Read in : English
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தைக்குப் பதில் தமிழகம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது அரசியல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஆளுநரின் பேச்சுகளைப் பொதுமக்கள் பெரிதும் கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் அந்தப் பேச்சுகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் இந்தப் பிரச்சினை மக்களை சென்றடைந்துள்ளது.
எதிர்க்கட்சியான அதிமுக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நாங்கள் முன்னாள் முதல்வர் அண்ணாவின் வழியில் வந்தவர்கள் என்பதால் தமிழ்நாடு என்பதையே ஏற்கிறோம் என்று கூறியுள்ளார்கள்.
காங்கிரஸ் கட்சியும் மதிமுக தலைவர் வைகோவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பாமக, நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆதரிப்பது பாஜக மட்டுமே.
தமிழகம்’ என்பது தமிழ் பேசப்படும் ஒரு நிலப்பகுதியைக் குறிக்கிறது, அதே நேரத்தில் தமிழ்நாடு ஒரு தனி அரசையும் சட்டமன்றத்தையும் கொண்ட ஓர் அரசியல் அலகு ஆகும்
சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் தமிழகம் என்ற சொல் காணப்படுவதால் தமிழ்நாடு என்பதற்கும் தமிழகம் என்பதற்கும் என்ன வித்தியாசம் என்று பாஜகவினர் கேட்கிறார்கள். ‘தமிழகம்’ என்பது தமிழ் பேசப்படும் ஒரு நிலப்பகுதியைக் குறிக்கிறது, அதே நேரத்தில் தமிழ்நாடு ஒரு தனி அரசையும் சட்டமன்றத்தையும் கொண்ட ஓர் அரசியல் அலகு ஆகும்.
சங்க இலக்கியங்களின்படி, தமிழகம் வடக்கே திருப்பதிக்கும் தெற்கே கன்னியாகுமரிக்கும் இடையே அமைந்துள்ளது. இதன் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகள் வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் ஆகும்.
மேலும் படிக்க: ஆளுநர் ரவி அதிரடி: திமுக அரசு பதிலடி!
“வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல் உலகம்”
என்று தொல்காப்பியத்துக்கு சிறப்புப் பாயிரம் எழுதிய பனம்பாரணர் குறிக்கிறார். தமிழகத்தின் புவியியல் பகுதியில் திருப்பதியையும் முழு கேரளாவையும் உள்ளடக்கியே அவர் பேசுகிறார் இந்தியாவை நாவலந்தீவு என்று குறிக்கும் சில சங்கப் பாடல்கள் இந்தியா முழுவதும் தமிழ் பேசப்பட்டதாகவும் கூறுகின்றன.
கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தை இயற்றிய புலவர் என்று இளங்கோவடிகள்,
“குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டினி மருங்கினிற் றண்டமிழ் வரைப்பில்”
என்று தமிழகத்தின் எல்லையாக ‘குணகுட கடல்’ (கிழக்கு மற்றும் மேற்கில் உள்ள கடல்கள்) என்று பாடுகிறார். இது தவிர, தமிழகத்தில் இருந்த 12 நாடுகளின் பட்டியலைத் தொல்காப்பியம் தருகிறது.
“தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி
பன்றி யருவா அதன் வடக்கு-நன்றாய
சீத மலாடு புன்னாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிரு நாட்டெண்”
என்று தமிழ் இலக்கண நூலான யாப்பருங்கலக் காரிகை பட்டியல் போடுகிறது. இதில் பாண்டிய நாடு, சோழ நாடு, சேர நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு, ஈழ நாடு ஆகியவை அடங்கும்.
சோழ நாடு மைசூர் பகுதிகளை உள்ளடக்கியது. கேரளாவின் பெரும்பாலான பகுதிகள் சேர நாட்டின் கீழ் வருகின்றன. கொங்கு நாடு மைசூரின் பகுதிகளையும், முழு கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களையும் கொண்டுள்ளது, ஈழ நாடு இப்போது இலங்கையின் ஒரு பகுதியாகும்.
தமிழகம் என்ற வார்த்தையின் பயன்பாடு தென்னிந்தியாவில் குழப்பத்தையும் எல்லைப் பிரச்சினைகளையும் உருவாக்கும், ஏனெனில் முழு கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளும் இந்த வார்த்தைக்குள் வருகின்றன
சுருக்கமாக, தமிழகம் என்பது ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வட இலங்கையின் சில பகுதிகளை உள்ளடக்கியது இது தற்போதைய தமிழ்நாட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
பிரபல தமிழ் நாளிதழான தினத்தந்தியின் நிறுவனர் சி.பா. ஆதித்தனார், இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் தமிழ் ஈழம் அடங்கிய ஒரு தமிழ்ப் பேரரசை உருவாக்கும் நோக்கத்துடன் நாம் தமிழர் கட்சியை உருவாக்கினார். தமிழ் ஈழமும் பழங்காலத் தமிழீழத்தின் ஒரு பகுதி என்பது ஆளுநருக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை.
தமிழகம் என்ற வார்த்தையின் பயன்பாடு தென்னிந்தியாவில் குழப்பத்தையும் எல்லைப் பிரச்சினைகளையும் உருவாக்கும், ஏனெனில் முழு கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளும் இந்த வார்த்தைக்குள் வருகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளன பழ.நெடுமாறன் ‘தமிழர் இழந்த மண் என்ற நூலை எழுதியுள்ளார். மாநிலங்களை மீண்டும் சீரமைத்து, பழங்காலத் தமிழகத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று ஆளுநர் தெளிவுபடுத்தினால், அவருக்கு பெரும்பாலான தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆதரவு கிடைக்கும்.
மேலும் படிக்க: ஆளுநர் தேவையா?: அனல் கிளப்பிய தீர்ப்பு!
1967 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்துக்கு மக்கள் ஆணையைப் பெற்ற திமுக நிறுவனர் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இந்தப் பெயர் மாற்றத்தை சட்டமன்றத்தில் எல்லாக்கட்சிகளும் ஆதரித்தன. அப்போதிருந்த ஒன்றிய அரசும் ஏற்றுக்கொணடு சட்டம் இயற்றியது.
யாராவது மீண்டும் பெயர் மாற்றத்தை விரும்பினால் ஜனநாயக முறைப்படி அவர்கள் மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும். பெயரை மாற்ற வேண்டும் என்று மக்களின் ஆதரவைப் பெற்ற கட்சி ஆட்சிக்கு வந்தால் பெயரை மாற்றிக்கொள்ளலாம்.
ஜனநாயகத்தில் பெயரை மாற்ற வேண்டும் என்று பேசும் உரிமை தமிழ்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் உண்டு. அவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் பிரச்சாரம் செய்யவும் சுதந்திரம் உண்டு. ஆனால், ஒரு ஆளுநர் தனது அரசியல் சாசனப் பதவியைப் பாதுகாப்புக் கேடயமாக வைத்துக்கொண்டு தனது தனிப்பட்ட கருத்துகளைப் பிரச்சாரம் செய்வது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில், மாநில மக்கள் ஆளுநர் சொல்வதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை, அவரால் மக்கள் மத்தியில் எந்த தாக்கமும் இல்லை. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவரது கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கடுமையாக எதிர்ப்பதால் ஆளுநரின் கருத்துக்கு விளம்பரம் கிடைத்துள்ளது.
சட்டமன்றத்தின் அவரது சொந்தக் கருத்துகள் பதிவாக திமுக அரசு அனுமதிக்கவில்லை. பத்திரிகைகளிலும் தமிழ்நாடு அரசின் உரையை மட்டுமே அச்சிட்டுள்ளன. ஆளுநர் என்ன மாற்றிப் பேசினார் என்பதே முதல்வர் சொல்லித்தான் மக்களுக்குத் தெரியவந்துள்ளது. திமுக ஏன் இதைச் செய்ய வேண்டும்? ஆளுநர் தமிழ்நாடு என்ற சொல்லுக்கு எதிராகப் பேசுவது மக்களுக்குத் தெரிய வேண்டும்.
இது போன்ற கருத்துகள் பாஜகவின் மீது மக்களுக்கு எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் என்று திமுக மக்கள் ஆதரவைத் திரட்டத் தொடங்கியுள்ளது. இது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்குப் பெரிய அளவு கைகொடுக்கும் என்பதால் ஆர்.என்.ரவியை திமுக குறிவைத்துள்ளது.
Read in : English