Read in : English

 

புலன் விசாரணையில் குற்றவாளிக்குச் சாதகமாக விசாரணையை நகர்த்துகிறார் என்ற குற்றச்சாட்டும், எந்த குற்றமும் செய்யாத தன் மீது பொய்யான குற்றத்தைச் சுமத்த சாட்சிகளை உருவாக்குகிறார் என்ற குற்றச்சாட்டும் விசாரணை அதிகாரி மீது வாதியும், குற்றம் சாட்டப்பட்டவரும் கூறுவது உண்டு. இவ்விரு குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என பல நேரங்களில் புறந்தள்ளிவிட முடியாது.

     குற்றப் புலனாய்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிகள் மற்றும் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய சாட்சியங்கள் குறித்து குற்ற விசாரணை நடைமுறைச் சட்டமும், இந்திய சாட்சியங்கள் சட்டமும் வரையறை செய்துள்ளன. இச்சட்டங்களின் வரையறைக்கு உட்படாத புலன் விசாரணையையும், சாட்சியங்களையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது.

     குற்றம் புரிந்தவர் அடையாளம் கண்டறிந்த பின்னர், அவர் செய்த குற்றச் செயலைச் சட்டங்களின் வரையறைக்குள் கொண்டு வந்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக புலனாய்வின் பொழுது செய்யப்படும் ஜோடனைகள் பல சமயங்களில் உண்மைக்குப் புறம்பானவையாக இருப்பதும் உண்டு.

     குற்றம் நிகழ்ந்த இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை உள்ளதை உள்ளபடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது, அதுவே உண்மை குற்றவாளியை அவர் மீதான குற்றத்திலிருந்து விடுதலை செய்யக் காரணமாகவும் அமைந்துவிடுவது உண்டு.

     நள்ளிரவு நேரத்தில் காவல் அதிகாரி ஒருவர் கடைவீதியில் ரோந்து செல்லும்போது, பழங்குற்றவாளி ஒருவரைப் பார்க்கிறார். இரவு நேரத்தில் கடைவீதியில் அந்த பழங்குற்றவாளிக்கு என்ன வேலை? ஏதேனும் குற்றம் செய்யும் நோக்கத்தில் வந்திருப்பாரோ? என்ற சந்தேகம் அவருக்கு வருகிறது. பழங்குற்றவாளியைக் காவல்நிலையம் அழைத்துச் சென்று, ‘சந்தேக வழக்கு’ ஒன்றைப் பதிவு செய்ய காவல் அதிகாரி திட்டமிடுகிறார்.

     ‘நள்ளிரவில் கடைவீதியில் நான் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, தலையில் துண்டைப் போட்டு மறைத்துக் கொண்டு, நகைக்கடை வாசலில் இருந்த பூட்டைக் கம்பி கொண்டு திறக்க முயற்சி செய்த நபர், என்னைப் பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினார். அந்த நபரை விரட்டிப் பிடித்துப் பார்க்க, அவர் பழங்குற்றவாளி எனத் தெரியவந்தது. அவரிடமிருந்த கம்பி பறிமுதல் செய்யப்பட்டது’ என்று சட்ட நுணுக்கங்களை உள்ளடக்கிய வகையில்தான் சந்தேக வழக்கு பதிவு செய்யப்படுவது வழக்கமான நடைமுறை.

குற்றம் நிகழ்ந்த இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை உள்ளதை உள்ளபடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது, அதுவே உண்மை குற்றவாளியை அவர் மீதான குற்றத்திலிருந்து விடுதலை செய்யக் காரணமாகவும் அமைந்துவிடுவது உண்டு.

     காவல் அதிகாரி இரவு ரோந்து பணியின் போது பழங்குற்றவாளி ஒருவரைப் பார்த்தது மட்டும்தான் உண்மை. தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு, நகைக்கடையின் பூட்டை உடைக்க முயற்சி செய்ததாகக் குறிப்பிட்டிருப்பதும், ஓடிய நபரைக் காவல் அதிகாரி விரட்டிப் பிடித்து, அவரிடமிருந்து கம்பியைப் பறிமுதல் செய்ததாகக் குறிப்பிட்டிருப்பதும் உண்மையல்ல. அந்த பழங்குற்றவாளி சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவர் மீது சந்தேக வழக்கு போடப்பட்டது என்பதை நீதிமன்றம் நம்புவதற்காகவும், சட்டத்தைத் திருப்திபடுத்துவதற்காகவும் உண்மையில்லாத சங்கதிகள் பல நேரங்களில் வழக்கில் சேர்க்கப்படுவதும் உண்டு.

     குற்றச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பார்த்ததையும், சாட்சிகள் சொன்னதையும் உள்ளதை உள்ளபடி பதிவு செய்து, நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால், குற்றம் புரிந்த உண்மை குற்றவாளிகள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்களா?

     கொலை வழக்கு ஒன்றில் கைதான ஆறு குற்றவாளிகள் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக, உறவினர்கள் சிலருடன் பேருந்து ஒன்றில் பயணம் மேற்கொண்டனர். பேருந்து முதுகுளத்தூரை நெருங்குவதற்கு சில மைல்கல் தொலைவு இருக்கும்போது, ஒரு கும்பல் பேருந்தை வழிமறித்து, அதில் பயணம் செய்த ஆறு கொலை குற்றவாளிகளையும், அவர்களுக்குத் துணையாக வந்தவர்களில் இருவரையும் பழிக்குப் பழி வாங்கும் விதத்தில் ஓட ஓட வெட்டிக் கொலை செய்தது.

     பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பேருந்தில் பயணித்த சக பயணிகள் அனைவரும் அந்த கொடூர கொலைச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள். அதுமட்டுமின்றி, அந்த பேருந்தின் உட்பகுதி முழுவதும் ரத்தக் கரைகள் படிந்திருந்தன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அந்த கொலை வழக்கு மீதான நீதிமன்ற விசாரணையின் தீர்ப்பு பொதுமக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

   கொலை சம்பவம் நிகழ்ந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றைக் காரணம் காட்டி, அவ்வழக்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. அந்த புகைப்படத்தில் வழிமறிக்கப்பட்ட பேருந்தில் ‘தடம் எண் : 3  முதுகுளத்தூர் – பரமகுடி’ என்ற பெயர் பலகை காணப்பட்டது. ஆனால், புலன் விசாரணை அறிக்கையில் வழிமறிக்கப்பட்ட பேருந்து ‘தடம் எண் : 2  வீரசோழம் – முதுகுளத்தூர்’ எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த முரண்பாடு எப்படி நிகழ்ந்தது?

     அந்த பேருந்து முதுகுளத்தூரைச் சென்றடைந்த பின்னர், தடம் எண் : 3 ஆக பரமகுடி செல்ல வேண்டும். முதுகுளத்தூருக்கு அருகில் பேருந்து சென்று கொண்டிருந்தபொழுதே அதன் பெயர் பலகையை நடத்துநர் மாற்றிவிட்டார். அதன் பிறகுதான் பேருந்து வழி மறிக்கப்பட்டு, கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

     எட்டு கொலைகளைச் செய்தவர்கள் யார் என்று அந்த சுற்றுவட்டார கிராம மக்களுக்குத் தெரிந்திருந்தும், சம்பவத்தைக் கண்கண்ட சாட்சிகள் இருந்தும் சட்டத்தின் பார்வையில் அவர்கள் குற்றவாளிகள் அல்ல எனக் கருதி, அந்த வழக்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. நீதிமன்ற விசாரணை என்பது குற்றம் சாட்டப்பட்ட உண்மையான குற்றவாளிகளை விடுதலை செய்ய புலன் விசாரணையில் ஏதேனும் ஓட்டை உள்ளதா என்பதைத் தேடுகிறதோ?  என்ற எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.

     புகைப்படத்தில் காணப்படும் ‘தடம் எண் : 3’ குறித்து உரிய விளக்கத்தை புலனாய்வு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தால், இந்த கொலை வழக்கு நீதிமன்ற விசாரணையில் விடுதலையாகும் நிலை ஏற்பட்டிருக்காது என்றும், புலனாய்வில் திட்டமிட்டு செய்யப்பட்ட பிழையாக இது இருக்குமோ? என்ற கருத்தும் பொதுவெளியில் பேசப்படுகிறது.

     உண்மையான குற்றவாளி யார் என்று கண்டறிந்த பின்னரும், அவர் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்வதற்கு புலனாய்வில் ஏதேனும் ஓட்டைகள் உள்ளனவா?  எனத் தேடுகின்ற நிலையில் நம்நாட்டு சட்ட பரிபாலனம் இருந்து வருகிறது என்பதை உணர்த்துகின்ற மற்றொரு வழக்கு குறித்து பார்ப்போம்.

     கொலை வழக்கு ஒன்றில் சம்மந்தப்பட்ட இரு கொலையாளிகள் சிறைச்சாலையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டனர். அவ்விரு குற்றவாளிகளும் நீதிமன்ற வாசலில் நின்று கொண்டிருந்த போது, அந்த கைதிகளின் உறவினர் ஒருவர் அவர்களைப் பார்த்து பேசிக்கொண்டிருந்தார். பழிக்குப் பழி என்ற விதத்தில் அக்குற்றவாளிகளின் எதிரிகள் அவர்களைத் தாக்கினர். போலீசார் முன்னிலையில் நடந்த அந்த தாக்குதலில் இருவர் நீதிமன்ற வாசலிலே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்தவரிடம் நீதிபதி மரண வாக்குமூலம் பதிவு செய்தார். அதன் பின், அவரும் உயிரிழந்தார்.

     நீதிமன்ற வாசலில், போலீசார் முன்னிலையில், நீதிமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது நிகழ்ந்த அந்த கொலை வழக்கை விசாரணை செய்த தூத்துக்குடி அமர்வு நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்தது. முதல் தகவல் அறிக்கை மற்றும் புலனாய்வில் உள்ள சில குறைபாடுகளை முன்னிலைப்படுத்தி அந்த கொலை வழக்கு விடுதலை செய்யப்பட்டது.

     கொலை உள்ளிட்ட கொடுங்குற்றங்களைச் செய்தவர்கள் யார் என்பது பொதுவெளியில் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்துவிட்ட பின்னரும், புலனாய்வில் ஏதேனும் குறைகளைக் கண்டறிந்து, கொடுங்குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை நிரபராதி என தீர்ப்பு வழங்கும் நம் நாட்டு சட்டத்தால், குற்ற நிகழ்வுகளில் இருந்து பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க முடியம்? நீதிமன்ற விசாரணை என்பது புலனாய்வு அதிகாரிகளின் திறமையைக் கண்டறிய வைக்கப்படும் தேர்வா?

 உண்மையான குற்றவாளி யார் என்று கண்டறிந்த பின்னரும், அவர் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்வதற்கு புலனாய்வில் ஏதேனும் ஓட்டைகள் உள்ளனவா?  எனத் தேடுகின்ற நிலையில் நம்நாட்டு சட்ட பரிபாலனம் இருந்து வருகிறது

     நிகழ்காலத்தில் பெரும்பாலான குற்றப் புலனாய்வுகள் எப்படி நிகழ்கின்றன?  குற்றவாளிகளை அiயாளம் கண்டறிந்து, கைது செய்வதோடு புலன் விசாரணை பெரும்பாலும் முடிவுக்கு வந்துவிடுகிறது. சாட்சிகளின் வாக்குமூலங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு புலனாய்வு தொடர்பான பணிகள் புலனாய்வு அதிகாரியின் கீழ் பணியாற்றும் ஒருவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன் விளைவுதான் பல வழக்குகள் நீதிமன்ற விசாரணையின் பொழுது கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதகமான முறையில் புலன் விசாரணையை நகர்த்திச் செல்லும் புலனாய்வு அதிகாரிகளும் உண்டு. சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் லஞ்சம் ஒழிப்பு துறையைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தாக்கல் செய்த புலனாய்வு அறிக்கையைப் பரிசீலனை செய்த சென்னை உயர் நீதிமன்றம், பகலை இரவாக்கும் விதத்தில் புலனாய்வு செய்யப்பட்டுள்ளதாகக் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியதோடு, அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. குற்றங்களை மூடி முறைத்து மேற்கொள்ளப்படும் புலனாய்வுகள் சமீப காலத்தில் அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது.

     நீதிமன்ற விசாரணையில் விடுதலையாகும் ஒவ்வொரு கொடுங்குற்ற வழக்கின் தீர்ப்பையும் காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்து, புலன் விசாரணையிலுள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரிக்கு அறிவுரை வழங்குவார்கள். காலப்போக்கில் இந்த நடைமுறை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டதை உணர முடிகிறது.

     ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பான முறையில் இருக்க வேண்டுமானால், குற்றப் புலனாய்வு முன்னுரிமை பெறப்பட வேண்டும். புலனாய்வுத் துறையைச் ‘சரிகட்டிவிடலாம்’ என்ற உணர்வு குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்படாதவகையில் குற்றப் புலனாய்வுத் துறை செயல்பட வேண்டும்.

(இந்த கட்டுரையின் ஆசிரியர் ஓய்வுபெற்ற மூத்த மாநில போலீஸ் அதிகாரி ஆவார்,)
Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival