குத் தயாரான ஐந்து வண்டிகளை உற்பத்திசெய்ய திட்டமிட்டிருக்கிறது.
‘மார்க் கே’ என்ற அவர்களின் மாடல் ஏற்கனவே தயாராகிக் கொண்டிருக்கிறது. @அரவிந்த்ஆட்டோமொபைல்ஸ் என்னும் அவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்கு #முதல்இந்தியக்கார் என்னும் பரப்புரையில் அவர்களின் கார்கள் பற்றிய முன்னோட்டங்களை வெளியிட்டிருக்கிறது. அந்தக் கார்கள் டெஸ்லா மாடல்கள் போலவே தோன்றுகின்றன.
கார் ஒரு தடவை சார்ஜ் செய்யப்பட்டால் 1,000 கிமீ தூரம் ஓடக்கூடிய அளவுக்கு ஆகப்பெரிய கனவைக் கொண்டிருக்கும் அரவிந்த் ஆட்டோமொபைல்ஸ் 2028-ல் அந்தக் கார்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லாவைப் போலவே அந்த நிறுவனமும் ஆற்றல், செளகரியம், ஆடம்பரம், வீச்சு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தருகிறது.
மஹிந்த்ராவும் டெஸ்லாவுக்கு எதிராகக் களமிறங்குகிறது
பெரிய கார் உற்பத்தியாளர்களும் மின்மோட்டார்வண்டி தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். ஆஸ்டன் மார்ட்டின், ஆடி, பிஎம்டபிள்யூ, ஹோண்டா, ஹூண்டாய், மெர்சிடெஸ்-பென்ஸ், நிசான், ரேஞ்ச் ரோவர், போர்ஸே மற்றும் ஃபெராரி ஆகிய நிறுவனங்கள் ஈவிக்களை மேம்படுத்திக் கொண்டுவர கோடிக்கணக்கான டாலரைச் செலவழித்துக் கொண்டிருக்கின்றன. ஸ்போர்ட்ஸ்கார் தயாரிப்பாளர்களும் டெஸ்லா ரோஸ்டர் வண்டிக்கு பலமான போட்டியைத் தரும் நிலையில் இருப்பது போலத் தோன்றுகிறது.
ஆனால் டெஸ்லாவுக்குப் போட்டி வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து மட்டும் வருவதல்ல. இந்தியாவின் பழம்பெரும் நிறுவனமான மஹிந்த்ரா குழுமம், புகழ்வாய்ந்த ஆட்டோமொபிலி பினின்ஃபரினா என்னும் இத்தாலி கார் நிறுவனத்தைக் கையகப்படுத்திக்கொண்டு முற்றிலும் மின்மயமான ஹைப்பர் காரை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
பினின்ஃபரினா பட்டிஸ்டா என்னும் ஹைபர்கார் இரண்டே வினாடியில் மணிக்கு 0-100 கிமீ வேகத்திலும், வெறும் 12 வினாடிகளில் மணிக்கு 0-300 கிலோமீட்டர் வேகத்திலும் பறக்கக்கூடியது. மணிக்கு 349 கிமீ வேகத்தை உச்சமாகக் கொண்டிருப்பதாக அந்தக் கார் பெருமைப்பட்டுக்கொள்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் அது 500 கிமீ தூரம் ஓடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வெறும் 25 நிமிடங்களில் அந்த ஹைபர்காரை 20-80 சதவீதம் மேம்படுத்தப்பட்ட மின்னேற்றம் செய்துகொள்ள முடியும். அசுரத்தனமான வேகம் இது. இல்லையா?
டெஸ்லாவும் அதன் போட்டியாளர்களும் கொண்டுவரும் மின்மயமான கார்கள் வழமையான உள்ளெரியும் ஆற்றல் கொண்ட எஞ்சின்களை உடைய கார்களை விட ஆகப்பிரமாதமான மோட்டார்வண்டி வடிவங்கள். அதனால் இனி மின்மயமான கார்களுக்கே எதிர்காலம் என்று தோன்றுகிறது.
டெஸ்லாவும் அதன் போட்டியாளர்களும் கொண்டுவரும் மின்மயமான கார்கள் வழமையான உள்ளெரியும் ஆற்றல் கொண்ட எஞ்சின்களை உடைய கார்களை விட ஆகப்பிரமாதமான மோட்டார்வண்டி வடிவங்கள். அதனால் இனி மின்மயமான கார்களுக்கே எதிர்காலம் என்று தோன்றுகிறது.
தானியங்கும் தன்மை, துல்லியம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை சார்ந்த தொழில்நுட்பங்கள் அமைதியான இந்த இயந்திரங்களை (ஈவிக்களை) மேலும் சுயசார்பு கொண்டவைகளாக மாற்றிவிடும். ஒரு டெஸ்லா கார் தன்னைத்தானே ஓட்டிக்கொண்டிருக்கும்போது, அதன் ஓட்டுநர் தூங்குவதைக் காட்டும் காணொலியை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்றால், அந்த மாதிரியான காட்சி இந்தியாவிலே சாத்தியமில்லை; பின் எப்படி சென்னையில் சாத்தியமாகும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
எது எப்படியோ, சென்னையின் புறநகர்ப்பகுதியில் டெஸ்லா உற்பத்தி ஆலை ஒன்று நிறுவப்படும் என்று நாம் நம்பலாமா?
Read in : English