Read in : English

Share the Article

அண்மையில் வெளியாகிப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்கள் என்று கமல்ஹாசன் நடித்த விக்ரம், இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 ஆகியவற்றைச் சொல்லலாம். இரண்டும் நானூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக் கொடுத்துள்ளது. அதற்கு மேலும் கோடிக்கணக்கான ரூபாயைத் திரையரங்குகளில் அள்ளுவதைத் தடுத்துவிட்டது ஓடிடி வெளியீடு.

அதனால் தியேட்டர் அதிபர்களுக்கு இழப்புதான். ஆகவே, அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை சிறிய பட்ஜெட் படங்கள் என்பவற்றுக்கு ஆபத்தாக மாறிவிடும் நிலைமை உள்ளது.
ஓடிடி வெளியீட்டுக்குப் பின்னர், திரையரங்குக்கு வர விரும்பும் ரசிகர்கள் மிக மிகச் சொற்பமாகவே இருப்பார்கள்.

ஆகவே, திரையரங்குகளில் வெளியாகும் ஒரு படத்தை எட்டு வாரங்களுக்குப் பின்னர்தான் ஓடிடியில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது எழுந்திருக்கிறது.
தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் இது தொடர்பாக சங்கத்து உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,‘ஓடிடி வெளியீட்டால் திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் இது குறித்த அக்கறை திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இல்லை. திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும்’என்று குறிப்பிட்டுள்ளாராம்.

ஓடிடி வெளியீட்டுக்குப் பின்னர், திரையரங்குக்கு வர விரும்பும் ரசிகர்கள் மிக மிகச் சொற்பமாகவே இருப்பார்கள்

தொழில்நுட்ப வளர்ச்சி திரைப்படங்களை மேம்படுத்த உதவுவது ஒருபுறம் என்றால், அத்தகைய வளர்ச்சியைத் திரைப்படங்களுக்கான போட்டியாகப் பார்ப்பது மறுபுறம் என்னும் போக்கும் இருக்கவே செய்கிறது. எழுத்தாளர் பாலகுமாரன் எண்பதுகளின் மத்தியில் சினிமாத் துறைக்கு வர விரும்பியபோது, நடிகர் கமல்ஹாசன் அவரிடம்,‘தொலைக்காட்சியால் சினிமா அழிந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏன் சினிமாவுக்கு வருகிறீர்கள்’எனக் கேட்டாராம்.

எண்பதுகளில் தொலைக்காட்சியால் சினிமா அழிந்துவிடும் என்ற அச்சத்தைத் திரைத்துறையினர் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதே நேரத்தில், அப்போது தயாரித்த‘சங்கர் குரு’என்னும் திரைப்படத்துக்குத் தொலைக்காட்சியைப் பரிசாகத் தருவதாக அறிவித்தது ஏவிஎம் நிறுவனம். மிகவும் சாதாரண அந்தப் படம் வெற்றியையும் பெற்றது. புத்தியுள்ள பிள்ளை எப்படியும் பிழைக்கும் என்பதற்கு ஏவிஎம் எடுத்துக்காட்டாக ஆனது.

மேலும் படிக்க: உள்ளடக்கத்தில் மாறுதல் காணும் தமிழ்ப் படங்கள்?

தமிழ்த் திரைப்படங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நிலைமையைக் கையாள வேண்டும் எனக்கூறி வருபவர் நடிகர் கமல்ஹாசன். தொழில்நுட்ப வளர்ச்சியை நேர்மறைக் கண்ணோட்டத்துடன் எதிர்கொள்பவர். நேரடியாக வீட்டுக்கே திரைப்படத்தைத் தரும் திட்டத்தைத் தனது விஸ்வரூபம் திரைப்படத்துக்குப் பரீட்சை செய்து பார்க்கவிருந்தார். ஆனால், சூழல் அவருக்கு ஒத்துழைக்கவில்லை.

திரையரங்குகளில் படங்கள் வெளியாகும்போதே டிவிடிகளாகவும் வெளியிடுவதில் ஒரு தவறும் இல்லை. திரைப்பட வருமானத்துக்கு அதுவும் ஒரு வழிதான் என்ற ரீதியிலேயே அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். திருட்டு விசிடியால் தமிழ்த் திரைப்படங்களின் வசூல் பாதிக்கப்படுகிறது என்ற பேச்சு வந்தபோது அவர் மாற்றுவழியாக இரண்டையும் ஒரே நேரத்தில் வெளியிடலாம் என்று கூறினார். ஆனால், திரைத்துறையினருக்கு அவ்வளது துணிச்சல் ஏற்படவில்லை. இயக்குநர் சேரன் கூட நேரடியாக திரைப்படங்களை வீட்டுக்குக் கொண்டுவர முயன்றார். அவரது முயற்சியும் பெரிய வெற்றியைத் தேடித் தரவில்லை.

பெரிய திரைப் பிரபலங்களால் சாத்தியப்படுத்த முடியாத விஷயத்தை கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸ் சாத்தியப்படுத்தியது. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோவிட் பெருந்தொற்று உலகத்தையே அச்சுறுத்தத் தொடங்கியது. பொது முடக்கம் போடப்பட்டது. திரையரங்குகள் மூடப்பட்டன. அதற்கு முன்னர் திரையரங்குகள் நீண்ட காலம் மூடப்படும் நிலைமை வரும் என யாராவது ஆருடம் கூறியிருந்தால், எவருமே நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், அது நடந்தது.

மக்களுக்குத் திரைப்படம் பார்க்கும் பழக்கம் இல்லாமல் போய்விடுமோ என்று திரைத்துறையினர் ஒருபக்கம் அச்சப்படத் தொடங்கினார்கள். அந்த வேளையில் வாராது வந்த மாமணியாய் வந்து அவர்களது வாட்டத்தைப் போக்கியது‘ஓவர் தி டாப்’என்று அழைக்கப்பட்ட ஓடிடி.

வீடுகளுக்குள்ளேயே முடங்கிய மக்களுக்குத் திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பை வழங்கின ஓடிடி தளங்கள்.‘பொன்மகள் வந்தாள்’என்னும் தமிழ்த் திரைப்படம் முதலில் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அதைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி நடித்த‘க/பெ. ரணசிங்கம்’வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றது.

படம் வெளியான நான்கு வாரங்களுக்கு ஓடிடியில் வெளிவராமல் பார்த்துக்கொண்டார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்; இந்த முடிவால் பாதிக்கப்பட்டவை சிறிய பட்ஜெட் படங்கள்தான்

நடிகர் சூர்யா நடித்த‘சூரரைப் போற்று’வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு ஓடிடி தளங்கள் திரைப்பட வருவாய்க்கான இன்னொரு வாசல் திறக்கப்பட்டதைத் திரைத்துறையினர் வரவேற்றனர். இதெல்லாம் எதுவரை? மீண்டும் திரையரங்குகள் திறக்கும்வரை தான்.

திரையரங்குகள் திறந்த பின்னர்,‘ஓடிடியில் படங்கள் வெளியானால் தியேட்டர் வருமானம் பாதிக்கும்’என்று பேசத் தொடங்கினார்கள். 2021ஆம் ஆண்டில் ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாயின. இந்தப் போக்கு நீடித்தால் திரையரங்குகள் என்னவாகும் என்ற கேள்வி பிறந்தது. திரையரங்குகளின் எதிர்காலம் என்னவாகுமோ எனப் பயந்த நிலையில் நடிகர் விஜய்யின் மாஸ்டர், சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் ஆகிய படங்கள் கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தன.

பெரிய பட்ஜெட் படங்களுக்கு இது சரிதான். சிறிய பட்ஜெட் படங்களின் நிலைமை வேறுவிதமாக இருந்தது.
திரையரங்குகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஓடிடியில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துவிடலாம் என நினைத்தார்கள் சிறிய படத் தயாரிப்பாளர்கள். பல தமிழ்ப் படங்கள் வெளியீட்டுக்குத் தயாரான நிலையிலும் திரையரங்குகள் கிடைக்காதபோது அவற்றுக்கு வாழ்வளித்தது ஓடிடி.

மேலும் படிக்க: ஓ.டி.டி-யில்  ஓடும் சினிமாவால் மூடிவிடுமா திரையரங்குகள்?

2022ஆம் ஆண்டில் டாணாக்காரன், சாணிக்காயிதம் ஆகிய படங்கள் ஓடிடியில்தான் வெளியாயின. ஆனால், ஓடிடியில் நேரடியாக வெளியிடும்போது படத்தின் வசூல் பாதிக்கிறது எனக் கூறி, படம் வெளியான நான்கு வாரங்களுக்கு ஓடிடியில் வெளிவராமல் பார்த்துக்கொண்டார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். இந்த முடிவால் பாதிக்கப்பட்டவை சிறிய பட்ஜெட் படங்கள்தான்.

ஒரு குடும்பம் திரையரங்குக்குப் போனால் ஆகும் செலவைப் பார்க்கும்போது, சாதாரணக் குடும்பத்தினருக்கு ஓடிடி என்பது பெரிய வரப்பிரசாதம். மக்கள் திரையரங்குகளைத் தவிர்க்கக் காரணம் ஓடிடி மட்டுமல்ல; அதிக விலையிலான தின்பண்டங்கள், பார்க்கிங் கட்டணம் போன்றவையும் அவர்களைத் திரையரங்குகள் பக்கம் ஒதுங்காமல் பார்த்துக்கொள்கின்றன.

அதைக் கருத்தில்கொள்ளாது ஓடிடியை மட்டுமே எதிரியாகப் பார்க்கும் போக்கு ஆரோக்கியமானதா?
சிறிய பட்ஜெட் படங்களுக்கும் கைநிறையக் காசை அள்ளித்தரும் ஒரு வாய்ப்பு ஓடிடி. அவற்றுக்குத் திரையரங்கை விட்டால் வேறு கதியில்லை என்ற நிபந்தனை தேவையில்லாத ஓர் ஆணி.

ஏனெனில், சிறிய பட்ஜெட் படங்களைப் பொறுத்தவரை ஓடிடி என்பது கௌரவமான மாற்று ஏற்பாடுதான். ஆனால், படம் வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்னும் நிபந்தனையால் சிறிய பட்ஜெட் படங்களுக்குக் கடுமையான பாதிப்பே.

இந்த நிலைமையில் ஒருவேளை படம் வெளியாகி எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் படங்களை வெளியிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டால், அதனால் சிறிய பட்ஜெட் படங்களுக்குத்தான் மேலும் பாதிப்பு வந்து சேரும்.

ஆகவே, பெரிய பட்ஜெட் படங்களுக்குக் கடிவாளம் போடும் முயற்சியில் எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதனால் சிறிய பட்ஜெட் படங்கள் பலியாகிவிடக் கூடாது என்பதைத் திரையரங்கு உரிமையாளர்கள் மனதில் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்!


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles