Read in : English
தமிழ்நாடு நிதி அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜனின் மூன்றாவது தமிழ்நாடு பட்ஜெட் உரையின் தொனியும் போக்கும் ஒரு தனித்துவமான மாற்றத்தைக் குறிக்கிறது.
தமிழ்நாடு நிதிநிலை குறித்த முக்கியமான வெள்ளை அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு அவர் ஆற்றிய முதல் பட்ஜெட் உரையில், ஒன்றிய அரசு தொடர்ந்து வளங்களை மையப்படுத்துவதையும், நிதி முடிவுகளை தன்னிச்சையாக எடுப்பதையும் கடுமையாக விமர்சித்திருந்தார். தனது இரண்டாவது பட்ஜெட் உரையில், ஒன்றிய அரசு மீதான தனது (எங்கள் பார்வையில், நியாயமான) விமர்சனங்களை அவர் குறைத்துக் கொண்டார்.
மார்ச் 20, 2023 அன்று தனது மூன்றாவது பட்ஜெட் உரையில், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிக்க ஒன்றிய அரசு மறுத்ததை அவர் குறிப்பிட்டுள்ளார், ஆனால் ஒன்றிய -மாநில நிதி உறவுகள் பிரச்சினையில் அவரது குரல் அடங்கியே ஒலித்தது. ஒருவகையில், தான் வழங்கிய மூன்று பட்ஜெட்டுகளிலும் அவர் ஒரே மாதிரியாகவே இருந்திருக்கிறார்.
தமிழ்நாடு நிதிப் பொறுப்புச் சட்டத்தில் (டிஎன்எஃப்ஆர்ஏ) வரையறுக்கப்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டையும், ‘நிதி நேர்மை’க்கான தனது கடமையையும் தனது மூன்று பட்ஜெட் உரைகளிலும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதன் விளைவாக இந்த ஆண்டு நிதிப்பற்றாக்குறை தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி) 3.25% ஆக இருக்கும் வண்ணம் விதிமுறையை கடைப்பிடித்து அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். அதாவது, பல முக்கிய துறைகளுக்கான ஒதுக்கீடுகள் மிதமாகவே அதிகரித்திருக்கிறது.
இந்த தமிழ்நாடு பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் உள்ளன. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதல்வரின் காலை உணவு திட்டம் ரூ.500 கோடி செலவில் 30,000 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது
இந்த தமிழ்நாடு பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் உள்ளன. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதல்வரின் காலை உணவு திட்டம் ரூ.500 கோடி செலவில் 30,000 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது.
இதற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆண்டுக்கு சுமார் 60 லட்சம் பெண்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் படிக்க: தமிழ்நாடு பட்ஜெட்: வாக்குறுதியை நிறைவேற்றும் திமுக!
எஸ்சி/எஸ்டி துணைத் திட்டத்திற்கு விதிமுறைகளின்படி போதுமான நிதி கிடைப்பதை உறுதி செய்ய சட்டம் கொண்டு வரப்படும் என்பது பட்ஜெட்டில் மூன்றாவது வரவேற்கத்தக்க அறிவிப்பு. இருப்பினும், துணைத் திட்டத்திற்கான ஒதுக்கீடு இந்த பட்ஜெட் ஆண்டில் வழக்கத்தை விட குறைவாகவே உள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆகிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் கணிசமாக அதிகரித்துள்ளது.
நகர்ப்புற மேம்பாட்டில் கவனம் செலுத்தப்பட்டு, சென்னையைத் தவிர கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாநகரங்களில் நிலையான பொதுப் போக்குவரத்து முறைகளில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை பெருநகரப் பகுதி மற்றும் அதன் அண்டைப் பகுதிகள் சிறப்பு கவனத்தைப் பெற்றுள்ளன. அதே நேரத்தில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட, தொழிலாள வர்க்க மக்கள்தொகையைக் கொண்டுள்ள வடசென்னை மீதும் அரசின் கவனம் குவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்பநலம், பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளுக்கான ஒதுக்கீடுகள் மிதமாக / குறைவாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.
சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறைக்கான பட்ஜெட் மதிப்பீடு 2022-23 ஆம் ஆண்டில் இருந்த ரூ 17,902 கோடியிலிருந்து ரூ .18,661 கோடியாக உயர்ந்துள்ளது, இது சுமார் 4% அதிகரிப்பு; பணவீக்க விகிதத்தை விட மிகவும் குறைவு. எனவே உண்மையான அடிப்படையில் பார்த்தால் இது நிதிச்சரிவுதான்.
பள்ளிக் கல்விக்கான ஒதுக்கீடு 2022-23 ஆம் ஆண்டில் இருந்த ரூ.36,896 கோடியிலிருந்து 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.40,299 கோடியாக உயர்ந்துள்ளது. இது 9 சதவீத அதிகரிப்பு என்றாலும் நடைமுறையில் 2 சதவீத அதிகரிப்பாகத்தான் முடியும்.
உயர்கல்வித் துறைக்கு ரூ.5669 கோடியிலிருந்து ரூ.6967 கோடியாக ஒதுக்கீடு அதிகரிக்கப் பட்டிருக்கிறது; 20 சதவீதத்திற்கு மேலான நிதி உயர்வு என்றாலும், அந்தத் துறையின் தேவைகளுடன் ஒப்பிடும்போது இது குறைவுதான்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான ஒதுக்கீடு ரூ.4282 கோடியில் இருந்து ரூ.3513 கோடியாக குறைந்துள்ளது. எல்லா ஆதிதிராவிடர் பள்ளிகளையும் கல்வித் துறையின் கீழ் கொண்டுவருவதால் இந்த நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது என்று சப்பைக்கட்டுக் கட்டமுடியாது.
பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் பட்டியலிடப்பட்ட குறிக்கோள்களில் ஒன்றாக வேலைவாய்ப்புகள் இருந்தபோதிலும், பட்ஜெட்டில் அது சம்பந்தமான எந்த அறிவிப்பும் இல்லை என்பது அவலம்
சிறு, குறு, நடுத்தர தொழில் துறைகான ஒதுக்கீடு 22-23-ல் இருந்த ரூ.912 கோடியிலிருந்து 23-24-ல் ரூ.1509 கோடியாகக் கணிசமாக உயர்ந்தாலும், தற்போது நெருக்கடி சூழ்நிலையில் இருக்கும் அந்தத் துறையின் தேவைகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது. இந்த நெருக்கடிக்கு மாநில அரசை மட்டுமே குற்றம் சாட்ட முடியாது. இது மத்திய அரசின் கொள்கைகளின் விளைவாகும். ஆனால் நெருக்கடியை நிவர்த்தி செய்ய வேண்டிய கடமை தமிழக அரசிற்கு உள்ளது.
பல வரிச்சலுகைகள் மூலம் தனியார் கார்ப்பரேட் முதலீட்டை ஊக்குவிப்பது பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும்; வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தும்; வறுமையை ஒழிக்க உதவும். இப்படி 30 ஆண்டுக்கு மேலாக நவதாராளவாதக் கதையாடல் பிரகடனம் செய்கிறது. ஆனால் அதில் சாரமில்லை என்று தெரிந்து விட்டது. இருப்பினும், தனியார் முதலீடுகளை ஊக்குவித்தால் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம்; மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யலாம் என்ற எதிர்பார்ப்புகளுடனே பட்ஜெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
மேலும் படிக்க: தமிழக பட்ஜெட்: தலித் மக்களை மேம்படுத்துமா?
இதுபோன்ற அனுமானங்களில் இருந்து தமிழ்நாடு பட்ஜெட் விடுபட்டு விட்டது என்று கூற முடியாது. பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் பட்டியலிடப்பட்ட குறிக்கோள்களில் ஒன்றாக வேலைவாய்ப்புகள் இருந்தபோதிலும், பட்ஜெட்டில் அது சமபந்தமான எந்த அறிவிப்பும் இல்லை என்பது அவலம்.
‘திராவிட மாடல்’ என்பது அதன் ஆதரவாளர்களால் பல்வேறு விதமாக வரையறுக்கப்பட்டிருந்தாலும், இந்த வரவு செலவுத் திட்டம் மாநில உரிமைகளை வலியுறுத்துவதற்கோ அல்லது உழைக்கும் மக்களின் நலனில் கவனம் செலுத்துவதற்கோ வகைப்படுத்தப்படவில்லை. இது சாராம்சத்தில் நவதாராளவாதமாக உள்ளது.
நிதி நேர்மை மற்றும் உலகளாவிய முதலீட்டாளர் மாநாடுகள் மூலம் கார்ப்பரேட்டுகளை ஈர்ப்பதில் அது வைக்கும் நம்பிக்கைகள் ஆகியவற்றில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்துகிறது.
Read in : English