Read in : English
“தேனீருக்குப் பதில் காலையில் ஒரு கிளாஸ் நீரா அருந்தினால், காலையுணவுக்கு வேறெதுவும் தேவைப்படாது” என்று ஒருதடவை மகாத்மா காந்தி சொன்னார். ஆனால் அரதப்பழசான அரசாங்க விதிகள் போதையற்ற இந்த பானத்தைத் தயாரிக்கவிடாமல் தென்னை விவசாயிகளைத் தடுத்துவிட்டதால், உடற்பயிற்சியாளர்களுக்கு இது எளிதாகக் கிடைப்பதில்லை.
தென்னம்பாளை பூக்களின் சாறுதான் நீரா. பனையில் இருந்து இறக்கப்படும் பதனீர் போல, தென்னையில் இருந்து இறக்கப்படும் திரவமே நீரா. கள் போலல்லாமல் நீரா நொதிப்பதற்கு முன்பே அருந்தப்படுகிறது. இந்தியாவில் கேரளாவுக்கு அடுத்து தமிழ்நாடுதான் தென்னை வேளாண்மையில் சிறந்து விளங்குகிறது. ஆனாலும், நீராவைத் தயாரிக்கவிடாமல் விவசாயிகளின் வருமானத்தைத் தடுப்பது பழசாகிப் போன அரசு விதிகள்தான்.
தமிழ்நாட்டில் 4.44 இலட்சம் ஹெக்டேர் நிலத்தில் தென்னை வேளாண்மை நடக்கிறது. வருடத்திற்கு 52,140 இலட்சம் தேங்காய்கள் உற்பத்தியாகின்றன. ஒரு ஹெக்டேருக்கு 11,560 காய்கள் விளைச்சலாகின்றன. இவை அதிகாரப்பூர்வமான 2020-21க்கான புள்ளிவிவரங்கள். ஆனால் நீராவின் மதிப்பு சரியாக புரிந்துகொள்ளப் படவில்லை. காரணம் உரிமம் சம்பந்தமான விதிமுறைகள்.
தமிழ்நாட்டில் 13 உரிமங்கள் மட்டுமே நீரா உற்பத்திக்காக வழங்கப்பட்டிருக்கின்றன. அதேநேரத்தில், கேரளாவில் 204 உரிமங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. கர்நாடகத்திலும் நீரா உற்பத்திக்கான உரிம விதிகள் தாராளமாக இருக்கின்றன. உரிமம் வைத்திருக்கும் தமிழ்நாட்டு தென்னை விவசாயிகள் ஒன்பது இலட்சம் லிட்டர் நீரா உற்பத்தி செய்திருக்கிறார்கள்; அதன்முலம் ரூ.13 கோடி வருமானம் வந்திருக்கிறது. ஆனாலும் இன்னும் அதிகமான வருவாய்க்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
தேனீருக்குப் பதில் காலையில் ஒரு கிளாஸ் நீரா அருந்தினால், காலையுணவுக்கு வேறெதுவும் தேவைப்படாது என்று சொன்னார் காந்தி
தமிழகத்தில் தேங்காய் வளர்ச்சி ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்ட தேங்காய் உற்பத்தி நிறுவனங்கள் மொத்தம் 29; தேங்காய் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்புகள் 467. தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மொத்தம் 7,230.
தமிழகத்தில் ’பாம்’ (PALM) குடும்ப மரங்கள் வகைப்பாட்டைச் சேர்ந்த தென்னை, பனை மரங்கள் மொத்தம் ஐந்து கோடி இருக்கின்றன. அவற்றின் இலைகளால், நார்களால் மேற்கொள்ளப்படும் கூடை முடைதல், பாய் தயாரித்தல், கயிறு திரித்தல் போன்ற தொழில்களில் மூன்று இலட்சம் குடும்பங்கள் ஈடுபட்டிருக்கின்றன. அவர்களில் 11,000 பேர் நுங்கு மற்றும் நீரா தயாரிப்பிலும் விற்பனையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
மேலும் படிக்க: மக்கள் பண்பாட்டுடன் இணைந்த பனை மரம்: பாதிரியாரின் விழிப்புணர்வுப் பயணம்!
தென்னைப் பொருட்களுக்கு உள்ளூரில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் தேவை இருக்கிறது. தேங்காய் சார்ந்த சரக்குகளை பெருமளவில் முன்னெடுத்துச் செல்லும் போட்டிமிக்க சந்தையில் இன்று முன்னணியில் நிற்கின்றன இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள். இதில் இந்தியா இன்னும் ஆரம்பகட்டத்திலேதான் இருக்கிறது. தேங்காய் வளர்ப்பில் பெரியதொரு நாடாக இந்தியா இருந்தாலும் உலகச் சந்தையில் ஆகப்பெரும் போட்டியாளராக வளரக்கூடிய வாய்ப்புகளை இந்தியா தவறவிட்டிருக்கிறது.
தென்னம்பாளையின் நீரா இந்தியாவின் உணவுக் கலாச்சாரத்தில் பல நூற்றாண்டுகளாக இடம்பெற்ற பாரம்பரிய சத்துணவுப் பானங்களில் ஒன்று. ஆனால் கடந்த எழுபதாண்டுகளாக கள் என்று நினைத்து நீராவை இறக்கித் தயாரிக்கும் வேலையைத் தடை செய்தன அரசு விதிகள்.
எனினும் நொதித்தலைத் தடுக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தென்னம்பாளைகளை திறக்காமல் அவற்றிலிருந்து வடிகட்டி எடுக்கப்படும் போதை அற்ற சத்துணவுப் பானம்தான் நீரா என்று தமிழக அரசு தெளிவுபடுத்திவிட்டது. மேலும் ‘தமிழ்நாடு நீரா விதிமுறைகள்’ வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. நீரா இறக்குதலும், நீராவிலிருந்து மற்ற பொருட்கள் தயாரித்தலும் இப்போது அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.
தென்னை வேளாண்மையைச் சார்ந்து கோடிக்கணக்கான விவசாயிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் 90 சதவீத தென்னைமர வேளாண்மை தென்மாநிலங்களில்தான் நடைபெறுகிறது. எனினும், 2017ல் கொண்டுவரப்பட்ட கடுமையான உரிம (லைசென்ஸ்) விதிமுறைகள் தென்னைமர விவசாயிகளைப் பாதித்திருக்கின்றன. நீராவை நொதிக்கவிடாமல் தடுக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள் விவசாயிகள்.
இந்தியா ஆண்டுக்கு 20,000 டன் தென்னஞ்சர்க்கரையை இறக்குமதி செய்கிறது என்கிறது தேங்காய் வளர்ச்சி ஆணையம். நீரா தயாரித்தல் சம்பந்தமான சிக்கலான விதிமுறைகள் தளர்த்தப்பட்டால், உள்நாட்டிலே மிக எளிதாக தென்னஞ்சர்க்கரை உற்பத்தியை மேற்கொள்ளலாம்; இறக்குமதியைத் தவிர்த்து விடலாம்.
இந்தியாவின் உணவுக் கலாச்சாரத்தில் பல நூற்றாண்டுகளாக இடம்பெற்ற பாரம்பரிய சத்துணவுப் பானங்களில் ஒன்று நீரா. கடந்த எழுபதாண்டுகளாக கள் என்று நினைத்து நீராவை இறக்கித் தயாரிக்கும் வேலையைத் தடை செய்தன அரசு விதிகள்
தென்னை மரங்களில் வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே நீரா இறக்கப் பயன்படுத்த வேண்டும் என்று 2017ஆம் ஆண்டு விதிமுறைகள் கட்டுப்பாடு விதித்திருக்கின்றன. ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வாளர்கள் வந்து நீரா இறக்குவதற்கான தென்னை மரங்களைக் குறித்துவிட்டுச் செல்வார்கள். இது தொடர்ந்து செய்ய முடிகிற கண்காணிப்பு அல்ல. இதனால், நீரா இறக்கப்படாத தென்னை மரங்களின் வளங்கள் வீணாகி விடுகின்றன.
இதில் சுவாரஸ்யமான விசயம், இந்த விதிமுறைக் கோளாறுகளை நீக்குவதற்காக, தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937ல் திருத்தம் கொண்டுவந்து கள் பட்டியலிலிருந்து நீராவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வாதாடியது ஒன்றிய அரசின் வேளாண்மை அமைச்சகத்தின் கீழ்வரும் தேங்காய் வளர்ச்சி ஆணையம்தான்.
தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937ன் பிரிவு 19ல் நீரா அல்லது பதனீரைச் சேர்ப்பது அறிவுக்குப் பொருந்தாது. பிரிவு 11 பியில் விளக்கப்பட்டிருப்பது போல, நீரா அல்லது பதனீர் என்பது தென்னை, பனை, பேரீச்சை போன்ற பால்மைரா வகை மரங்களிலிருந்து இறக்கி பாத்திரங்களில் பிடிக்கப்பட்டு நொதிக்கவிடாமல் பக்குவமாய்த் தயாரிக்கப்படுவது. அதில் மதுச்சுவை இல்லை.
மேலும் படிக்க: அனிமேஷன் படித்துவிட்டு பாரம்பரிய விவசாயம் செய்யும் இளைஞர்!
அதனால் பிரிவு 19ல் சொல்லப்பட்ட கள் வகையறாக்களிலிருந்து நீரா நீக்கப்பட வேண்டும் என்று தேங்காய் வளர்ச்சி ஆணையம் சொல்லியிருக்கிறது.
“நீரா ஓர் ஆரோக்கிய பானம். ஒரு சின்ன சட்டத்திருத்தம் 2.40 இலட்சம் சுற்றுப்புறச் சூழல் தொடர்பான பணிகளை உருவாக்கும். மேலும் மாநிலத்தின் வருவாயில் ரூ.47,500 கோடி கூடுதலாக உயரும்” என்று ஓர் அதிகாரி சொன்னதாக பிஸினஸ்லைன் நாளேடு 2018ல் தெரிவித்தது.
ஆதலால் நீராவை ஓர் ஆரோக்கியப் பானமாக வகைப்படுத்தும் விதத்தில் சட்டம் திருத்தப்பட வேண்டும். மேலும் நீராவைப் பதப்படுத்தி அதிலிருந்து வெல்லம், சர்க்கரை, பாகு ஆகியவற்றைத் தயாரிக்கத் தோதுவாக விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். நீரா இறக்கப்படும் தென்னை மரங்களின் சதவீதம் இப்போது ஐந்தாக உள்ளது; இது 25ல் இருந்து 30 சதவீதம் வரை உயர்த்தப்பட வேண்டும். சட்டத்திருத்தம் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் அரசிற்கும் கூடுதல் வருவாயைக் கொண்டுவரும்.
தமிழ்நாடு நீரா விதிமுறைகள், 2017ல் திருத்தங்கள் கொண்டுவர வேண்டுமென்று தமிழக அரசிற்கு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டிருக்கிறது. அரசு விரைவில் இந்த வேண்டுகோளை நிறைவேற்றுமென்று நம்புவோமாக!
(கட்டுரை ஆசிரியர் ஒரு பொருளாதார அறிஞர், பொதுக்கொள்கை நிபுணர்)
Read in : English