Read in : English
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ஒன்றிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின் முதல் கூட்டம் விரைவில் நடைபெறவிருக்கிறது. அதன் மூலமாக நடக்கும் தூரத்தில் பேருந்து நிறுத்தம், பயன்பாட்டுக்குரிய நடைமேடைகள், பேருந்துகளில் மெட்ரோ ரயில்களில் புறநகர் ரயில்களில் பறக்கும் ரயில்களில் (எம்ஆர்டிஎஸ்) பயணிப்பதற்கு ஒற்றை பயணச்சீட்டு அமைப்பு, ஓடும் பேருந்துகள், ரயில்கள் பற்றிய களத்தகவல்கள் ஆகியவை சாத்தியப்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
சென்னை ஒன்றிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் சுமார் பத்தாண்டுகளாகவே இருக்கிறது. சென்னைக்கு ஏராளமான போக்குவரத்து முறைகள் இருக்கின்றன. ஆனால் அவை ஒன்றிணைந்து செயல்படவில்லை. அதனால் சென்னையின் வாழ்க்கைத்தரமும் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இன்னும் இரண்டு ஆண்டுகளில், மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டம் 119 கி.மீ தூரத்திற்கு விரியவிருக்கிறது. அதனால் குறிப்பிட்ட முகமைகளுக்குத் தனிப்பட்ட பணிப் பொறுப்புகளைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 9 அன்று, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஓர் அரசாணையை வெளியிட்டார். இடப்பெயர்வு இலாவகம் என்ற விசயத்தில் சென்னை மாநகரம் சந்திக்கும் ஆகப்பெரும் சவால்களைச் சமாளிக்க நான்கு உப குழுக்கள் அமைக்கப்பட்ட தகவல் அதில் இடம்பெற்றது.
பெருநகர சென்னையை 5,904 கி.மீ. தூரத்திற்கு விரிவாக்கியிருக்கிறது தமிழக அரசு; இந்த விரிவாக்கத்தில் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நகரங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன
அக்குழுக்கள் எடுத்துக்கொள்ளும் விசயங்கள் பின்வருமாறு:
- சாலைப் பாதுகாப்பு, மோட்டார் அல்லாத போக்குவரத்து
- பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒன்றிணைத்தல்
- நகர்ப்புற இடப்பெயர்வு மீட்சி
- மின்னணு சென்னை
இந்த உப குழுக்களில் இருக்கும் அதிகாரிகள் காவல்துறை, சென்னை மெட்ரோ, தென்னிந்திய ரயில்வே, பெருநகர சென்னை மாநகராட்சி, பள்ளிக் கல்வித் துறை, சாலை மேம்பாட்டுக் கழகம், மின்னனு நிர்வாக முகமை ஆகிய துறைகளைச் சார்ந்தவர்கள். இவர்களை ஒன்றிணைப்பது சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் (சிஎம்டிஏ). இவர்கள் புதிய குழுக்களின் உறுப்பினர்கள்.
மேலும் படிக்க: அதிக அபராதம்: சாலை விதிமீறல் அடங்குமா?
அடிப்படைகளுக்குத் திரும்புதல்
சென்னை 30 ஆண்டுகளில் திட்டமிடாமலே விரிவடைந்திருக்கிறது. துணை நகரத் திட்டங்கள் மறைமலை நகர், மணலி புதுநகர் என்ற அளவிலேதான் இருந்தன; இதெல்லாம் தாராளமயக் கொள்கை காலத்திற்கு முன்பிருந்த நிலைமை. தற்காலத்தில் தமிழக அரசு பெருநகர சென்னையை 5,904 கி.மீ. தூரத்திற்கு விரிவாக்கியிருக்கிறது. இந்த விரிவாக்கத்தில் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நகரங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்தப் பெருநகர பரப்புக்கான மூன்றாவது மாஸ்டர் பிளானை வரைவதில் சிஎம்டிஏ மும்முரமாக இருக்கிறது. அதே சமயம், நகர்ப்புறப் பரப்பை மேலாண்மை செய்வதில் கடுமையான ஆட்சி நிர்வாகக் குறைபாட்டை சென்னையின் மையம் எதிர்கொள்கிறது. சென்னையில் அதிக கவனம் பெறுவது மோட்டார் வாகனங்கள் மட்டுமே. மோட்டார் அல்லாத போக்குவரத்துக் கொள்கை அரசிடம் இருக்கிறது என்றாலும், நடை பயணத்திற்கென்று உட்கட்டமைப்பு இல்லாத மாநகரம் என்ற கெட்ட பெயர் சென்னைக்கு உண்டு.
பாதசாரிகளின் குறுக்குக்கோடுகளை மோட்டார் வாகன ஓட்டிகள் கண்டுகொள்வதில்லை. காவல்துறையும் அவர்களை ஒன்றும் சொல்வதில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகிலிருக்கும் இடங்களையும், பாண்டி பஜார் பாதசாரி பிளாசாவையும் தவிர அனைத்து இடங்களிலும் நடைபாதைகள் உடைந்து கிடக்கின்றன. நடைவெளியை வாணிகம் ஆக்ரமித்துவிட்டது. நகரத் தெருவியாபாரக் குழுக்கள் தெரு வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவதில்லை என்பதால் சென்னை உயர்நீதிமன்றம் அந்தக் குழுக்களைக் கலைத்துவிட்டது.
சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவும், மாற்றுத் திறனாளிகளின் பொதுவெளி உரிமைகளைக் காக்கவும், முதல்வர் பெருநகர சென்னையில் இருக்கும் பெளதீக உட்கட்டமைப்பை ஆய்வு செய்ய உடனடியாக உத்தரவிட வேண்டும். பொதுமக்களும் இதற்கு உதவலாம்.
சென்னையில் 471 பேருந்துப் பாதை சாலைகள் 387 கி.மீ. தூரம் இருக்கின்றன; 5,270.33 கிமீ தூரத்திற்கு 34,640 உள்சாலைகளும் இருக்கின்றன என்று சென்னை மாநகராட்சி சொல்கிறது. உள்சாலைகளை விட்டுவிடுங்கள். பேருந்துகள் ஓடும் சாலைகளில் எத்தனை சாலைகளில் உடைபடாத நிலையில் நடைமேடைகள் இருக்கின்றன? சென்னை விரிவடைந்த நிலையில் இந்தக் குறைபாடு இன்னும் பெரிதாகலாம்.
உடைந்த உட்கட்டமைப்பைச் சரிசெய்ய பெரிதாகச் செலவாகாது. பெருநகர சென்னை மாநகராட்சியும் நெடுஞ்சாலைத் துறையும் ஒன்றுசேர்ந்து செயல்பட்டால் போதும்.
சாலைகளில் இருக்கும் குழிகள், பொதுவெளிகளில் கொட்டிக்கிடக்கும் குப்பைகள், சேதாரப் பொருட்கள் ஆகியவை அகற்றப்பட வேண்டும்; எரியாத தெருவிளக்குகள், பேருந்து நிலையங்களுக்கும், புறநகர் மற்றும் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையங்களுக்கும் செல்லும் புறக்கணிக்கப்பட்ட பாதைகள் ஆகியவற்றைச் சரிசெய்ய வேண்டும்.
எல்லாப் பெருநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளையும், மெட்ரோ ரயில் நிலையங்களிலும், புறநகர் ரயில், எம்ஆர்டிஎஸ் நிலையங்களிலும் நிற்கச் செய்வதற்கு, சென்னை ஒன்றிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின் முதல் கூட்டம் முடிந்ததும் ஆணை வெளியிட வேண்டும்.
மின்னணு உதவி
போக்குவரத்துக் களத்தகவல் மற்றும் ஒருங்கிணைந்த பயணச்சீட்டு முறை ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்லும் சாத்தியம் மின்னணு சென்னை உப குழுவிற்கு உண்டு. பேருந்துகளுக்கும் மெட்ரோ ரயில் உட்பட எல்லாவிதமான ரயில்களுக்குமான பயணச்சீட்டுகளை ஒன்றிணைக்கும் கைப்பேசி செயலியை உருவாக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று ஆரம்பக்கட்டச் செய்திகள் சொல்கின்றன.
இறுதிக்கட்டப் போக்குவரத்துத் தொடர்பு என்பது மற்றொரு சவால். இது சம்பந்தமாக நல்லதொரு கட்டமைப்பு இல்லாததால், பயணிகள் பெரும்பாலும் ஆட்டோ ஓட்டுநர்களுடன் பேரம் பேசுகின்றனர். மாநகரத்திற்குள் வரும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எல்லோராலும் பேருந்தில், ரயிலில் அல்லது நடந்து அல்லது சைக்கிளில் செல்ல முடியாது. ஆதலால் எளிதில் அனுமானிக்கக்கூடிய இடைநிலை பொதுப் போக்குவரத்து அமைப்பைப் பலப்படுத்த வேண்டும்; அதாவது, மீட்டரில் ஓடும் ஆட்டோரிக்ஷாக்கள், கட்டணங்கள் விதிக்கப்பட்ட வேன்கள் இந்தக் கட்டமைப்பில் இடம்பெற வேண்டும்.
கட்டுப்படுத்தப்படாத இந்த இடைநிலை பொதுப் போக்குவரத்து அமைப்பை பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பிற்குள் இணைக்கும் பணி, பலதரப்பட்ட போக்குவரத்து ஒன்றிணைவு சம்பந்தமான உபகுழு ஆராய வேண்டிய விசயங்களில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. ஏறிக்கொண்டே போகும் நிலையற்ற எரிசக்தி விலைகள் ஸ்திரமான கட்டணத்தை நிர்ணயிப்பதைத் தடுக்கின்றன. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அரசியல் உறுதி இல்லை. இந்தப் பணியை மின்னணு சென்னை உபகுழுவிடம் ஒப்பட்டைக்கலாம், இடைநிலை பொதுப் போக்குவரத்திற்கு நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கலாம்.
கட்டண உயர்வு தேவைப்பட்டால் மென்பொருள் மூலம் புதிதான கட்டணத்தைக் காட்டக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட மீட்டர்களைப் பொருத்தலாம். விலை ஏற்றத்தைக் காட்டும் பெட்ரோல் குழாய்களைப் போல இந்த மீட்டர்கள் செயல்படும்.
இடப்பெயர்வு பற்றி குடிமக்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்கான ஒரு தளத்தை உருவாக்க வேண்டிய முக்கியப் பணி மின்னணு சென்னை உப குழுவிற்கு இருக்கிறது. நீண்ட நாட்களாகக் கவனிக்கப்படாத விசயம் இது. புதிய தரவுகளைக் கொண்டு இதை மேம்படுத்தலாம்.
பயணிகளின் இடப்பெயர்வு முறைகள், போக்குவரத்து நிலைகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கு, அவர்களது அனுபவங்களைப் பகிரச் செய்யலாம்.
மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் கழிவுநீர் வடிகால் களங்களிலிருந்து சற்று தூரத்தில் குடியிருப்புகளை விரிவாக்கும் சாத்தியங்களை ஆராய புறவெளிக் கருவிகளைப் பயன்படுத்துவது அவசியம். இந்த வேலையை நிலையான வடிவமற்ற ரியல் எஸ்டேட் வியாபாரிகள் செய்கின்றனர். நடமாட்டம் உள்ள இடங்களில் பொதுமக்கள் செய்யும் முதலீடுகளில் இலாபம் பார்க்கும் அவர்கள் அரசிற்கு ஒன்றும் தருவதில்லை.
பேருந்துகளுக்கும் மெட்ரோ ரயில் உட்பட எல்லாவிதமான ரயில்களுக்குமான பயணச்சீட்டுகளை ஒன்றிணைக்கும் கைப்பேசி செயலியை உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன
சிறந்த பேருந்துகள் வேண்டும்!
பெங்களூருவில் ஊதா நிறத்திலும் வெள்ளை நிறத்திலும் மின்சாரப் பேருந்துகள் அறிமுகமாகி இருக்கின்றன. ஒருபடி மேலே சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவகையில் சென்னையில் பேருந்துகளை இயக்கலாம். ஒற்றைப் படியும், 400 மி.மீ.க்கு மிகாத தரைத்தளமும் கொண்ட பேருந்துகளைச் சென்னையில் அறிமுகப்படுத்தலாம். உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் கூட, அதிக செலவாகும் என்றும், சாலைகள் சரியில்லை என்றும் கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
உலக வங்கியின் டூல் கிட் படி, ஆயிரம் பேருக்கு 0.5 முதல் 1.2 வரை பேருந்துகள் என்பதுதான் மக்கள்தொகைக்கும் பேருந்துகளுக்கும் இடையிலான சரியான விகிதம். இந்த விகிதப்படிப் பார்த்தால், புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கும் பெருநகரப் பரப்பையும் சேர்த்து, குறைந்தபட்சம் 8,000 பேருந்துகள் சென்னைக்குத் தேவைப்படும். சென்னை ஒன்றிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் இதனைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் 2019ன் படி, இரண்டு விசயங்களை சென்னை ஒன்றிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க: மூன்றாவது மாஸ்டர் பிளான்: சிங்காரச் சென்னை கனவு பலிக்குமா?
முதலாவது, இறுதிக்கட்ட போக்குவரத்துக் கட்டமைப்பில் மெட்ரோ உட்பட பல ரயில் நிலையங்களிலிருந்து வாகனங்களை இயக்குவது. இரண்டாவது, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் தரங்களோடு சாலைகளைப் பேண வேண்டிய அரசின் சட்டப்பூர்வமான கடமை. இந்த இரண்டு விசயங்களிலும் நடவடிக்கைகள் எடுத்து சென்னை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசிற்கு இருக்கிறது.
சென்னையில் இடம்விட்டு இடம் பெயரும் அன்றாட நிகழ்வுக்குத் தகவல் என்பது மிக முக்கியமான ஓர் அம்சம். இதில் சென்னை ஒன்றிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் சுணக்கம் கொள்ள முடியாது.
சென்னை ஒன்றிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையக் கூட்டத்திலும், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையக் கூட்டத்திலும் எடுக்கப்படும் தீர்மானங்கள் அவற்றின் இணையதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிடப்பட வேண்டும். அப்போதுதான் புதிய வசதிகளையும் மாற்றங்களைப் பற்றியும் மக்கள் அறிந்துகொள்ள முடியும்.
சென்னையிலிருந்து மைசூரு வரை ஓடும் வந்தே பாரத் ரயில் (எண்: 20607) தொடக்கவிழாவைப் பற்றி ஏற்கனவே தகவல்கள் வெளியிடப்பட்டதால் மக்களிடையே எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. ஆதலால் தெளிவான பயனுள்ள தகவல் என்பது மிகமிக முக்கியம்.
Read in : English