Read in : English
’தமிழ்நாட்டில் பிராந்திய வளர்ச்சி முறை’ என்ற தலைப்பில் மாநிலத் திட்டக் குழுவின் அறிக்கை ஒன்று மாவட்டங்களுக்கிடையிலான வளர்ச்சி சமச்சீர்யின்மையை வெளிப்படுத்தியுள்ளது. மாநிலத்தில் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களை விட வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று சொல்கிறது அந்த அறிக்கை. எல்லோருக்குமான சமமான ஒரு வளர்ச்சியை திராவிட மாடல் முன்னேற்றம் தரவில்லை என்பதைத்தான் இந்த அறிக்கை சூசகமாகத் தெரிவிக்கிறது.
தரவுகளையும் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சியை ஆய்வு செய்து பிராந்தியங்களுக்கு இடையிலான வளர்ச்சி சமச்சீர்யின்மையைச் சரி செய்வதற்குத் தேவையான பொதுக்கொள்கை மாற்றங்களைப் பரிந்துரை செய்வது மாநிலத் திட்டக் குழுவின் நோக்கங்களில் ஒன்றாகும். பிராந்தியங்களுக்கு இடையிலான வளர்ச்சிக்கான ஆய்வில் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி நிலைகளை முழுமையாக ஆராய வேண்டும்.
முழுமையான சமூக, பொருளாதார அளவுகோல்களைக் கொண்டு தற்போதைய அறிக்கை ஆராய்ச்சி செய்யவில்லை. அதற்குப் பதிலாக, மொத்த மாவட்ட உற்பத்தி போன்ற சில பொருளாதார அளவுகோல்களை மட்டுமே அறிக்கை கணக்கில் எடுத்திருக்கிறது. அதாவது ஒரு வருடத்தில் குறிப்பிட்ட ஒரு மாவட்டத்தில் எவ்வளவு உற்பத்தி, மக்கள்தொகை, தனிநபர் வருமானம் என்ற அளவுகோல்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
சமூக மற்றும் வளர்ச்சிக் குறியீடுகள் விடுபட்டுவிட்டன. அவை இல்லை என்றால் பிராந்திய சமச்சீர்யின்மைகளைச் சரி செய்வதற்குத் திட்டமிட முடியாது. ஆனாலும், அதனைச் சரிசெய்வதற்குச் சில வழிமுறைகளை முன்வைக்கிறது.
1993-96, 2004-2007 மற்றும் 2017-20 ஆகியவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலகட்டங்கள். “தமிழகத்து மாவட்டங்களின் முப்பதாண்டு கால ஒட்டுமொத்த உற்பத்தியை ஆய்வு செய்தபோது, துறைகள் சார்ந்த மற்றும் இடம் சார்ந்த வளர்ச்சி மாநிலம் முழுவதும் சமச்சீராகப் பகிரப்படவில்லை என்று தெரிந்தது. வளர்ச்சித் திரிபுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன” என்று சொல்கிறது அறிக்கை.
நாட்டிலே அதிகம் நகரமயமான மாநிலம் தமிழ்நாடு; ஆனால் இந்த நகரமயமாதல் ஒரே சீராக இல்லாமல் திரிபுகளோடு விளங்குகிறது
திராவிட மாடல் வளர்ச்சி சமூகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் நன்மை அளித்திருக்கிறது என்ற அரசியல் பரப்புரைக்கு எதிரானது இந்த அறிக்கை.
நாட்டிலே அதிகம் நகரமயமான மாநிலம் தமிழ்நாடுதான். ஆனால் இந்த நகரமயமாதல் ஒரே சீராக இல்லாமல் திரிபுகளோடு விளங்குகிறது. சென்னையைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும், மேற்கு மாவட்டங்களிலும் படுதுரிதமாகத் தொழில்கள் வளர்ந்திருக்கின்றன; விவசாயத்திலும் தொழில்களிலும் அந்தப் பகுதிகள் அபரிமிதமாக முன்னேறிச் சரித்திரம் படைத்திருக்கின்றன.
மேலும் படிக்க: திராவிட மாடல்: ‘மிகைப்படுத்தப்பட்ட பிம்பம்’
தனிநபர் வருமானம் என்ற அளவுகோல்படி பார்த்தால் மாநிலத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் நன்றாக வளர்ச்சி பெற்றிருக்கின்றன; தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் மிகவும் பின்தங்கியே இருக்கின்றன.
வடக்கு மாவட்டங்களின் மக்கள்தொகை 31.8%; மாநிலப் பொருளாதாரத்தில் அவற்றின் பங்களிப்பு 36.6%. மேற்கு மாவட்டங்களின் மக்கள்தொகை 22.8%; மாநிலப் பொருளாதாரத்தில் அவற்றின் பங்களிப்பு 29.6%. ஆனால் தென்மாவட்டங்களின் மக்கள்தொகை 20.5%; மாநிலப் பொருளாதாரத்தில் அவற்றின் பங்களிப்பு 18.8%. வளர்ச்சி குறைந்த கிழக்கு மாவட்டங்களின் மக்கள்தொகை 25.5%; மாநிலப் பொருளாதாரத்தில் அவற்றின் பங்களிப்பு 15.1%.
வடக்கு மாவட்டங்களோடு ஒப்பிடும்போது, கிழக்கு மற்றும் தென்மாவட்டங்களின் வளர்ச்சி முறையே 58% மற்றும் 79% என்ற அளவில் குறைவாக இருக்கிறது. மேற்கு மாவட்டங்களோடு ஒப்பிடும்போது, அவற்றின் வளர்ச்சி 56% மற்றும் 77% என்ற அளவில் குறைவாக இருக்கிறது.
இந்தப் பெரிய ஏற்றத்தாழ்வுகள் பல தசாப்தங்களாகவே நிலவுகின்றன; இதுதான் திராவிட மாடல் வளர்ச்சி. இந்தச் சமச்சீர்யின்மை கழிப்பறை வசதி, குடிநீர், மின்சாரம் போன்ற பிற காரணிகளிலும் வெளிப்படுகின்றன என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
திராவிட மாடல் வளர்ச்சி சமூகத்தின் எல்லாப் பிராந்தியங்களுக்கும் நன்மை அளித்திருக்கிறது என்ற மாயத்தோற்றத்தை ஆய்வு முடிவுகள் தவிடுபொடியாக்கி விட்டன
ஆர்.ஜே.செல்லையா, கே.ஆர்.ஷண்முகம் போன்ற பொருளாதார அறிஞர்கள் தனிநபர் வருமானம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றைப் பற்றிய குறுக்குவெட்டுத் தரவுகளைப் பயன்படுத்தி மாவட்டங்களுக்கிடையிலான சமச்சீர்யின்மையை ஆய்வு செய்திருக்கிறார்கள். அவர்களும் அதே முடிவுக்குத்தான் வந்திருக்கிறார்கள். ”வருமானத்திலும் மனித வளர்ச்சியிலும் மாவட்டங்களுக்கு இடையில் பெரிய ஏற்றத்தாழ்வுகள் இருப்பது கவலைக்குரிய விசயம்” என்று அவர்களின் அறிக்கை சொல்கிறது.
“மாவட்டங்களுக்கு இடையில் பெரிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. ஏழை மாவட்டங்களில் மனித வளர்ச்சி மிகக்குறைவு; தொழில் வளர்ச்சி குறைவு; வேளாண்மை (அரிசி) உற்பத்தியும் மிகக்குறைவு. பட்டியலினத்தவர்களின் மக்கள்தொகை அங்கே அதிகம்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
மேலும் படிக்க: பாஜகவின் தேசியவாத வளர்ச்சியை திராவிட மாடல் சித்தாந்தம் ஜெயிக்குமா?
திராவிட மாடல் வளர்ச்சி சமூகத்தின் எல்லாப் பிராந்தியங்களுக்கும் நன்மை அளித்திருக்கிறது என்று திராவிடக் கட்சிகள் கட்டமைத்து வைத்திருக்கும் ஒரு மாயத்தோற்றத்தை அந்த ஆய்வு முடிவுகள் தவிடுபொடியாக்கி விட்டன.
திராவிட மாடலை தூக்கிப் பிடிக்கும் திராவிடக் கட்சிகள் அமைத்த அரசுகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் மட்டும் வளர்ச்சிப் பணிகளைக் குவித்துவிட்டு தெற்கு, கிழக்குப் பகுதிகளை கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டன என்பதை மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி வடிவமே சொல்கிறது.
மாநிலத் திட்டக் குழுவின் அறிக்கை, கடந்த முப்பதாண்டுகளாக ஏற்றத்தாழ்வுகள் மேலும் மேலும் வளர்ந்திருக்கின்றன என்பதை எடுத்துரைத்திருக்கிறது. “ஏழு மாவட்டங்கள் இருக்கும் ஒவ்வொரு பகுதியையும் கொண்ட நான்கு-பகுதி பரப்பில், மாவட்டங்களின் ஒப்பீட்டு நிலைகள் கடந்த 27 ஆண்டுகளில் பெரிதாக மாறுபடவில்லை” என்று சொல்கிறது அறிக்கை.
“1993-97க்கும், 2017-20க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்தின் பங்களிப்பில் நிலவிய சதவீதப் புள்ளிகளின் மாற்றம் பற்றிப் பேசும்போது, 29 மாவட்டங்களில் ஏழு மாவட்டங்கள் மட்டுமே அவற்றின் மொத்த உற்பத்தி பங்களிப்பில் ஒரு சதவீதப் புள்ளிக்கும் மேலான வித்தியாசத்தை 27 ஆண்டுகளில் பதிவு செய்திருக்கின்றன.
அதாவது, 27 ஆண்டுகளில் பெரும்பாலான மாவட்டங்களின் ஒப்பீட்டுப் பங்களிப்புகள் அப்படியே இருந்திருக்கின்றன அல்லது ஒரு சதவீதப் புள்ளிக்கும் குறைவான மாற்றமே நிகழ்ந்திருக்கிறது.
மாவட்டங்களில் வெவ்வேறு தொழில் துறைகளுக்குப் பொருத்தமான சுற்றுச்சூழலை உருவாக்கினால், பிராந்தியங்களாகப் பிரித்து வைக்கக் கூடிய அடுத்தடுத்த மாவட்டங்களின் ஊடாக பொருளாதாரச் செயற்பாடுகள் வெகுவிரைவில் பரவும்
மாவட்டப் பொருளாதார வடிவத்தை வைத்து ஆய்வு செய்யும்போது, தமிழ்நாட்டில் பிராந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு சுமார் முப்பதாண்டுகளாகப் பெரிதாக மாறவில்லை எனத் தோன்றுகிறது” என்று அறிக்கை சொல்கிறது.
குறிப்பிட்ட சில மாவட்டங்களின் இயற்கை வளங்களையும், மனித மூலதனத்தையும் தட்டி எழுப்பிப் பயன்படுத்தி அந்த மாவட்டங்களின் ஆற்றல்களையும் வாய்ப்புகளையும் வளர்த்தெடுக்கத் தவறி விட்டன திராவிடக் கட்சி அரசுகள்.
”மாவட்டந்தோறும் ஊக்குவிப்புக் கட்டமைப்பை உருவாக்குவதைக் காட்டிலும், பிராந்திய அணுகுமுறையை நாம் மேற்கொள்ள வேண்டும். அதன்படி, அடுத்தடுத்த மாவட்டங்களின் ஊடாக உட்கட்டமைப்பையும் தொழிற்சூழலையும் உருவாக்க வேண்டும்.
ஆதலால் மாவட்டங்களில் வெவ்வேறு தொழில் துறைகளுக்குப் பொருத்தமான சுற்றுச்சூழலை உருவாக்கினால், பிராந்தியங்களாகப் பிரித்து வைக்கக் கூடிய அடுத்தடுத்த மாவட்டங்களின் ஊடாக பொருளாதாரச் செயற்பாடுகள் வெகுவிரைவில் பரவும்” என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.
இன்றைய அரசின் கொள்கை வடிவமைப்பாளர்கள் தங்களுடைய நிபுணர்களின் பேச்சைக் கேட்பார்கள் என்று நம்புவோம். மாவட்டங்களுக்கிடையே இருக்கும் இடைவெளியை நிரப்பி எல்லாப் பிராந்தியங்களிலும் சமச்சீரான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை அந்த நிபுணர்கள் தரவுகளை ஆய்வு செய்து வடிவமைத்திருக்கிறார்கள். ஏற்றத்தாழ்வில்லாத வளர்ச்சியைச் சாதிக்காத திராவிட மாடலைப் பற்றியே சும்மா சும்மா பேசுவதை விட்டுவிட்டு, நிபுணர்களின் அறிவுரைகளைக் காது கொடுத்து கேட்கட்டும் அரசாங்கம்!
(கட்டுரை ஆசிரியர் பொருளாதார அறிஞர்; பொதுக்கொள்கை நிபுணர்)
Read in : English