Read in : English
இந்த ஆண்டு செப்டம்பர் 15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று மார்ச் 20, 2023 அன்று வழங்கப்பட்ட தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இதன் மூலமாக, 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக அளித்திருந்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று நிறைவேற்றப்படுகிறது. பிற மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான ஒரு முன்மாதிரியை திமுக உருவாக்கி விட்டது.
இந்த ஆண்டுக்கான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.7,000 கோடியாகும். மேலும் பொருளாதாரம் மற்றும் சமூக நிலையைச் சார்ந்து உதவி பெறும் பெண்களின் தகுதி பற்றிய நிபந்தனைகள் இருக்கும். மாநில பட்ஜெட்டின் தனிச்சிறப்பு அம்சமாக திராவிட மாடலை அமைச்சர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
ரியல் எஸ்டேட் சந்தைகளை உண்மையான விலைகளுடன் ஒருங்கிணைக்கும் ஒரு பெரிய நடவடிக்கையாக, மாநிலத்தில் ஜூன் 9, 2017 நிலவரப்படி 13% குறைக்கப்பட்ட நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு முந்தைய நிலைகளுக்கு மீட்டெடுக்கப்பட்டது, அதே நேரத்தில் பதிவுக் கட்டணம் 4% லிருந்து 2% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பாரபட்சமான ரயில்வே சேவைகளை சுட்டிக் காட்டிய நிதியமைச்சர், இந்தக் குறையை நிவர்த்தி செய்ய டிட்கோ மூலம் ஒரு கூட்டு பொறிமுறை கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று உறுதியளித்தார். கொள்கை அளவில், 2030ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 50%யை தமிழ்நாடு பெற முயற்சி செய்யும் என்றார். இதற்காக குந்தா 500 மெகாவாட் நீர்மின் திட்டம் 2024-25ஆம் ஆண்டிற்குள் செயல்பாட்டுக்கு வரும்.
குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டத்திற்கு தமிழ்நாடு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.7,000 கோடி
பருவநிலை மாற்றத்தோடு இணக்கமாகப் போவதற்கு மாநில அரசு அளிக்கும் முக்கியத்துவத்திற்கு ஏற்ப, ரூ.2,000 கோடி மதிப்பிலான நெய்தல் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் கரையோரம் மற்றும் கடலோர-கடல் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்க மாநில அரசு உத்தேசித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் ஒரு லட்சம் புதிய பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்படும் என்றும், தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ரூ.500 கோடி செலவில் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும், இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார். காலை உணவுத் திட்டத்தால் பள்ளிகளில் அதிக மாணவர்கள் வருகை தருகிறார்கள் என்பது தெளிவாகியிருக்கிறது.
மேலும் படிக்க: தமிழக பட்ஜெட்: மக்கள் கேட்டது கிடைக்குமா?
நிதி ஒதுக்கீடுகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் சட்டமன்றத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட மாநில பட்ஜெட்டில், 5,145 கி.மீ (ரூ.2,000 கோடி) நீளமுள்ள கிராமச் சாலைகளை மேம்படுத்துதல், டாக்டர் அம்பேத்கர் பெயரிலான மாதிரி தொழில் திட்டம் (ரூ.1,000 கோடி), சென்னையில் மூன்று பேருந்து நிலையங்களை வணிக ரீதியாக மேம்படுத்துதல் (ரூ.1, 600 கோடி), 1,000 புதிய பேருந்துகள் வாங்குதல், 500 பழைய பேருந்துகளை புதுப்பித்தல் (ரூ.500 கோடி), பேராசிரியர் அன்பழகன் பெயரிலான திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் மற்றும் ஆய்வகங்கள் (ரூ.1,500 கோடி) ஆகியவை அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த ஒதுக்கீடுகள் தவிர, இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு, கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்கள் உள்ளிட்ட நகரமயமாக்கல், 10,000 கிராம ஏரிகள் மற்றும் குளங்களைப் புனரமைத்தல், ஒகேனக்கல் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டத்தின் அடுத்த கட்டத்தைச் செயல்படுத்துதல், சோழர்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் தஞ்சாவூரில் அருங்காட்சியகம் அமைத்தல் உள்ளிட்ட கொள்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
தமிழகத்தின் 18வது வனவிலங்கு சரணாலயம் ஈரோடு மாவட்டத்தில் 80,567 ஹெக்டேர் பரப்பளவில் பெரியார் வனவிலங்கு சரணாலயம் என்ற பெயரில் அமைக்கப்படும். மரக்காணத்தில் வலசைப் பறவைகள் மையம் (அதற்கான இந்தாண்டு நிதி ஒதுக்கீடு ரூ.25 கோடி) உருவாக்கப்படும். இவை பட்ஜெட்டின் பிற சிறப்பம்சங்களாகும்.
ரூ 9,000 கோடி மதிப்பீட்டில் உருவாகும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் அவிநாசி ரோடு, சத்தி ரோடு பகுதிகளை இணைக்கும்; ரூ. 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மதுரை மெட்ரோ ரயில், திருமங்கலம், ஒத்தக்கடை ஆகிய பகுதிகளை இணைக்கும்
நிதி அமைச்சரால் விவரிக்கப்பட்ட பல திட்டங்கள் பெளதீக உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துகின்றன. அவற்றில் ஒன்று மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் நீலகிரியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக ரூ.100 கோடி செலவில் புதிய விடுதிகள் கட்டுதல் ஆகும்.
சென்னையில் பொது நிகழ்ச்சிகளுக்குப் பிரபலமான இடமான தீவுத்திடலில் 30 ஏக்கர் பரப்பளவில் பொது சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி அரங்கம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: தமிழக பட்ஜெட்: தலித் மக்களை மேம்படுத்துமா?
கவனம் பெறும் வடசென்னை
இந்தியாவின் அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகியவற்றில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. பொதுவாக புறக்கணிக்கப்பட்டதாகக் கருதப்படும் வடசென்னை ரூ.1,000 கோடி சிறப்புத் திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட உள்ளது.
தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடியில் நான்கு வழி மேம்பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ 9,000 கோடி மதிப்பீட்டில் உருவாகும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் அவிநாசி ரோடு, சத்தி ரோடு பகுதிகளை இணைக்கும். அதைப் போல, ரூ. 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மதுரை மெட்ரோ ரயில், திருமங்கலம், ஒத்தக்கடை ஆகிய பகுதிகளை இணைக்கும்.
ரூ.434 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் பணிகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக அறிவித்த தியாகராஜன், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாயங்களைத் தடுப்பது பற்றிp பேசினார்.
வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடி ஆகிய இடங்களில் போக்குவரத்து துறை நிலங்களைப் பயன்படுத்தி, பேருந்து நிலையங்கள் வணிகமயமாக்கப்பட உள்ளன.
இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, 54 அரசு பாலிடெக்னிக்குகள் ரூ.2,783 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளன.
சென்னையில் தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடியில் நான்கு வழி மேம்பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது
கிங் இன்ஸ்டிடியூட்டில் 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை நடப்பு ஆண்டில் திறக்கப்பட உள்ளது, கோயம்புத்தூரில் ரூ.172 கோடியில் செம்மொழி பூங்கா உருவாக்கப்பட உள்ளது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் படைப்புகள் ரூ.5 கோடியில் தமிழில் மொழிபெயர்க்கப்பட உள்ளன. சேலத்தில் 119 ஏக்கரில் 880 கோடி ரூபாய் மதிப்பில் ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.
காவல் நிலையங்களுக்கு ரூ.38.25 கோடியில் சிசிடிவி கேமராக்கள் வாங்கப்படும்.
பணியின் போது உயிரிழக்கும் முன்னாள் படைவீரர்களின் குடும்பங்களுக்குத் தற்போது வழங்கப்பட்டுள்ளதை விட இரு மடங்கு நிவாரணத் தொகையாக ரூ.40 இலட்சம் வழங்கப்படும்.
ஊனமுற்றோருக்கான ஓய்வூதியம் ரூ.1,000ல் இருந்து ரூ.1,500 ஆகவும், கடுமையான ஊனமுற்றோருக்கான ஓய்வூதியம் ரூ.2,000ஆகவும் உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Read in : English