Read in : English

திரையில் சாதாரண பெண்களைப் பிரதிபலிக்கும் நட்சத்திரம் சாய் பல்லவி> அறுபதுகளில் சாவித்திரி, எழுபதுகளில் சாரதா, எண்பதுகளில் ஷோபா, சுஹாசினி, ரேவதி, அர்ச்சனா உள்ளிட்ட மிகச்சிலர், தொண்ணூறுகளின் இறுதியில் சுவலட்சுமி, 2000களில் அஞ்சலி என்று திரையில் சாதாரண பெண்களைப் பிரதிபலிக்கும் நட்சத்திரங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

ஒவ்வொரு ரசிகரின் மனதிலும் இது போன்றதொரு பட்டியல் இருக்கும். அந்த வகையில், 2010க்குப் பிறகு நடித்து வருபவர்களில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்திகா சிங், லிஜிமோள் ஜோஸ் போல என் மனதைக் கவர்ந்தவர் சாய் பல்லவி.

மேலே குறிப்பிட்ட இதர நட்சத்திரங்களைப்போல, சாய் பல்லவியும் கூட வெறுமனே அழகு சார்ந்து ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டவர் அல்ல; தேர்ந்தெடுக்கும் கதைகள், நடிக்கும் கதாபாத்திரம், அப்படம் ரசிகர்களிடையே உண்டாக்கும் தாக்கம், பொதுவெளியில் பெறும் மரியாதை என்று பல காரணங்கள் இதன் பின்னுண்டு.

எல்லாவற்றுக்கும் மேலாக, சாதாரண பெண்களின் வலிகளை, உணர்வுகளை, ஆசாபாசங்களைத் திரையில் பிரதிபலித்தவாறே புகழ்மிக்க நட்சத்திர நடிகையாகவும் ஜொலிப்பது நிச்சயமாக அசாதாரணமான விஷயம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சாதாரண பெண்களின் வலிகளை, உணர்வுகளை, ஆசாபாசங்களைத் திரையில் பிரதிபலித்தவாறே புகழ்மிக்க நட்சத்திர நடிகையாகவும் ஜொலிப்பது நிச்சயமாக அசாதாரணமான விஷயம்

‘கஸ்தூரி மான்’, ‘தாம்தூம்’ படங்களில் பதின்பருவத்து சிறுமியாகச் சில பிரேம்களில் தலைகாட்டினாலும் தமிழில் ’உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’, தெலுங்கில் ‘தீ சீசன்4’ எனும் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது கோயம்புத்தூரைச் சேர்ந்த நடுத்தரக் குடும்பத்துப் பெண் என்பதுதான் சாய் பல்லவியின் அடையாளம்.

நடனம் பிடித்தமான கலை என்றபோதும், அதில் மட்டுமே மூழ்கி முத்தெடுக்க முனையாமல் மருத்துவம் படிக்க ஜார்ஜியாவுக்குச் சென்றவர்.

2014இன் இறுதியில் ‘பிரேமம்’ படத்தில் நடிக்க அழைப்புவந்தபோது கூட, கல்லூரி விடுமுறை நாட்களில் இந்தியா வந்து நடித்துச் சென்றிருக்கிறார். ஆனால், அப்படத்தில் வரும் மலர் டீச்சர் பாத்திரத்தைப் பார்க்கும்போது ‘சும்மா ட்ரை பண்ணி பார்ப்போம்’ என்ற எண்ணம் அவரது நடிப்பில் கொஞ்சமும் தென்படவில்லை என்பதை உணர முடியும். பிரேமத்தில் இடம்பெற்ற மூன்று நாயகிகளுக்கும் ரசிகர்கள் பேராதரவைத் தந்தனர்.
அனுபமாவும் மடோனாவும் ‘கமர்ஷியல் பிலிம்’ ஹீரோயின்களாக உருமாறியபோதும், சாய் பல்லவி மட்டும் தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்தார். அது மட்டுமே, இன்று அவரைக் குறித்து விவாதிக்கும் சூழலை உருவாக்கியிருக்கிறது. இப்போதும் ‘மலரே.. மலரே..’ என்று ரசிகர்களை ஆராதிக்கச் செய்கிறது.

‘பிரேம’த்தைத் தொடர்ந்து மலையாளத்தில் ‘கலி’, தெலுங்கில் ‘பிடா’, ‘மிடில் கிளாஸ் அப்பாயி’, தமிழில் ‘தியா’ என்று வரிசையாக சாய் பல்லவி நடித்த படங்களில் ஒரு ஒற்றுமை இருக்கும். வெறுமனே நாயகன் பின்னால் சுற்றூம் ‘லூசுப்பெண்’ வேடங்களாக அவை இல்லை. தமிழில் சாய் பல்லவி நடித்த ‘மாரி 2’, ‘என்ஜிகே’ இந்த வரிசையில் இருந்து கொஞ்சமாய் விலகியிருக்கும்.

கோவிட்-19 காலகட்டத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘பாவக்கதைகள்’ ஆந்தாலஜியில் கனமான வேடம். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரைக் காதலித்து மணந்து கர்ப்பமாகி பின் பிறந்தவீட்டாரால் வளைகாப்பு நடத்த அழைத்துச் செல்லப்பட்டு ஆணவக்கொலைக்கு ஆளாகும் பாத்திரம். சுமார் அரை மணி நேரமே ஓடும் அப்படைப்பிலும்கூட அவருக்கான முக்கியத்துவத்தில் குறைவிருக்காது.

அதன்பின் வெளியான ’லவ் ஸ்டோரி’, ‘ஷ்யாம் சிங்கராய்’, ‘விராட பர்வம்’, தற்போது ஓடிக் கொண்டிருக்கும் ‘கார்கி’யிலும் கூட இதே கதைதான்.

’லவ் ஸ்டோரி’யில் சாப்ட்வேர் துறையில் வேலை கிடைக்காத காரணத்தால், தன் ஊரைச் சேர்ந்த இளைஞனுடன் சேர்ந்து ‘டான்ஸ் ஸ்கூல்’ நடத்தும் பாத்திரம். வங்க தேசத்தில் இருந்து புலம்பெயர்ந்து மேற்கு வங்காளத்தில் நுழைந்த தேவதாசியாக ‘ஷ்யாம் சிங்கராய்’யில் வருவார். இதிலெல்லாம் பெரிதாக சர்ச்சைகள் இல்லை எனும் விதமாக, நக்சலைட் தலைவர் ஒருவரைக் காதலிக்கும் இளம்பெண்ணாக ‘விராட பர்வம்’ படத்தில் நடித்திருப்பார்.

மேலும் படிக்க:
சமந்தா – தலை வணங்கா தாரகை

‘நான் எப்படி சாவித்திரியாகவில்லை’- நடிகை ஜமுனா மனம் திறந்த பேச்சு

அந்த வரிசையில், தற்போது பத்து வயது சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் மகளாக ‘கார்கி’யில் வாழ்ந்திருக்கிறார் சாய் பல்லவி. இந்நான்குமே ’பெண்கள் இப்படித்தான் இயங்க வேண்டும்’ என்று பொதுவெளியில் உலவும் நியதிகளுக்கு எதிர்த்திசையில் இருப்பவை. அதேநேரத்தில், இவை எதுவுமே ‘சூப்பர் வுமன்’ பாத்திரங்களாகவும் இல்லை.

ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன்பே, தான் நடிக்கும் பாத்திரம் திரையில் இப்படித்தான் வெளிப்படும் என்பதைக் கணிக்க மிகக்கூர்மையான அவதானிப்பு தேவை. சாய் பல்லவி இதுவரை நடித்திருக்கும் 13 படங்களிலும் (தியா தெலுங்கிலும் பை லிங்குவல் ஆக தயாரானது) வித்தியாசமான ஆளுமையைக் காண முடியும். கிட்டத்தட்ட ‘ஒரு கலகக்காரி’ என்று சொல்லும் வகையிலேயே அப்பாத்திரங்கள் வார்க்கப்பட்டிருக்கின்றன.

‘பிரேமம்’ படத்தில் சாய் பல்லவியின் முகத்தில் நிறைந்திருந்த பருக்களின் வடுக்களை விமர்சித்தவர்களின் எண்ணிக்கை கணிசம். ஒல்லியான உடல்வாகு, சுருண்ட முடி, சிவந்த நிறம், பெரிய பற்களை உணர்த்தும் புன்னகை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாயகி என்கிற பிரமிப்பைக் கடுகளவும் உருவாக்காத தோற்றம் என்று பல அம்சங்கள் அவரைக் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாக்கின; ஒருகட்டத்தில் அதுவே அவரது சிறப்புகளாகவும் மாறின.

சில ஆண்டுகளுக்கு முன் ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அளித்த பேட்டியொன்றில், ‘அதிக பருக்கள் இருந்த காரணத்தாலேயே சாய் பல்லவியை மலர் பாத்திரத்திற்காகத் தேர்ந்தெடுத்தேன்’ என்று தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் ‘கார்கி’ பட வெளியீட்டையொட்டி கலாட்டா இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அதே கேள்வி மீண்டும் கேட்கப்பட்டது. அப்போது, ‘கால மாற்றத்தில் பருக்கள் தானாக மறைந்துபோகும். அதுக்கு நானே உதாரணம்’ என்று பதிலளித்தார் சாய் பல்லவி. அழகை நினைத்து தன்னையே தாழ்த்திக்கொள்ளும் பெண் மனங்களுக்கு இந்த பதில் நிச்சயம் ஒரு மாமருந்து.

’கமர்ஷியல் சினிமா’ எனும் குறுகிய வட்டத்திற்குள் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க நட்சத்திர நாயகர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்களோ, அது போலவே தனக்குக் கிடைத்த கிரீடத்தைச் சாய்பல்லவி சுமப்பதும் சவால் நிறைந்தது

அதே நிகழ்ச்சியில் மாதவிலக்கு பற்றி விஜே பார்வதி கேள்வி கேட்க, கொஞ்சமும் யோசிக்காமல் ‘நான் இதுவரை நடித்த எல்லா படங்களிலும் பாடல் படப்பிடிப்புகள் மாதவிலக்கு நாட்களிலேயே நடத்தப்பட்டன ‘ஷ்யாம் சிங்கராய்’ தவிர..’ என்று பதிலளித்தார். பணி நிமித்தம் வீட்டு வாசலைத் தாண்டும் எந்தவொரு பெண்ணும் இதே பதிலைத்தான் சொல்லியிருப்பார். தானும் அவர்களில் ஒருவர் என்றே இப்பதில் மூலம் உணர வைக்கிறார் சாய் பல்லவி.

பத்து வயது சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் மகளாக ‘கார்கி’யில் வாழ்ந்திருக்கிறார் சாய் பல்லவி (Photo credit: Kaushik LM@LMKMovieManiac- twitter)

எல்லா பொதுநிகழ்வுகளிலும் ஏன் சேலை அணிகிறீர்கள்? இந்த கேள்வி அவரை நோக்கி வீசப்பட்டபோது ‘அதுதானே நமது கலாசாரம்’ என்றெல்லாம் பதில் சொல்லவில்லை. பிரேமம் படத்தில் தான் டேப் டான்ஸ் ஆடிய வீடியோவில் ஆடை விலகிய கணத்தை மட்டும் தனியே துண்டித்து அக்காட்சி சமூகவலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியதாகவும் அதிலிருந்து வெளியிடங்களில் ‘ஸ்கின்னி’ ரக ஆடைகளை அணிவதில்லை என்றும் விடை தந்தார். இப்போதும் வெஸ்டர்ன் ஆடைகளை அணிவதில் தனக்கு வெறுப்பு கிடையாது என்றார்.

‘விராட பர்வம்’ படத்தில் நக்சலைட்டாக நடித்தது பற்றி தெலுங்கு யூடியூப் சேனலொன்றில் பேசியபோது, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ பற்றி ஒரு கருத்தை உதிர்த்தது வைரல் ஆனது. ‘காஷ்மீரில் பண்டிட்கள் படுகொலை செய்யப்படுவது பயங்கரவாதம் என்றால், மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று ஒரு முஸ்லிமை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உச்சரிக்கச் சொல்லி கடுமையான தாக்குதலுக்கு ஆளாக்குவதும் பயங்கரவாதம்தான்.

மதத்தின் பெயரால் நடக்கும் இது போன்ற நிகழ்வுகளை நாம் ஒன்றாகத்தான் கருத வேண்டும்’ என்றார். அவ்வளவுதான், ’பண்டிட்கள் படுகொலை செய்யப்படுவதும் இதுவும் ஒன்றா’ என்று கண்டனங்கள் குவிந்தன.

வேறொருவராக இருந்தால் ‘தவறுதலாக பேசிவிட்டேன்’ என்றோ, ‘நான் அப்படிச் சொல்லவில்லை’ என்றோ நழுவியிருக்கக் கூடும். ஆனால், சாய் பல்லவி விளக்கம் தந்தார். ஏற்கனவே சொன்னதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்றவர், ‘மதத்தின் பெயரால் நாம் மற்றவர்களைத் துன்புறுத்தக்கூடாது’ என்ற கருத்தை மட்டுமே வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டார். துணைக்கு எவ்வித அரசியல் சார்பையும் எதிர்பார்க்காமல் இப்படிப் பேசுவதற்கு அதீத துணிச்சல் வேண்டும்.

‘விராட பர்வம்’, ‘கார்கி’ இரண்டிலும் சாய் பல்லவியின் நடிப்பு அபாரம் என்று குவியும் பாராட்டுகளின் நடுவே, இந்த சர்ச்சையே கூட ‘சிறந்த நடிகை’ விருதைப் பெற தடையாக மாறக்கூடும்.

சாய் பல்லவி திரையில் ஏற்கும் கதாபாத்திரங்களும் சரி, பொதுவெளியில் அவர் உதிர்க்கும் கருத்துகளும் சரி, நமக்கு ஒன்றை மட்டுமே உணர்த்துகின்றன. அவர் சாதாரண யுவதிகளின் திரை உருவம். எந்தவொரு இளம்பெண்ணும் சாய் பல்லவியைத் தன்னுடன் பொருத்திப் பார்ப்பது எளிது.

’கமர்ஷியல் சினிமா’ எனும் குறுகிய வட்டத்திற்குள் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க நட்சத்திர நாயகர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்களோ, அது போலவே தனக்குக் கிடைத்த கிரீடத்தைச் சாய்பல்லவி சுமப்பதும் சவால் நிறைந்தது. ‘கார்கி’யின் வெற்றி அதனை ‘அண்டர்லைன்’ செய்திருக்கிறது!

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival