Read in : English
ஒரு நடிகர் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டவரா இல்லையா என்பதை எப்படி அறிவது? அவரது படங்கள் தொடர்ந்து வெற்றிகளைப் பெறுகிறதா, வெவ்வேறு பாத்திரங்களில் நடிக்கிறாரா, ரசிகர்களோடும் திரையுலகினரோடும் சரியான ஒட்டுறவில் இருக்கிறாரா, தன்னைக் குறித்த பிம்பத்தை எப்படிப் பொதுவெளியில் கட்டமைக்கிறார் என்பதைப் பொறுத்து அதனை அளவிட முடியும்.
தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர்கள் என்ற பட்டியலைக் கையிலெடுத்து, ஒவ்வொரு கேள்வியாக வட்டமிட்டு வந்தால் இறுதியில் மிகச்சிலரே மிஞ்சுவார்கள். அப்படித் தான் அறிமுகமான காலம் முதல் இன்றுவரை இந்த வட்டங்களை விட்டு விலகி வெளியே நிற்கும் ஒரு நட்சத்திரம் பிரபுதேவா.
இன்று, ஒரு நடிகராக பிரபுதேவாவுக்கு எத்தனை மதிப்பெண்கள் தருவீர்கள் என்று ரசிகர்களிடம் மைக்கை நீட்டினால், ‘பாஸாகிடுவார்னு நினைக்கறேன்’, ’அவர் டான்ஸ்தானே நல்லா ஆடுவாரு’ என்றே பலரும் பதிலளிப்பார்கள். கண்டிப்பாக அது சரியான மதிப்பீடு அல்ல. அப்படியானால், நடிப்பில் பிரபுதேவா சாதித்தது என்ன?
சென்னையின் பூர்வகுடியாக பிரபுதேவாவைக் காட்டியது ரொம்பவும் பொருந்திப் போனது. சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தவர்களின் அடுத்த தலைமுறையும் அவரை ரசிக்கத் தொடங்கியது
துறுதுறு அறிமுகம்!
‘மௌன ராகம்’, ‘அக்னி நட்சத்திரம்’ தொடங்கி ‘இதயம்’, ‘சூரியன்’, ‘பிரதாப்’, ’ஜென்டில்மேன்’, ‘வால்டர் வெற்றிவேல்’ வரை கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் தனியாக நடனமாடினார் பிரபுதேவா. அப்படத்தின் நாயகர்களைவிட அவரது நடனத்திற்குக் கிடைத்த அதீத வரவேற்பே அவரை நாயகன் ஆக்கியது.
பவித்ரனின் ‘இந்து’, ஷங்கரின் ‘காதலன்’ இரண்டும் 1994ஆம் ஆண்டில் வெளியாகின. இந்துவில் மார்க்கெட்டில் பணியாற்றும் இளம் தொழிலாளி; காதலனில் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி இளைஞன். சமூக, பொருளாதார, கலாசார அடிப்படையில் இவ்விரு பாத்திரங்களும் இரு வேறு முனைகளில் இருப்பவை. அவற்றைத் தாண்டி துறுதுறுவென்று சேட்டைகள் செய்யும் குறும்பான வாலிபர் எனும் ஒற்றுமையும் உண்டு. அதன்பிறகு வந்த படங்களிலும் இந்த சித்தரிப்பு தொடர்ந்தது; அதுவே அவரது இயல்பென்றும் கருதினர் ரசிகர்கள்.
மேலும் படிக்க: சாதாரண பெண்களைப் பிரதிபலிக்கும் திரை நட்சத்திரம் சாய் பல்லவி!
அதற்கு மாறாக, பொதுநிகழ்ச்சிகளில் கூச்ச சுபாவமுள்ளவராக காட்சி தந்தார் பிரபுதேவா. ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசாதவராக இருந்தார். தன் மீது படிந்த பிம்பத்திற்கு மாறான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார் பிரபுதேவா. ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு விஷயத்தை மீறி, வேறொன்றைத் தர முயற்சிப்பதற்கு ஈடானது இது. இந்த முரணே அவருக்கான தனிப்பட்ட ரசிகர்களைக் கலைந்து போகச் செய்தது. ’ராசய்யா’, ‘லவ் பேர்ட்ஸ்’, ’மிஸ்டர் ரோமியோ’, ‘மின்சார கனவு’, ’விஐபி’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘காதலா காதலா’ என்று பல படங்களை இதற்கான உதாரணங்களாகக் கொள்ளலாம்.
சிதைந்த பிம்பம்!
தொண்ணூறுகள் வரை நாயகர்கள் மெட்ராஸ் தமிழ் பேசி நடித்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ‘ரொம்ப பேஜாருப்பா’ என்பது போன்ற சில வார்த்தைகளை ரஜினி உதிர்த்திருக்கிறார்; லூஸ் மோகன் தாக்கத்தில் சில படங்களில் சென்னையைப் பூர்விகமாகக் கொண்டவராக நடித்திருக்கிறார் கமல். விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு உள்ளிட்ட பலரும் அப்படிப்பட்ட பாத்திரங்களில் அதிகமும் தோன்றியதில்லை. இவ்வளவு ஏன், பிழைப்பு தேடி சென்னைக்கு வந்தவர்களாக அன்றைய நாயக பாத்திரங்கள் வார்க்கப்பட்டன? ஏனென்றால், அப்போது சினிமாவில் கோலோச்சியவர்களில் பலரும் அப்படிப்பட்ட பின்னணியைக் கொண்டவர்களாகவே இருந்தனர்.
அந்த காலகட்டத்தில், சென்னையின் பூர்வகுடியாக பிரபுதேவாவைக் காட்டியது ரொம்பவும் பொருந்திப் போனது. சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தவர்களின் அடுத்த தலைமுறையும் அவரை ரசிக்கத் தொடங்கியது. அதற்கேற்றவாறு, முதலிரண்டு படங்களிலும் தான் ஒரு சென்னைவாசி என்று ரசிகர்களை அவர் உணர வைத்திருப்பார். ராசய்யா தவிர்த்து, அடுத்து வந்த பல படங்களில் இந்த பிம்பமும் அவருடனே வளர்ந்தது.
அதேநேரத்தில் அந்த படங்கள் எதுவுமே சென்னையின் சமகாலப் பிரச்சனைகளைப் பேசவில்லை. ஆனால், பார்த்திபன் நடித்த ‘பொண்டாட்டி தேவை’, ‘சுகமான சுமைகள்’, ‘உள்ளே வெளியே’, ‘சரிகமபதநி’ போன்றவை அவ்வாறிருந்தன. யோசித்துப் பார்த்தால், அது போன்ற பாத்திரங்களை பிரபுதேவா ஏற்றிருந்தால் கூடுதல் வரவேற்பு கிடைத்திருக்கும் என்பதே உண்மை.
1999ல் வெளியான ‘நினைவிருக்கும் வரை’யில் மேற்சொன்ன குறைகளைச் சரியாகக் கண்டறிந்து ஒரு பாத்திரத்தைத் தந்தார் இயக்குனர் கே.சுபாஷ். வழக்கமான காதல் கதை என்றபோதும் மெலிதான நகைச்சுவை, ஈர்க்கும் பாடல்கள், உருக்கும் சோகக் காட்சிகள் என்று அப்படம் கவனிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இது போன்ற கதைகளில் தொடர்ச்சியாக நடித்திருந்தால், பிரபுதேவாவின் உயரம் வேறாக இருந்திருக்கும்.
பிரபுதேவா உச்சபட்ச வெற்றியைக் கண்டிருக்க வேண்டிய படம் ’உள்ளம் கொள்ளை போகுதே’; இன்றுவரை ரசிகர்களின் பார்வையில் படாத ரத்தினம் போலவே அது பிரகாசித்துக் கொண்டிருக்கிறது
’சுயம்வரம்’, ’ஜேம்ஸ் பாண்டு’, ‘டபுள்ஸ்’, ’பெண்ணின் மனதைத் தொட்டு’, ‘டபுள்ஸ்’ என்று அதே மீட்டரிலேயே தொடர்ந்து தன் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தார். அவற்றினூடே ‘ஏழையின் சிரிப்பில்’, ‘அள்ளித்தந்த வானம்’, ’சார்லி சாப்ளின்’ போன்ற பெரு வெற்றிகளையும் தந்தார். ஆனாலும், ரசிகர்கள் அவரை ஒரு நட்சத்திரமாகக் கருதவில்லை; அவரது நடிப்புத்திறமையையும் சிலாகிக்கவில்லை.
காரணம், அதற்கு முன்பாக ’லவ் பேர்ட்ஸ்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘மின்சார கனவு’, ‘விஐபி’ என்று பிரபுதேவா தேர்ந்தெடுத்த படங்கள் எல்லாமே, அக்காலத்தில் ‘ஏ’ கிளாஸ் ஆடியன்ஸுக்கானவை. ஆனால், அவற்றில் அவரது நடிப்பு ‘பி’, ‘சி’ ஆடியன்ஸை கவரும்விதமாக இருந்தன. இதனால், அவருக்கு கிடைத்த வெற்றிகள் சுமாரானதாக மாறின. ஒரு படம் வெற்றி பெற்றாலும் அதற்கான காரணமாக பிரபுதேவாவை எவரும் சுட்டவில்லை. அதோடு, ரசிகர் மன்ற நடவடிக்கைகளிலும் அவர் பெரிதாக ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. அதனால், அவருக்கான தனிப்பட்ட ரசிகர்களும் காலத்தே கரைந்து போயினர்.
2001இல் வெளியான ‘உள்ளம் கொள்ளை போகுதே’, பிரபுதேவா உச்சபட்ச வெற்றியைக் கண்டிருக்க வேண்டிய படம். இன்றுவரை ரசிகர்களின் பார்வையில் படாத ரத்தினம் போலவே அது பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. சிறு இடைவெளிக்குப் பிறகு, ‘அலாதீன்’ படத்தில் தனக்கென்று ஒரு நாயக பிம்பத்தைக் கட்டியெழுப்ப பிரபுதேவா முயன்றபோதும் பலன் கிடைக்கவில்லை.
மேலும் படிக்க: ஒரே நேரத்தில் இரண்டு காதலா? சத்தியமா சாத்தியமே இல்ல!
கவனச் சிதறல்!
சோகம், வருத்தம், அப்பாவித்தனம், அலட்சியம், குயுக்தி, கோபம், ஆத்திரம், ஆணவம் என்று வெவ்வேறுவிதமான உணர்வுகளை மிக நுட்பமாக வெளிப்படுத்தும் நடிப்புத்திறனைக் கொண்டவர் பிரபுதேவா. ’எங்கள் அண்ணா’ வரை அவர் நடித்த பல படங்களில் இதனை உணர முடியும்.
2002க்குப் பின்னர், அதிகமும் தெலுங்குப் படங்களுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கினார் பிரபுதேவா. அதே காலகட்டத்தில் தமிழில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் படங்களுக்கு அபார வரவேற்பு கிடைத்தது. சிம்புவும் தனுஷும் அப்போதுதான் அறிமுகமானார்கள். அவர்களிருவரும் பிரபுதேவா கையாண்ட பாத்திர வார்ப்பை அப்படியே தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டனர். முக்கியமாக, பிரபுதேவாவின் இருப்பை எதிர்பார்த்த இயக்குனர்களைத் திசை மாற்றியது தனுஷின் நடிப்பு.
உதாரணமாக, ’திருவிளையாடல் ஆரம்பம்’ போன்ற படங்களில் நம்மால் எளிதாக பிரபுதேவாவைப் பொருத்திப் பார்க்க முடியும்.
2005இல் ‘உனக்கும் எனக்கும்’ படத்தின் மூலமான ‘நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டேனா’ தெலுங்குப் படத்தை முதன்முறையாக இயக்கினார் பிரபுதேவா. தமிழில் ‘போக்கிரி’ ரீமேக், இந்தியில் அதையே ‘வாண்டெட்’ என்ற பெயரில் இயக்கியது என்று நட்சத்திர இயக்குனராக மாறினார். அதன்பிறகு, யாராவது நடித்தே ஆக வேண்டுமென்று கட்டாயப்படுத்தினால் மட்டுமே நடிப்பது என்ற நிலைக்கு நகர்ந்தார்.
இடைப்பட்ட காலத்தில் அவ்வப்போது நடன இயக்குனராகவும் பணியாற்றினார் பிரபுதேவா. ’லக்ஷ்யா’ படத்திற்காக தேசிய விருதையும் வென்றார். வெறுமனே நாயகனாகத் தொடர்வதில் கிடைத்த தோல்விகளும் நடன இயக்குனராகவும் இயக்குனராகவும் பணியாற்றுவதில் காட்டிய ஆர்வமும் அவரை கவனச் சிதறலுக்கு ஆளாக்கின என்பதே உண்மை.
1995வாக்கில் சத்யராஜ், பிரபு, விஜயகாந்த், கார்த்திக் என்று ஒரு தலைமுறை நடிகர்களே தங்களுக்கான கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் குழம்பித் தவித்து தோல்விப்படங்களைக் கொடுத்தனர்; அதே போன்றதொரு தொனியே பிரபுதேவாவின் படங்களிலும் தென்படுகிறது
இரண்டாவது இன்னிங்ஸ்!
2016இல் வெளியான ‘தேவி’ மூலமாகத் தமிழில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார் பிரபுதேவா. அதன்பிறகு, அவர் ஆவலுடன் பணியாற்றிய சில படங்கள் முழுமையடையாமல் நின்று போயின. சில காத்திருப்புக்கு உள்ளாயின. அதையும் மீறி, ’பொன் மாணிக்கவேல்’ படத்தில் பிரபுதேவாவின் இருப்பு எனக்குப் பிடித்திருந்தது.
ஆனால், இன்றைய ரசிகர்களுக்கு ஏற்ற கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் பிரபுதேவா பின்தங்கியிருப்பதாகவே படுகிறது. ஏனென்றால், 1995வாக்கில் சத்யராஜ், பிரபு, விஜயகாந்த், கார்த்திக் என்று ஒரு தலைமுறை நடிகர்களே தங்களுக்கான கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் குழம்பித் தவித்து தோல்விப்படங்களைக் கொடுத்தனர்.
அதே போன்றதொரு தொனியே பிரபுதேவாவின் படங்களிலும் தென்படுகிறது. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் பின்பற்றப்பட்ட நாயகனுக்கான அம்சங்களைத் தவிர்த்துவிட்டு நடிக்கத் தொடங்கினால், மீண்டும் பிரபுதேவா ஒரு ரவுண்ட் வரலாம்.
தனித்துவமாக ஒரு களத்தை அடிப்படையாகக் கொண்ட சீரியஸான கதைகளை தேர்ந்தெடுக்கலாம் அல்லது முழுக்க முழுக்க கமர்ஷியல் அம்சங்கள் மட்டுமே இருக்கிற ’டெம்ப்ளேட்’ கதைகளில் ஹீரோயிசம் காட்டாமல் நடிக்கலாம் அல்லது வயதுக்கும் தோற்றத்திற்கும் ஏற்ற முக்கியத்துவமுள்ள வேடங்களில் தோன்றலாம்.
’விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதியின் பாத்திரத்தில் பிரபுதேவாவை நடிக்க வைக்க முயற்சி நடந்ததாக ஒரு தகவல் வெளியானது. அவ்வாறு நிகழ்ந்திருந்தால், இத்தனை ஆண்டுகளாக பிரபுதேவாவை ரசித்து வருபவர்கள் குதூகலத்தின் உச்சத்தைத் தொட்டிருப்பார்கள்.
என்ன இருந்தாலும், ஒரு கலைஞன் தன் விருப்பத்திற்கேற்றாற் போல செயல்படுவதுதான் நியாயம். அதனால் பிரபுதேவா எடுக்கும் முடிவுகளுக்கு மதிப்பளிப்பது அவசியம். ஒரு கொரியோகிராபர் ஆகவும் இயக்குனராகவும் பிரபுதேவா கொண்டாடப்பட்டுவிட்டார். ஒரு நடிகராகவும் தனக்கான உயரத்தை அவர் எட்ட வேண்டும். ஒரே ஒரு பெருவெற்றி அதனைச் சாத்தியப்படுத்தும். பஹீரா, வுல்ஃப் என்று அடுத்து வரும் படங்கள் அதனைச் சாதித்தால் மகிழ்ச்சி!
Read in : English