Read in : English

Share the Article

ஆசைஆசையாக திரையரங்கு வாசல் வரை சென்று, டிக்கெட் கவுண்டரில் ‘ஷோ கேன்சல்’ என்ற வார்த்தையைக் கேட்க நேர்ந்தால் எப்படியிருக்கும்? ‘என்னது தியேட்டர்ல அப்படியெல்லாம் கூடவா பண்ணுவாங்க’ என்று நீங்கள் கேட்டால், நிறைந்து வழியும் திரையரங்குகளில் மட்டுமே இதுவரை படம் பார்த்து வந்திருப்பதாக அர்த்தம்.

திரையரங்க அனுபவம் அப்படித்தான் வாய்க்க வேண்டும் என்பது வேறு விஷயம். அதற்கு நேர்மாறாக ஓரிரு பார்வையாளர்களின் வருகையை மதிக்கும்விதமாக காட்சிகள் திரையிடப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. இன்று, அந்த வழக்கம் அருகி காட்சிகள் ரத்து செய்யப்படுவதோ அல்லது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் அதற்குப் பதிலாக திரையிடப்படுவதோ வெகுசாதாரணமாகிவிட்டது.

ஏன் இந்த நிலைமை? இப்போதெல்லாம் குறைந்தபட்சமாக 10 பார்வையாளர்கள் வரை இருந்தால் மட்டுமே ஒரு காட்சி திரையில் ஓடுகிறது. மல்டிப்ளெக்ஸ் மட்டுமல்ல, சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளிலும் கூட இதுவே நடக்கிறது.

பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியுற்று, சின்ன பட்ஜெட் படங்கள் பெரிய வெற்றியை ஈட்டிய வரலாறும் தமிழ் திரையுலகிற்கு உண்டு

குறைவான வருகை!
வெளியீட்டு சூழல், தெரிந்த முகங்கள், சமூகத்தோடு பொருந்தும் உள்ளடக்கம் தாண்டி புதியதொரு அனுபவத்தைத் தரும் எந்தவொரு படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும். ஆனால், சரியில்லாத திரைப்படம் என்றால் ஆபரேட்டர் கூட அதனைப் பார்க்கத் தயாராக இருக்கமாட்டார். இதுதான் யதார்த்தம். பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியுற்று, சின்ன பட்ஜெட் படங்கள் பெரிய வெற்றியை ஈட்டிய வரலாறும் தமிழ் திரையுலகிற்கு உண்டு. கடந்த 20 ஆண்டுகளாக இந்த நிலையில் பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

செயற்கைக்கோள் தொலைக்காட்சி, திருட்டு விசிடி, இணைய திருட்டுத் தளங்கள், யூடியூப் புரட்சி, மொபைல் காணொளிகள், ஓடிடி என்று பல தொழில்நுட்பங்கள் திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவத்தை இல்லாமல் ஆக்கும் என்ற பயம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், அவற்றை வருமான வாய்ப்பாகப் பார்த்துப் பயன்படுத்திக் கொண்டவர்களும் நிறைய.

மேலும் படிக்க: ஓடிடி கட்டுப்பாடு: சிறிய பட்ஜெட் படங்கள் பிழைக்குமா?

நட்சத்திர நடிகர் நடிகைகள், பெரிய பட்ஜெட் கொண்ட படங்கள் தடைகளை மீறிப் பெரும் விளம்பரங்களோடு ரசிகர்களைத் திரையரங்க வாசலில் திரட்டுகின்றன. அவற்றை மீறி, நடுத்தர மற்றும் சிறிய பட்ஜெட் படங்களில் பெரிதாக கவனத்தையும் வெற்றியையும் ஈட்டுபவை மிகச்சில மட்டுமே. அவை தவிர்த்து, மற்றனைத்து திரையரங்குகளிலும் ஈயாடுவதைக் காண முடியும்.

‘டிக்கெட், ஸ்நாக்ஸ், பார்க்கிங் கட்டணம் என்று குடும்பத்தோடு ஒரு படம் பார்க்க ஆயிரம் ரூபா செலவழிக்க முடியாது’ என்பதே பலரது குரலாக இருக்கிறது. அதையும் மீறி சாதாரண மக்களைத் திரையரங்குகளுக்கு வரவழைக்க ஒரு படத்தின் உள்ளடக்கம் சிறப்பாக இருக்க வேண்டும்; பிரபலங்களின் படங்கள் அல்லது பெரும் வெற்றியை ஈட்டிய படங்கள் வழியாகவே அப்படிப்பட்ட அனுபவம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் நிலவுகிறது. கேஜிஎஃப்2, விக்ரம், பொன்னியின் செல்வன், தற்போது ஓடிக் கொண்டிருக்கும் லவ் டுடே போன்றவை இரண்டாம், மூன்றாம் வாரங்களில் ’ஹவுஸ்ஃபுல்’ ஆவது இது போன்ற பார்வையாளர்களால் தான்.

தப்பித்தவறிக்கூட புதுமுகங்களையோ, பரீட்சார்த்த முயற்சிகளையோ நம்பி சின்ன பட்ஜெட்டில் தயாராகும் படைப்புகளைப் பார்க்க அவர்கள் தயாராக இல்லை.

அதேநேரத்தில், முதல் மூன்று நாட்களில் திரையரங்குகளுக்கு வருபவர்கள் சற்றே வித்தியாசமானவர்கள். புதிய திரைப்படங்களில் எது சிறந்தது என்பதை அறியத் துடிப்பவர்கள். சிறந்த இயக்குனர், நல்ல தயாரிப்பு நிறுவனம், சிறப்பான தொழில்நுட்பக் கலைஞர்கள் என்பது போன்ற அம்சங்களை மிகச்சிலர் கணக்கில் கொண்டால், பெரும்பாலானோர் பிரபல நட்சத்திரங்களுக்காகத் திரையரங்க வாசலில் திரள்கின்றனர்.

மேலே சொன்னவற்றையும் மீறி, சில நல்ல படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெறாமல் போவதுண்டு. பார்வையாளர்கள் வராத காரணத்தாலேயே திரையரங்குகளில் அப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படுவதும் உண்டு.

சிறந்த இயக்குனர், நல்ல தயாரிப்பு நிறுவனம், சிறப்பான தொழில்நுட்பக் கலைஞர்கள் போன்ற அம்சங்களை மீறி, சில நல்ல படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெறாமல் போவதுண்டு; பார்வையாளர்கள் வராத காரணத்தாலேயே அப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படும்

எது கவரும்?
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் தனுசு ராசி நேயர்களே, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ஜடா, சாம்பியன், காளிதாஸ், ஹீரோ, தம்பி, பஞ்சராக்‌ஷரம், சில்லு கருப்பட்டி, வி1 ஆகிய படங்களைப் பார்த்தேன். இவையனைத்துமே சம்பந்தப்பட்ட படங்களில் நடிப்புக்கலைஞர்கள் அல்லது தொழில்நுட்பக் கலைஞர்கள், ட்ரெய்லர் அல்லது போஸ்டர் மற்றும் என்னுடைய உள்ளுணர்வு அடிப்படையில் ரசிக்கப்பட்டவை. அதே மாதத்தில் நான் தவிர்த்த படங்களும் கூட கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையில் இருக்கும்.

இவற்றில் சிவகார்த்திகேயனின் ஹீரோவும் கார்த்தியின் தம்பியும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதேநேரத்தில் பரத்தின் காளிதாஸ் பெரிதாக வரவேற்கப்பட்டது. அதனை இயக்கியவர் ஸ்ரீசெந்தில் என்ற புதுமுக இயக்குனர்.
போலவே ஹலீதா ஷமீமின் சில்லுக்கருப்பட்டி, பாவெல் நவகீதனின் வி1, பாலாஜி வைரமுத்துவின் பஞ்சராக்‌ஷரம் மூன்றையும் அடுத்தடுத்து பார்த்தேன்.

வி1 ஒரு க்ரைம் த்ரில்லர் ஆகவும், சில்லுக்கருப்பட்டி நான்கு குறும்படங்கள் இணைந்த காதல் ஆந்தலாஜி ஆகவும், பஞ்சராக்‌ஷரம் பேண்டஸி படைப்பாகவும் அமைந்தன. மூன்றுமே, ஆண்டிறுதியில் வெளியானவை.

மேலும் படிக்க: சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ தருவது ஆச்சர்யமா? அதிர்ச்சியா?

2020 ஜனவரி முதல் வாரமே ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’, இரண்டாவது வாரமான பொங்கல் விடுமுறை தருணத்தில் தனுஷின் ‘பட்டாஸ்’ வெளியாகின. நட்சத்திரங்கள் படங்கள் வெளியாகவிருந்த சூழலையும் மீறி வி1, சில்லுக்கருப்பட்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. ஓடிடி தளங்களில் வெளியானபோதும் பெரியளவில் வரவேற்பைப் பெற்றன.
அதேநேரத்தில், பஞ்சராக்‌ஷரம் படத்தை ஒரு மல்டிப்ளெக்ஸில் ’முதல் நாள் முதல் காட்சி’ பார்த்தபோது மொத்தமே 25 பேர் வரை அரங்கில் இருந்ததாக நினைவு.

பல திரையரங்குகளில் அப்படம் ரத்து செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அதனை எண்ணும்போதெல்லாம், குறைந்த பார்வையாளர்களோடு திரையிடப்பட்டிருந்தாலே இன்னும் கொஞ்சம் வரவேற்பைப் பெற்றிருக்குமே என்று வருந்தியிருக்கிறேன். இன்றுவரை பஞ்சராக்‌ஷரம் திரைப்படம் தொலைக்காட்சியிலோ, ஓடிடியிலோ வெளியாகி கவனம் பெற்றதாக நினைவில்லை.

லேட் பிக்அப்!
ரசிகர்களால் வராத காரணத்தால் காட்சிகளை ரத்து செய்ததாக திரையரங்கு நிர்வாகங்கள் சொல்ல, திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாலேயே அவற்றைப் பார்க்கவில்லை என்று ரசிகர்கள் சொன்னதும் அனுபவத்தில் கண்டவை. ஒருவேளை அவர்கள் ரசித்து மற்றவர்களிடம் அதனைப் பகிர்ந்து, ‘வேர்ட் ஆஃப் மவுத்’ மூலமாக அப்படங்கள் கவனம் ஈட்டியிருக்கவும் வாய்ப்பிருந்தது. பாலாவின் ‘சேது’, விக்ரமனின் ‘பூவே உனக்காக’, சேரனின் ‘ஆட்டோகிராப்’, லிங்குசாமியின் ‘ஆனந்தம்’ உட்பட அதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். ‘திருச்சிற்றம்பலம்’, ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ போன்ற சமீபத்திய படங்களும் கூட இந்த வரிசையில் சேரும்.

இன்று ’லேட் பிக்அப்’ என்பது சில நாட்களில் இருந்து ஓரிரு காட்சிகளாகச் சுருங்கிவிட்டது. சின்ன பட்ஜெட் படங்களுக்கு மிகச்சில திரையரங்குகளில் ஒன்று அல்லது இரண்டு காட்சிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு, அவையும் போதிய பார்வையாளர்கள் வராமல் ரத்து செய்யப்படும்போது அந்த வாய்ப்பும் அருகி விடுகிறது.

நவம்பர் 11 அன்று வெளியான ‘மிரள்’, ‘பரோல்’, ‘யசோதா’ படங்களோ பெருமழையின் காரணமாக இன்னும் மோசமான நிலையைச் சந்தித்திருக்கின்றன. சமந்தா நடித்த படம் என்று யசோதாவும், தொடர்ந்து தமிழில் நல்ல படங்களைத் தயாரித்துவரும் ஆக்சஸ் பிலிம் பேக்டரியின் தயாரிப்பு என்ற வகையில் மிரள் திரைப்படமும், விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவரில் வெளியான ட்ரெய்லர் காரணமாக ‘பரோலும்’ ரசிகர்களை திரளச் செய்தன. போதுமான பார்வையாளர்கள் வராத காரணத்தால் இப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ச்சியாக காட்சிகள் ரத்தாவதோ, திருட்டு இணையதளங்களில் வெளியாவதோ, அவற்றின் வெற்றியை மேலும் கேள்விக்குறியாக்கலாம்.

இப்படங்களோடு வெளியாவதாக இருந்த, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘டிரைவர் ஜமுனா’ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் திடீரென்று ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இன்று ’லேட் பிக்அப்’ என்பது சில நாட்களில் இருந்து ஓரிரு காட்சிகளாகச் சுருங்கிவிட்டது

அரசு திரையரங்குகள்!
மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவில் அம்மாநில அரசால் செயல்படுத்தப்படும் ‘நந்தன்’ திரையரங்கம், மிகக்குறைந்த கட்டணத்தில் (அதிகபட்சம் 70 ரூபாய் என்றளவில்) படங்களைத் திரையிட்டு வருகிறது. அப்படங்கள் எல்லாமே கடந்த சில வாரங்களில் வெளியானவை; ரசிகர்களால் குறிப்பிட்டளவில் விரும்பப்பட்டவை.

இதேபோல, திருவனந்தபுரத்திலும் கேரள அரசின் மக்கள் தொடர்புத் துறை கட்டுப்பாட்டின் கீழ் தாகூர் திரையரங்கம் செயல்படுகிறது. இது தவிர கேரள மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் கீழ் ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட ஆறு நகரங்களில் கைரளி, கலாபவன், லெனின் திரையரங்குகள் செயல்படுகின்றன. அங்கும் கூட அதிகபட்சமாக ரூ.125 வரை வசூலிக்கப்படுகிறது. அந்தந்த வார வெளியீடுகளோடு, ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட படங்களும் திரையிடப்படுகின்றன.

தமிழ்நாட்டிலும் இது போல மாநில அரசின் சார்பில் திரையரங்குகளைச் செயல்படுத்தலாம். அப்போது, அவற்றுக்குக் கிடைக்கும் வரவேற்பினால் மற்ற திரையரங்குகளிலும் கட்டணக் குறைப்பு நிகழலாம். அதுபோல, இதனால் கிடைக்கப் பெறும் சாதகங்கள் தனியாக விவாதிக்கப்பட வேண்டியது.

அதையெல்லாம் விட, மிகக்குறைந்த அளவில் பார்வையாளர்கள் இருந்தாலும் திரையிடும் சூழல் உயிர் பெறும். அதன் மூலமாக, குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் சிறந்த படங்கள் ரசிகர்களின் கவனத்தைக் கவர ஒரு வாய்ப்பு பிறக்கும்!


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles