Read in : English
நோய் எதிர்ப்பாற்றல் என்றால் என்ன? நம்மைத் தாக்குகிற நோய்களில் இருந்து உடலைக் காக்கும் ஒரு நுட்பம்தான் நோய் எதிர்ப்பாற்றல். இது ஒரேநாளில் அமையப் பெறாது. ஆறு மாத காலம் முதல் ஓர் ஆண்டு காலம் வரை மெதுவாக வளர்ச்சியுறக் கூடியது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தத் தனியாக மருந்துகள் ஏதும் கிடையாது. உணவு மற்றும் வாழ்க்கை முறை சிறப்பாக அமைவது மட்டுமே இதனைச் சாத்தியப்படுத்தும். அப்படிப்பட்ட உணவுகளை எவ்வாறு எடுத்துக்கொள்கிறோம் என்பதும் மிக முக்கியம்.
நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்தும் உணவுகளில் முதன்மையானது பூண்டு. தினமும் உணவில் பூண்டு சேர்த்துக்கொள்ளும் வழக்கம் நம்மிடையே உள்ளது. இந்த பூண்டில் அலிசின் (ALLICIN) உள்ளது. இது, நம் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்தும் வெள்ளை அணுக்களின் வளர்ச்சியை அதிகமாக்கும்.
குழந்தைகளுக்குத் தினமும் பாலில் இரண்டு பூண்டு பற்களை ஊற வைத்து சாப்பிடக் கொடுத்தால், அவர்களது நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாகும்
சாதாரண சளி, காய்ச்சல், ப்ளூ போன்றவற்றின் தாக்கத்தைப் பெருமளவில் குறைக்க பூண்டு உதவும். சமீபத்தில் ஊட்டச்சத்து அறிவியல் இதழில் (Journal of Nutrition Science) ஒரு ஆய்வு முடிவு வெளியானது. அந்த ஆய்வுக்காக 143 பேருக்குத் தினமும் உணவில் பூண்டு கொடுக்கப்பட்டு அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றம் கவனிக்கப்பட்டது. அப்போது அவர்களுக்கு 63% வரை சளி, காய்ச்சல், ப்ளூ தொற்றுவது குறைந்திருப்பதாகத் தெரிய வந்தது. இதன் மூலமாக பூண்டு சாப்பிடுவதால் இந்நோய்களால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியும் என்பதை அறியலாம்.
உங்கள் குழந்தைகளுக்குத் தினமும் பாலில் இரண்டு பூண்டு பற்களை ஊற வைத்து சாப்பிடக் கொடுத்தால், அதன் மூலமாக அவர்களது நோய் எதிர்ப்பு ஆற்றலை வெகுவாக அதிகரிக்க முடியும்.
மேலும் படிக்க: சூரிய ஒளி அள்ளித்தரும் வைட்டமின்-டி
வைட்டமின் சி அதிகமுள்ள உணவுப் பொருட்கள் மூலமாகவும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கலாம். எலுமிச்சை, நெல்லி, சாத்துக்குடி, ஆரஞ்ச் போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம். கொய்யாப் பழத்திலும் வைட்டமின் சி உண்டு.
நியூட்ரோபில் எனப்படும் வெள்ளை அணுக்களை இந்த வைட்டமின் சி அதிகமாக உருவாக்கும். அந்த நியூட்ரோபில்கள் நம் உடலில் இருக்கும் நச்சுத்தன்மை கொண்ட நோய் ஏற்படுத்தும் வல்லமை கொண்ட நுண்ணுயிரிகளை அழித்தொழிக்கும். அது மட்டுமல்லாமல் சிலருக்கு காயம் ஏற்பட்டால் உடனடியாக ஆறாத தன்மை இருக்கும். வைட்டமின் சி உணவுகளை எடுத்துக்கொண்டால் அது சரியாகும். நுரையீரல் தொற்றில் இருந்து சுவாச மண்டலப் பாதிப்புகள் வரை அனைத்தும் சீராகும்.
அதிக சர்க்கரையுள்ள உணவுகளும், ‘ஜங்புட்’ எனப்படும் துரித உணவுகளும் நோய் எதிர்ப்புத்திறனைப் பாதிக்கும் இயல்பு கொண்டவை
இந்த வைட்டமின் சியை மாத்திரையாகவோ, சப்ளிமெண்டாகவோ எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. காரணம், ஒரு கொய்யாப்பழத்தில் சுமார் 250 மி.கி. வரை வைட்டமின் சி கிடைத்துவிடும். அதனால் முடிந்த அளவுக்குப் பழமாகவோ அல்லது பழச்சாறு மூலமாகவோ வைட்டமின் சியை எடுத்துக்கொள்ளப் பழக வேண்டும். அதேபோல வைட்டமின் சி எடுத்துக்கொள்ளும்போது இரும்புச்சத்து உட்கிரகிக்கும் திறனும் அதிகரிக்கும். அதனால் அனீமியா போன்ற பிரச்சனைகள் வராது.
இஞ்சியில் நிறையவே ஆன்ட்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. இதில் அழற்சி எதிர்ப்பும் (Anti Inflammatory) உண்டு. அதனால் தேவையற்ற உடல் உபாதைகளை தவிர்க்க உதவும். தினமும் இரண்டு வேளை இஞ்சிச்சாறு அருந்தும்போது செரிமான அமைப்பு சீராகும். நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறு இஞ்சித்துண்டு உடன் கல் உப்பையும் சேர்த்து மென்று பார்க்கலாம். நிச்சயமாக அது நமது செரிமான அமைப்பைப் பாதுகாக்கும்.
மஞ்சள் நமக்கு ரொம்பவே பரிச்சயமானது. இதிலுள்ள சர்க்யூமின் (Curcumin) எனும் கலவை நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை இல்லாமலாக்கும். அதனால்தான் நம் முன்னோர்கள் வீடுகளில் மஞ்சள் தண்ணீர் தெளிக்கும் வழக்கத்தையும் மஞ்சள் பத்து இடுதல் எனும் பழக்கத்தையும் கொண்டிருந்தனர். அதனால், நோய்க்கிருமிகள் அழித்தொழிக்கப்பட்டன. நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்தது. அதேபோல, இரவில் பசும்பாலில் மஞ்சள் கலந்து குடிக்கும் வழக்கமும் கூட பயன் தரும்.
மேலும் படிக்க: ஊட்டச்சத்து வேண்டுமா?: விதைகள் உண்போம்!
பசும் மஞ்சள் எனப்படும் இளம் மஞ்சளை நறுக்கிச் சிறு துண்டாக்கிப் பச்சையாகவே சாப்பிடலாம். அதனால், மாதவிடாய் சம்பந்தப்பட்ட உபாதைகள் சீராகும். மஞ்சள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கொழுப்பு அளவை மட்டுப்படுத்தும்.
பச்சைக் காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவதும் கூட நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக வழி வகுக்கும். இதை வண்ணமயமான உணவுக் கட்டுப்பாடு (Colorful Diet) என்றும் சொல்லலாம். ஏனென்றால் பழங்கள், காய்கறிகளில் பலவிதமான நிறமிகள் உள்ளன; அவை அனைத்தும் ஆன்ட்டிஆக்சிடெண்ட்கள் என்பதால் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாகும்.
காய்கறிகள், பழங்களில் அதிகளவு நார்ச்சத்துகள் உள்ளன. இவை புரோபயோடிக் (probiotic) உணவுகளாகவும் விளங்குகின்றன; அதாவது, இவற்றில் செரிமானத்திற்கு நன்மையளிக்கும் நுண்ணுயிரிகள் இருக்கின்றன. அதனால், டயட்டில் அதிகளவு காய்கறிகள், பழங்கள் இருக்கும் வகையில் திட்டமிட வேண்டும்.
மஞ்சளில் உள்ள சர்க்யூமின் (Curcumin) நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை இல்லாமலாக்கும்
அதிக சர்க்கரையுள்ள உணவுகளும், ‘ஜங்புட்’ எனப்படும் துரித உணவுகளும் நோய் எதிர்ப்புத்திறனைப் பாதிக்கும் இயல்பு கொண்டவை. அதனால், முடிந்தளவுக்கு அவற்றை உட்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியமான உணவுமுறையும் நல்ல தூக்கமும் தானாகவே நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாக வழி செய்யும்.
அதற்காக, இரவு 1 மணிக்கு தூங்கி காலை 9 மணிக்கு எழுவது நிச்சயம் நல்லதல்ல. ஏனென்றால், நமது உடல் இயற்கையுடன் இணைந்து இயங்குவது. அதனால், சூரியன் மறைந்து 3 அல்லது 4 மணி நேரம் கழித்து உறங்க வேண்டும்; சூரியன் உதித்து அதிகபட்சம் 1 மணி நேரத்திற்குள் எழ வேண்டும். இந்த சுழற்சியைப் பின்பற்றினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதேபோல மன அழுத்தம் இல்லாத வாழ்க்கைமுறையைப் பின்பற்ற வேண்டும்; தினமும் அரை மணி நேரமாவது உடலை இயக்கும் வகையில் பயிற்சிகள் செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்தால், நமது நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாகி ஆரோக்கியத்துடன் வலம் வரலாம்.
Read in : English