Read in : English

Share the Article

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 24 அன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்வுக்காக ட்விட்டர் ட்ரெண்டிங்கில் பொறி பறக்க விடுகிறார்கள் விஜய் ரசிகர்கள். விஜய் பாடிய ரஞ்சிதமே, சிலம்பரசன் பாடிய தீ தளபதி, சித்ரா பாடிய ஆராரிரோ கேட்குதம்மா ஆகியவை வெளியாகி கோடிக்கணக்கான ரசிகர்களைப் பரவசப்படுத்தியுள்ளன. தளபதி ரசிகர்கள் இதைக் கூட செய்யமாட்டார்களா என்று சொல்வதை மறுக்க முடியாது. ஆனால், இந்த நிகழ்வுகளெல்லாம் வாரிசு Vs துணிவு என்று ஒரு போர்க் கதையாக உருவெடுத்திருப்பதைத்தான் நியாயப்படுத்த முடியவில்லை.

தமிழ்த் திரையுலகில் நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் விஜய்யை ஒரு வாரிசு நடிகர் என்று துணிவுடன் கூறலாம். ஏனெனில், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தன் மகனை அப்படித்தான் வளர்த்தெடுத்தார். தொடக்க காலத்தில் விஜய்யை நடிகராக்க அவர் அவ்வளவு பாடுபட்டுள்ளார். நாளைய தீர்ப்பில் நாயகனாக நடிக்கத் தொடங்கியவரை பூவே உனக்காக வரை பொத்திப் பொத்திப் பாதுகாத்து நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியதில் இயக்குநர் சந்திரசேகருக்கு முக்கியப் பங்கு உள்ளது என்பதை மறுக்க இயலாது.

விஜய் கதை இப்படியென்றால் இதற்கு நேர்மாறான சூழல் நடிகர் அஜித்துக்கு. அவர் படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம் போல அவரது வாழ்க்கையை அவரே செதுக்கிக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ்த் திரையுலகில் எந்தப் பின்புலமும் இல்லாமல் துணிவுடன் வந்து முன்னேறியிருப்பவர் அஜித்.

தமிழ்த் திரையுலகில் நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் விஜய்யை ஒரு வாரிசு நடிகர் என்று துணிவுடன் கூறலாம்; ஏனெனில், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யை நடிகராக்க அவர் அவ்வளவு பாடுபட்டுள்ளார்

அமராவதியில் நாயகனாக கணக்கைத் தொடங்கினாலும் வான்மதி, காதல் கோட்டை, வாலி, அமர்க்களம் போன்ற படங்கள் வழியாக நட்சத்திர அந்துஸ்துக்கு வரும் வரையில் தாக்குப்பிடித்து ஒருவழியாகச் சரியான தடத்தில் கால் பதித்தார்.

தற்போது இவரது நடிப்பில் வலிமையைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் துணிவு திரைப்படத்தின் முதல் பாடலான அனிருத் பாடிய சில்லா சில்லாவும், மஞ்சு வாரியார் மற்றும் வைசாக் இணைந்து பாடிய காசேதான் கடவுளடா பாடலும் இதுவரை வெளியாகியுள்ளது. இந்த இரண்டு பாடல்களையும் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் வேளையில் மூன்றாம் பாடல் பற்றிய தகவல்கள் சமூக ஊடகத்தை நிறைத்து வருகின்றன.

தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு இந்த இரண்டு படங்களும் ஜனவரி 12 அன்று வெளியாக உள்ளன. இரண்டு படங்களின் வெளியீட்டு நாள் பற்றிய தகவல் வந்த நாள் முதலாகவே விஜய், அஜித் ரசிகர்களின் நீயா நானா போட்டியைச் சமூக ஊடகங்கள் படுபயங்கரமான டிஜிட்டல் போராகக் காட்டிக் கொண்டிருக்கின்றன. ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இருவரது ரசிகர்களும் மாறி மாறித் தங்கள் மனங்கவர்ந்த நடிகரை விதந்தோதியும் எதிர்ப்புறம் இருக்கும் நடிகரது ரசிகர்களைக் கிண்டலடிக்கும் வகையில் இகழ்ந்தும் பதிவிட்டுப் பொழுதைப் போக்கி வருகிறார்கள்.

மேலும் படிக்க: துணிவு Vs வாரிசு: வெடிக்கும் சரவெடி!

ரசிகர்கள் பொழுதுபோக்காகக் கருதும் இந்த டிஜிட்டல் போருக்குச் சமூக ஊடகங்கள் நெய் வார்க்கின்றன; அதனை ஊதி ஊதித் தங்களது வாசகரைத் தக்கவைக்க முயல்கின்றன. ஆகவே, சதுரங்க விளையாட்டில் எதிரெதிர் தரப்பு ஒவ்வொரு காயாகப் பார்த்துப் பார்த்து நகர்த்துவது போல் ரசிகர்கள் தரப்பிலும் காய்களை நகர்த்துவதற்கான களத்தை அவை தயாரித்துக் கொடுக்கின்றன. இருவரது ரசிகர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதால் இந்தக் காய் நகர்த்துதலில் அவர்களும் மெய் மறந்து களத்தில் குதிக்கிறார்கள்.

நடிகர் விஜய் தனது படங்களின் ஆடியோ வெளியீடுகளில் உரையாற்றுவதன் வழியே ரசிகர்களை உசுப்பேற்றுவதை வாடிக்கையாகவே கொண்டிருக்கிறார். இது நடிகர் ரஜினி கைக்கொண்ட அதே பாணிதான். ஆனால், நடிகர் அஜித்தோ இதற்கு நேர்மாறாக எந்தப் பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதே இல்லை; அதேநேரத்தில், தன்னைப் பற்றிய செய்திகள் மட்டும் ஊடகங்களில் இடம்பெறுமாறு நடந்து கொள்கிறார். இதுவும் ஒருவகையான உத்திதான். விஜய், அஜித் இருவருக்குமே ரசிகரைக் கவர்வதுதான் நோக்கம், வழிமுறைதான் வேறு வேறு.

சில நாட்களுக்கு முன்னதாக வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தமிழ்நாட்டில் அஜித்தைவிட விஜய்தான் பிரபலமானவர் என்று கொளுத்திப் போட்டார். வாரிசு Vs துணிவு என்னும் டிஜிட்டல் போரை அவரது கூற்று ஊதிப் பெருக்கியது. ரசிகர்கள் ட்விட்டரில் அட்டைக்கத்தியைச் சுழற்றுகிறார்கள் என்றால் திரைத்துறையினர் யூடியூப்பில் சொற்போர் புரிகிறார்கள்.

இரண்டு படங்களும் வெளியாகும் வரையிலும் இது ஓயப்போவதில்லை. இத்தகைய போரில் டிஜிட்டல் யுகம் சுகமாய்க் குளிர்காய்கிறது.

ஒப்பீடு என்று எடுத்துக்கொண்டால், வாரிசு படத்தின் முதல் பாடல் பத்து கோடிப் பார்வைகளைக் கடந்துவிட்டது. துணிவு படத்தின் முதல் பாடலுக்கு இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பார்வை கிடைத்துள்ளபோதும் வாரிசை துணிவு ஓரங்கட்டவில்லை என்பது உண்மையே. கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர்களது பட்டியலில் விஜய் இருக்கிறார். அந்தப் பட்டியலிலேயே அஜித் இல்லை.

விஜய் தனது ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்; தனது தோற்றத்தில் அக்கறை எடுத்துக் கொள்கிறார்; ஆனால், அஜித்தை அப்படிச் சொல்ல இயலாது

விஜய்க்கு கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் நல்ல சந்தை மதிப்பு உள்ளது. சந்தை விஷயத்தில் விஜய் அளவுக்கு அஜித் ஆர்வம் காட்டவில்லை என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன். இவற்றை எல்லாம் வைத்துப் பார்த்தால் தயாரிப்பாளர் தில் ராஜு கூறியது உண்மை என்ற எண்ணமே ஏற்படும்.

அதே நேரத்தில், தமிழ்நாட்டில் துணிவு திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்குகளின் எண்ணிக்கை வாரிசு படம் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கையைவிட அதிகம் என்று ஒரு செய்தியும் தொடர்ந்து உயிர்ப்புடன் உலா வருகிறது. இது நடிகர்களின் சந்தை மதிப்பின் அடிப்படையிலான முடிவாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், முதலிலேயே ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் கையில் துணிவு விநியோகம் வந்துவிட்டது.

தமிழ்நாட்டின் வசூலில் அறுபது சதவீதம் வரை திரட்டும் பகுதிகளான சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட தென்னாற்காடு ஆகியவற்றில் மட்டும் வாரிசு படம் ரெட் ஜெய்ண்ட் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.

மேலும் படிக்க: தமிழர்-தெலுங்கர் பாகுபாடு: சிக்கலில் வாரிசு!

இந்தச் சூழ்நிலையில்தான் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நடிகர் அஜித்தைவிட முன்னணியில் உள்ள நட்சத்திரம் விஜய்தான் என்றும் அதனால் துணிவு படத்துக்கு எத்தனை திரையரங்குகள் ஒதுக்கப்படுகின்றனவோ அதே எண்ணிக்கை வாரிசு படத்துக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரினார்.

இரண்டு படங்களுக்கும் ஒரே அளவிலான திரையரங்குகள் ஒதுக்கப்படும் என்கிறார்கள். ஆனாலும், விஜய்யா அஜித்தா என்னும் போட்டி வந்துவிட்டால் விஜய் கையே ஓங்கும் என்பதே யதார்த்தம். இதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை.
விஜய் தனது ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்; தனது தோற்றத்தில் அக்கறை எடுத்துக் கொள்கிறார். அவருக்கு அரசியலிலும் ஒரு கண் இருக்கும் போலும் தெரிகிகிறது.

ஆனால், அஜித்தை அப்படிச் சொல்ல இயலாது. ரசிகர்கள் தன்னைத் திரையரங்குகளில் மட்டும் பார்த்தால் போதும் என நடிகர் கவுண்டமணி போல் எண்ணம் கொண்டிருக்கிறார் அவர்; தனது தோற்றம் குறித்துக் கூட கவலைப்படுவதில்லை.

டிசம்பர் 24 அன்று ஆடியோ வெளியீட்டில் விஜய் என்ன கதை சொல்வாரோ என்பதுதான் இப்போதைக்குச் சமூக ஊடகத்தில் பெரிய விவாதப் பொருளாக முன்வைக்கப்படுகிறது. ரசிகர்கள் திரைப்படத்தைத் திரைப்படமாகப் பார்க்க வேண்டும் என்பதைப் போன்ற அறிவுரைகளை அவர் அள்ளிவிடலாம். என் நண்பர் அஜித் எனச் சொல்லலாம். அவர் என்ன சொன்னாலும் அதை ஒன்றுக்குப் பத்தாக அடையாளம் கண்டு பேசுவதற்கு ஊடகங்கள் காத்துக் கிடக்கின்றன.

அதைக் கிண்டலடிக்க அஜித் ரசிகர்களும் காத்துக் கிடக்கிறார்கள். எப்படியோ, தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் வாரிசு அரசியல் என்னும் பதம் கனல் கக்கிக் கொண்டிருக்கிறது என்றால் தமிழ்த் திரையுலகில் வாரிசு Vs துணிவு என்னும் பதம் அனல் பரப்பிக் கொண்டிருக்கிறது.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles