Read in : English
பாஜக ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்குவதற்காக தமிழக அரசு நியமித்துள்ள நிபுணர் குழு வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழகத்தின் வரலாற்று மரபு, நிகழ்காலச் சூழல், எதிர்காலத் தேவைகள், கனவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு மாநிலத்திற்கென தனித்துவமானதொரு மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்க தமிழக அரசு உறுதி கொண்டுள்ளது என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
உயர்மட்டக் குழுவின் அறிக்கை வரப்பெற்றதும் அதில் உள்ள பரிந்துரைகளை அரசு கவனமுடன் பரிசீலனை தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்கால நலன் மற்றும் நம் மாநிலத்தின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிறப்பான கல்விக் கொள்கையை வகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசியக் கல்விக் கொள்கையை முழுமுற்றாக நிராகரித்து, தமிழ்நாட்டின் நலன்களுக்கு ஏற்ப இந்தக் கொள்கை உருவாக்கப்படுமா என்பது உயர்நிலைக் குழுவின் அறிக்கை வெளிவந்தால்தான் தெரிய வரும்.
2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, 2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்த போது, க்மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும்க் என்று அறிவிக்கப்பட்டது. அதையடுத்து 1.6.2022இல் தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி த. முருகேசன் தலைமையில் 12 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. கல்விக் கொள்கை வகுக்கும் குழுவிற்கு கல்வியாளர் ஒருவரை நியமிக்காமல் நீதிபதி ஒருவரை நியமிப்பது சரியாகுமா என்று தொடக்கத்தில் சில கல்வியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
பாஜகவின் தேசியக் கல்விக் கொள்கையை முழுமுற்றாக நிராகரித்து, தமிழ்நாட்டின் நலன்களுக்கு ஏற்ப இந்தக் கொள்கை உருவாக்கப்படுமா என்பது உயர்நிலைக் குழுவின் அறிக்கை வெளிவந்தால்தான் தெரிய வரும்
நீட் தேர்வு குறித்து தமிழக அரசு நியமித்த நீதிபதி ராஜன் குழுவில் இருந்த பேராசியர் எல். ஜவஹர்நேசன் இந்தக் குழுவிலும் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஓராண்டு காலத்துக்குப் பிறகு தற்போது, தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஜவஹர் நேசன், அதிகாரிகளின் தலையீடு இருந்ததாக குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில், அவரது குற்றச்சாட்டை மறுத்து குழு உறுப்பினர்கள் சிலர் அறிக்கை வெளியிட்டனர்.
இந்த நிலையில், குழுவின் பணிக்காலத்தை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டித்துள்ளதுடன், சென்னை காயிதே மில்லத் மகளிர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஃப்ரீடா ஞானராணி, சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் ஜி. பழனி ஆகியோர் இந்தக் குழுவில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: ஜேஈஈ, நீட் தேசிய நுழைவுத் தேர்வுகளில் தமிழகத்திற்கு ஆர்வம் பிறந்துவிட்டதா?

கல்வி குழுவில் இருந்து விலகிய பேராசிரியர் ஜவஹர் நேசன்
உறுப்பினராக இருந்தபோது, அவர் அமைத்த துணைக் குழுக்களின் அறிக்ககைகளையும் அவர் கொடுத்த குறிப்புகளையும் இக்குழு கருத்தில் கொள்ள வேண்டும். அத்துடன், பல்வேறு இடங்களில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட கருத்துகளையும் உயர்மட்டக்கல்வி குழு பரிசீலனை செய்து, அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் என்று தெரிகிறது.
“மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கும் குழு தனது கடமையை சுதந்திரமாக செய்கிறதா? அல்லது அதிகாரிகள் சிலரால் வழிநடத்தப்பட்டு, தேசியக் கல்விக் கொள்கை 2020ல் இடம் பெற்றுள்ளதை அப்படியே தமிழில் பெயர் சூட்டி, முதலமைச்சர் நம்பும்படி அதை உருமாற்றி “மாநிலக் கல்விக் கொள்கை” என்ற பெயரில் தரப்போகிறதா?” என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்வி எழுப்பியுள்ளார். “மத்தியஅரசு 2020ஆம் ஆண்டு ஜூலையிலிருந்து ஒன்றிய அரசின் பல்வேறு அமைப்புகள் மூலம் பல்வேறு சுற்றறிக்கைகள், வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இதற்கு மாநில அரசின் எதிர்வினை என்ன” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசால் உருவாக்கப்படும் மாநில கல்விக் கொள்கையை இறுதி செய்வதற்கு முன்னர் வரைவு அறிக்கை மீது பொதுமக்கள், கல்வியாளர்கள், கல்வி சங்கங்கள் போன்று பல்வேறு தரப்பினரின் கருத்துகள் கேட்கப்படுமா என்றும் சில கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டு தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானம் குடியரசுத் தலைவர் அனுமதிக்காக நிலுவையில் உள்ளது. ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொதுவான பட்டியலில் கல்வி இருப்பதால் மாநில அரசு கல்விக் கொள்கையை உருவாக்க முடியும். அதேசமயம், பள்ளிக் கல்வித்துறையிலும் உயர்கல்வி துறையிலும் ஒன்றிய அரசு கொண்டு வரும் திட்டங்களை தமிழக அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொதுவான பட்டியலில் கல்வி இருப்பதால் மாநில அரசு கல்விக் கொள்கையை உருவாக்க முடியும். அதேசமயம், பள்ளிக் கல்வித்துறையிலும் உயர்கல்வி துறையிலும் ஒன்றிய அரசு கொண்டு வரும் திட்டங்களை தமிழக அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது தெரியவில்லை
தனியார் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையையும் கட்டணத்தையும் முறைப்படுத்துவதற்கும் கல்வி வணிகமயமாகி வருவதைத் தடுப்பது குறித்தும் தகுந்த வழிமுறைகளைப் பரிந்துரைக்க உயர்மட்டக் குழு பரிசீலிக்க வேண்டும். அதேபோல, பள்ளிக் கல்வித்துறையில் குறிப்பாக அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு வகுப்புக்கு ஓர் ஆசிரியர் நியமனம், விளிம்பு நிலை மாணவர்களையும், சராசரி மாணவர்களையும் படிப்பில் கைதூக்கிவிடத் திட்டங்கள் குறித்தும் அக்குழு கவனம் செலுத்த வேண்டும்.
பொதுப் பள்ளிக் கல்வி முறை, அருகமைப்பள்ளிக் கல்வி முறை, தாய்மொழி வழிக் கல்வி போன்ற விஷயங்களில் கொள்கை வகுக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர வேண்டிய தேவை உள்ளது. இதேபோல, கல்வித் துறையில் தலைதூக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் எதிர்காலத் தொலைநோக்குப் பார்வையுடன் மாநில அரசின் கல்விக் கொள்கையில் இடம் பெற வேண்டும் என்பதும் பலரது விருப்பம்.
தெளிவாக வரையறுக்கப்பட்ட நோக்கங்களுடன் கூடிய ஒரு பொது’ கல்விக் கொள்கையை அளிக்கும் இலக்கை இந்த உயர்மட்ட கல்விக் குழு எப்படி எட்டபோகிறது என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
Read in : English