Read in : English
பொருளாதாரம் மின்னணுமயமாகத் தொடங்கிவிட்டது; யுபிஐ கட்டண முறைகளின் பயன்பாடு அதிகரித்துவருகிறது. இந்தக் காரணங்களால் ரொக்க ரூபாய் நோட்டுகள் பயன்பாடு மெதுவாக மறைந்துவருகிறது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ஆர்.காந்தி கூறினார். எனவே, புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்படும் எனும் ரிசர்வ் வங்கியின் சமீபத்திய முடிவு மக்களைப் பாதிக்காது என்றும் கூறினார்.
இன்மதிக்கு அவர் அளித்த நேர்காணலில் இந்த விவகாரம் குறித்தும், ரூ.500 நோட்டுகளும் செல்லாது போய்விடுமோ என்ற அச்சம் குறித்தும் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
முதலில், 2000 ரூபாய் நோட்டு மதிப்பிழந்துவிட்டது எனச் சொல்வது தவறு; 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நடந்ததற்கும், தற்போது நடப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்று காந்தி குறிப்பிட்டார்.
உண்மையில், 2000 ரூபாய் நோட்டு பயன்படுத்துவதை மக்கள் ஏற்கெனவே நிறுத்திவிட்டனர். இந்த 2000 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்கள் அவற்றைத் தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது வங்கிகளில் கொடுத்துப் பிற மதிப்புடைய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. எனினும், மாற்றப்படும் நோட்டுகளின் எண்ணிக்கைக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டு மதிப்பிழந்து விட்டது என்பது தவறு. 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நடந்ததற்கும், தற்போது நடப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன
டெபாசிட் செய்யப்படும் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு வரம்பு இல்லை. உண்மையில் 2016ஆம் ஆண்டில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்ததைப் போல இன்று 2000 ரூபாய் நோட்டு மதிப்பு குறைக்கப்படவில்லை என்று கூறிய காந்தி, இந்தகரன்சி இன்னும் ’சட்டபூர்வமான டெண்டர்’தான் என்றார்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30 காலக்கெடுவைத் தாண்டியும் மாற்றிக் கொள்ளலாமா என்று கேட்டதற்கு, இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் உத்தரவை எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
மேலும் படிக்க: புதிய வருமான வரி சிறப்பானதா?
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவின் பின்னணியில் உள்ள நியாயத்தை விளக்கிய காந்தி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டு அச்சிடப்பட்டது என்றார். 2018ஆம் ஆண்டு 37.3 சதவீதமாக இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை மார்ச் 31, 2023 நிலவரப்படி 10.8 சதவீதமாகக் குறைந்துவிட்டது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆனால், ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலம் பொதுவாக நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள்தான் என்று கூறிய காந்தி 2000 ரூபாய் நோட்டு ஆறு ஆண்டுகளாகப் புழக்கத்தில் உள்ளது, எனவே ரிசர்வ் வங்கியின் ’சுத்தமான நோட்டுக் கொள்கை’யின் ஒரு பகுதியாக அவற்றைத் திரும்பப் பெற வேண்டிய நேரம் இது என்று கூறினார்.
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவுக்குப் பின்னால் உள்ள மற்றொரு முக்கியக் காரணம் என்னவென்றால், இப்போது 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 73.3 சதவீதம் என்னும் அளவுக்கு அதிகமாக உள்ளது. எனவே, குறைவான புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவது தர்க்கரீதியாகச் சரியானதுதான் என்றார் அவர்.
அதிக மதிப்புள்ள தொகைக்காக, 2000 ரூபாய் நோட்டுகளைவிட அதிக எண்ணிக்கையில் 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்க வேண்டியிருப்பதில் சிரமங்கள் இருக்கின்றன. குறிப்பாக, சிறுதொழில் துறை போன்ற பிரிவுகள் இது சம்பந்தமாக அதிக சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிவருமே என்று கேட்டபோது, பண பரிவர்த்தனைகள் மின்னணுமயமாகிக் கொண்டிருக்கும் வேளையில் இது ஒரு பெரிய பிரச்சினையாக மாறாது என்று காந்தி கூறினார்.
2000 ரூபாய் நோட்டுகளைத் தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது வங்கிகளில் கொடுத்துப் பிற மதிப்புடைய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது
தற்போதைக்கு 500 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியிடம் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன; தொடர்ந்தும் அவை அச்சிடப்படுகின்றன. எனவே, ரூபாய் நோட்டுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்றார்.
இனி, ஏடிஎம்களில் ரூ.500 நோட்டுகள் அதிக அளவில் குவித்து வைக்கப்படுமா என்ற கேள்விக்கு, இந்தப் பிரச்சினைகள் பெரிய சிக்கலை ஏற்படுத்தாது என்று காந்தி கூறினார். இப்போதெல்லாம், நெஃப்ட், ஆர்டிஜிஎஸ் மற்றும் யுபிஐ போன்ற வசதிகள் மூலம் மொபைல் போனில் நடக்கும் பணப் பரிவர்த்தனைகள் பரவலாகிவருகின்றன. சிறிய பணமதிப்பு பரிவர்த்தனைகளுக்குக் கூட ஜிபே போன்ற யுபிஐ பயன்பாடுகளும், பெரிய மதிப்பு பரிவர்த்தனைகளுக்கு நெஃப்ட், ஆர்டிஜிஎஸ் பயன்பாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, மிக விரைவில் ரொக்கமில்லா மின்னணுப் பரிவர்த்தனை என்பது இங்கே நிலைத்து நின்றுவிடும். கரன்சி நோட்டுகளின் பயன்பாடு தொடர்பான பிரச்சினைகள் பெருமளவு குறையத் தொடங்கும் என்று அவர் கூறினார்.
நேர்காணலின் நிறைவாக, 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட 75 ரூபாய் நாணயம் மற்றும் ரூ.20 போன்ற பிற நாணயங்கள் குறித்துக் கேட்டபோது, அவை வெறும் நினைவுச்சின்ன நாணயங்கள் மட்டுமே; புழக்கத்திற்கானவை அல்ல என்றும் நாணய சேகரிப்பாளர்கள் மட்டுமே இத்தகைய நாணயங்களை வாங்குவார்கள் என்றும் கூறி காந்தி நேர்காணலை நிறைவுசெய்தார்.
Read in : English