Read in : English
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வரும் ஜூன் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், காவல்துறையில் இந்த உயர்பதவிக்கான போட்டி இப்போதே தொடங்கிவிட்டது. டிஜிபி பதவிக்கான யுபிஎஸ்சி பட்டியலில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளதாக ஊடகங்கள் சொல்கின்றன.
யுபிஎஸ்சி தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேரில் ஒருவரைத் தமிழக அரசு தேர்வு செய்யும். 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக, மாநிலத்தில் முக்கிய உயர் பதவிக்கு நடைபெற உள்ள நியமனம் இது.
இந்தப் பின்னணியில் பத்திரிக்கைத் துறையில் நீண்ட காலம் குற்றவியல் செய்திப் பிரிவில் செய்தியாளராகப் பணியாற்றி வருபவரும், காவல்துறை வட்டாரங்களுக்குத் தெரிந்தவருமான ஏ. செல்வராஜ் இன்மதிக்கு அளித்த நேர்காணலில், டிஜிபி நியமனம் தொடர்பான அரசியல் நடைமுறைகள் குறித்துப் பேசினார்.
பொதுவாக டிஜிபி பதவிக்குத் தனக்கு வேண்டிய, தகுதியான ஐபிஎஸ் அதிகாரியையே மாநில அரசு தேர்வு செய்யும். எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஒரு ’அரசியல்’ பதவி. இந்தப் பதவிக்குப் போட்டியிட, ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஊழல் மற்றும் சர்ச்சைகள் இல்லாமல், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுத்தமாகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்றார் செல்வராஜ்.
பொதுவாக டிஜிபி பதவிக்குத் தனக்கு வேண்டிய, தகுதியான ஐபிஎஸ் அதிகாரியையே மாநில அரசு தேர்வு செய்யும். எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஒரு ’அரசியல்’ பதவி. இந்தப் பதவிக்குப் போட்டியிட, ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஊழல் மற்றும் சர்ச்சைகள் இல்லாமல், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுத்தமாகப் பணியாற்றியிருக்க வேண்டும்
தற்போதைய நிலவரப்படி அந்தப் பட்டியலில் இருப்பவர்கள் பின்வருமாறு: டெல்லி போலீஸ் கமிஷனர் (1988 பேட்ச்) சஞ்சய் அரோரோ, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் (1990 பேட்ச்), பிரிஜ் கிஷோர் ரவி (1989 பேட்ச்), தமிழ்நாடு போலீஸ் ஹவுசிங் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் ஏ.கே.விஸ்வநாதன் (1990 பேட்ச்), அவரது மனைவியும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவருமான சீமா அகர்வால் (1990), தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் அபாஷ் குமார் (1990 பேட்ச்), ஐ.பி .சிறப்பு இயக்குநர் ரவிச்சந்திரன் (1990), அவரது மனைவியும் தீயணைப்புத் துறையின் இணை இயக்குநருமான பிரியா மற்றும் சிறைத்துறை டிஜிபியான அமரேஷ் பூஜாரி (1991 பேட்ச்) மற்றும் சிலர்.
ஓய்வு பெற இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதால் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் சஞ்சய் அரோராவுக்குத் தமிழக டிஜிபியாக வரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது 1988 பேட்சில் இருந்த அவரது சகாக்கள் அனைவரும் ஓய்வு பெற்றதால், இவர் மட்டுமே மீதமிருக்கிறார்.
மேலும் படிக்க: போலீஸ் துறை சிலநேரம் பொய்சாட்சி தயாரிப்பது எதனால்?
அவர் மிக இளம் வயதிலேயே பணியில் சேர்ந்தவர். ஆனாலும் சங்கர் ஜிவால் சென்னை போலீஸ் கமிஷனராக இருப்பதாலும், தமிழக அரசுடன் நல்லுறவில் இருப்பதாலும் இந்தப் போட்டியில் அவருக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்கிறார் செல்வராஜ்.
ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் பணிக்காலம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது குறித்து பேசிய செல்வராஜ் பணிக்காலத்தில் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் மூலம் தேர்வான ஆரம்ப ஆண்டுகளும், பயிற்சி ஆண்டும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. ஏறக்குறைய முதல் மூன்று ஆண்டுகள் இப்படியே கழிகின்றன என்றார்.
ஒரு நாட்டின் காவல்துறைத் தலைவராக இருப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனெனில் ஒரே நேரத்தில் பல விஷயங்களைக் கையாள வேண்டியதும், இம்மானுவேல் விழா, தேவர் ஜெயந்தி போன்ற பதற்றமான நிகழ்வுகளின் போது அளவுக்கு அதிகமான பணிச்சுமை இருந்தாலும் அதைத் திறம்படக் கையாள வேண்டியதும் டிஜிபியின் கடமைகள்.
டிஜிபி ஆவதற்குத் தகுதி பெற்ற மூத்த ஐபிஎஸ் அதிகாரியை ஒதுக்கி வைத்து, தரவரிசையில் அவருக்கு அடுத்தபடியாக இருப்பவரை அந்தப் பதவிக்கு உயர்த்துவதும் சில நேரங்களில் நடக்கிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு டிஜிபி-யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஆர்.நடராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது, மாநிலத்தின் டிஜிபி-யை நியமிப்பது மாநில அரசின் உரிமை எனக் கூறப்பட்டது. இதிலிருந்து டிஜிபி நியமனத்தில் மிகப்பெரிய அரசியல் அம்சம் இருப்பது தெளிவாகிறது என்றார் செல்வராஜ்.
மாநில அரசு அனுப்பிய டிஜிபி வேட்பாளர்களின் நீண்ட பட்டியலை ஆராய்ந்த பின்னர், டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி குழுவால் எப்படி ஐந்து பேரைக் கொண்ட குறும்பட்டியலை அனுப்ப முடியும்? அந்த ஐந்து பேரைப் பற்றி அந்தக் குழுவுக்கு என்ன தெரியும்?
அதற்குச் சில நடைமுறைகள் உள்ளன என்றார் செல்வராஜ். முதலில் ஏசிஆர் என்ற அழைக்கப்படும் தரவரிசையுடன் கூடிய வருடாந்திர ரகசிய அறிக்கை ஒன்று உள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகளின் பேட்ச் எண்கள், அவர்கள் செய்த சேவையைப் பற்றிய பதிவு, அவர்கள் ஊழல் அல்லது பிற வழக்குகளில் இருந்தால், அவற்றிலிருந்து அவர்கள் பெற்ற விடுதலை, அவர்களின் சீனியாரிட்டி போன்ற தரவுகள் அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டிருக்கும். பொதுவாக தரவரிசை (ரேங்க்) 8.5 க்கு மேல் இருக்கும். ஏனெனில் அந்த தரவரிசை கொண்ட காவல் அதிகாரிகள் தான் நியமனப் பட்டியலில் இடம் பெற முடியும்.
ஆனால் 1970கள் மற்றும் 1980களில், இந்த தரவரிசை 8.2-ஐ தாண்டாது. சிபிஐ, ஐபி போன்ற உயர் புலனாய்வு அமைப்புகளில் இடம்பெறுவதற்குத் தரவரிசை 8.5-க்கு மேல் இருக்க வேண்டியது அவசியம். இதனால்தான் அந்தக் காலங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பல ஐபிஎஸ் அதிகாரிகளால் மத்திய புலனாய்வு அமைப்புகளில் இடம் பெற முடியவில்லை.
ஓய்வு பெற இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதால் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் சஞ்சய் அரோராவுக்குத் தமிழக டிஜிபியாக வரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனாலும் சங்கர் ஜிவால் சென்னை போலீஸ் கமிஷனராக இருப்பதாலும், தமிழக அரசுடன் நல்லுறவில் இருப்பதாலும் இந்தப் போட்டியில் அவருக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன
ஒரு மாநிலத்தின் டிஜிபியாக இருப்பது கடினமான பணியாகும். ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பணி இடமாற்றங்கள் மற்றும் அரசியல் தலையீடுகளுக்கு ஆளாகிறார்கள். ஏதோ ஒரு பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஆளும் கட்சி எம்எல்ஏ-வுக்கு தொடர்பு இருப்பதாக வைத்துக் கொண்டால், எஸ்பிக்கள், டிஐஜிக்கள், ஐஜிக்கள் போன்ற உயர் போலீஸ் அதிகாரிகளால் ஆளுங்கட்சியைப் பகைத்துக் கொள்ள நேரிடுமோ என்ற அச்சத்தில் விரைந்து செயல்பட முடியாது.
பொதுவாக இது போன்ற சந்தர்ப்பங்களில், கடைசி அஸ்திரமாக மட்டுமே, விவகாரத்தை முதல்வரிடம் டிஜிபி கொண்டு செல்லலாம். ஆனால் இத்தகைய நகர்வுகளின் விளைவு கணிக்க முடியாதது. இதனால் உயர் காவல்துறை அதிகாரிகள் தங்கள் பணிகளில் அதிக கவனம் செலுத்த முடியாமல் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுகின்றனர் என்று செல்வராஜ் கூறினார்.
மேலும் படிக்க: அருணா ஜெகதீசன் ஆணையம்: சொல்லப்படாத கதை
இதுபோன்ற அரசியல் பிரச்சினைகளை போலீஸ் அதிகாரிகள் போலீசார் எதிர்நோக்கியுள்ள நிலையில், உத்தர பிரதேச டிஜிபியாகப் பணியாற்றிய பிரகாஷ் சிங் ஓய்வு பெற்ற பின் 1996இல் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். கடந்த 2006ஆம் ஆண்டு காவல்துறை சீர்திருத்தம் தொடர்பான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. பதவிக்காலத்தை நிர்ணயிப்பது (டிஜிபி, ஐஜி பதவிகளுக்கு இரண்டு ஆண்டுகள்) மற்றும் அரசியல்வாதிகளால் இடைப்பட்ட காலத்தில் இடமாற்றம் செய்யப்படக் கூடாது என்பவை இந்த உத்தரவுகளில் மிக முக்கியமானவை,
மத்திய அரசுடன் மாநில டிஜிபிக்கு என்ன தொடர்பு இருக்கும் என்று கேட்டதற்கு, டிஜிபி மாநில அரசுக்கு விசுவாசமாகவும் நெருக்கமாகவும் இருக்க வேண்டும் என்றார் செல்வராஜ். ஆனால், மாநில ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு வரவழைத்தும் அதை மாநில அரசுகள் ஏற்க மறுத்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
உதாரணமாக, கொல்கத்தாவில் உள்ள ஒரு பாலத்தில் பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் தடுக்கப்பட்ட பின்னர் இந்தச் சம்பவத்தில் ஏதேனும் நாசவேலை முயற்சி நடந்ததாக சந்தேகித்து, மத்திய அரசு மேற்கு வங்க டிஜிபியை அழைக்க முயன்றது. ஆனால் மாநில அரசு டிஜிபியை அனுப்ப மறுத்துவிட்டது.
பாலியல் பலாத்கார வழக்குகளில் போலீசார் சிக்குவது குறித்து கேட்டபோது, தமிழகத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சமீபத்தில் தண்டிக்கப்பட்டதன் மூலம் குற்றம் செய்தால் காவல் துறை அதிகாரிகளும் தண்டிக்கப்படுவார்கள் என்ற செய்தியைத் தமிழகம் ஓங்கி சொல்லியிருக்கிறது. இதுபோன்ற குற்ற வழக்குகளை கையாள்வதில் மற்ற மாநிலங்களுக்குத் தமிழகம் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது என்றார் செல்வராஜ்.
Read in : English