Read in : English

இன்மதியின் வேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேர்காணல் தந்த டாக்டர். பாலாஜி சம்பத், எய்ட் இந்தியா என்னும் அரசுசாரா தொண்டு நிறுவனத்தின் செயலராகவும் கல்வியாளராகவும் செயல்படுகிறார்.

2022 நவம்பரில் வெளிவந்த ஒன்றிய அரசின் வருடாந்திர கல்விநிலை அறிக்கை (அசெர்) தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிக் குழந்தைகள் அடிப்படை வாசிப்புத் திறன் மற்றும் கணிதவியல் திறனில் மிகவும் பின்தங்கியிருப்பதாகச் சொல்கிறது. பொதுவாக கல்வியில் முன்னேறிய மாநிலம் என்ற பெயர் தமிழ்நாட்டிற்கு எப்போதும் உண்டு.

இந்தப் பெருமை உணர்வுக்கு அடிகொடுப்பது போல அறிக்கை சொல்லும் செய்தி உண்மையா? உண்மையெனில் ஏன் இந்த வீழ்ச்சி? அதன் காரணிகள் என்ன? இந்தக் கேள்விகளுக்கு ஆய்வுப்பூர்வமான அணுகுமுறையோடு பதிலளித்திருக்கிறார் பாலாஜி சம்பத்.

ஐஐடியில் பி.டெக் முடித்த பாலாஜி சம்பத் அமெரிக்காவில் முனைவர் பட்டப்படிப்பை முடித்தார்; இந்தியா திரும்பியதும் நண்பர்கள் உதவியுடன் அவர் ஆரம்பித்த ‘எய்ட் இந்தியா’ சுமார் 27 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ‘எய்ட் இந்தியா 2,000 கிராமங்களில் இருளர் உட்பட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகியவற்றில் அடிப்படைப் பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் ஏழைகளுக்கு வீடுகட்டிக் கொடுக்கிறோம்’ என்று பேச ஆரம்பித்தார் பாலாஜி.

தமிழ்நாட்டில் வாசிப்புத் திறன் மற்றும் அடிப்படைக் கணக்கியல் திறனில் தொடக்கப்பள்ளிக் குழந்தைகள் மிகவும் பின்தங்கியிருப்பதாகச் சொல்கிறது அசெர். இந்த வருடாந்திரக் கல்வி நிலை ஆய்வு எப்படி நடத்தப்படுகிறது?

தமிழ்நாட்டில் வாசிப்புத் திறன் மற்றும் அடிப்படைக் கணக்கியல் திறனில் தொடக்கப்பள்ளிக் குழந்தைகள் மிகவும் பின்தங்கியிருப்பதாகச் சொல்கிறது அசெர்

அதிகாரப்பூர்வமான இந்த கள ஆய்வில் 2005 முதல் 2011ஆம் ஆண்டு வரை தானும் ஈடுபட்டிருந்ததாகச் சொன்ன பாலாஜி, சமீபத்திய அசெர் ஆய்வுகளில் கலந்துகொள்ளவில்லை என்றார். எனினும், ஆய்வு அறிக்கைகளைத் தான் வாசிப்பதாகவும் அவற்றின் அடிப்படையில் விளக்கங்களைத் தயாரிப்பதாகவும் கூறினார்.

“இந்த ஆய்வு கிராமங்களில் தொடக்கக்கல்வி பயிலும் குழந்தைகளின் கற்றல்திறனை ஆராய்ச்சி செய்கிறது. ஒரு மாவட்டத்தில் மொத்தம் 30 கிராமங்களில் ஆய்வு செய்யப்படுகிறது. அடுத்த ஆய்வுக் காலத்தில் புதிதாக 20 கிராமங்களும் முன்பு ஆய்வு செய்யப்பட்ட பழைய 10 கிராமங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

மேலும் படிக்க: ஜேஈஈ, நீட் தேசிய நுழைவுத் தேர்வுகளில் தமிழகத்திற்கு ஆர்வம் பிறந்துவிட்டதா?

ஆய்வு ஆர்வலர்கள் கிராமங்களுக்குச் சென்று வீடுதோறும் மதிப்பீடு செய்கிறார்கள். பள்ளிகளில் இந்த ஆய்வு நடத்தப்படுவதில்லை. ஏனென்றால் பள்ளியில் பயிலும் குழந்தைகளைத் தவிர வெளியே இருக்கும் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள், எங்கே படிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது.

’ஸ்டாண்டர்டு 2 டெஸ்ட்’ என்றறியப்படும் இந்த ஆய்வில் 2ஆம் வகுப்புப் பாடங்களிலிருந்து ஒரு கதை 5 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும். அந்தக் குழந்தைகள் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளில் படித்துக் கொண்டிருக்கலாம்.

டாக்டர். பாலாஜி சம்பத், எய்ட் இந்தியா என்னும் அரசுசாரா தொண்டு நிறுவனத்தின் செயலாளர்

அந்தக் கதையை அவர்களால் வாசிக்க முடிகிறதா என்பது பரிசோதிக்கப்படும்; வாசிக்கத் திணறும் குழந்தைகளுக்குச் சில பத்திகள் வாசிக்கக் கொடுக்கப்படும். அவற்றையும் வாசிக்க முடியாத குழந்தைகளிடம் சில வாக்கியங்கள் வாசிக்கும்படி சொல்லப்படும்.

அந்த வாக்கியங்களை வாசிக்கத் தவறும் குழந்தைகளுக்கு வார்த்தை வாசிப்பு சோதனை நடத்தப்படும். அதில் தவறினால் அரிச்சுவடி எழுத்துக்களை வாசிக்குமாறு சொல்லப்படும். நான்கு படிநிலைகள் கொண்டது இந்தக் களப்பரிசோதனை; பத்தி, வாக்கியம், வார்த்தை, அரிச்சுவடி எழுத்து ஆகியவை அந்த நான்குப் படிநிலைகள்.

கணிதவியல் திறன்களைப் பொறுத்தவரை அந்தக் குழந்தைகளுக்குக் கழித்தல், வகுத்தல் கணக்குகள் மட்டுமே கொடுக்கப்படும். அதன்மூலம் அவர்களின் திறன்கள் மதிப்பீடு செய்யப்படும்.

இதுபோக, ஆய்வுக் களப்பணியாளர்கள் கிராமத்திலிருக்கும் ஆகப்பெரிய பள்ளி ஒன்றிற்குச் செல்வார்கள். அங்கே கட்டிடங்களின் நிலை, ஆசிரியர்களின் வருகை, கற்பித்தல் முறைகள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வார்கள். இதில் சுவாரஸ்யமான விசயம் என்னவென்றால் அந்தக் குழு வருகின்ற நாளில் சில ஆசிரியர்கள் சுய விடுமுறையில் போய்விடுவார்கள்.

2010களின் தொடக்கத்திலிருந்து அரசுப் பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கை படுமோசமான விகிதத்திலேதான் இருந்து வந்திருக்கிறது; இந்த நிலை பெருந்தொற்றுக்குப் பின்னான காலத்தில் சரியாகியிருக்கிறது

அதனால் ஆய்வுக்குழு விஜயம் செய்யும் நாளில் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அதனால் முந்தைய நாளில் வருகை தந்த ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் குழு கணக்கில் எடுத்துக் கொள்ளும். இந்தமாதிரியான விசித்திரமான போக்கு பெரும்பாலும் பீகார் போன்ற வட இந்திய மாநிலங்களில் அதிகம் நிலவுகிறது”.

2022ஆம் ஆண்டு அசெர் தரவுகளைப் பற்றி விளக்கமாகச் சொல்ல முடியுமா?

“2018ஆம் ஆண்டிற்கான அசெரை விட 2022ஆம் ஆண்டு அசெர் சில நல்ல விசயங்களையும் சொல்லியிருக்கிறது. உதாரணமாக, கோவிட் பெருந்தொற்றால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் நாட்டில் கல்வித்துறையின் ஒட்டுமொத்த நிலை சிறப்பாகவே இருக்கிறது.

பெருந்தொற்றுக்குப் பிந்திய காலத்தில் பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் விகிதம் பாதிக்கப்படவில்லை. இந்த விகிதம் தேசிய அளவில் 98.4 சதவீதம்; தமிழ்நாட்டில் 99.8 சதவீதம். இது தமிழ்நாடு அரசுக்குப் பெருமை சேர்க்கும் விசயம்.

மேலும் படிக்க: ஒரு கிராமத்தின் முதல் பட்டதாரி சௌமியா!

பொதுவாக 2010களின் தொடக்கத்திலிருந்து அரசுப் பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கை படுமோசமான விகிதத்திலேதான் இருந்து வந்திருக்கிறது. இந்த நிலை பெருந்தொற்றுக்குப் பின்னான காலத்தில் சரியாகியிருக்கிறது என்பது அசெர் சொல்லும் நல்லதொரு செய்தி.

அரசுப் பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கை விகிதம் 2022ல் தேசிய அளவில் 65லிருந்து 73 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் 2018ல் இருந்த 67 சதவீதம் 2022ல் 76 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. தமிழ்நாடு அரசு இந்த நிலவரத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

இலவச மதிய உணவுத்திட்டம், காலையுணவுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, இலவச சீருடை, காலணி ஆகிய திட்டங்கள் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதில் பெரும்பங்கு வகித்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

கோவிட் காலத்தில் கிராமத்துப் பெண்குழந்தைகள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்து குடும்பத்திற்கு உதவும் பணிகளில் ஈடுபட்டதால் அவர்களின் கல்வி பெரிதளவில் பாதிக்கப்பட்டிருக்கும். இப்படித்தான் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 2022ஆம் ஆண்டு அசெர் சொல்லும் புள்ளிவிவரம் அதைப் பொய்ப்பித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்த பெண்குழந்தைகள் விகிதம் 99 சதவீதம்; பையன்களின் எண்ணிக்கை விகிதம் 97 சதவீதம். அந்தக் குழந்தைகள் 15லிருந்து 16 வயதுக்குள் இருப்பவர்கள்.

தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிக்கு முந்திய மழலையர்கள் பள்ளிகளில் சேர்ந்த குழந்தைகளின் எண்ணிக்கை விகிதம் 97 சதவீதம்; இது தேசிய அளவில் 79 ஆக இருந்தது. பள்ளிகளில் சேர்ந்த நான்கு வயது குழந்தைகளின் விகிதம் தமிழ்நாட்டில் 99.2 சதவீதம்; தேசிய அளவில் இது 88 சதவீதம்தான். இந்தப் புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி இதுதான்: தமிழ்நாட்டில் கல்வித்துறை அதிகாரிகளின் முயற்சிகளும் உழைப்பும் அபாரமானவை. உட்கட்டமைப்பும் பள்ளிக் கட்டிடங்களும் அங்கன்வாடிகளும் கழிவறை போன்ற பல்வேறு வசதிகளும் கிராமங்களில் பெருகிவிட்ட பள்ளிகளும் தமிழ்நாட்டுக் கல்வித்துறையின் சிறப்பைப் பறைசாற்றுகின்றன”.

ஆனால் கல்வி வசதிகள், கட்டிடங்கள் பெருகிய அளவுக்கு குழந்தைகளின் அடிப்படைக் கற்றல்திறன்களான வாசிப்பும் கணிதத் திறனும் மேம்படவில்லை என்று அசெர் சொல்கிறதே. ஏன்?

இதற்கு, “அதீதமான திறன் நல்விளைவுக்கு சத்ரு” என்று பூடகமாகச் சொன்னார் பாலாஜி. நகைமுரணாக ஒலிக்கும் இந்தக் கருத்தை விளக்கும் முகாந்திரத்தில் அப்படிச் சொன்னார். “தமிழ்நாட்டில் அற்புதமான கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள், பரிசோதனைக் கூடங்கள், பெண்குழந்தைகளுக்கான வசதிகள், கழிப்பறைகள், கல்வி வளர்ச்சிக்கான திட்டங்கள், இலவசப் பாடப்புத்தகங்கள், சீருடைகள், சைக்கிள் என்று ஏராளமான அதிதிறன் வசதிகள் மேம்பட்ட நிலையில் இருக்கின்றன.

ஏராளமான ஆவணங்கள், தரவுகள் தயாரித்தல் என்று ஆசிரியர்களின் பணி பெரும்பாலும் நிர்வாக விசயங்களிலே கழிந்து விடுகிறது; குழந்தைகளின் கற்றல் திறன் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை

அங்கன்வாடிகள். பால்வாடி மையங்கள் இல்லாத கிராமங்களே இல்லை. கல்வித் திட்டங்களில் அரசு விதித்திருக்கும் இலக்குகளை அடைய ஆசிரியப் பெருமக்களும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் அசெர் தமிழ்நாட்டைப் பற்றித் தருகின்ற தரவுகள்தான். அவை உண்மைதான். எதுவும் திரித்துச் சொல்லப்படவில்லை.

கல்வி நிலையங்களே சிறப்பாகச் செயல்படும்போது தங்கள் குழந்தைகளின் கல்விக்கு மாற்று ஏற்பாடு தேவையில்லை என்ற திருப்தி உணர்வில் இருக்கிறார்கள் தமிழ்நாட்டு பெற்றோர்கள். அதனால்தான் கொரோனா காலத்தில் பள்ளிகளும் கல்லூரிகளும் மூடிக்கிடந்தபோது அந்தக் குழந்தைகளுக்கு மாற்று வழிகள் மூலமாகக்கூட கல்வி கிடைக்க வழியில்லாமல் போய்விட்டது. இணைய வகுப்புகள் பெரிதாகக் கைகொடுக்கவில்லை.

இந்த இடத்தில்தான் மோசமான பள்ளிக் கட்டிடங்களும், ஒழுங்காகப் பள்ளிக்கு வராத ஆசிரியர்களையும் கொண்டிருக்கும் பீகார் போன்ற மாநிலங்களில் குழந்தைகளுக்கு தனியார் டியூசன் மூலம் கல்வி கிடைத்தது; அதுவும் சல்லிசான விலைகளில்.  ஊரடங்கு காலத்தில் தனியார் டியூசன் விகிதம் தேசிய அளவில் 22 சதவீதத்திலிருந்து 13 சதவீதத்திற்குக் குறைந்து போனது. பீகாரில் 72 சதவீதத்திற்கு இது உயர்ந்தது.

ஆனால் தமிழ்நாட்டில் தனியார் டியூசன் விகிதம் 19லிருந்து 9 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்தது. அதனால் தொடக்கப்பள்ளி குழந்தைகளின் வாசிப்புத் திறனிலும், கணிதத் திறனிலும் 15 சதவீத இழப்பு ஏற்பட்டுவிட்டது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான விகிதாச்சாரத்தைக் குற்றம் சொல்ல முடியாது. ஏனென்றால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அது சரியாகத்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டுத் தொடக்கப்பள்ளி குழந்தைகளின் வாசிப்புத் திறனிலும், கணிதத் திறனிலும் 15 சதவீத இழப்பு ஏற்பட்டு விட்டது என்பதற்கு மற்றொரு காரணத்தைச் சொல்லலாம். அரசின் கல்வித் திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு ஆசிரியர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.

திட்டங்கள் எப்படி போகின்றன; ஆசிரியர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்றுதான் மேலதிகாரிகளும் கேள்வி கேட்கிறார்கள்; ஏராளமான ஆவணங்கள், தரவுகள் தயாரித்தல் என்று ஆசிரியர்களின் பணி பெரும்பாலும் நிர்வாக விசயங்களிலே கழிந்து விடுகிறது.

ஆசிரியர்களின் அடிப்படைப் பணி கற்பித்தல் மட்டுமே; அது அடிபட்டு விடுகிறது. குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பட்டு இருக்கிறதா என்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

கொரோனா காலத்தில் கல்வி மறுக்கப்பட்டது; அதை ஈடுகட்ட தனியார் டியூசன்களும் பெரிதாக தமிழ்நாட்டில் நடைபெறவில்லை; தொற்றுக்குப் பின்னான காலத்தில் மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்களுக்குப் நிர்வாகப் பணிச்சுமை அதிரித்தது.

இந்தக் காரணங்களும், தமிழ்நாட்டுத் தொடக்கப்பள்ளி குழந்தைகளின் வாசிப்புத் திறனிலும், கணிதத் திறனிலும் ஏற்பட்ட 15 சதவீத இழப்பில் பெரியதொரு பங்கு வகிக்கின்றன” என்று தன் பேச்சை முடித்தார் பாலாஜி.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival