Read in : English
2050-ஆம் ஆண்டில் மூத்த குடிமக்கள் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும். மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், 2023-ஆம் ஆண்டில் சீனாவை முந்திக்கொண்டு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை உலக மக்கள்தொகை எதிர்காலம்- 2022 என்ற ஐ.நா அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது. பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் மக்கள்தொகை மாற்றத்தின் சீரற்ற தன்மையைக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு இது அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கணிப்பு.
அதிக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம், குறைந்த பொருளாதார நடவடிக்கைகள், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட எல்லா அம்சங்களிலும் பலவீனமான சமூக நலன், பொது சுகாதாரம் மற்றும் கல்வியில் போதுமான முதலீடுகள் இல்லாமை ஆகியவை தேசிய போக்காக இருந்தது. இந்தப் போக்கிலிருந்து ஆரம்பத்தில் விலகிய ஒரு சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 1.8 ஆக இருந்த மொத்த கருவுறுதல் விகிதம் (டிஎஃப்ஆர்) 2020 ஆண்டில் 1.4 ஆக வீழ்ச்சியடைந்ததில் இந்தச் சராசரி விலகல் பிரதிபலிக்கிறது.
2050-ஆம் ஆண்டில் மூத்த குடிமக்களை அதிகமாகக் கொண்டிருக்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறக்கூடிய விதத்தில் அதன் மக்கள்தொகை இருக்கும் என்பதால் அதன் எதிர்காலம் சிரமமானதாக இருக்கும்
ஆனால் அதிக டிஎஃப்ஆர் மற்றும் குறைந்த சமூக வளர்ச்சி குறியீடுகளைக் கொண்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, 2050-ஆம் ஆண்டில் மூத்த குடிமக்களை அதிகமாகக் கொண்டிருக்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறக்கூடிய விதத்தில் அதன் மக்கள்தொகை இருக்கும் என்பதால் அதன் எதிர்காலம் சிரமமானதாக இருக்கும். தமிழகத்தின் தற்போதைய மக்கள்தொகையில் நகர்ப்புற மூத்த குடிமக்கள் 12.8 சதவீதம் உள்ளனர். தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் குழுவில் பெண்களின் சதவீதம் மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூகத்தில் நிலவும் குறிப்பிடத்தக்க போக்குகள் ஆண்களுக்கான அபாயங்களைக் குறிக்கின்றன. குறிப்பாக, அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், காயங்கள், தொற்றல்லாத நோய்களின் தாக்கங்கள் ஆகியவை ஆண்களுக்கு மிக அதிகமான ஆபத்தை விளைவிக்கக்கூடியவை.
மேலும் படிக்க: கம்யூனிஸ்ட் தோழர் “ஜனசக்தி” வி. ராதாகிருஷ்ணனுக்கு 101 வயது!
மூன்றாவது பரிமாணம் என்னவென்றால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிக்கும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் மத்திய ஒதுக்கீட்டிலிருந்து தமிழ்நாடு பெற்றுக் கொள்ளும் தொகை வெறும் ரூ.30-தான். ஆனால் அதிக மக்கள் தொகை கொண்ட பீகார் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் பெறும் தொகை ரூ. 200. பொருளாதாரத்தில் முன்னேறிய பிற தென்மாநிலங்களைப் போலவே, தற்போது தமிழ்நாட்டின் தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் வெளிமாநிலங்களில் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த இந்தியாவைப் பொறுத்தவரை, வயதானவர்களின் (60 வயதுக்கும் மேற்பட்டவர்கள்) வளர்ச்சி விகிதம் 2014-ஆம் ஆண்டு நிலவரப்படி பொது மக்கள்தொகையை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. பிறக்கும் போது இருக்கும் ஆயுள் தவிர, 80 வயது ஆயுட்காலமும் அதிகரித்து வருகிறது; 1950-இல் மேலும் ஐந்து ஆண்டுகள் ஆயுள்காலம் அதிகரித்தது; 2015-இல் ஏழு ஆண்டுகள் உயர்ந்துள்ளது. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆயுள்காலம் இன்னும் 8.5 ஆண்டுகள் அதிகரிக்கலாம்.
தமிழ்நாட்டில் தற்போது ஒரு விசித்திரமான புதிர் இருக்கிறது. சட்டப்பூர்வமான, அரசு கட்டுப்பாட்டில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களின் பெருக்கத்தால் பரவலான மது நுகர்வுதான் அது. ஆதலால் உழைக்கும் ஆண்களிடையே மதுப்பழக்கம் அதிகரித்துள்ளது. இது சமூக வாழ்க்கையை, இல்ல வாழ்க்கையை, பொது சுகாதாரத்தை, பொருளாதார உற்பத்தித்திறனைப் பெரிதும் பாதித்துள்ளது.
வி.கே.அனந்த ஈஸ்வர் மற்றும் அவரது சகாக்கள் 2019-இல் ஜர்னல் ஆஃப் ஃபேமிலி மெடிசின் அண்ட் பிரைமரி கேரில் வெளியிட்ட ஆய்வின்படி, காஞ்சிபுரத்தில் 400 நபர்களைக் கொண்ட ஓர் ஆய்வுக் குழுவில் வழக்கமான மதுப்பழக்கம் 39 சதவீதம் என்று கண்டறியப்பட்டது. மேலும் மது அருந்துபவர்களில் 52.5 சதவீதம் பேர் ’ஆபத்தான / தீங்கு விளைவிக்கும்’ குடிப்பழக்க முறையைக் கொண்டவர்களாக வகைப்படுத்தப்பட்டனர். அதே நேரத்தில் 67 சதவீதம் பேர் ’சிக்கலான’ முறையைக் கொண்டிருந்தனர். இது தீங்கு விளைவிக்கும் எதிர்காலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
இது எதைக் குறிக்கிறது என்றால், மக்கள்தொகை மட்டத்தில் உயிர்வாழும் விகிதங்கள் அதிகரிக்கக்கூடும். ஆனால் தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் வயதானவர்கள் பிரிவினரிடையே, குறிப்பாக குறைந்த கல்வியறிவு, குறைவான குடும்ப ஆதரவு மற்றும் குறைவான குடும்ப வருமானம் உள்ளவர்களிடையே, நோய்கள் அதிகமாகலாம். மேலே குறிப்பிட்ட ஆய்வில் பங்கேற்றவர்களிடையே அதிக அளவு உயர் இரத்த அழுத்தம், இரைப்பை / வயிற்றுப் புண் மற்றும் மனநல நோய் இருந்ததாக ஆய்வு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவிலும், தமிழகத்திலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் 2050-ம் ஆண்டில் இந்த பிரிவினர் 20 சதவீதமாக இருப்பார்கள் அல்லது தேசிய அளவில் குறைந்தது 300 மில்லியன் தனிநபர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், சுவாச நோய்கள், புற்றுநோய்கள் மற்றும் பல தொற்றல்லாத நோய்களின் சுமையைக் குறிக்கும் முன்கணிப்பு ஆகும்.
மேலும் மோசமான பொது உள்கட்டமைப்பால் ஏற்படும் வன்முறை மற்றும் காயம், மனச்சோர்வு உள்ளிட்ட மனநல பிரச்சினைகள் ஆகியவை பரவலாகலாம். அதிகமான மனநோய்கள் 50-69 வயதினரைத் தாக்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே இருக்கும் புகைபிடிக்கும் விகிதம் 10 சதவீதமாகும்.
முழு அளவிலான பொது சுகாதார அமைப்பைக் கொண்ட மாநிலமான தமிழ்நாடு வரும் தசாப்தங்களில் முதியோருக்கான சமூக நலத் திட்டங்களில் ஈடுபட வேண்டும். குறைந்த வசதி படைத்த வயதானவர்கள் ஒன்றிணைந்து குழுவாக வாழ்வதற்கு உதவக்கூடிய மானிய வீட்டுவசதி, நகர்ப்புற உள்கட்டமைப்பில் மாற்றம், வயதானவர்கள் அங்குமிங்கும் போய்வரக்கூடிய வசதிகள், மேலும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிய பூங்காக்கள், ஈர நிலங்களை உருவாக்குதல் ஆகிய விசயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும். வீடு தேடி வரும் இலவச மருத்துவம் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
ஒட்டுமொத்த சமூகநலக் கட்டமைப்பிற்குள் முதியோர் சமூகங்களையும் கொண்டுவந்து அவர்களைப் போற்றிப் பேணுவது தமிழக அரசின் கடமை…அவர்களுக்கென்று ஒரு பிரத்யேக துறையை உருவாக்கி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவர்கள் சம்பந்தமான அரசுக் கொள்கையில் தேவைப்படும் மாற்றங்களையும் கொண்டுவர வேண்டும்
தமிழ்நாடு தற்போது சந்திக்கும் பெரும் சவால்கள் பின்வருபவை: இன்று பரவலான மது விற்பனையால் எதிர்காலத்து முதியோர்களுக்கு ஏற்படப் போகும் தீமையை தடுத்து நிறுத்துவது; சரியில்லாத உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் அமலாக்கம்; நடைபயிற்சி உள்கட்டமைப்புகள் இல்லாமல் போனதில் வெளிப்பட்ட நகரமயமாக்கலின் தோல்வி; அடிப்படை போக்குவரத்திற்கு அதிகமாகத் தனியார் வாகனங்களை மக்கள் பயன்படுத்துதல். இந்தச் சவால்கள்தான் ஆகப்பெரிய பிரச்சினைகள்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், அனைத்து பேருந்துகளையும் தாழ்தள பேருந்துகளாக மாற்றும் சட்டத்தை திமுக அரசு ஏற்க மறுத்துவிட்டது.
உள்கட்டமைப்புப் பாதுகாப்பு மற்றும் தரம், பொருட்கள், சேவைகள், மாசு கட்டுப்பாடு ஆகியவற்றைப் பற்றிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமில்லை என்பதால் ஏற்கனவே அதிக மன அழுத்தத்தில் உள்ள நடுத்தர வயது தலைமுறையினருக்கு பெரும் சேதம் ஏற்படுகிறது. சுகாதாரக் கட்டமைப்பை அனைவருக்குமான மருத்துவ வசதிகள் மூலம் சீர்படுத்துவதைப் பற்றிய அறிக்கையைப் பற்றி திமுக அரசு இன்னும் வாய்திறக்கவில்லை. இவ்வளவுக்கும் அரசு மாநில திட்டக்குழுவிடம் அந்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறது.
மேலும் படிக்க: பழைய ஓய்வூதியம்: திட்டம் அரங்கேறுமா?
வயதான மக்களுக்கான தனியார் வசதிகள் வரத் தொடங்கியுள்ளன, குறிப்பாக கோயம்புத்தூர் மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில். ஆனால் அவை வெளிநாடுகளில் உள்ள தங்கள் குழந்தைகள் அனுப்பும் பணத்தில் வாழும் பணக்கார முதியவர்களுக்கு மட்டுமே பயன்படுகிறன. ஒட்டுமொத்த சமூகநலக் கட்டமைப்பிற்குள் முதியோர் சமூகங்களையும் கொண்டுவந்து அவர்களைப் போற்றிப் பேணுவது தமிழக அரசின் கடமை.
மலிவு விலை வீட்டுவசதி என்பது அரசுக் கொள்கையின் குறிக்கோள் என்றால், மலிவு விலையில் கிடைக்கும் மூத்த குடிமக்கள் வாழ்விடங்களும் அதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
ஏராளமான மூத்த குடிமக்கள் ஏற்கனவே தங்கள் நலன்களுக்காக அரசாங்கத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள்; மேலும் பொது விநியோகத் திட்டத்தால் அவர்களும் பயனடைகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கென்று ஒரு பிரத்யேக துறையை உருவாக்கி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவர்கள் சம்பந்தமான அரசுக் கொள்கையில் தேவைப்படும் மாற்றங்களையும் கொண்டுவர வேண்டும்.
Read in : English