Read in : English

Share the Article

பொதுவாக விதைகளை ‘ஊட்டச்சத்தின் ஆற்றல் கூடம்’ (Powerhouse of Nutrients) எனலாம். ஏனென்றால், ஒரு விதையில் விருட்சமே அடங்கியிருக்கிறது. அப்படிப்பட்ட விதைகளை உணவாகக் கொண்டால் எப்படிப்பட்ட ஆரோக்கியம் வாய்க்கும் என்ற கேள்விக்குப் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.நம்மைச் சுற்றி நிறைய விதைகள் இருக்கின்றன. அவற்றை உட்கொள்ளும்போது உடல்நலம் மிக நன்றாக மாற்றமடைவதைக் காணலாம்.

அந்த வரிசையில், முதலாவதாக சியா (CHIA) எனும் விதையின் பயன்களை அறியலாம். எல்லா மளிகைக்கடைகளிலும் சிறப்பு அங்காடிகளிலும் இது கிடைக்கும். இந்த சியா விதையை எல்லா வழிமுறைகளிலும் உணவாகக் கொள்ளலாம். இதில் இருக்கும் ஆல்பா லினோலினிக் அமிலம் நம் உடலில் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை உருவாக்கும். அது தவிர நார்ச்சத்துகள், புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்களும் இதில் அடங்கியுள்ளன.

சியா விதைகளைச் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். எடைக் குறைப்பு, ரத்தத்தில் சர்க்கரை கட்டுப்பாடு போன்றவற்றை மேற்கொள்ள சியா விதைகள் உதவும். தொடர்ந்து 12 வாரங்கள் 76 பேருக்குத் தினமும் 50 கிராம் சியா விதைகளை உணவாகத் தந்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில், அம்மனிதர்களின் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு குறைந்ததோடு எடை குறைப்பு நிகழ்ந்ததும் கண்டறியப்பட்டது. நல்ல மற்றும் கெட்ட கொழுப்புகளைக் கண்டறிய உதவும் லிப்பிட் அறியும் சோதனையில் ரத்த சுத்திகரிப்பு மேம்பட்டிருந்தது தெரிய வந்தது; இதய ஆரோக்கியமும் வெகுவாக அதிகரித்திருந்தது.

சியா விதைகளை உணவாகத் தந்து மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் முடிவில், மனிதர்களின் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு குறைந்ததோடு எடை குறைப்பு நிகழ்ந்ததும் கண்டறியப்பட்டது

சியா விதைகளை தினமும் 50 கிராம் அளவுக்கு உட்கொள்ள முடியாதவர்கள், சுமார் 15 கிராம் மேஜைக்கரண்டியில் எடுத்து அதனை வெந்நீரில் கொஞ்ச நேரம் ஊறவைத்து, அதனுடன் எலுமிச்சம்பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் போதும்; உடலுக்குத் தேவையான நார்ச்சத்தைப் பெறலாம்.

இந்த வரிசையில் இரண்டாவது பிளாக்ஸி எனப்படும் ஆளி விதை. எல்லா சிறப்பு அங்காடிகளிலும் எளிதாக கிடைக்கும். விலையும் மலிவு. ஆனால், ஆளி விதையின் பயன்கள் மிக அதிகம்.

மேலும் படிக்க: கோவை மான்ஜாக்: அருகி வரும் அபூர்வமான தாவரத்தை பாதுக்காக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் நடவடிக்கை

ஆளி விதையைப் பொடி செய்து இட்லிக்கு தொட்டுக்கொள்ளலாம் அல்லது சப்பாத்தி, உப்புமாவில் கலந்து சாப்பிடலாம். ஒருநாளைக்குத் தேவையான நார்ச்சத்து இதில் இருந்து கிடைக்கும். பாலிபீனால் எனப்படும் ஆன்டி ஆக்சிடென்ட் அதிகமுள்ளதால், இது புற்றுநோயைத் தடுக்கவல்லது.

பெண்கள் ஆளி விதையைச் சாப்பிட்டால் கருப்பை, மார்பகப் புற்றுநோய் ஏற்படாது. இதிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இதனைச் சாப்பிடுவதால் மூளைச் செயல்பாடு நன்றாக இருக்கும். இதய ஆரோக்கியம் சீராக இருக்கும்; ரத்த சர்க்கரையில் தொடங்கி, தோல், முடி என்று அனைத்துமே நன்றாக இருக்கும்.

மூன்றாவதாக நாம் பார்க்கவிருப்பது பூசணி விதைகள். இதிலும் நார்சத்து, புரதம் நிறைந்துள்ளது; இதிலுள்ள பைட்டோ ஸ்டீராய்டுகள் நம் உடலிலுள்ள ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொழுப்பை மேம்படையச் செய்யும்.

நான்கவதாக இடம்பிடிப்பது சூரியகாந்தி விதைகள். இதில் புரதச்சத்து அதிகம். இதனைச் சீரான முறையில் உட்கொண்டால் உடலில் வீக்கம் ஏற்படாமல் தடுக்கும். நம் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தக் காரணமாக இருக்கும் சிஆர்பி (C Reactive Protein) உருவாவதைக் கட்டுப்படுத்தும். அடுத்து நாம் பார்க்கவிருப்பது சணல் (HEMP) விதைகள். இது ஒரு அற்புதமான சைவப் புரதம். பால், இறைச்சியை உண்ணாத தீவிர சைவர்களுக்கு ஏற்ற தாவரப் புரதம். சணல் விதை பற்றிப் பலருக்கும் தெரிவதில்லை.

முடி உதிர்வு உள்ளவர்கள் சணல் விதைகளை எடுத்துக்கொண்டால், அப்பிரச்சனையை எளிதாக எதிர்கொள்ளலாம்

இதில் ஒமேகா 3, ஒமேகா 6 அமிலங்கள் அதிகமுண்டு. அதனால் தோல், முடி, நகம் பராமரிப்பு அருமையாக இருக்கும். முடி உதிர்வு உள்ளவர்கள் சணல் விதைகளை ‘டயட்’டில் எடுத்துக்கொண்டால், அப்பிரச்சனையை எளிதாக எதிர்கொள்ளலாம். சணல் விதைகளைப் பொடி செய்து சாப்பிடலாம்; முளை கட்டிய பயறு ஆகப் பயன்படுத்தலாம்; அரைத்து பால் எடுத்து ஒரு வாரம் வரை உட்கொள்ளலாம்.

சணல் விதைகள் எல்லா மளிகைக்கடைகளிலும் கிடைக்கும். இதனைச் சாப்பிட ஆரம்பித்தால் ஒரு வாரம், இரண்டு வாரத்தில் நல்ல பலன் தெரியும். வீகன் ஆக இருப்பவர்களுக்கு இது ஒரு வரம்.

அடுத்ததாக நாம் பார்க்கவிருக்கும் விதை எள் (SESAME). துவையல், சட்னி, கொழுக்கட்டை, பொடி, இனிப்பு உருண்டை என்று பலவிதமாக எள்ளை நாம் உணவில் பயன்படுத்தி வருகிறோம். எல்லா விதைகளையும் போலவே நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை அதிகளவில் கொண்டது எள். இதன் நார்ச்சத்தில் உள்ள செசாமின் (SESAMIN) குடல் பகுதிக்குச் செல்லும்போது எண்ட்ரோலாக்டன் ஆக மாறும். இது ஈஸ்ட்ரோஜன் உற்பத்திக்கு துணை புரியும்.

மேலும் படிக்க: மீண்டும் சமையல் பயன்பாட்டுக்கு வருமா மருந்தாகும் பூக்கள்?

இனப்பெருக்கத்திற்கு ஈஸ்ட்ரோஜன் மிகவும் அவசியம். அதனால், மாதவிடாய் சீராக இருக்க எள் உதவும். அது மட்டுமல்லாமல், குழந்தையின்மை பிரச்சனையால் அவதியுறும் பெண்கள் எள் சாப்பிட்டால், உடலுறவுக்கான ஹார்மோன்கள் நன்ராக உற்பத்தியாகும்; குழந்தைப்பேறு உண்டாகும். பொதுவாகவே, எள்ளை தொடர்ச்சியாக உட்கொள்வது நல்லது. மிகமுக்கியமாக, மாதவிடாய்க்குப் பிறகான காலத்தில் பெண்கள் எள் சாப்பிடுவது நலம் பயக்கும்.

மேலே சொன்ன எல்லா விதைகளையும் சீரான இடைவெளியில் சாப்பிடுவது ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். இவ்விதைகளில் சத்துக்கள் அதிகம் என்பதால், இவற்றை எவ்வளவு உட்கொள்வது என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரும். தினமும் இரண்டு மேஜைக்கரண்டி அளவு, அதாவது 30 கிராம் வரை சாப்பிடுவது நல்லது. இந்த எல்லா விதைகளையும் ஒன்றாகச் சேர்த்து வறுத்து அரைத்து உட்கொள்ளலாம். தினமும் ஒரு விதை என்று முறை வைத்துச் சாப்பிடுபவர்களும் உண்டு.

பொதுவாக, வாரத்திற்கு மூன்று விதைகள் என்று கணக்கு வைத்துக்கொண்டு குறிப்பிட்ட அளவில் சாப்பிடுவது நல்லது. பல மருத்துவமனைகளில் குழந்தையின்மை பிரச்சனையால் அவதியுறுபவர்களுக்கு இந்த விதைகளை சுழற்சி முறையில் உட்கொள்ளும் அறிவுரை வழங்கப்படுகிறது. அதனால், அவர்கள் ஆரோக்கியம் மேம்படுவதோடு கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகிறது.

முதுமையில் ஏற்படும் மூட்டு வலி உட்படப் பல வலிகளைப் போக்க இந்த விதைகள் உதவும். இந்த விதைகளை உட்கொள்வதை உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால், குறைந்தபட்சம் 3 முதல் 4 மாதங்களில் நல்ல பலனைக் காணலாம்.

(பேராசிரியர் அனிதா மது -உணவு அறிவியல் துறை, தனபாலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி)


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles