Read in : English
தமிழ்நாட்டில் சிறந்த பல தொழில் நிறுவனங்கள் இருந்தாலும்கூட, ஸ்டார்ட் அப் தொழில் சூழல் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. சிறந்த பல தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பயின்று தகவல் தொழில்நுட்பத் துறையில் அதீதமான திறனை வளர்த்துக் கொண்ட ஏராளமான தொழில்நுட்ப நிபுணர்களை’ கொண்டது தமிழ்நாடு.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சில லட்சம் தொழில்நுட்பப் பட்டதாரிகள் உலகெங்கும் பல்வேறு துறைகளில் பணிசெய்கின்றனர் என்று தமிழ்நாடு தொழிற்கொள்கை-2021 சொல்கிறது. ஃபார்ச்சூன் என்ற அமெரிக்க பத்திரிகை பட்டியலிடும் 500 நிறுவனங்களில் 70 தமிழகத்தில் இருக்கின்றன. தமிழ்நாடு தொழிற்கொள்கை 2014-க்குப் பதில் வந்துள்ள புதிய தொழிற்கொள்கை 2025 வரை நடைமுறையில் இருக்கும்.
நீண்டகாலமாகவே சுய உந்துதலுடனும், சுய உயிர்ப்புடனும் தமிழகத் தொழில் முன்னேற்றம் அமைந்திருக்கிறது. பிராந்திய பொருளாதாரத்தில் தமிழகத்தின் உற்பத்தித்துறைப் பங்கு தேசிய பொருளாதாரத்தை விட இரண்டு மடங்கு அதிகம். உற்பத்தித் துறையில் தமிழகம் சாதித்திருக்கும் பன்முகத்தன்மையை இது காட்டுகிறது. மகாராஷ்டிராவிற்கு அடுத்து இரண்டாவது பெரிய பிராந்திய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஆனால் உத்தரபிரதேசம் அந்த இடத்தைப் பிடிக்க முன்னேறி வருகிறது.
புதிய ஸ்டார்ட்-அப்கள் புதிய முதலீடுகளைக் கொண்டு வருவதால் பொருளாதார வளர்ச்சி துரிதமாக நிகழும். தற்போது மகாராஷ்டிரா 350 பில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தோடு பிராந்தியத்தில் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்து தமிழ்நாடு 230 பில்லியன் டாலர் பொருளாதாரத்தோடு இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. 210 பில்லியன் டாலர் பொருளாதாரத்தோடு உத்தரபிரதேசம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கும் உத்தரபிரதேசத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசம் வெறும் 20 பில்லியன் டாலர் மட்டுமே.
ஆதலால் ஸ்டார்ட்-அப் துறையை வளர்த்தெடுப்பதற்குத் தமிழகம் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால், உத்தரபிரதேசம் முந்திக் கொண்டு இரண்டாம் இடத்தைத் தட்டிப் பறித்துவிடலாம். மேலும், ஸ்டார்ட்-அப் துறையை வளர்த்தெடுத்து கொண்டிருக்கும் கர்நாடகமும் குஜராத்தும் அந்த இரண்டாவது இடத்தைப் பிடிக்க முன்னேறி வருகின்றன.
மகாராஷ்டிரா 350 பில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தோடு பிராந்தியத்தில் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்து தமிழ்நாடு 230 பில்லியன் டாலர் பொருளாதாரத்தோடு இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறது
2015-இல் ஒன்றிய அரசு கொண்டுவந்த ஸ்டார்ட்-அப் இந்தியா என்னும் முக்கியமான திட்டம் ஸ்டார்ட்-அப் ”கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும் கிரியா ஊக்கியாக செயல்பட்டு இந்தியாவில் புதுமைக்கும், தொழில்முனைப்புக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் சூழலைக் கட்டமைப்பதை” இலக்காகக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மற்றும் புத்தாக்கக் கொள்கை 2018-23 பின்வரும் இலக்குகளைக் கொண்டிருக்கிறது:
* குறைந்தபட்சம் 5,000 தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் தொழில் நிறுவனங்களை உருவாக்க ஆதரவும், வசதியும் ஊக்கமும் தருவது
* இளைஞர்கள் மத்தியில் தொழில்முனைப்பை உருவாக்கக் கல்வி நிலையங்களோடு கூட்டாகச் செயல்படுவது
* தமிழ்நாட்டு ஸ்டார்ட்-அப் தொழில் நிறுவனங்ககளில் முதலீடு செய்ய தூண்டும் விதத்தில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருக்கும் முக்கிய முதலீட்டாளர்களோடு கூட்டு சேர்தல்
* தமிழகத்தில் ஸ்டார்ட்-அப் தொழில் நிறுவனங்ககளை வளர்த்தெடுக்கும் வண்ணம், ஸ்டார்ட்-அப்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் ஊக்கத்தொகையும், வசதிகளும் அளித்தல் தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் அண்ட் இனோவேஷன் மிஷன் (டான்சிம்), 2026-க்குள் சுமார் 10,000 ஸ்டார்ட்-அப்களை உருவாக்க வேண்டும் என்ற ஆகப்பெரும் இலக்கை நிர்ணயித்திருக்கிறது.
ஆனால் இதுவரை பதிவுசெய்யப் பட்ட செயற்பாடுகளைப் பார்க்கும்போது அந்த இலக்கு வெகுதூரத்தில் இருப்பது போலவும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பீடு செய்யும் போது அந்தச் செயற்பாடுகள் போதுமானவையாகவும் தெரியவில்லை.
மேலும் படிக்க: ஸ்டார்ட்-அப்களில் யார் முதலீடு செய்யலாம்?
ஸ்டார்ட்-அப் துறைக்கான நல்லதொரு சூழலை உருவாக்கும் உச்சபட்ச பொறுப்பு தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்திடம் (ஈடிஐஐ-டிஎன்) இருக்கிறது. குறு,சிறு, நடுத்தரத் தொழில் அமைச்சகத்தின் கீழ் சுயாட்சியுடன் செயல்படும் அந்த அமைப்பு 2001-இல் உருவாக்கப்பட்டது.
ஆனால் தொழில்களுடனும், வெற்றிபெற்ற தொழில்முனைவோர்களுடனும், தொழில் அமைப்புகளுடனும் கூட்டுசேர்ந்து செயலாற்ற ஈடிஐஐ-டிஎன் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் உயர்கல்விக் கட்டமைப்பு, தொழில் முனைவோர்களுக்குச் சாதகமாக இல்லை என்பது மேலுமொரு குறைபாடு. “சுயதொழிலை அல்லது தொழில் முனப்பை ஊக்குவிக்கும் விதத்தில் உயர்கல்வி இல்லை. அரசு வேலைகளையும், சம்பளம்தரும் பணிகளை எதிர்பார்க்கும் இளைஞர்களையே உருவாக்கி வருகிறது உயர்கல்வி.” (தமிழ்நாடு மாநில இளைஞர் கொள்கை, 2014). புதுமைக்கான திறன், வித்தியாசமான சிந்தனை, சுயமதிப்பு, அபாயத்தை எதிர்கொள்ளும் வலிமை, தொழில்முனைப்புச் செயற்பாடுகளைப் பற்றிய பிரக்ஞை ஆகியவற்றை இளைஞர்கள் மனங்களில் விதைக்க முடியாத வண்ணம் இயங்கிக் கொண்டிருக்கிறது உயர்கல்விக் கட்டமைப்பு.
2015-ல் ஸ்டார்ட்-அப் இந்தியா ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நாட்டில் 84,012 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்-அப்கள் உருவாகியிருக்கின்றன. இது 2022 நவம்பர் 30-ன் படி உள்ள நிலவரம். டான்சிம் ஆரம்பநிலை மூலதனம், மானியங்கள், பங்கு, வரிவிலக்குகள் ஆகியவற்றைத் தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு அளித்தது. தமிழகத்து ஸ்டார்ட்-அப்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கியிருந்த மொத்த நிதி ரூ.450 கோடி. வழங்கப்பட்ட ரூ. 34 கோடியில், 2022 நவம்பர் 30 நிலவரப்படி, ரூ.18.70 கோடி மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
2022 நவம்பர் 30 வரை, தமிழ்நாட்டில் உருவான ஸ்டார்ட்-அப்கள் மொத்தம் 4,704 (6 சதவீதம்). இது மற்ற மாநிலங்களை விட மிகக்குறைவு. மகாராஷ்டிராவில் உருவான ஸ்டார்ட்-அப்கள் 15,571 (19 சதவீதம்); கர்நாடகத்தில் 9,904 (12 சதவீதம்); டில்லியில் 9,588 (11 சதவீதம்), உத்தரபிரதேசத்தில் 7,719 (9 சதவீதம்); குஜராத்தில் 5,877 (7 சதவீதம்). இந்தியாவின் 64 சதவீத ஸ்டார்ட்-அப்கள் இந்த மாநிலங்களில்தான் இருக்கின்றன.
தேசிய அளவிலான ஸ்டார்ட்-அப்கள் எண்ணிக்கைகளும் ஆண்டுகளும் பின்வருமாறு: 452 (2016); 5,147 (2017); 8,689 (2018); 11,328 (2019); 14,534 (2020); 20,089 (2021); 23,773 (2022 – நவம்பர் வரை). இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உருவான அளவிலான ஸ்டார்ட்-அப்கள் எண்ணிக்கைகளும் ஆண்டுகளும் பின்வருமாறு: 43 (2016); 252 (2017); 448 (2018); 602 (2019); 755 (2020); 1,103 (2021); 1,501 (2022 – நவம்பர் வரை). தமிழ்நாட்டில் ஸ்டார்ட்-அப் வளர்ச்சி இப்படி குறைவாக இருப்பதற்குக் காரணம் அரசு முயற்சிகள் இளைஞர்களைச் சென்றடையவில்லை என்பதுதான்.
தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் அண்ட் இனோவேசன் மிஷன் (டான்சிம்), 2026-க்குள் சுமார் 10,000 ஸ்டார்ட்-அப்களை உருவாக்க வேண்டும் என்ற ஆகக்பெரும் இலக்கை நிர்ணயித்திருக்கிறது. ஆனால் இதுவரை பதிவுசெய்யப் பட்ட செயற்பாடுகளைப் பார்க்கும்போது அந்த இலக்கு வெகுதூரத்தில் இருப்பது போலத் தெரிகிறது
இந்தியாவில் ஸ்டார்ட்-அப் வளர்ச்சியால் உருவான வேலைகள் எண்ணிக்கை மொத்தம் 8,63,608. தமிழ்நாட்டில் 45,107 (5,.22 சதவீதம்). மற்ற மாநிலங்களில் உருவான வேலை வாய்ப்புகள் எண்ணிக்கைகள் பின்வருமாறு: மகாராஷ்டிரா: 1,63,451 (19 சதவீதம்); கர்நாடகம் 1,11,640 (13 சதவீதம்); டில்லி 1,00,153 (12 சதவீதம்). உத்தரபிரதேசம் 76,867 (9 சதவீதம்); குஜராத் 61,408 (7.1 சதவீதம்). ஸ்டார்ட்-அப்கள் மூலம் நாட்டில் உருவான வேலை வாய்ப்புகளில் 65 சதவீதம் இந்த மாநிலங்கள் மூலம் உருவாகின.
தமிழ்நாட்டில் குறிப்பாக தெற்கிலும் கிழக்கிலும் ஸ்டார்ட்-அப்களுக்கான சூழல் இன்னும் மேம்படவில்லை. ஒருசில மாவட்டங்களில் மட்டுமே ஸ்டார்ட்-அப்கள் குவிந்து கிடக்கின்றன. சென்னையில் 1,900 ஸ்டார்ட்-அப்களும் (48 சதவீதம்), கோயம்புத்தூரில் 516 ஸ்டார்ட்-அப்களும் (13.03 சதவீதம்) இயங்குகின்றன. இந்த இரண்டு மாவட்டங்கள்தான் மாநிலத்தின் மொத்த ஸ்டார்ட்-அப்களில் 61 சதவீதப் பங்களிப்பைச் செய்கின்றன.
மாநிலத்தின் மொத்த ஸ்டார்ட்-அப்களில் 81 சதவீதம் சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், மதுரை, திருச்சி மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் இருக்கின்றன. சேலத்தில் 61 ஸ்டார்ட்-அப்களும் (1.54 சதவீதம்), மதுரையில் 123 ஸ்டார்ட்-அப்களும் (3.11 சதவீதம்), திருச்சியில் 112 ஸ்டார்ட்-அப்களும் (2.83 சதவீதம்) இயங்குகின்றன. இந்த மாவட்டங்களில் இருக்கும் ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. மாநிலத்தின் 20 சதவீத ஸ்டார்ட்-அப்கள் கொங்கு மண்டலத்தில் இருக்கின்றன.
சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருவள்ளூர், திருப்பூர், வேலூர் ஆகிய 14 மாவட்டங்கள் மாநிலத்தின் ஸ்டார்ட்-அப்களில் 92 சதவீதப் பங்களிப்பைச் செய்கின்றன. பிற மாவட்டங்களில் இருக்கும் தொழில் திறமைகள் வீணாகக் கிடக்கின்றன. ஐந்து மாவட்டங்களில் மிகவும் குறைச்சலாகத்தான் ஸ்டார்ட்-அப்கள் இருக்கின்றன; 15 மாவட்டங்களில் 50-க்கும் குறைவாகவே ஸ்டார்ட்-அப்கள் இயங்குகின்றன.
மேலும் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையைத் தவிர்த்து வேறு துறைகளில் ஸ்டார்ட்-அப்கள் தொடங்கப்படவில்லை. வேளாண்மை தொழில்நுட்பம், உணவுப் பதப்படுத்தல், இயற்கை உணவுப் பதப்படுத்தல், ஆகிய துறைகளில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளை ஸ்டார்ட்-அப்கள் பயன்படுத்தவே இல்லை.
தமிழகத்தில் நகர்மயமாதல், தொழில்மயமாதல் ஆகியவற்றிற்கும், ஸ்டார்ட்-அப்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. நகர்மயமாதல், தொழில்மயமாதல் ஆகியவற்றிற்கான உந்துதல் கருத்தாக்கங்களை ஸ்டார்ட்-அப்கள் தரவேண்டும்; ஆனால் தமிழகத்தில் அப்படி நிகழ்வதில்லை. மற்ற மாநிலங்களோடு ஒப்பீடு செய்கையில், தமிழகத்தின் ஸ்டார்ட்-அப் சூழல் ஆளுகை மிகவும் மோசமாகிக் கொண்டே இருக்கிறது என்பது வினோதமான விசயம்.
பரவலாக்கப்பட்ட கட்டுப்பாட்டு அதிகார அமைப்பு இல்லை என்பதால் தமிழகத்தில் பல இளைஞர்களால் ஸ்டார்-அப்களைத் தொடங்க முடியவில்லை என்பதுதான் நிஜம்.
(கட்டுரை ஆசிரியர் பொருளாதார அறிஞர்; பொதுக்கொள்கை நிபுணர்).
Read in : English