Read in : English
தஞ்சாவூரில் பிரமாண்டமான சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட பழந்தமிழர் பெருமையின் இருப்பிடமான தஞ்சை ஒருங்கிணைந்த மாவட்டம் தொடர்ந்து ஆண்ட அரசாங்கங்களிடமிருந்து அதிக கவனத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தைத் தவிர, இது மற்றுமொரு தமிழ்நாட்டு நகரம் மட்டுமே.
இன்ஸ்டாகிராம்வாசிகளுக்கு வேண்டுமானால் தஞ்சாவூர் கவர்ச்சியான ஸ்தலமாக இருக்கலாம்; ஆனால் நவீனகால பேக்கேஜ் சுற்றுலாவுக்கு தஞ்சாவூர் உண்மையில் சிறந்த இடம் அல்ல. பெரிய கோயிலைச் பெரிய கோயிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள ஓவியங்கள், சிற்பங்கள், பிரம்மாண்டமான கட்டமைப்புகள், தனித்துவமான வெண்கல உலோகச் சிலைகள் போன்று சோழர் காலத்தின் ஈர்க்கக்கூடியவை. எனினும், மத்திய, மாநில அரசுகள் இந்த பண்பாட்டு நகரத்தின் பாரம்பரியப் பெருமைகளை நிலைநாட்டுவதற்கு செய்ய வேண்டிய நியாயத்தைச் செய்யவில்லை.
இந்த நிலையில், தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற நிதி அமைச்சரின் பட்ஜெட் அறிவிப்பு ஒரு நம்பிக்கை ஒளியைத் தந்திருக்கிறது.
“உலகை ஆண்ட சோழர்களின் பங்களிப்பை எடுத்துரைக்கவும், அந்தக் காலத்து கலைப்பொருட்கள் மற்றும் எச்சங்களைப் பாதுகாக்கவும், தஞ்சாவூரில் ஒரு பெரிய சோழ அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்று அவர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நகரங்கள் மத்திய அரசின் பல்வேறு நிதித் திட்டங்களில் இன்னும் முக்கிய இடத்தைப் பெறவில்லை
சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கணக்கிட்டு பெரிய சுற்றுலா மையங்களுக்கு நிதியளிக்கும் மத்திய அரசின் வழிமுறையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. சென்னை – மாமல்லபுரம் – ராமேஸ்வரம் – மணப்பாடு – கன்னியாகுமரி கடற்கரை வழித்தடத்தை மேம்படுத்த 2016-17 ஆம் ஆண்டில் மத்திய அரசின் சிறப்புத் தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூ.91.62 கோடி மதிப்பிலான திட்டம் தமிழ்நாட்டுக்குக்
கிடைத்தது. கடந்த பிப்ரவரி மாதம் மக்களவையில் பேசிய மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, இந்தத் திட்டத்தின் பணிகள் நிறைவடைந்து விட்டதாக தெரிவித்தார்.
ராமேஸ்வரம் (ரூ.4.7 கோடி), மதுரை (ரூ.4.48 கோடி), காஞ்சிபுரம் (ரூ.13.99 கோடி) மற்றும் வேளாங்கண்ணி (ரூ.4.86 கோடி) ஆகிய நகரங்களில் ரயில் நிலையங்களை மேம்படுத்துதல் போன்ற மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் பிற சுற்றுலாத் திட்டங்கள் நிறைவேற்றுப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை ஒப்பீட்டளவில் சிறியவை.
சோழ நிலப்பரப்பின் மையப்பகுதியாக விளங்கும் தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நகரங்கள் மத்திய அரசின் பல்வேறு நிதித் திட்டங்களில் இன்னும் முக்கிய இடத்தைப் பெறவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த நகரங்களை மேம்படுத்த நிதிப்பற்றாக்குறையால் அவதிப்படும் மாநில அரசாலும் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவர முடியவில்லை.
இதன் விளைவாக புகழ்பெற்ற சோழ மன்னர்களின் ‘பூஜை பாத்திரங்கள்’ உள்பட விலைமதிப்பற்ற சிலைகள் தஞ்சாவூர் அரண்மனை அருங்காட்சியகத்தில் பேக்கரிக்கடை அலமாரிகள் போன்ற அடுக்குகளில் வைக்கப்பட்டுள்ளன, மேலும் அவற்றின் வண்ணமயமான தொன்மங்களை பார்வையாளர்களுக்கு விளக்குவதற்கான ஏற்பாடு ஒன்றும் இல்லை.
அவர்களில் பலர் ஒரு நாள் பொழுதைக் கழிக்கவரும் சுற்றுலாப் பயணிகள். பெரிய கோயிலில் உள்ள இந்தியத் தொல்லியல் துறைப் பிரிவில் தஞ்சையைப் பற்றிய விவரக்’ கையேடுகளும் இல்லை. அரண்மனை அருங்காட்சியகத்தில் பிரமிப்பூட்டும் அழகான வெண்கலச் சிலைகள் உள்ளன. இருப்பினும் சோழர்கால சிற்பக்கலை உருவாக்கிய நேர்த்தியான பல பெரிய கலைப்படைப்புகள் இடம்பெறவில்லை.
அரசு திட்டமிட்டிருக்கும் புதிய அருங்காட்சியகத்தில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளால் திருப்பி அனுப்பப்பட்ட வெண்கல சிலைகளைக் காட்சிப்படுத்த முடியும். மேலும், சிலைகள் குறித்த விளக்க உரைகளை ஹெட் போன்கள் கேட்பதற்கும் இணைய வழியாகக் கேட்பதற்கும் தேவையான நல்ல ஓலியமைப்பு வசதியை உருவாக்க வேண்டும். இதன்மூலம் பார்வையாளர்களுக்கான செலவுகளைக் குறைத்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குச் சேவை செய்ய முடியும். கட்டணம் செலுத்தாமல் புகைப்படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டும்
நடுத்தர தூர சுற்றுலாப் பயணிகளுக்கும், அதிகம் செலவழிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் தஞ்சாவூரில் தரமான போக்குவரத்து வசதிகளும் சாப்பாட்டு வசதிகளும் போதுமான அளவுக்கு இல்லை. பெரிய கோவில் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் பழைய பேருந்து நிலையத்தருகே இருக்கின்றன. ஆனால் இப்பகுதியில் இயக்கப்படும் பேருந்துகள் தரமற்றவை; கூட்ட நெரிசல்களால் தரமான சேவையை அந்தப் பேருந்துகளால் தர முடிவதிலலை.
உள்ளூர் வருமானத்தையும், நாட்டின் அந்நிய செலவாணியையும் பெருக்குவதில் பெரும் ஆற்றலைக் கொண்ட நினைவுப் பரிசுத் தொழிலுக்கு தமிழக அரசு புத்துயிர் அளிக்க முடியும்
இப்பகுதியில் இருந்து கும்பகோணம், தாராசுரம் போன்ற பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகள் சென்றுவருவதற்காக அரசு போக்குவரத்து வசதிகள் அதிகரிக்க வேண்டும். இன்னும் ஏராளமான பேருந்துகளையும் வேன்களையும் நியாயமான கட்டணங்களில் இயக்க வழிவகை செய்ய வேண்டும்.
கோவிட் தாக்கிய 2020ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 27.4 லட்சம்; இது 2021ஆம் ஆண்டில் 15.27 லட்சமாகக் குறைந்தது. 2022ஆம் ஆண்டில் 61.19 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை இந்தியா பதிவு செய்துள்ளது. வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகளைக் கொண்ட வெளிநாடுவாழ் இந்தியர்களையும் சுற்றுலாப் பயணிகளாகப் புள்ளி விவரங்கள் பதிவு செய்கின்றன.
அதனால்தான் கோவிட் தாக்கம் இருந்த ஆண்டுகளிலும் அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஆண்டுகளில் பல மாதங்கள் பயண இடையூறுகளும் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. இந்தத் தரவுகள் இந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் போதுமான தெளிவான அறிவிப்புப் பலகைகள் இல்லை; அணுகக்கூடிய சுற்றுலா வரவேற்பு வசதி இல்லை. பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களுக்கு நம்பகமான போக்குவரத்து மற்றும் பரிசோதிக்கப்பட்ட உணவக வசதிகளும் இல்லை.
இதற்குக் காரணம் முதலீட்டாளர்களிடையே தொழில் முனைவோர் இல்லாதது என்பதல்ல. உலகளாவிய பாரம்பரிய சுற்றுலா வரைபடத்தில் தஞ்சாவூர் இடம்பெறுவதற்கான ஒரு நீண்டகால சுற்றுலாத்துறை தொலைநோக்குப் பார்வை இல்லாததுதான் காரணம்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சாவூரில் செய்யப்பட்டிருக்கும் முதலீடுகள் போதுமான அளவு கண்காணிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பழைய பேருந்துப் பகுதிக்கான வடிகால் திட்டத்தால் 2022ஆம் ஆண்டு சுற்றுலா சீசனில் சாலைகள் தோண்டப்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையெல்லாம் மீறி தஞ்சாவூருக்குச் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். ஏனெனில் சோழர் கால கலைப்பொருட்களின் மகிமை பயணிகளின் சிரமங்களை விட மகத்தானதாக இருக்கிறது.
உள்ளூர் வருமானத்தையும், நாட்டின் அந்நிய செலவாணியையும் பெருக்குவதில் பெரும் ஆற்றலைக் கொண்ட நினைவுப் பரிசுத் தொழிலுக்கு தமிழக அரசு புத்துயிர் அளிக்க முடியும். உள்ளூர் கைவினைஞர்களிடமிருந்து சான்றளிக்கப்பட்ட நினைவுப் பொருட்களை விற்கும் ஒரு கட்டமைப்பு (இந்தச் சான்றிதழ் சிலை கடத்தலைத் தடுக்க உதவலாம்) உருவாக்கலாம். இதன் மூலம் சிறிய மேஜை வெண்கலச் சிலைகள் மற்றும் புகழ்பெற்ற தஞ்சை பொம்மைகள், ஓவியங்களை விற்க வகைசெய்யலாம்.
பல ஷோரூம்களைக் கொண்ட ஒரு நினைவுப் பரிசு மையத்தை உருவாக்கலாம். ஆனால் இந்த வாய்ப்புகளை சுயநலவாதிகளும், அரசியல்வாதிகளும் கைப்பற்றுவதைத் தடுப்பதும், உண்மையான கைவினைக் கலைஞர் கூட்டுறவு அமைப்புகளக்கு உதவுவதும் ஆகப்பெரும் சவாலாக இருக்கிறது.
சிவானந்த நடனம் என்ற தனது கட்டுரைத் தொகுப்பில் ஆனந்த குமாரசாமி மூன்று புகழ்பெற்ற நடனங்களைப் பற்றிப் பேசுகிறார். முதலாவது இமயமலையில் மற்ற கடவுள்கள் இசையமைக்க, பலர் சாட்சியாக சிவன் நடத்தும் நடனம். இரண்டாவது பைரவர் அல்லது வீரபத்திரரின் தாண்டவம். மூன்றாவது, நடராஜர் நடனம்.
பல எதிரிகளை வென்ற பின்னர் சிதம்பரம் அல்லது தில்லையில் ஒரு சபாவில் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நடனம் முயலகன் என்னும் அரக்கனை அடக்கும் ஜடை முடியும் நான்கு கைகளும் கொண்ட தெய்வத்தின் சிலைகளில் மையக்கருத்தாக இருக்கிறது. இந்தக் கருத்து ஏராளமான வெண்கலச் சிலைகளில் இருக்கின்றன.
அந்தச் சிலைகள் இந்தியாவில் இருக்கின்றன; அல்லது வெளிநாடுகளில் கடத்தல்காரர்கள், கொள்ளையர்கள் மற்றும் சிலை சேகரிப்பவர்களின் கைகளில் இருக்கின்றன. இவற்றில் பைரவர், நடராஜர் உள்ளிட்ட சில சிலைகள் இன்றும் தஞ்சாவூரில் காணப்படுகின்றன.
தஞ்சாவூரில் வரவிருக்கும் புதிய சோழர் அருங்காட்சியகம் இந்தப் பிரமாண்ட கீர்த்தியைப் படம்பிடித்துக் காட்ட முற்படும் என்று நம்புவோம்.
Read in : English