Read in : English
அஜித் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த துணிவு, அறிவுரை சொல்லும் ஆக்ஷன் படமாக வெளிவந்துள்ளது. மக்களின் மிகமுக்கியமான பிரச்சினைகளைப் பேசும் திரைப்படங்கள், அதில் நடித்த பிரபலங்களின் வழியாகவே பெரும்பாலானோரைச் சென்றடையும். அதனாலேயே, பெரிய நட்சத்திரங்களின் படங்களில் சமூக அக்கறையுள்ள தகவல்கள் இடம்பெறும்போது பெரியளவில் வரவேற்கப்படுகின்றன; எதிர்ப்பையும் சந்திக்கின்றன.
அதேநேரத்தில், அறத்திற்குப் புறம்பான கருத்துகள் நிறைந்திருக்கும்போது கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. அந்த வகையிலேயே மங்காத்தா, பில்லா 2 பாணியில் முழுக்க வில்லத்தனத்துடன் ‘துணிவு’ படத்தில் அஜித் நடித்திருக்கிறார் என்பதும் விவாதத்திற்கு உள்ளானது. உண்மையிலேயே அப்படம் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே மனதில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறதா?
‘துணிவு’ படத்தின் கதை என்னவென்பது ட்ரெய்லரிலேயே தெரிந்துவிட்டது. ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க கொள்ளையர்கள் செல்கின்றனர். அங்கிருக்கும் மக்களையும் வங்கி பணியாளர்களையும் பயமுறுத்துகின்றனர். தடுக்க வருபவர்களைச் சுடுகின்றனர்.
உடனடியாகப் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு அவர்கள் வெளியேற முயலும்போது, யாரோ ஒருவர் தடையாக முளைக்கிறார். அந்த நபரோ, தானும் ஒரு கொள்ளையன் தான் என்கிறார். ஆனால், வங்கியில் இருக்கும் பணத்தைக் காட்டிலும் 25 மடங்கு அதிகமான பணம் அங்கிருப்பதாகச் சொல்கிறார். ஏற்கனவே கொள்ளையடிக்க வந்தவர்கள் அதை நம்பத் தயாராக இல்லை.
’துணிவு’ பார்க்கும் ஒருவர் சந்திக்கும் ஒரே பிரச்சினை, படம் முழுக்க நிறைந்திருக்கும் துப்பாக்கிச் சத்தம்; அதற்காக, பார்வையாளர்களை ஈர்ப்பதற்கான விஷயங்களே படத்தில் இல்லை என்று சொல்ல முடியாது
ஆனால், அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் அவர் சொன்னது உண்மை என்று உணர்த்துகின்றன. யார் அந்த நபர்? அவர் ஏன் அந்த வங்கிக்கு கொள்ளையடிக்க வந்தார்? அந்த வங்கியோடு தொடர்புடைய ரகசியம் என்ன? இந்த கேள்விகளுக்கு ஹீரோயிசம் சார்ந்தே பதில்கள் யோசிப்போம். அதிலிருந்து வேறுபட்டு, மக்களின் சேமிப்பு சார்ந்த விஷயங்களை கேள்விக்குட்படுத்துகிறது ‘துணிவு’. காரணம், பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்த ஒரு நிதி நிறுவனத்தின் அதிபரைச் சில மர்ம நபர்கள் கடத்துவதில் இருந்தே படம் தொடங்குகிறது.
’துணிவு’ பார்க்கும் ஒருவர் சந்திக்கும் ஒரே பிரச்சினை, படம் முழுக்க நிறைந்திருக்கும் துப்பாக்கிச் சத்தம். ஒரு மேற்கத்திய படத்தை என்ன மனநிலையில் பார்ப்போமோ, அந்த நிலைக்கு கொண்டு செல்ல அதுவே காரணமாகியிருக்கிறது. அதற்காக, பார்வையாளர்களை ஈர்ப்பதற்கான விஷயங்களே படத்தில் இல்லை என்று சொல்ல முடியாது.
மேலும் படிக்க: வாரிசு Vs துணிவு எனுமொரு டிஜிட்டல் போர்!
பரபரப்பையும் பதற்றத்தையும் வெளிப்படுத்த வேண்டிய ஒரு கொள்ளையன், படுபயங்கரமான நிதானத்தைக் காட்டும்போது அது ‘ஹீரோயிசமாக’ தெரியும். அப்படித்தான், துணிவு படத்தில் அஜித்தை காட்டியிருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். நக்கலான பேச்சு, மிரட்டலான உடல்மொழி, கூடவே நளினமான நடனம் என்று அவரது பாத்திர வார்ப்பு அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. ஆம், இதில் அஜித்தின் பெயர் ‘மைக்கேல் ஜாக்சன்’ என்று சொல்லப்படும்போது, அவர் ‘மூன்வாக்’ ஆடும் ஷாட் இடம்பெற்றிருக்கிறது.
சண்டைக்காட்சியில் பயன்படுத்தப்படுவது போல ‘கயிறு’ கட்டி அதனை உருவாக்கினார்களா என்று யோசிக்க வைத்தாலும், அதைத் தாண்டி பல ஷாட்களில் அஜித் ரசித்து ‘டான்ஸ்’ ஆடுவது ரசிகர்களைக் கூச்சலிட வைக்கிறது. ‘வாலி’ உட்பட மிகச்சில படங்களில் கிடைத்த அற்புதமான சில தருணங்களை இதில் மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார்.
அஜித்தை ஒப்பிடும்போது மற்றவர்களுக்கு குறைவான அளவு இடமே திரையில் கிடைத்திருக்கிறது. ஆனாலும் சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், பக்ஸ், அஜய்குமார், வீரா, பிரேம், மகாநதி சங்கர், பாலசரவணன் என்று பலருக்குத் திரையில் முகம் காட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர்களில் ரசிகர்களை விசிலடிக்க வைத்திருக்கிறார் நிருபராக வரும் பட்டிமன்றப் பேச்சாளர் மோகன சுந்தரம்.

ஃப்ரான்ஸ் நாட்டின் தியேட்டர் ஒன்றில் துணிவு படத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் அஜித்தின் மிக உயரமான கட் அவுட்.
வில்லன்களாக வரும் ஜான் கொக்கன், சிராக் ஜனி, குமார் நடராஜன், அழகப்பன் போன்றவர்களோடு தர்ஷனுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. சிபி புவனசந்திரன், அமீர் ஆகியவர்களோடு பவ்னியும் இதில் இடம்பெற்றிருக்கிறார்.
இப்படியொரு கதையில் நாயகிக்கும் பெரிதாக இடமிருக்காது. அந்த வகையில், வெறுமனே ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் தோன்றியிருக்கிறார் மஞ்சு வாரியார். ஆனால் ஹீரோவுக்கு இணையாகத் திரையில் வெளிப்படும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது.
அஜித் போன்ற பிரபல நட்சத்திரங்களின் படங்களில் ‘லாஜிக் மீறல்’ இல்லாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். ‘துணிவு’ திரைக்கதையும் அதற்கு விதிவிலக்கல்ல
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு திறமை, முக்கால்வாசி திரைக்கதை ஒரே இடத்தில் நிகழ்வதையே மறக்கடிக்கிறது. அஜித் அறிமுகமாகும் சண்டைக்காட்சியை அவர் படமாக்கியிருக்கும் விதமே, அடுத்து வரும் காட்சிகள் எந்த திசையில் நகர்கின்றன என்ற கேள்வியை மழுங்கச் செய்திருக்கிறது.
விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பு, சில பாத்திரங்கள் என்னவானது என்ற கேள்விக்குப் பதில் சொல்வதில்லை. ஆனால், முன்பாதி பரபரப்பாக நகர அவரே துணை நின்றிருக்கிறார். இடைவேளைக்குப் பிறகான காட்சிகள் அலுப்பூட்டக் கூடாது என்று இறுக்கிப் பிடித்து ஷாட்களை வெட்டியிருப்பது ஒரு முழுமையற்ற தன்மையை ஏற்படுத்தியிருக்கிறது. மிலன் குழுவினர் அமைத்த வங்கி செட்டும் சரி, சாலையும் சரி, கொஞ்சம் கூட அந்நியமாகத் தெரியவில்லை.
ஆக்ஷன் படமென்றால் பின்னணி இசை அசத்தலாக இருக்க வேண்டும். ஜிப்ரான் அதை கொஞ்சம் அதிகமாகவே முயற்சித்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். மவுனத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டுமென்பதை அவர் நினைவில் கொள்வது நல்லது. படத்தில் வரும் மூன்று பாடல்களையுமே அஜித் ரசிகர்களுக்காகவே தந்திருக்கிறார் என்பதையும் சொல்லியாக வேண்டும்.
மேலும் படிக்க: தமிழ் சினிமா 2022:தடம் மாறாத பயணம்!
அஜித் போன்ற பிரபல நட்சத்திரங்களின் படங்களில் ‘லாஜிக் மீறல்’ இல்லாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். ‘துணிவு’ திரைக்கதையும் அதற்கு விதிவிலக்கல்ல. அஜித்துடன் வந்த கொள்ளையர்கள் யார் யார்? அவர்கள் என்னவானார்கள்? வில்லன்களை அம்பலப்படுத்த ஊடகங்களின் துணையை அஜித் நாடுவது ஏன் என்பது உட்பட பல இடங்களில் ‘லாஜிக்’ மீறப்பட்டிருக்கிறது. பொழியும் குண்டு மழைக்கு நடுவே சிறிதும் காயப்படாமல் அஜித் தப்பிக்கும் லாவகமும் கூட ‘ஹேஹே’ என்று சிரிக்க வைக்கிறது. அனைத்தையும் மீறி ‘ஒரு கமர்ஷியல் படத்துல இது கூட இல்லேன்னா எப்புடி?’ என்ற பதிலும் நமக்குள்ளே கேட்கிறது.
பணத்தை எதில் முதலீடு செய்வது என்று யோசிக்கும் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை திரையில் காண்பிக்க, ஹீரோயிச கதைகளே சிறந்த வாய்ப்பு. அப்படித்தான் ’துணிவு’ படத்தில் வங்கி நிறுவனங்கள் சார்ந்த மோசடிகளைத் தோலுரித்திருக்கிறார் ஹெச்.வினோத். அதற்கு அஜித்தும் ஒப்புதல் அளித்திருப்பதுதான் ஆச்சர்யம். உதாரணமாக, ’சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கிரிக்கெட் அணி ஊழலில் ஈடுபட்டதாக’ ஒரு இடத்தில் வசனம் வருகிறது.
ஆனால், ரசிகர்களை விசில் போட வைக்கும் நோக்கில் அதன் அடையாளத்தைப் பகிரங்கப்படுத்தவில்லை. விஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்களை திரையில் விமர்சித்து கைத்தட்டல் அள்ளிய படைப்புகளில் இருந்து தனித்து நின்று, ’அந்த கிரிக்கெட் அணி எது’வென்று ரசிகர்களை யோசிக்க வைத்திருப்பதே வினோத்தின் சாமர்த்தியம். மேலே சொன்னவற்றில் இருந்தே, அஜித்தின் பாத்திரம் அறத்திற்குப் புறம்பானதா இல்லையா என்பது தெரிந்திருக்கும்.
ஆக்ஷன் கொரியோகிராபர் சுப்ரீம் சுந்தரால் சண்டைக்காட்சிகள் அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன; மிகச்சில இடங்களில் வெளிப்பட்டிருக்கும் வன்முறையைக் குறைத்திருக்கலாம்.
திரைக்கதையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைக்கதைகள், அதையெல்லாம் கடந்து சோர்வுறும்போது, கொஞ்சமும் ‘லாஜிக்’ இல்லாத கிளைமேக்ஸ் ஆக்ஷன் காட்சிகள் என்று படம் இருந்தாலும், பொருளாதாரக் குற்றங்கள் பற்றிய சந்தேகங்களையும், சில தீர்வுகளையும் முன்வைத்த விதத்தில் மகிழ்ச்சியைத் தருகிறது ‘துணிவு’.
குறிப்பாக, ’பண மோசடிகளால் ஏமாற்றப்பட்டு மரணத்தை நாடாதீர்கள் மக்களே’ எனும் தொனியில் முடிவில் ஒரு வசனம் இடம்பெற்றிருக்கிறது. அஜித் போன்ற நடிகர்கள் வாயால் அந்த வார்த்தைகள் வெளிப்படும்போது எத்தனை பேரின் மனதில் அது தைக்கும் என்பதை உணர்ந்திருப்பதற்காகவே ஹெச்.வினோத்துக்கு ஒரு பெரிய ‘சபாஷ்’ சொல்லத் தோன்றுகிறது.
Read in : English