Read in : English
கடந்த பிப்ரவரி 1 அன்று ஒன்றிய அரசு தாக்கல் செய்திருக்கும் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 இலட்சத்திலிருந்து ரூ.7 இலட்சத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. மாதச் சம்பளம் வாங்கும் மக்களுக்கு இதுவொரு நல்ல விசயம் என்று சந்தோசப்பட்டால் இந்த வரிவிலக்கு வரம்பு உயர்வு புதிய வரி அமைப்புக்கு மட்டுமே பொருந்தும் என்று சொல்லி சந்தோசத்தைக் காணாமல் செய்து விடுகிறார்கள்.
அப்படியென்றால் புதியவரி அமைப்பிற்கும் பழைய வரி அமைப்பிற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? தனிநபர் வரி செலுத்துவோருக்கு எது நல்லது? என்ற கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள் அருண், சுந்தர் என்ற இரண்டு வரி ஆலோசகர்கள். இன்மதிக்குத் தந்த நேர்காணலில் வரிவிலக்குகள் பற்றியும் திட்டமிட்டு வரி செலுத்துதல் பற்றியும், சேமிப்பு முறைகள் பற்றியும் விலாவாரியாக எடுத்துரைத்தனர்.
“புதியவரி அமைப்பு மூன்றாண்டுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது (2020-21 நிதியாண்டு). இப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொண்டுவந்த பட்ஜெட்டில் வரி செலுத்துவோர் பழையவரி அமைப்பினைத் தேர்ந்தெடுக்காவிட்டால், அவர் புதிய வரி அமைப்பில் இருப்பதாகவே கருதப்படுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் புதியவரி அமைப்பு பெரும்பாலும் வரி செலுத்துவோர்களைக் கவரவில்லை என்பதால் அதைச் சரிசெய்து சீர்படுத்தி இந்தப் பட்ஜெட்டில் அழுத்தமாக்கியிருக்கிறது ஒன்றிய அரசு.
புதிய வரி அமைப்பில் முன்பிருந்ததைப் போல வருமானவரி விலக்குகள் இல்லை; ஸ்டாண்டர்டு கழிவுகளான சேமநிதிப் பிடித்தம் போன்றவற்றைத் தவிர வேறெந்த விலக்குகளும் கிடையாது. வீட்டுக்கடன் வட்டி, அசல், போன்றவற்றிற்கான வரிவிலக்கு, காப்பீட்டு பிரீமியத்திற்கான வரிவிலக்கு, முதலீடுகளுக்கான வரிவிலக்கு ஆகியவை பழைய வரி அமைப்பில்தான் இருக்கிறது. ஆனால் அதில் மூன்று இலட்சம் வரைக்கும் வரி இல்லை; இந்த வரிவிலக்குகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட ரூ. 7 இலட்சம் வரைக்கும் வரியில்லாமல் போய்விடும் என்றார் சுந்தர்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொண்டுவந்த பட்ஜெட்டில் வரி செலுத்துவோர் பழைய வரி அமைப்பினைத் தேர்ந்தெடுக்காவிட்டால், அவர் புதிய வரி அமைப்பில் இருப்பதாகவே கருதப்படுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது
அதனால்தான் புதிய வரி அமைப்பில் இந்த வரிவிலக்குகளை நீக்கிவிட்டு மொத்தமாக ரூ.7 இலட்சம் வரைக்கும் வரியில்லை என்று அறிவித்திருக்கிறது அரசு. ஆனால் நான் இதை ரூ.7.50 இலட்சம் என்று எடுத்துக்கொள்வேன்” என்றார் அருண்.
“ஏனென்றால் பிஎஃப், குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் ஆகிய ஸ்டாண்டர்டு கழிவையும் கணக்கில் எடுத்துக்கொண்டாக வேண்டும். அதனால் மாதம் ரூ.60,000க்கும் சற்று அதிகமாகச் சம்பாதிப்பவர்களுக்கு இந்தப் பட்ஜெட்டில் வரியில்லை. ஆனால் கடந்த ஆண்டு புதிய வரியமைப்பில் விலக்குகள் பெற்றாலும் இந்த வருமானத்திற்கு ரூ.39,000 வரி கட்டினார்கள்” என்று கூறினார்.
வரிசெலுத்துவோர்களுக்கு எது சிறந்தது? புதிய வரியமைப்பா? பழைய வரியமைப்பா?
மேலும் படிக்க: மேம்போக்கான பட்ஜெட்: ஆத்ரேயா விமர்சனம்!
“பழைய வரியமைப்பில் வரிவிலக்குகள் பெற வேண்டும் என்பதற்காக மக்கள் சேமிப்பையும் முதலீடுகளையும் மேற்கொண்டார்கள். ஆனால் அவற்றிற்காக அவர்கள் மேலும் பணம் செலவழிக்க வேண்டியிருந்தது. முதலீட்டையும் சேமிப்பையும் ஊக்குவிக்கிறது என்ற கோணத்தில் பார்க்கும்போது பழைய வரியமைப்பு நல்லது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் களநிஜம் வேறாக இருக்கிறது.
புதிய வரி அமைப்பில் ஒட்டுமொத்தமாக ரூ.7.50 இலட்சத்திற்கு வரி கிடையாது. உங்கள் ஆண்டு வருமானம் ரூ.12 இலட்சம் என்றால், பழைய வரி அமைப்பில் விலக்குகள் பெற்றாலும் நீங்கள் கட்ட வேண்டிய வரி ரூ.1,11,800. ஆனால் அதே வருமானத்திற்குப் புதிய வரி அமைப்பில் வரி ரூ.85,800தான் வரும். இதில் வரிவிலக்குகளுக்கு இடமில்லை என்றாலும் வரி குறைவாகத்தான் வருகிறது. ஆதலால் புதியவரி அமைப்பு நல்லதுதான்” என்றார் அருண்.
“வரிவிலக்குக்காக சேமிப்பது சரியானதல்ல; அதைத்தான் பழைய வரியமைப்பு ஊக்குவித்தது. புதிய வரியமைப்பில் ஆண்டுக்கு ரூ.12 இலட்சத்திற்கு மேல் வருமானம் கொண்டிருப்பவர்களுக்குச் சேமிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அவர்கள் பிபிஎஃப்பில் முதலீடு செய்யலாம்” என்றார் அருண்.
“பிக்ஸெட் டெபாசிட்டை விட இது சிறந்தது. சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டிய வழக்கில் கூட நீதிமன்றத்தால் ஒருவரின் பிபிஎஃப் சேமிப்பில் கைவைக்க முடியாது என்பது இதன் விசேஷம்.
உங்கள் ஆண்டு வருமானம் ரூ.12 இலட்சம் என்றால், பழைய வரி அமைப்பில் விலக்குகள் பெற்றாலும் நீங்கள் கட்ட வேண்டிய வரி ரூ.1,11,800; அதே வருமானத்திற்குப் புதிய வரி அமைப்பில் வரி ரூ.85,800தான் வரும்
பரஸ்பர நிதி என்ற மியூச்சுவல் ஃபண்டும், எஸ்ஐபி என்ற சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளானும் நல்லது. பரஸ்பர நிதியில் கடன் நிதி, பங்கு நிதி என்ற இரண்டு உண்டு. கடன் நிதியில் அவ்வளவாக இலாபம் வருவதில்லை. பங்கு நிதியில் பங்குச்சந்தையின் போக்கிற்கேற்ப இலாபம் கூடலாம்; குறையலாம். மொத்தத்தில் மியூச்சுவல் ஃபண்டைப் பற்றிய நல்ல அறிவும் பயிற்சியும் இல்லாமல் அதில் முதலீடு செய்யக்கூடாது” என்றார் சுந்தர்.
புதியவரி அமைப்பில் வீட்டுக்கடனுக்கான வரிவிலக்கு இல்லை என்பதால் வீட்டுக்கடன் தொழில் பாதிக்கப்படுமா?
“இல்லை. ஆண்டு வருமானம் ரூ.15 இலட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் வீட்டுக்கடன் வாங்குவார்கள். அதனால் இந்தத் தொழில் பாதிக்கப்படாது. ஆனால் வட்டிவிகிதங்கள் நிலையாக இருப்பதில்லை. அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டிய கடமை வீட்டுக்கடன் தரும் வங்கிகளுக்கு இருக்கிறது” என்றார் சுந்தர்.
மேலும் படிக்க: பொருளாதார ஆய்வு அறிக்கை காட்டும் தமிழ்நாட்டு முன்னேற்றம்!
பெண்களுக்கென்று பட்ஜெட்டில் திட்டம் ஒன்றும் இல்லையா?
“மஹிளா சம்மன் சேமிப்பு சர்ட்டிபிகேட் என்று பெண் குழந்தைகளுக்கான திட்டத்தை பட்ஜெட் அறிவித்திருக்கிறது. அதில் 7.5 சதவீதம் வட்டி தரப்படுகிறது. இது பெண்களுக்கு என்று சொல்வதை விட பெண் குழந்தைகளுக்கானது என்பதே சரியானது” என்றார் சுந்தர்.
“அதீதமான வருவாய் மதிப்பு கொண்ட (ஹை நெட்வொர்த்) வரிசெலுத்துவோர்களுக்கு அதிக வரியையையும், நடுத்தர வகுப்பினர்க்கு வரி குறைப்பையும் செய்கிறது புதிய வரியமைப்பு.
உதாரணமாக, ஹை நெட் வொர்த் மக்கள் ரூ,.10 கோடிக்கு மேலான மதிப்பு கொண்ட வீடு வாங்கும்போது அவர்கள் ரூ. 10 கோடிக்கு மட்டுமே வரி விலக்கு பெற முடியும்.
மொத்தத்தில் ஆறு ’ஸ்லாப்’ வரிவிதிப்புக் கட்டுமானம் கொண்ட இந்தப் புதிய வரியமைப்பை வரி செலுத்துவோர்கள் மத்தியில் பிரபலமாக்கி அனைவரையும் அதன் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதுதான் ஒன்றிய அரசின் திட்டம்” என்று முடித்தார் சுந்தர்.
Read in : English