Read in : English
இன்மதியின் ’நிஜமும் நிதானமும்’ என்ற வேர்காணல் நிகழ்வில் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்ட பிரச்சினை ‘ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்டங்களால் நிகழும் உயிரிழப்புகள்’. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இது சம்பந்தமாக உரையாடினார் உளவியல் அறிஞர் டாக்டர் சுந்தரி.
இவர் 25 ஆண்டுகளாக உளவியல் துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இந்தஸ்விவா ஆரம்பகட்ட கற்றல் மையத்தின் இயக்குநராகவும், சைதன்யா பல்கலைக்கழகத்தில் உளவியல் முதுகலை பட்ட கல்வி வாரியத்தின் உறுப்பினராகவும் பணிபுரிந்து வருகிறார்.
ரம்மி போன்ற இணையவழிச் சூதாட்டங்களும் இன்னபிற விளையாட்டுக்களும் ஏராளமான பேரின் வாழ்வைச் சூறையாடியிருக்கின்றன. பலபேர் பைத்தியமாகிப் பணத்தையும் முடிவில் உயிரையும் இழந்துவிட்டிருக்கின்றனர். இதன் உளவியல் பின்னணி என்ன? விளையாடுவது நாமா, இல்லை தொலைதூரத்திலிருக்கும் யாரோ சிலர் நம் மனதிற்குள் புகுந்து விளையாடுகிறார்களா என்றவொரு சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாதது.
இந்த வேர்காணல் நிகழ்வில் ஆன்லைன் சூதாட்டங்களை அரசு தடுக்க முயல்கிறதா என்பது போன்ற அரசியல் கேள்விகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில் இளைஞர்களைப் பாதிக்கும் இணையவழி சூதாட்டப் போதையின் உளவியல் விளைவுகள் என்ன? இதன் முக்கிய அம்சங்கள் யாவை? இந்த வினாக்களுக்குப் பதிலளித்தார் டாக்டர் சுந்தரி.
“மன ஆரோக்கியம் என்பது தாயின் கருவறையிலே ஆரம்பித்து விடுகிறது.
ஒரு காலத்தில் மனச்சோர்வு, மனப்பிறழ்வு போன்ற வார்த்தைகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக புதியதொரு மனநோய் உண்டாகியிருக்கிறது. அதன் பெயர் ஐசிடி. அதாவது, ’இம்பல்ஸ் கண்ட்ரோல் டிஸ்ஆர்டர்’. தமிழில் ‘உணர்வுக் கட்டுப்பாட்டுக் கோளாறு’ என்று சொல்லலாம்.
உதாரணமாக, யாராவது நமக்கு ஒரு ரோஜாப்பூவைத் தந்தால், முதலில் நமக்கு வருவது ஓர் உணர்வு; பின்பு சிந்தனை. அதன்பின்னர், அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசித்துவிட்டுச் செயலில் இறங்குவோம். ஆனால் ஐசிடி நோய் உள்ளவர்கள் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அப்போதே உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது செய்துவிடுவார்கள்.
ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் ஏராளமானோரை பைத்தியமாக்கி பணத்தையும் உயிரையும் இழக்கவைக்க காரணமாக இருக்கின்றன
ஐக்யூ (intelligent quotient – நுண்ணறிவு ஈவு) பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அதேபோல, இப்போது அதிகம் உளவியலில் பயன்படுத்தப்படும் வார்த்தை ஈகியூ; அதாவது, உணர்வு நிலை ஈவு. உணர்வுகளைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் மனத்தின் சமநிலையை மதிப்பிட உதவும் ஓர் அளவுகோல். சில நிறுவனங்கள் வேலைக்கு ஆளெடுக்கும்போது, அவர்களின் ஈகியூவை சோதித்துப் பார்க்கின்றன.
குழந்தைகளின் ஈகியூவைப் பரிசோதிக்க ஒரு சின்ன பரிசோதனை செய்யலாம்.
ஓர் அறையில் சாக்லேட் பெட்டியை வைத்துவிட்டு சில குழந்தைகளை அங்கே அனுமதிக்கலாம். பெட்டியை யாரும் தொடக்கூடாது என்று குழந்தைகளிடம் சொல்ல வேண்டும். சற்றுநேரம் கழித்து, கட்டளையை மீறிப் பெட்டியைத் திறந்த குழந்தையைக் கவனிக்க வேண்டும். அதற்கு ஐசிடி அறிகுறிகள் இருக்கலாம். ஆனால், பெற்றோர்கள் இதுபற்றி அளவுக்கு அதிகமாகப் பயப்படக்கூடாது. ஏனென்றால், அப்படி அறிகுறிகள் இருந்தால் மெல்ல குழந்தையை நம் வழிக்குக் கொண்டுவர முடியும்.
மேலும் படிக்க: ஆன்லைன் ரம்மி எனும் மாயவலை
இந்த ஐசிடிக்கும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஒருவர் அடிமையாவதற்கும் என்ன சம்பந்தம்?
நிதி உளவியல் என்று ஒன்று உண்டு. உணவு விசயத்தில் மனிதர்களுக்கிடையே வேறுபாடுகள் இருக்கின்றன. சிலருக்கு உணவை அதிகமாகப் பிடிக்கும்; சிலருக்குக் கட்டுப்பாடான முறையில் உண்பது பிடிக்கும். சிலருக்கு உணவின்மீது அவ்வளவாகப் பிடித்தம் இருக்காது. அதுபோலத்தான் பண விசயத்திலும்.
எப்படியாவது நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பலர் போராடுகிறார்கள். சிலர் பணத்தைப் பெரிதாக மதிப்பதில்லை; சிலர் தேவைக்கு மட்டுமே சம்பாதித்துவிட்டு திருப்தி அடைந்து விடுவார்கள். எப்படியாவது நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பலருக்குத்தான் இந்த ஐசிடி இருக்கும். அவர்கள்தான் பெரும்பாலும் ஆன்லைன் சூதாட்டங்களுக்குப் பலியாகி விடுகிறார்கள்.
பணமே பிரதானம் என்பதை நம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறோம். “நீ டாக்டர் ஆகவேண்டும்; இஞ்சினியர் ஆக வேண்டும்” என்று சொல்லிச் சொல்லி வளர்த்து பணம் சம்பாதிக்கும் முறையைக் கற்றுத்தருவதுதான் கல்விமுறை என்பதைப் பிஞ்சு நெஞ்சங்களில் ஆழமாக விதைத்து விடுகிறோம். அவர்களில் சிலர் வளர்ந்து பெரியவர்கள் ஆனபின்பு ஆன்லைன் சூதாட்டங்களில் இறங்கி விடுகிறார்கள்.
ஆனாலும் இணையவழி விளையாட்டுகளிலும் சூதாட்டங்களிலும் குறிப்பிட்ட அளவு சம்பாதித்தபின்பு, அவற்றில் இருந்து வெளியே வந்துவிடுபவர்களும் இருக்கிறார்கள்.
“எனக்குத் தெரிந்த சிலர் இப்படித்தான் கொஞ்சம் பணம் சம்பாதித்த பின்பு ஆன்லைன் ரம்மியிலிருந்து வெளியேறி விடுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். 20 டாலர் கிடைச்சிடுச்சா. போதும். அதுதான் எனக்கான எல்லை. இப்படி சுயக்கட்டுப்பாடு கொண்டவர்கள் மூளையில் இருக்கும் காவல்காரனின் எச்சரிக்கையைக் கேட்டு அதன் பிரகாரம் நடந்து கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்குப் பிரச்சினை இல்லை” என்கிறார் டாக்டர் சுந்தரி.
சரி, இந்தச் சூதாட்டங்களுக்கு ஒருவரை அடிமையாக்கும் உளவியல் தந்திரங்கள் என்ன?
“மூளையில் இருக்கும் காவல்காரனின் எச்சரிக்கையை மீறி ஐசிடி பிரச்சினை உள்ளவர்கள்தான் ஆன்லைன் சூதாட்டங்களில் அளவுக்கு அதிகமாக இறங்கித் தங்களையே இழந்து விடுகிறார்கள். குடும்பமும் நண்பர்களும்தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.
பெல்காமில் வசிக்கும் ஒரு பதின்ம வயதுப் பையன் ஆன்லைன் விளையாட்டுக்களில் இறங்கி மிகமிக மூர்க்கமாகிப் போனான். வெளிநாட்டில் வாழும் ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சார்ந்த மற்றொரு இளைஞன் குறிப்பிட்ட ஒரு மின்னணு விளையாட்டில் ஈடுபடத் தொடங்கி, எங்கிருந்தோ யாரோ சொல்லும் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு முடிவில் உயிரையே இழந்துவிட்டான்.
இணையத்திற்கு அடிமையாதல் என்பது இன்றைய உலகில் ஒரு பெரிய நோயாக உருவெடுத்து வருகிறது. ஜப்பானில் இதற்குச் சிகிச்சை கொடுக்கும் நிலையங்கள் இருக்கின்றன. இது மனிதனுக்கும் செயற்கை நுண்ணறிவு எந்திரத்திற்கும் இடையே நடக்கும் ஒரு விளையாட்டு.
கொஞ்சம் பணம் சம்பாதித்த பின்பு ஆன்லைன் ரம்மியிலிருந்து வெளியேறி விடுவதாகச் சொல்லியிருக்கிறார்கள் சிலர்; மூளையில் இருக்கும் காவல்காரனின் எச்சரிக்கையைக் கேட்டு அதன் பிரகாரம் நடந்து கொள்கிறார்கள்
இதன் முடிவில் மனிதனை வீழ்த்துவது எந்திரம்தான். சில நாட்களுக்கு முன்பு ’ப்ளூவேல் கேம்ஸ்’ இப்படித்தான் நிறைய இளைஞர்களின் உயிரைக் காவு வாங்கியது” என்கிறார் டாக்டர் சுந்தரி.
சில சினிமா பிரபலங்களே கூட ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஆதரிக்கும் வண்ணம் விளம்பரங்களில் தோன்றுகிறார்கள். அது பற்றி கேட்டால், “குடிக்காதே, புகைக்காதே என்று நாங்கள் சொல்லும் ஆக்கப்பூர்வமான அறிவுரைகளைக் கேட்காத மக்கள் நாங்கள் சொல்லியா ஆன்லைன் ரம்மி ஆடுவார்கள்?” என்று பதிலுக்குக் கேட்கிறார்கள். இது பற்றி கேட்டபோது, ”அவர்கள் சொல்வது ஒருவகையில் சரிதான்” என்றார் டாக்டர் சுந்தரி.
“சினிமா பிரபலங்களின் வாழ்க்கை முறையும் படாடோபமும் சாதாரண மக்களை ஆச்சரியப்பட வைக்கின்றன. ஆனால், அந்தப் பிரபலங்கள் இந்த நிலைக்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை மக்கள் மறந்துவிடுகிறார்கள். சினிமாக்காரர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற தவறான கண்ணோட்டம் சிலர் மத்தியில் நிலவுகிறது.
மேலும் படிக்க: போலீஸ் துறையில் உள்குத்து இருந்தும் லாட்டரி தடை எப்படி வந்தது
அதனால்தான் இந்த மாதிரியான உணர்ச்சிக்கூர்மைமிக்க பிரச்சினைகளில் எதிர்வினை ஆற்றுவதில் பிரபலங்கள் கவனமாக இருக்க வேண்டும். என்றாலும், அவர்களை மட்டுமே குறை சொல்வது சரியல்ல. நாம்தான் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்.
உடலில் ஏற்படும் நோய்கள் குணமாக மருத்துவரை அணுகுவது சாதாரணமான விசயம். ஆனால் உளவியல் பிரச்சினைகளுக்கு பெரும்பாலானோர் உளவியல் மருத்துவரை அணுகுவதில்லை. ஏனென்றால், சமூகம் மனநோயைப் பரிகாசமாகப் பார்க்கிறது.”
ஆதிகாலத்தில் மனநோய் என்பது கடவுள் தந்த தண்டனை என்றார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. ஆதலால் உளவியல் பிரச்சினைகளுக்கு எங்களைப் போன்றவர்களை அணுக ஆரம்பித்து விட்டார்கள்.
ஆன்லைன் விளையாட்டுக்களுக்கும் சூதாட்டங்களுக்கும் அடிமையாகுதல் என்பது ஐசிடியின் வெளிப்பாடுதான். அதனால்தான் அரசு இந்த தீய மின்னணு ஆட்டங்களைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ஒரு தனிமனிதராக மட்டுமல்ல, உளவியல் மருத்துவராக மட்டுமல்ல, இரண்டு குழந்தைகளின் தாயாகவும் இதனைச் சொல்கிறேன்” என்ற கருத்தைச் சொல்லி வேர்காணலை முடித்து வைத்தார் டாக்டர் சுந்தரி.
Read in : English