Read in : English
நல்ல ருசியான உணவு சாப்பிடுவதில் அனைவருக்கும் விருப்பம். நாம் அனைவரும் உணவை சமைத்துச் சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. உணவை அதிகமாக வேக வைத்தால் அதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்காது என்பதும், எண்ணெய்யில் பொரித்து எடுக்கும் உணவுகள் உடலுக்கு கொலஸ்ட்ராலை உண்டாக்கி தீங்கு விளைவிக்கும் என்பதும் நம் அனைவருக்கும் தெரிந்தது தான்.
இப்படி, அன்றாட வாழ்க்கையில் சமைத்து உண்ணும் நிலைக்கு பழக்கப்பட்ட நமக்கு, அடுப்பில் சமைக்காமல், எண்ணெய் சேர்க்காமல் நாட்டு காய்கறிகள், பூக்கள், முளைக்கட்டிய தானியங்கள், பாரம்பரிய நெல் ரகங்களைப் பயன்படுத்தி 3 வேளையும் உணவு தருகின்றது சென்னை பள்ளிக்கரணையில் இருக்கும் நோ ஆயில், நோ பாயில் உணவகம்.
என்னது? சமைக்காமல் அரிசி சாப்பாடு, இட்லி, வடை, பொங்கல் போன்ற உணவுகளை செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
அடுப்பில் சமைக்காமல், எண்ணெய் சேர்க்காமல் நாட்டு காய்கறிகள், பூக்கள், முளைக்கட்டிய தானியங்கள், பாரம்பரிய நெல் ரகங்களைப் பயன்படுத்தி உணவு தருகின்றது சென்னை பள்ளிக்கரணையில் இருக்கும் நோ ஆயில், நோ பாயில் உணவகம்
மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி கார புட்டு, தூயமல்லி வெண் பொங்கல், கருப்பு கவுனி கொழுக்கட்டை, சம்பா பணியாரம், சுரைக்காய் நூடுல்ஸ், சிறுமணி இட்லி, வாழைப்பூ வடை, வேர்க்கடலை மற்றும் எள்ளு லட்டு, முளைகட்டிய பயிறு என்று காலை உணவுக்கான பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
மதிய உணவாக செம்பருத்தி, நெல்லிக்காய் அல்லது ரோஜா இதழில் தயாரித்த ஆற்றல் பானம், பாசிப்பயிறு, நரிப்பயிறு மற்றும் உளுந்து என முளைகட்டிய தானியங்கள், வாழைக்காய், பீர்க்கங்காய் அல்லது புடலங்காய் பொரியல், பச்சை காய்கறிகளின் பச்சடி, துவையல், வெண்டை அல்லது பீட்ரூட் பிரட்டல், காய்கறிகளின் சாம்பார், குழம்பு, வெற்றிலை உள்ளிட்ட மூலிகை ரசம், சுரைக்காய், பீர்க்கங்காய் மற்றும் தேங்காய் பால் கலந்த இயற்கை மோர், முருங்கைப்பூ அல்லது வாழைப்பூ வடை, கலவை சாதம், ஊறுகாய், பாதாம் பிசின், முக்கனி கலந்த பாயாசம், வெற்றிலை மற்றும் காய்கறி கலந்த பீடா, கொப்பரை தேங்காய், எள்ளு, வேர்க்கடலை கலந்த ஆற்றல் உருண்டை, குதிரை வாலி அல்லது கேழ்வரகு கூழ்…என ஒரு விருந்தே படைக்கிறது நோ ஆயில், நோ பாயில் உணவகம்.
மேலும் படிக்க: நோய் எதிர்ப்பாற்றல் எப்படிப் பெருகும்?
இவை எல்லாமே சமைக்காமலே தயாரிக்கப்படுகின்றன என்பது தான் ஆச்சரியம். அரிசியை எப்படி சமைக்காமல் சாப்பிட முடியும் என்ற கேள்விக்கு அதன் ரகசியத்தைக் கூறினார் நோ ஆயில், நோ பாயில் உணவகத்தின் உரிமையாளர் கண்ணம்மா நீலகண்டன். “ பாரம்பரிய நெல் வகைகளில் அவல் எடுத்து அதில் இருந்து சாதம், இட்லி, பொங்கல், புட்டு என விதவிதமான உணவுகளைச் செய்யலாம்” என்றார்.
எப்படி சமைக்காத உணவைச் சாப்பிட ஆரம்பித்தீர்கள், உணவகம் தொடங்குவதற்கான காரணம் என்ன என்ற கேள்விகளுக்குப் பதிலளித்த கண்ணம்மா நீலகண்டன், ”2012ஆம் ஆண்டு தனக்கு தைராய்டு, குழந்தையின்மை உள்ளிட்ட உடல் பிரச்சினை இருந்ததாகவும், அதற்குத் தீர்வாக பாரம்பரிய உணவு வகைகளை சமைக்காமல் எடுத்து கொண்டதாகத் தெரிவித்தார்.
அதன் பலனாகத் தனக்கு பெண் குழந்தை பிறந்து ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவித்தார். தனது உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டதால், சமைக்காத உணவுகளை மக்களுக்கு அறிமுகப்படுத்த நோ ஆயில், நோ பாயில் உணவகத்தைத் தொடங்கியதாகவும் கண்ணம்மா நீலகண்டன் விவரித்தார்.
மனதுக்கும், உடலுக்கும் ஏற்ற ஆரோக்கியம் வேண்டும் என நினைப்பவர்கள் சமைக்காமல் இயற்கை உணவுகளை எடுத்து கொள்ளலாம் என்ற கண்ணம்மா, சமைக்காத காய்கறிகளில் உயிர் ஊட்டச்சத்து இருப்பதால் உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியமானது என்றார். உதாரணமாக, பூக்களில் செம்பருத்தி, பன்னீர் ரோஜா, தாமரை, சங்குப்பூ உள்ளிட்டவை உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடியது என்றார். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு செம்பருத்தி பூ மிகவும் பயனுள்ளதுடன், இதயத்துக்கும் நல்லது என்றார்.
மனதுக்கும், உடலுக்கும் ஏற்ற ஆரோக்கியம் வேண்டும் என நினைப்பவர்கள் சமைக்காமல் இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற கண்ணம்மா, சமைக்காத காய்கறிகளில் உயிர் ஊட்டச்சத்து இருப்பதால் உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியமானது என்றார்
பச்சைக் காய்கறிகளை சமைப்பதால் அதில் உள்ள சத்துகள் முற்றிலும் வீணாகி விடுவதாகக் கூறும் கண்ணம்மா நீலகண்டன், காய்கறிகளைச் சமைக்காமல், ஆயில் இல்லாமல் இயற்கையாக உண்டால் உடலுக்குத் தேவையான சத்துகள் முழுமையாகக் கிடைக்கும் என்றார். இதனால் சமைக்காத, பாரம்பரியமிக்க உணவுகளை பிட்னஸ் பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் Swiggy, Zomoto வில் ஆர்டர் செய்து வாங்கிச் சாப்பிடுவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரித்தார் கண்ணம்மா நீலகண்டனர்.
“முழுவதுமாக இயற்கையில் கிடைக்கும் உணவு சுவையாகவும் ஆரோக்கியமாக உள்ளது. பொதுவாக வெளியே ஹோட்டல்களில் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் வரும். சமைக்காத பாரம்பரிய உணவைச் சாப்பிட்ட போது நெஞ்சு எரிச்சலை உணரவில்லை” என்றார் அந்த உணவகத்தில் சாப்பிட்ட வயதான வாடிக்கையாளர் ஒருவர்.
ரூ.350க்கு திருப்தியாகச் சாப்பிட்டதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். அந்த உணவகத்தில் எண்ணெய் சேர்க்காத உணவு என்பதால் வயிற்று எரிச்சல் இல்லை என்ற பெண் வாடிக்கையாளர் ஒருவர், புளி இல்லாத வெற்றிலை ரசம் சூப்பர் என்றார்.
Read in : English